தமிழர் திருமண
மரபு
திருமதி செ.யோகரத்தினம் MA
காலக்கூற்றுவனின்
கொடுவாய்க்கும் கரையானின் ஈரவாய்க்கும் தப்பி இன்று நமக்குக்
கிடைத்திருக்கும் மிகப் பழைய நூல் தொல்காப்பியம். இது ஏறத்தாள மூவாயிரம்
ஆண்டு பழைமை வாய்ந்த இலக்கிய வடிவிலுள்ள இலக்கண நூலாகும். இதனையே தமிழ்
இலக்கணத்திற்கு முதல் நூல் என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறோம்.
எழுத்தாலான இலக்கியங்கள் தோன்றுவதற்குப் பன்நெடுங்காலங்களுக்கு முன்,
மனிதர்களின் பழக்க வழக்கங்கள் வாய்மொழி இலக்கியங்களாகத் தோன்றியிருக்க
வேண்டும். குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் மனிதர்களின் வாழ்க்கை முறையைக்
கூறுவனவாக அமைகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் வாய்மொழி
இலக்கியங்களுக்கும் இலக்கணம் கூறியிருக்க முடியம்.
திருமணம் என்பது மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வருகின்ற ஒரு முறை. ஒரு
ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ளும் ஒரு வாழ்க்கை
ஒப்பந்தமாகும். ஒரு சமூகச் சட்ட உறவுமுறை. இயற்கையானது. உயிரினங்கள்
அனைத்துக்கும் பொதுவானது. குடும்பம், பாலுறவு, இனப் பெருக்கம்,
பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணங்கள் செய்யப்படுகின்றன.
மனிதனால் மனித சமூகத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒழுக்கமுறை.
சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு முறையைக் குறிக்கிறது. ஒரு
புதிய சந்ததி தோன்றுவதற்குரிய பிணைப்புமுறை ஆகும். ஒரு ஆணும் ஒரு
பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டுக் கூட்டுப்
பொறுப்பில் பலர் அறியச் செய்து கொள்ளும் ஒரு செயல் ஆகும். பண்டைத்
தமிழர் தம் வாழ்க்கையில் களவொழுக்கம் கற்பொழுக்கம் ஆகிய ஒழுக்கங்களை
மேற்கொண்டிருந்தனர்.
மணச் சடங்குகள் பற்றித் தொல்காப்பியர் கூறும் செய்திகளின்படி பண்டைத்
தமிழர் மரபில் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில்
ஈடுபட்டிருந்தனர். பின்பு இச்செயற்பாட்டில் பொய்யும் வழுவும்
மிகுதிப்படவே, அதனைக் களைய வேண்டிச் சில விதி முறைகள் வகுக்கப்பட்டு
வந்துள்ளது. 'கரணம்' என்ற திருமணமுறை வாயிலாக பொய்மை நிகழாது
தடுக்கப்பட்டது. 'ஐயர் யாத்தனர் 'கரணம்' என்ப.'.இதன் காரணமாகத் திருமணம்
என்ற சடங்கு உண்டாயிற்று. களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாயிற்று.
இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாயிற்று. தமிழரல்லாப் பிறர் தலையீட்டால்
தமிழரிடையே பொய்யும் வழுவும் தோன்றியது. பொய்யாவது கொளற்குரிய மரபை
மாற்றிக் கூறுவதும் கொடைக்குரியோரை மாற்றுதலும். நிகழ்ந்ததை நிகழவில்லை
என்பன போன்றன. வழுவாவது மணமுறைகளை மாற்றிச் செய்வது. அவரவர் தொழில்
முறைக்கேற்ப மாற்றி வேண்டிய வேண்டியவாறு செய்வது.
பழங்காலத்தில் தமிழரிடையே களவு கற்பு எனும் கைக்கோள் இரண்டும் முறையாகவே
போற்றும்படி நிகழ்ந்துவந்தன என்பதும், இடையில் அவை பொய்யும் வழுவும்
கலந்து நிகழத்தொடங்கின என்பதும், அது கண்ட முனிவர் முறைப்படுத்தினர்
என்பதும், அவை தொல்காப்பியர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னர் நிகழ்ந்தன என்பதும் புலனாகும்.
பிறர் தலையீட்டால் பொய்யும் வழுவும் தோன்றுவதை இக்காலத்திலும்
கண்கூடாகக் காணலாம். ஒளிவிளக்கு ஏற்றுவதற்குப் பதிலாக பிறந்த நாளில்
விளக்கு அணைக்கும் சடங்கு தமிழரிடையே பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்குக் காரணம் தாம் என்ன செய்கிறோம் என்பதை யோசிக்காது மேல் நாட்டு
நாகரிகத்தை அச்சுப் பிசகாது செய்வதாகும்.
மேலும் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் வட நாட்டார் மரபுப்படி எங்கோ
உள்ள பேர் தெரியாத கிரகங்களைச் சாட்சிக்குக் கூப்பிட்டு அறிமுகம்
இல்லாத சோதிடரின் வழிகாட்டலில் கணிக்கப்படுகிறது. தொல்காப்பியருடைய
கருத்து வேறாக உள்ளது.
