‘இன்முகச் செவ்வியர்’கவிஞர் மா.உ.ஞானவடிவேல்
‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
“ஏழாம் வகுப்பு – ஏதோ எழுதினேன்;
பத்தாம் வகுப்பு – பழகினேன்; பன்னிரண்டில் – பக்குவப்பட்டேன்;
கல்லூரியில் – படைக்கத் தொடங்கினேன்” எனத் தமது படைப்பனுபவம் குறித்து
மனம் திறந்து மொழியும் மா.உ.ஞானவடிவேல், ‘தெய்வம் என்பதோர் சித்தம்
உண்டாகி’ என்னும் மாணிக்கவாசகரின் அமுத மொழிக்கு இணங்க, தாம் அவ்வப்போது
பல்வேறு இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘அதிகாலைத் தேநீர்’
என்னும் அழகிய தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட முன்வந்திருப்பது
வரவேற்கத் தக்கதாகும். அடிப்படையில் மருந்தியலிலும் மேலாண்மை இயலிலும்
பட்டங்கள் பெற்றுள்ள அவர், கவிதைத் துறையில் காலடி எடுத்து
வைத்திருப்பது போற்றத்-தக்கதாகும். ‘மூன்று முகத்தாள் (இயல், இசை,
நாடகம் என்னும்), முதுமை அறியாள், அள்ளக் குறையா அமுதத் தமிழாள்’
என்னும் ‘தமிழ் வணக்கப் பாட’லில் வெளிப்படும் அவரது தமிழ் உணர்வு
பாராட்டத் தக்கதாகும். ‘விழியும் ஒளியும், சக்தியும் புத்தியும்,
அன்பும் பேரன்பும், துணையும் துணிச்சலும், கனிவும் கனவும், உணவும்
உணர்வும், உடலும் உயிரும் – என் தாயும் தந்தையும்’ எனத் தமது பெற்றோர்
குறித்து ஞானவடிவேல் வடித்துள்ள காணிக்கைக் கவிதை விழுமிய நோக்கில்
இன்றைய இளைய தலைமுறையினர் ஊன்றி உணர வேண்டியதாகும்.
‘கவிதை – வளர்க்கும் தாய்!’
“என் எண்ணப் புத்தகத்தின்
எழுத்துப் பதிப்பு…
உள்ளத்தின் ரணங்களை
உலர்த்துகிற சூரணம்…
சக மனிதன் துயர் களைய
முழங்கும் சங்கு
சமூகத்தின் அவலம் சுடவே
தகிக்கும் கங்கு”
எனத் தம் கவிதையைக் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் ஞானவடிவேல்,
‘எமக்குத் தொழில் கவிதை’ என்னும் பாரதியாரின் வாக்கினைச் சற்றே மாற்றி,
“ … … என்
கவிதைக்குத் தொழில் உண்டு,
நலமே செய்தல்;
சொல்லழகால், கருத்தழகால்,
சொல்லும் அழகால்
இதயத்தில் இடம் பிடிக்கும்,
இலக்கியத்தில் தடம் பதிக்கும்”
என நம்பிக்கையுடன் பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது.
“என் கவிதை –
என்னை வளர்க்கும் தாய் – அவளை
எந்நாளும் கருச்சுமப்பேன்,
நான்… நான்…”
எனத் தமக்கும் கவிதைக்குமான உள்ளார்ந்த, உணர்ச்சி மயமான உறவு பற்றி
நெகிழ்வோடு குறிப்பிட்டுள்ளார் ஞானவடிவேல்.
கவிஞர் போற்றும் முப்பெரும் ஆளுமைகள்
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர் போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!” (பாரதியார் கவிதைகள், ப.154)
எனப் பெருமிதத்துடன் மொழிவார் கவியரசர் பாரதியார். அது போல, ஒரு
படைப்பாளி என்ற முறையில் ஞானவடிவேலின் உள்ளத்தைக் கவியரசர் பாரதியாரும்,
‘காவியத் தாயின் இளையமகன்’ கண்ணதாசனும், பெருந்தலைவர் காமராசரும்
பெரிதும் கவர்ந்த ஆற்றல்சால் ஆளுமையாளர்களாக விளங்கு-கின்றனர்.
