இளையோரும் தற்கொலை எண்ணங்களும்
(Suicidal Ideation among youth)
சிந்தனைப் பூக்கள் எஸ்.பத்மநாதன்
உலகில்
சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒரு தற்கொலையும், 3 விநாடிகளுக்கு ஒரு தடவை
தற்கொலை முயற்சியும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. நாடுகள் ரீதியில் இவற்றை
அளவிட முடியாத அளவுக்கு பல்வேறு வழிகளில் தற்கொலைகள் இடம்பெறுகின்றன.
மொத்தமாக ஒரு மில்லியன் மக்கள் சராசரியாக வருடமொன்றிற்கு தற்கொலை
செய்கிறார்கள். அதிலும் பெண்களை விட ஆண்களே தம்மை
மாய்த்துக்கொள்கிறார்கள் என்பதும் தெளிவு. 10 – 20 மில்லியன் மக்கள்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாலும் தப்பித்து விடுகிறார்கள். இந்தக்
கருத்துக்கள் 172 நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளின்
முடிவாகும்.
தற்கொலை என்னும் துன்பியல் நாடகத்தில் ஈடுபட்டவர்களை ஆய்வு செய்தால் பல
வியப்புக்கள் ஏற்படும். தான் வாழ்வதைவிட இறப்பது மேலானது என்று நினைத்தே
தற்கொலை செய்கிறார்கள் - உண்மையில் தற்கொலை என்பது ஒருவர் நினைத்து
திட்டமிட்டு தனது உயிரைத் தானாகவே அழித்தலாகும். 'தம் வாழ்வுடன்
தொடர்புபட்ட மிக முக்கிய நபர்களுக்கு, தமது நிறைவேற்றப்படாத உளத்தேவைகளை
தெரியப்படுத்த எடுக்கும் முயற்சியே தற்கொலை' ஆகும். இறைவன் தந்த
இன்னுயிரை தாமாகவே அழித்துக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை
ஏற்றுக்கொள்ளப்படத்தக்க விடயமல்ல.
இளையோர்கள் தற்;கொலை எண்ணங்களுடன் வாழ்வது பல்வேறு சந்தர்ப்பங்களில்
ஆராயப்படுகின்றது. அமெரிக்காவில் தற்கொலையியல் (Suicidology)
என்ற துறை இதுபற்றி ஆய்வு செய்கிறது. இதனால் 1968; முதல் American
Association of Suicidology மூலம் பல அவதானிப்புக்கள்
வெளியிடப்படுகின்றன. கனடாவிலும் Canadian Community Survey – Mental
health ஆய்வு மூலம் பல ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. 15 – 24
வயதுக்குட்டவர்கள் மனநிலை, பதட்டக் கோளாறுகள் காரணமாக தற்கொலை செய்வதாக
அறியப்பட்டுள்ளது. 7 வீதமான இளையோர்கள் மனச்சோர்வு காரணமாக தற்கொலை
செய்துள்ளனர். இதனை ஏனைய தற்கொலை செய்தவர்களுடன் ஒப்பிட்டால் சற்று
அதிகமாகும். 25 – 64 வயதினர் 5 வீதம், 65 வயதுக்கு மேற்பட்டோர் 2
வீதமாகும்.
மிக கடுமையான மனச்சோர்வு காரணமாக 5 பேருக்கு ஒரு இளையவர் தற்கொலை
செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளமை தெரிகிறது. இளம் கனடியர்களின் மரண
காரணங்களில் தற்கொலை இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதனால் 15 – 24
வயதினர்களில் 12 வீதத்தினர் மனநல சிகிச்சையை நாடியுள்ளனர்.
கனடாவில் பல இனக் குழுவினர்கள் உள்ளமையால் வேறு வேறு காரணங்களே
தற்கொலைக்கு காரணிகளாக உள்ளன. பல்வேறு பொதுவான காரணிகள்
முன்வைக்கப்படுகின்றன. அதிதீவிர தாழ்வுச் சிக்கல் (Extreme Feelings of
inferiority), மறைந்துள்ள ஆவேச உணர்வுகள் (Hidden aggression), விரக்தி
(frustration), தனிமை (Loneliness), வெறுப்பு (Hate), வெட்க உணர்வு
(Shame), குற்ற உணர்வு (Guilt Feeling), பயம் (Fear)இ நம்பிக்கையின்மை
(Hopelessness), உதவியின்மை (Healplessness), உளச்சோர்வு (Depression),
பாலியல் Sexuality), குடும்பப் பிரச்சினைகள் (Hospitality in Family)
என்பனவாகும். இவற்றுள் இளையோர்களைப் பொறுத்தவரையில் சில காரணிகளே
முதன்மை வகிப்பனவாகும்.