தொல்காப்பியர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்துப் பொருத்தங்கள் ஒத்திருக்க
வேண்டும் என்று கூறுகிறார். பிறப்பு, ஒழுக்கும், ஆண்மை, ஆண்டு, அழகு,
அன்பு, நிறை, அருள், அறிவு, செல்வம் ஆகியன ஒத்திருக்க வேண்டும்
என்கிறார். மேலும் முக்கியமானதாக அழுக்காறு, சூழ்ச்சி, தற்பெருமை,
புறங்கூறல், கடுஞ்சொல் கூறல், சோர்வு, முயற்சியின்மை, தன் குலப் பெருமை
பேசுதல், பேதைமை, மறதி, பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை ஆணென்றாலும்
பெண்ணென்றாலும் இருக்க்கூடாத குணங்கள் என்கிறார்.
முற்கூறப்பட்ட குணங்கள் ஒத்திருந்தால் பெரும்பாலும பிற்கூறப்பட்டவையும்
அமைந்துவரும். ஒரு ஆணையும் பெண்ணையும் இணைப்பது வள்ளுவன்
வாய்மொழிக்கமைய வாழ வைக்கவே.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பம் பயனும் அது.
ஆனால் தற்காலத்தில் திருமணம் முடிந்ததும் மாமியாரை எப்படிச் சீர்
திருத்துவது, மாமனாரை எப்படி வரைக்கறவு செய்வது, கணவனையோ அல்லது
மனைவியையோ எப்படி பழி வாங்குவது அல்லது ஆடசிப்படுத்துவது என்பவையேயாகும்.
முடிவில் மூன்றே மாசத்தில் வாழ்க்கை முறிவு, இல்லையென்றாலும் அன்பு
வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான்.
இவர்களுக்கு சுய புத்தியும் இல்லை, பார்த்துப் பழகும் புக்குவமுமில்லை.
யாரும் வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியும் கொடுக்கவில்லைப் போலும். ஏதோ
தாமாகச் சிந்தித்துத் திருந்திக்கொள்ள முயற்சித்தால்த்தான் உண்டு.
தற்கால மணமுறையில் புரோகிதர் வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பதுமில்லை
சிந்திக்க விடுவதுமில்லை. ஆனால் கன்னிகாதானம், தீயை வலம் வருதல்,
தெட்சினை பெறுதல், பொய்யும் புரட்டும ;கூட உண்டு. பட்டப் பகலில்
மணமக்களுக்கு அருந்ததி காட்டுவதும், அம்மி மிதித்தலும் நடைபெறும்.
தம்பதிகள் கண்களை மூடிக்கொண்டு அருந்ததியைப் பார்த்ததாகச் சொல்வார்கள்.
புரோகிதரும் சும்மா விடமாட்டார், குத்து விளக்கையொ கண்ணாடியையோ காட்டிப்
பாவனை செய்யுமாறும் கூசாத கூறிவிடுவார்.
மேலும் புரோகிதர் சொல்லும் சுலோகம், சரியா தப்பா என்பது அவருக்கே
தெரியாது, மற்றவர்கள் யாருக்குமே தெரியாது, தெரியாத மொழியாச்சே! ஆனால்
அவருடைய சுலோகத்தின் அர்த்தம் என்னவோ மிகவும் அசிங்கமானது. இந்தப்
பெண்ணை முதலில் சோமன் மனைவியாக வைத்திருந்தான், அப்புறம் கந்தர்வன்,
மூன்றாவதாக அக்கினி இவளுக்கு கணவனாக இருந்தான், இறுதியாக
மனிதகுலத்தவனாகிய நான் இவளுக்குக் கணவனாகிறேன் என்பதுதான் சுலோகம்.
மனிதகுலத்தவனாகிய நான் முதலில் சோமனுக்கும், அப்புறம் கந்தர்வனுக்கும்.
பிறகு அக்கினிக்கும் மனைவியாக இருந்தவளை இன்று சபையோர் சாட்சியாகவும்,
அக்கினி சாட்சியாகவும் அந்தணப் பெருமக்கள் சாட்சியாகவும் திருமணம்
செய்து கொள்கிறேன் என்பதாகும். தொல்காப்பியரின் கற்பு வாழ்க்கையும்
போச்சு, தற்கால நெறிப்படியான கற்பு வாழ்க்கையும் பறந்தார்.
இப்படியான ஒரு அவமானத்தை தெரியாத மொழியிலே புரோகிதர் சொல்ல அதனைத்
திருப்பிச் சொல்லி அங்கீகரிக்க சபையோர் எல்லோரும் வாயார வாழ்த்தி
பூச்சொரிந்து அரிசியும் போடுவார்கள். சகல மரியாதையுடன் புரோகிதருக்கு
தெடசினையும் கொடக்கப்படும்.
சங்கப் பாடல்கள் தமிழ் முறை திருமணங்கள் பற்றி கூறுகின்றன. வளர் பிறை
நாளில், விடி காலையில், வரிசையாக பந்தர்க்கால் இட்டு, பந்தல் போட்டு,
மலர் மாலைகள் தொங்கவிட்டு, தீபங்கள் எற்றி, வெண்மணல் பரப்பி, உற்றார்
உறவினர் புடைசூழ உழுத்தம் கழியும் அறுசுவை உண்டியும் கொடுத்து திருமணம்
சிறப்பாக நடக்கும். பெண்கள் முன்னின்று இதனை நடத்துவார்கள் என்று
சொல்லப்படுகிறது. அகநானூற்றில் பாடல்கள் உள்ளன.
தலைவன் தலைவி பொறுப்புடன் இனிதே குடும்பம் நடத்துவர். இல்வாழ்வான்
கடமைகளான அறங்களைச் செய்து பாராட்டைப் பெறுவார்கள்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
இதவே தமிழர் திருமண மரபாகும்.
திருமதி செ.யோகரத்தினம்
MA
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|