கவிஞர் ஞானவடிவேலின் மதிப்பீட்டில் பாரதியார், ‘அன்னைத் தமிழின் அண்மைய
அவதாரம்’; ‘பின்னக் கணிதம் போல், பிடிபடாமல் இருந்த தமிழை, ஜன்னல்
காற்றைப் போல், கவிதைகளில் தந்தவர்’; முத்தாய்ப்பாக,
“நீ தமிழ் கற்ற பிறகு
நீண்டது தமிழின் ஆயுள்!
நின் தமிழ் கற்ற பிறகு
நிதமும் நீ தமிழர் நாவில்!...
படிப்போர் அனைவரையும்
பாதித்தாய்!
உண்மையில் – உனக்குப் பின்
பாடுவோர் அனைவர்க்கும் நீ
பாதித் தாய்!”
எனத் தேர்ந்த சொல் விளையாட்டின் (பாதித்தாய், பாதித் தாய்) வாயிலாகப்
பாரதியாரின் கவி ஆளுமையைப் போற்றிப் பாடுகின்றார் ஞானவடிவேல்.
“காலம் கழித்தவர் மத்தியில்
காலம் கணித்தவன் அவன்”
என நயமாகத் தொடங்குகின்றது ‘கண்ணதாசன் ஒரு காலக் கணிதம்’ என்னும்
ஞானவடிவேலின் கவிதை.
“கண்ணதாசன் கூட்டியது –
தமிழ்க் கவிதைக்கு அழகை.
கழித்தது – தான்
ஈட்டிக் கொண்டே இருந்த பொருளை.
பெருக்கியது – தமிழ் ரசிகர் தொகையை.
வகுத்தது – தம் வாழ்வால்
பிறர் நன்கு வாழும் வழியை!”
எனக் கணிதக் கூறுகளைக் கொண்டே ஞானவடிவேல் கண்ணதாசனின் ஆளுமையைப் படம்
பிடித்துக் காட்டி இருக்கும் பாங்கு நனி நன்று. ‘வற்றாத கடலைப் போல்
கண்ணதாசனும் காலம் வென்று, ஞாலம் உள்ள வரை நின்று நிலைத்திருப்பார்!’
என்பது கண்ணதாசனைப் பற்றிய ஞானவடிவேலின் கணிப்பு ஆகும்.
பெருந்தலைவர் காமராசரைப் பற்றிய ஞானவடிவேலின் அற்புதமான சொற்சித்திரம்
‘மீண்டும் காமராசர்’ என்னும் கவிதை. அதில்,
“ஓவியத் தமிழர் ஒளிமிகு முகத்தில் – (கல்விக்)
கண்கள் திறந்த தூரிகைக் காரன்
உவந்து கற்க உணவு தந்த
தமிழ் இனத்தின் ஆண் அன்னை”
என நயத்தகு மொழியால் காமராசரைப் போற்றும்
கவிஞர்,
“தன்னையே எண்ணும் தலைவர்கள் மத்தியில்
மண்ணை எண்ணிய மனிதன் – தலைவன்”
எனக் காமராசரைச் செவ்வனே அடையாளம் காட்டி இருப்பது சிறப்பு.
‘பெண்களால் ஆனதே உலகு!’