மனச்சோர்வு என்பது இளையோர்களை வெகுவாக பாதிப்பதாகும். இதனால் 6 வகையான
ஒழுங்கீனங்கள் இளையோர்களை பாதிக்கின்றன. மனச்சோர்வு (Mood disorder),
இருதுருவ ஒழுங்கீனம் (Bipolar disorder), பதற்ற ஒழுங்கீனம் (Anxiety
disorder) மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாதல் என்பனவாகும். இந்தப்
பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களது சமூக வாழ்வு, உறவுமுறை, பாடசாலை
வரவு, குடும்பப் பொறுப்பு, தொழில் என்பன வெகுவாக மோசமடைகின்றன. வாழ்வின்
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ்விளையோர்கள் தாம் தற்கொலை எண்ணம்
கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இளம் பிள்ளைகளிடையே தற்கொலை எண்ணங்கள் ஏற்பட சமூக, பொருளாதார காரணிகள்
(Socioeconomic conditions), உளசமூக காரணிகள் (Psychosocial
Conditions), மன நலம் (Mental Health) என்பனவும் உள்ளன. பொருளாதார
சூழ்நிலையால் பல இளையோர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஒற்றைப் பெற்றோர்
(Single parents) மூலம் வளரும் பிள்ளைகள் குடும்ப வருமானத்தால் பெரிதும்
பாதிப்புற்றுள்ளார்கள். வெளியே தெரியாதபடி வறுமை இருக்கிறது. இதேபோல
பாடசாலைகளில் நிகழும் விமர்சனம், வன்முறைகள், இனபேதங்கள், வம்புக்கு
இழுத்தல் (Bulling) காரணமாகவும் பல தற்கொலைகள் இடம்பெறுகின்றன. பல
இளையோர்கள் புகைப் பிடித்தல், மதுவுக்கும் போதைவஸ்துக்கும் அடிமையாகி
உள்ளனர். இது இவர்களது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கின்றது.
இவர்களுக்கென பல குழுக்கள் உதவுகின்றன. ஒருவரது வயது, பாலியல்,
புவியியல் தன்மை, இடம்பெயர்வு, குடும்ப வருமானம், படிப்புநிலை, மன
எழுச்சி, எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் அறியப்படுகின்றன.
இன்றைய இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்மூளை (Schizophrenia) என்ற நோய்
பலரை தற்கொலைக்குத் தூண்டுகிறது என அறிக்கைகள் உள்ளன. இந்தவகை மனநிலை
பலரை ஆவேச உணர்வினை தூண்டுவதாகும். மூளையில் உள்ள இரசாயன மாற்றங்கள்,
மற்றும் பரம்பரை காரணங்களே இதற்குரியவையாகும். இவர்கள் கவலை, கோபம்,
நித்திரையின்மை, ஓய்வின்மை என்பவற்றால் அவஸ்தைப்படுவார்கள் இவர்கள்
தற்கொலைக்கும் மற்றவரை கொலை செய்வதற்கும் தூண்டப்படுவார்கள்.
இளவயதில் ஏற்படும் மனக்காயம் (Trauma) என்பதும் தற்கொலைக்கு காரணமாகலாம்.