வியப்பு, ஆனால் உண்மை! தமிழில் பெண்ணின் பெருமையை உயர்த்திப்
பிடித்தவர்கள் – பெண் கல்விக்காக, உயர்வுக்காக உரத்துக் குரல்
கொடுத்தவர்கள் – பெரும்பான்மையும் ஆண்மக்களே ஆவர். ‘பகுத்தறிவுப் பகலவன்’
தந்தை பெரியார், கவியரசர் பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நீதியரசர்
மாயூரம் வேதநாயகர், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் ஆகியோர்
இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாளர்கள் ஆவர். இவ் வரிசையில் கவிஞர்
மா.உ.ஞானவடிவேலும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆதி பகவன் முதற்றே உலகு’ (1) என்பார் வள்ளுவர் பெருமான். ஞானவடிவேலோ,
‘பெண்களால் ஆனதே உலகு!’ என அறுதியிட்டு உரைக்கின்றார். அவரது கருத்தில்,
“தாயும் தமக்கையும் தோழியும் ஆகி
தாங்கும் மனைவியும் தன்மகளும் ஆகி
ஆண்களின் செயல் அத்தனையும் இயக்கும்
பெண்களால் ஆனதே உலகு!”
‘பெண்களால் ஆனதே உலகு! அவர், பெருமையை எண்ண ஏது அலகு?’ என்னும் அவரது
வினா பொருள் பொதிந்தது. ‘ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும் பின்னே ஒரு
பெண் இருப்பாள்’ என்னும் முதுமொழிக்கு இணங்க, ‘ஆண்களின் செயல்
அத்தனையையும் தாய், தமக்கை, தோழி, மனைவி, மகள் எனப் பல நிலைகளில்
இருந்து இயக்குபவள் பெண்’ என்றும், அத்தகைய ‘பெண்களால் ஆனதே உலகு’
என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார் ஞானவடிவேல்.
“மனைவி வாழ்க்கைத் துணை. அத்துனை வெறும் எலும்பா? தோலா? உடம்பா? பொறியா?
அன்று; அன்று. அத்துணைக்கு ஒப்பானதும் ஒன்றில்லை; உயர்வானதும் ஒன்றில்லை.
எதை இழந்தாலும் எளிதில் பெறலாம்; காதலியை இழந்தால் அரிதிலும் பெறுதல்
இயலாதே. காதலி பெறுதற்கு அரியவள். அவளை இழந்தால் மீண்டும் அவளை எப்படிப்
பெறுதல் கூடும்? உலகெலாஞ் சேர்ந்தாலும் அவை காதலிக்கு ஈடாகா” (திரு.வி.க.
வாழ்க்கைக் குறிப்புக்கள்: பகுதி 2, ப.714) என வாழ்க்கைத் துணையின்
அருமையையும் உயர்வினையும் பறைசாற்றுவார் ‘தமிழ்த் தென்றல்’
திரு.வி.கலியாணசுந்தரனார். அவரது அமுத மொழிக்குக் கவிதை வடிவம்
கொடுத்தல் எப்படி இருக்கும்? ‘துணை’ என்னும் தலைப்பில் ஞான வடிவேல்
படைத்துள்ள கவிதை இவ் வகையில் கருதத்தக்கது. அக் கவிதை வருமாறு:
“நீ புன்னகைக்கும் போது
நீங்கிப் போய்விடுகின்றன
கவலைகள்!
நீ ஆற்றுப்படுத்தும் போது
அகன்று விடுகின்றன
சுமைகள்!
உன் ஊக்க மொழிகளில்
உடனே முடிகின்றன
கடமைகள்.
நீ அருகில் இருக்கும் போது
அன்பில் – உருகி வழிகிறது
உள்ளம்!
நீ தொடர்பில் இருக்கிறாய் –
தொடர்ந்து இயங்குகிறது
இதயம்!”
இங்கே, கவலைகளைப் போக்கி, சுமைகளை நீக்கி, ஆற்றுப்படுத்தி, ஊக்கம் தந்து,
அன்பு பாராட்டி, எப்போதும் தொடர்ந்து இயங்குவதற்குப் பெரிதும் காரணமாக
அமைவது வாழ்க்கைத் துணையே என்கிறார் கவிஞர்.
பாச உணர்வின் மறுபக்கம்
வாழ்வில் ஒரு கட்டத்தில் நாம் இந்த உலகிற்கு வருவதற்குக் காரணமாக
இருந்த நம் பெற்றோரைக் கூட புறக்கணித்து விடுகிறோம்; அவர்கள் மீது சில
சமயங்களில் சுடுசொற்களையும் அள்ளி வீசி விடுகிறோம். அதே நேரத்தில், நம்
மகன், மகள் என்றால் சிறுசிறு காரணங்களுக்காகவும் உணர்ச்சி
வயப்படு-கிறோம்; விரைந்து செயல்படுகிறோம். பாச உணர்வின் இம்
மறுபக்கத்தினை ஞானவடிவேல் ஓர் அழகிய கவிதையாக வடித்துள்ளார். கவிஞரின்
சொற்களில் அக் கவிதை வருமாறு:
“எத்தனை சுடுசொற்கள்
சமயங்களில்…
அத்தனையும் பொறுக்கிறாள்
அம்மா.
எவ்வளவு அலட்சியம் செய்கிறேன்…
அவ்வளவும் சகிக்கிறார்
அப்பா.
காய்ச்சல் கண்டான் என் மகள்.
கலங்கித் தவிக்கிறேன்
நான்.
கையில் சிராய்ப்பு மகளுக்கு.
காரெடுத்துப் பறக்கிறேன்
சிகிச்சைக்கு.
அட…!
பாசமும்
கீழ்நோக்கித் தான்
பாயுமோ…?
அருவி போல…!”
‘வாழ்வில் பாசம் என்பது அருவியைப் போல எப்போதும் கீழ்நோக்கித் தான்
பாயும்’ - இதுதான் நிதர்சன உண்மை; நடைமுறை அனுபவம்.
‘பிள்ளைப் பாசம்’ என்னும் தலைப்பில் அமைந்த கிராமியக் கதை இங்கே
நினைவுகூரத் தக்கது. மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சொற்களில் அக்
கதை வருமாறு:
“நல்ல கடுமையான வெயில். மகன் விறகு கீறிக் கொண்டிருந்தான். அவனுடைய
அம்மா தன்னுடைய பேரனை இடுப்பில் வைத்துக் கொண்டு தனது மகன் விறகு கீறிக்
கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். நிற்கக் கூட அங்கே நிழல்
இல்லை.
அவனுடைய குழந்தையைத் தன்னுடைய அம்மா இப்படி வெயிலில் வைத்துக் கொண்டு
நிற்பதைப் பார்த்த அவன், ‘அம்மா, பிள்ளையை இப்படி வெயிலில் வைத்துக்
கொண்டு நின்று கொண்டிருக்கிறாயே’ என்று கடிந்து கொண்டான்.
அவள், ‘மகனே, வெயிலில் இப்படி நீ கஷ்டப்படுவதுதான் என் கண்ணுக்குத்
தெரிந்தது; உன் பிள்ளையை வெயிலில் நான் வைத்துக் கொண்டிருப்பது எனக்குத்
தெரியவில்லை. அது உன் கண்ணுக்குத் தான் தெரிந்தது’ என்று சொன்னாள்.
மகன் கோடாரியைக் கீழே போட்டுவிட்டு, ‘சரி, வா போவோம்; பொழுது சாய விட்டு
வந்து விறகு கீறலாம்’ என்று நடந்தான்.
அவனைத் தொடர்ந்து சென்ற அவனுடைய தாய் தன் பேரக் குழந்தைக்குப் பிரியமாக
ஒரு முத்தம் கொடுத்தாள்” (தமிழ்நாட்டுக் கிராமியக் கதைகள், பக்.22-23).