மனக்காயம் அல்லது மனவடு என பல காரணங்களால் ஏற்படலாம். இது பாலியல்
ரீதியில் (Abusive Romantic Relationship) ஏற்படலாம். மிகவும் கடுமையான
சம்பவம் ஒன்றினை பார்த்ததாக இருக்கலாம். வேலையிடத்தில் ஏளனத்துக்கும்
வன்முறைக்கும் உள்ளாகியிருக்கலாம். இது வாழ் நாள் முழுவதும் ஒருவரை
பாதிப்பதாகும். சிலருக்கு இந்த மனக்காயம் சொற்பகாலம் இருந்;தாலும்
சிலருக்கு வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம். சிறியவயதில் பாலியல்
வன்முறைக்கு உட்பட்டிருந்தால் அது மாறாத வடுவாகும். சிலருக்கு இயற்கை
காரணங்கள் கூட இப்பாதிப்பை ஏற்படுத்தும். சூறாவளி பனிப்புயல்,
புவிநடுக்கம் கூட மனதினைப் பாதிப்பனவாகும். தமக்குத் தாமே மனக்காயம்
ஏற்படுத்துபவர்களும் உளர். சித்திரவதை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் மூலம்
அவர்கள் பாதிப்புறும்போது தம்மை அறியாமலே மனக்கிலேசம் அடைவர். பல
இளையோர்கள் மதுவுக்கும் போதைவஸ்துக்கும் உட்பட்டு மன எழுச்சியால்
மனக்காயம் அடைந்துள்ளனர். எதிர்மாறான எண்ணங்களே இவர்களுக்கு இருக்கும்
ஆளுமை ஒழுங்கீனம் எனலாம். சிலருக்கு சந்தேக உணர்வும் மனக்காயத்தை உண்டு
பண்ணலாம். மூளையில் உள்ள நரம்புக் கலங்கள் பாதிப்பதாலும் மனக்காயம்
ஏற்படலாம்.
காதல்
தோல்வி தற்போது இளையோர்களிடையே தற்கொலை உணர்வை தூண்டுவதாக கருதுகின்றனர்.
ஏம்மவர்களிடையே இளம் வயதினர்கள் இந்தக் காரணங்களால் தற்கொலை செய்துள்ளமை
தெரியவந்துள்ளது. பல இளையோர்கள் நட்பு, பாசம், அன்பு, பரிவு என்பதை
புரியாமல் உள்ளனர். நட்பு காதலாகலாம். காதல் நட்பாக முடியாது. காதலில்
எல்லை தாண்டுதலும் அத்துமீறலும் சகஐமாகிவிட்டது. காதல் குருடானது (Love
is blind) என்று அழைப்பது இதனால் தான். பல இளையோர்கள் திடீர்
சந்திப்புக்களால் காதல் வசப்படுகின்றனர். முரண்பாடான எண்ணங்களால் அல்லது
கருத்து மோதல்களால் குழம்பியுள்ள இளையோர் இறுதியில் எடுக்கும் முடிவு
தற்கொலை. நித்திரை குளிசைகள் மூலமோ கயிற்றில் தொங்குவது மூலமோ தம்மை
மாய்த்துக் கொள்கிறார்கள். சில பெண்கள் கைகளில் கத்தியால் கீறி தம்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தற்காலிகமான பிரச்சினைக்கு நிரந்தரமாகவே
இவ்வுலகை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.
சில இளையோர்கள் நம்பிக்கையீனம் அல்லது விரக்தி காரணமாக உயிரை
மாய்க்கின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன. குடும்பம், நண்பர், சமூகம்,
பெற்றோர், சகோதரர்கள், கூடப்படிப்பவர்கள், அயலவர்கள் என்பவர்களால்
கைவிடப்படப்பட்டுள்ள நிலையில் இத்தற்கொலை முடிவை எடுக்கின்றனர். சில
வீடுகளில் இளையோர்கள் துவக்குகளைக்கூட எடுத்து தம்மை
மாய்த்துக்கொள்கின்றனர். வெள்ளையின மக்கள் மத்தியில் தற்கொலை
செய்பவர்கள் துவக்குகளையே பயன்படுத்தியள்ளனர்.
சில இளையோர்கள் சுற்றாடல் காரணிகளால் (Enviornmental Causes) தற்கொலை
செய்கின்றனர். இதில் மறைமுகமாக கணணிமூல தாக்குதல், செல்போன்
துன்புறுத்தல்கள், நல்ல நட்பை இழந்தமை என்பவற்றால் தற்கொலை செய்கின்றனர்.
இந்த ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் சாகத் துணிகின்றனர்.
மேற்கூறிய பல்வேறு காரணிகளால் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நோக்கம்
உள்ளவர்கள் சில நடவடிக்கைகளைக் கொண்டிருப்பர். அவர்களது அறிகுறிகள்
பின்வருமாறு:
1. குடும்பம், நண்பர்களுடன் தொடர்பாடலைப் பேணாமல் ஒதுங்கி வாழுதல்,
தனிமையை நாடுதல்
2. ஏந்த ஒரு மகிழ்ச்சியான விடயங்களிலும் ஆர்வமின்றி இருத்தல்.