‘அவரவர் மனமே ஆன்மிகத்தின் எல்லை’
“இன்று ஆன்மிகம் எப்படி இருக்கிறது? ஆன்மிகம் என்றால் என்ன? இவை
எல்லாவற்றையும் ஆராய வேண்டும்… ஆன்மிகம் என்பது ஆன்மாவின் – உயிரின்
தரத்தை வளர்த்துக் கொள்ளுதல். ‘நான்’, ‘உள்ளம்’, ‘ஞானம்’ என்ற மூன்றும்
இணைந்து வளர்ந்த ஒன்றே ஆன்மிகம்… மனிதனின் ஆன்மா, ஆண்டவனின் தீப ஒளியாக
விளங்க வேண்டும். இத்தகைய ஆன்மிகக் கல்வியை, ஆன்மிக ஞானத்தை அல்லது
ஆன்மிகத்தில் சிறந்தாரைத் தேடித்தான் காணவேண்டும்” (குன்றக்குடி
அடிகளார் நூல் வரிசை: தொகுதி 12, பக்.475, 476; 480) என்பார் தவத்திரு
குன்றக்குடி அடிகளார். இக் கருத்துக்களின் வழி நின்று ஞானவடிவேலின்
‘ஆன்மிகம்’ என்னும் கவிதையை அலசிப் பார்க்கலாம்.
‘எது ஆன்மிகம்?’ என்னும் சிந்தனை அலைவரிசையில் ஞானவடிவேல் எழுப்பி
இருக்கும் தெறிப்பான வினாக்கள் வருமாறு:
1. கல்லில் கோயில் கட்டி வைப்பதா?
2. கடா வெட்டிக் கறி சமைப்பதா?
3. அன்னம் பொங்கிப் பகிர்ந்து அளிப்பதா?
4. ஆயிரம் தேங்காய்த் தலை உடைப்பதா?
5. மண்டிக் கால் இட்டு மனம் திருந்தலா?
6. மணிக்கை ஏந்தி தினம் தொழுதலா?
7. மந்திரம் சொல்லி மாயம் செய்வதா?
8. எந்திரத் தகடே எல்லாம் என்பதா?
9. உண்டி சுருக்கி உருக்குலைவதா?
10. உண்டி(யல்) குலுக்கி உபயம் செய்வதா?
11. உறவைச் சேர்த்து இன்புறுதலா?
12. துறவைத் தேர்ந்து துன்புறுதலா?
13. அகிற்புகை மூள யாகம் செய்வதா?
14. அவயவம் நோக யோகம் செய்வதா?
நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இவை எவையுமே ஆன்மிகம் இல்லையாம்!
‘அவரவர் மனமே ஆன்மிகத்து எல்லை’ என இரத்தினச் சுருக்கமாக வரைவிலக்கணம்
வகுக்கிறார் ஞானவடிவேல். மேலும் அவர்,
1. மனத்தால் தனித்து மண்ணில் இருத்தல்
2. பணத்தைத் தூசாய் எண்ணி இருத்தல்
3. பசியைத் தணிக்கும் பணியில் நிற்றல்
4. கசியும் கண்களின் காயம் ஆற்றல்
5. எளிய வாழ்வை ஏற்றுப் பேணல்
6. எடுத்த செயலில் வெற்றி காணல்
7. உதடு நெஞ்சில் உண்மை பூணல்”
என்னும் ஏழு விழுமிய பண்புகளே உண்மையான ஆன்மிகத்திற்கு உரியவை எனவும்
நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார்.
வானம் போல் வாழ்வோம்!
“எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும் நீயே;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீ அதில் சிற்றெறும்பே;
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித் தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள் தாம் பேசல் என்னே!” (அழகின்
சிரிப்பு, ப.37)
என ‘வான் தந்த பாடம்’ குறித்து எடுத்துரைப்பார் பாவேந்தர் பாரதிதாசன்.
அவரது அடிச்சுவட்டில் ஞானவடிவேலும் ஒரு சிறந்த கவிதை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முதுமை என்பது சுமை; அதுவும் தனிமையும்
சேர்ந்து கொண்டது என்றால், கேட்கவே வேண்டா; அது கொடுமையிலும் கொடுமை.
முதுமையும் தனிமையும் வறுமையும் ஒருவரது வாழ்வில் கூட்டணியை அமைத்துக்
கொண்டன என்றால், அது தான் கொடுமையின் உச்சகட்டம்.
“உதவுவார் இருப்பின்
முதுமை வெறும் பயிற்சி;
தனித்து எதிர் கொண்டால்
அது பேரதிர்ச்சி!”
என எடுத்துரைக்கும் ஞானவடிவேல், வானத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள
வேண்டிய வாழ்க்கைப் பாடம் ஒன்று உண்டு என்கிறார்.
“வான்நிலவைப் பார் தம்பி!
வளர்பிறை இளமை:
தேய்பிறை முதுமை;
தளர்மதியை வானம் – என்றும்
தள்ளி வைப்பதில்லை.
வானம் போல வாழ்வோமே! - நாளைய
வயோதிகர் நாம்! உணர்வோமே!”
நேர்வழிக்கு நிகர் இல்லை!
ஒரு பெண்ணிடம் குடிகொண்டிருக்கும் உயரிய பண்புகளாகப் பெண்மை, தாய்மை,
இறைமை ஆகிய மூன்றினைக் குறிப்பிடுவார் ‘தமிழ்த் தென்றல்’
திரு.வி.கலியாணசுந்தரனார். அது போல, ஒரு நிறைமனிதனிடம் கொலுவிருக்கும்
விழுமிய பண்புகளாக எளிமை, வாய்மை, நேர்மை ஆகிய மூன்றினைச் சுட்டுவர்
சான்றோர். இம் மூன்று பண்புகளுள் தலையாயது நேர்மை. நெஞ்சுரமும் நேர்மைத்
திறமும் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல. நெஞ்சுரம் கொண்டோரே
நேர்மையான வழியில் நடை பயில்வர்; வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,
நேர்மைத் திறத்தோடு ஒருவர் வாழ வேண்டும் என்றால், அவர் நெஞ்சுரம்
மிக்கவராக இருத்தல் வேண்டும்.
“நல்லதை எண்ணுவோம்
நன்மையே பண்ணுவோம்
நல்வழி வாழ்ந்திடில் வாழ்க்கை - தரும்
நிம்மதிக்கு ஈடாமோ பிற வேட்கை?”
என வினவும் கவிஞர், தவறான திசை நோக்கித் தாவிடும் கால்களைக் காலம்
சற்றுத் தாமதமே ஆனாலும் ஒரு நாள் தண்டித்து விடும் என்றும், முறையான
பாதையில் முயன்றிடும் மாந்தரைக் காலம் சற்று மூச்சுத் திணற வைத்தாலும்
எப்படியும் முன்னேற்றிப் பார்க்கும் என்றும் முடிந்த முடிபாகக்
கூறுகின்றார்; இன்னும் ஒரு படி மேலே சென்று, கடவுளே ஆனாலும் கடமையைச்
செய்தால்தான் காலம் கை கூப்பித் தொழுதிடும் என்றும், இன்றேல் கை
நீட்டிச் சுட்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக மொழிகின்றார்.
தெள்ளத் தெளிந்த தமிழில் கவிஞர் தெரிந்து உரைக்கும் உண்மைகள்
“தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை”
என்னும் கவிமணியின் கவிதைக் கொள்கைக்கு இணங்க, ஞானவடிவேல் தம்
கவிதைகளில் ஆங்காங்கே தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மைகளைத் தெரிந்து
உரைத்துள்ளார்.
“குரல் தாரும் சகத்தீரே! - ஒரு
குலம் அழிப்புநம் விழிநேரே…!”
என ஈழத் தமிழர்க்காக உளம் உருகிப் பாடும் போதும்,
“வன்முறை என்றும் வழிமுறை அன்று
அறவழி ஒன்றே அறிவிற்கு அழகு”
என அறவழியின் மேன்மையை எடுத்துரைக்கும் போதும்,
“உயர்திணை யோடு ஒன்றுதல் பாசம்
அஃறிணை மீதிலும் அன்பு எனில் நேசம்”
எனப் பாசத்திற்கும் நேசத்திற்கும் இடையிலான நுண்ணிய வேறுபாட்டினைப்
புலப்படுத்தும் போதும்,
“எல்லா மதங்களும் ஒன்றே! - அதை
இன்றே உணர்ந்தால் நன்றே!”