3. தற்கொலை, மரணம் பற்றி அதிகம் கதைத்தல் - 'நான் செத்தால் நல்லது'
என்று அடிக்கடி பேசுதல்.
4. பாடசாலை விடயங்களில் நாட்டமின்மை
5. தன் சொந்த தோற்றத்தையே புறக்கணித்தல்
6. ஆளுமையில் மாற்றங்கள் ஏற்படல்
7. கவலையுடன் நம்பிக்கையின்றி இருத்தல்
8. திடீரென்று உணவுப் பழக்கங்களை மாற்றுதல்
9. நித்திரையின்றி தவித்தல்
10. திடீரென பலம் இழத்தல்
11. மதுபோதையில் ஈடுபடுதல்
12. எதிர்மறையான சிந்தனை, தனியாக இருந்து அழுதல்
13. தலைவலி, வயிற்று வலியால் அவதியுறல்
14. சுயவெறுப்பு, குற்ற உணர்வு, தம்மைப்பற்றிய தாழ்வான மதிப்பீடு
கொள்ளுதல்
இப்படியான அடையாளங்கள் எல்லோரது வீடுகளிலும் இளையோரிடத்தில் காணப்படலாம்.
பெற்றோர்களே இவற்றை அவதானிக்க வேண்டும். இன்று பல நிலையங்கள் இதற்காக
உதவுகின்றன. இதற்காக சட்டத்துறை, சமூகவியல், மருத்துவத்துறை உதவுகின்றது.
உலகில் இதற்காகவே ஒரு நிறுவனம் உள்ளது. இதனை International Association
of Suicide Preventionஎன்பர். கனடாவில் உள்ள Candian Mental Health
Association இதில் உதவுகிறது.
முதலில் தற்கொலை முயற்சியாளர்களை இனம் காண வேண்டியுள்ளது. மிகுந்த
அவதானமாக பரிசீலனை செய்ய வேண்டும். அப்படியானவரை அணுகி, தற்கொலை தீர்வு
அல்ல என அவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
குடும்ப உறவுகள் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டும். குடும்பமே வன்முறையின்
தொட்டிலாக மாறக்கூடாது. நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். இதனால்
தனிமையைத் தவிர்க்கலாம். மனப்பாரத்தைக் குறைக்கலாம். கசப்பான சம்பவங்களை
பகிர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய உணர்வு உள்ளவர்கள் உளவளத்துணை மூலம் தன்னை மாற்றிக்கொள்ளலாம்.
நிறையவே நிறுவனங்கள் உள்ளன. ஆலோசகர்கள் இதில் உதவுகிறார்கள்.
பொதுவாக தற்கொலை உணர்வு உள்ளவர்கள் ஆன்மீக தேடல்களை உருவாக்க வேண்டும்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்ளலாம். இறைவழிபாடு நிறையவே உதவுகிறது.
தியானம், யோகா என்பவற்றில் ஈடுபடலாம். தற்கொலை வாய்ப்பினை இது
குறைக்கிறது.
தற்கொலை என்பது ஒரு சுகாதாரப் பிரச்சினையாகும். 15 – 24 வயது
இளையோர்களிடையே இது பெரியதொரு பூதாகரமான விடயமாகும். இப்படியானவர்களை
எவரும் கண்டால் தம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம். அவர்களுடன் நல்ல
முறையில் பழக வேண்டும். குறிப்பாக பெற்றோர்களே உதவ வேண்டும். பிள்ளைகள்
சொல்வதனைக் கேட்கலாம். அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கலாம்.
படிப்பில் உதவி செய்யலாம். நல்ல நண்பர்களைப் பேணத் தூண்டலாம். வீடுகளில்
நல்ல பாதுகாப்புக்களை ஏற்படுத்தலாம். இவற்றையெல்லாம் உணர்ந்து
செயல்ப்படும் பெற்றோர்களால் மட்டுமே தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற
முடியும்.
சிந்தனைப் பூக்கள்
எஸ்.பத்மநாதன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|