என மத வேறுபாட்டிற்குச் சாவுமணி அடிக்கும் போதும்,
“உருப்பட மாட்டாய் என்றுஉனை உலகம்
உதறித் தள்ளும்படி உனக்குஏன் இக்குடி?”
எனக் குடியின் கேட்டினைப் பொட்டில் அடித்தாற் போல் வெளிப்படுத்தும்
போதும்,
“ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி பெறுமே! -
நம்வசம் இருந்தால் நம்வாழ்வு நலமே!”
எனக் காலத்தின் அருமையை உணர்த்தும் போதும்,
“உருளம் உலகை உருட்டும் சக்தி
கடவுள் அல்ல! காதல், காதல்!”
எனக் காதலின் வலிமையை வடிக்கும் போதும்,
“பெற்றோர் விருப்பம் பிள்ளைகள் ஜெயிப்பது;
குழந்தைகள் விருப்பம் குழந்தையாய் இருப்பது”
எனக் கள்ளங்கரவற்ற குழந்தைகள் உலகை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும்
போதும்,
“அன்னையை நான் அறிந்துகொண்டது
அவள் அடிவயிற்றில் நெளிந்த கணத்தில்…
தந்தையை உணரத் தலைப்பட்டது
அப்பாவாய் நானும் ஆன தினத்தில்”
என அப்பாவின் பரிமாணத்தைத் தெளிவுபடுத்தும் போதும்,
“எங்கும் கறுப்புக்கு எதிராய் யுத்தம்!
பணத்தில் மட்டும் கறுப்பே விருப்பம்!”
என இன்றைய சமூக நடப்பினைத் தோலுரித்துக் காட்டும் போதும்,
“செய்வதோ இங்குக் கவிதை - தன்னைச்
செதுக்கிக் கொள்ளுவது அல்லவோ கவிதை?”
என உண்மைக் கவிதையின் இயல்பினைப் பறைசாற்றும் போதும், கவிஞரின்
உள்ளத்தில் உள்ள கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில், தேர்ந்த உண்மை வடிவில்
வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.
இன்முகச் செவ்வியர்
ஒரு கவிஞர் என்ற முறையில் ஞானவடிவேல் எதிலும் நலமே காண்கின்ற –
அனைத்திலும் நன்மையே நொக்குகின்ற – தளரா நம்பிக்கை ஆர்வம் கொண்டுள்ள –
ஓர் இன்முகச் செவ்வியராக (Optimist) விளங்குகின்றார். ‘எதிலும் அழகு!’
என்னும் தலைப்பில் படைத்துள்ள கவிதையை அவர்,
“இருந்தால்தான் என்றில்லை
இன்மையிலும் இன்பம்உண்டு!
வென்றால்தான் என்றில்லை – ஒன்றி(ல்)
நின்றாலே உயர்வே காண்!”
என முடித்து வைப்பது நோக்கத்தக்கது.
‘எங்கும் இன்ப மயம்!’ என்னும் தலைப்பிலும் ஞானவடிவேல் ஒரு கவிதை
புனைந்துள்ளார்.
“நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை
நேர்மைக்குப் பஞ்சம் இல்லை…
காசுபணம் பொருட்டு இல்லை
களைத்து நின்ற குறிப்பு இல்லை – நான்
இருக்கும் இடம் இருட்டு இல்லை - எதிலும்
இன்பமன்றித் துன்பம் இல்லை”
என அக் கவிதையையும் கவிஞர் நம்பிக்கையும் இனிமையும் துலங்கப் பாடிச்
சென்றிப்பது குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் இன்முகச் செவ்வியும் நம்பிக்கை ஆர்வமும் ஒளிரும் படைப்புக்கள்
பலவற்றை எதிர்காலத்தில் படைத்துத் தந்து கவிஞர் ஞானவடிவேல் அன்னைத்
தமிழுக்கு வலிமையும் வளமும் சேர்க்க வேண்டும் என்பதே இலக்கிய
ஆர்வலர்களின் வேட்கையும் வேண்டுகோளும் ஆகும்.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|