கலித்தொகை காட்டும் காதல்க் காட்சிகள்

திருமதி செல்லையா யோகரத்தினம் MA


ங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுவன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாகும். இவ் இலக்கிய நூல்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையினை எடுத்தியம்புகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோரகள் நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியினையும் வகுத்துச் செம்மையாக வாழ்ந்து காட்டியுள்ளமையைச் சங்கத்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

கலித்தொகை சங்கத்தமிழ் நூல்களுள் எட்டுத்தொகையில் ஒன்று. இது 'கற்றறிந்தோர் ஏற்றும் கலி' என்று போற்றப்படுகின்றது. தமிழர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. ஊன்றிப் படிப்பார்க்கு இன்பம் ததும்பச் செய்யும் இயல்புடைய பெட்டகமாக அமைந்துள்ளது.

காதல், உயிரினங்களிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு . அன்பும் அக்கறையும் கலந்த ஓர் உணர்வு. சேர்ந்து வாழவேண்டும் என்ற கலப்படமில்லாத ஓர் ஆசையாகும். சங்க இலக்கியங்களாகிய தொகை நூல்களிலும் திருக்குறளிலும் காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. இவற்றுள் காதல் என்பது, உள்ளத்தின் உணர்வு என்பதாலும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாது என்பதனாலும் அகம் எனப்படுகிறது. தொல்காப்பியத்திலும் தலைவன் தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காதல் வசப்படுவது என்பது இயற்கையான இயல்பான ஒருவித இரசாயன விவகாரம். அது உயிரினங்களிடையே இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தி உடலில் தொடர்ச்சியான பலவித இரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள். காதல் ஒரு வியாதியை ஒத்தது என்பர். ஒரு நோய் ஏற்பட்டால் பலவிதமான அறிகுறிகள் தோன்றுமே அதேபோல உடல் ரீதியான தெளிவாகத் தெரியக்கூடிய பல அறிகுறிகள் காதல் நோயால் ஏற்படும். தொல்காப்பியரும் இதனைத் தெளிவுற விளக்குகிறார்.

காதல் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான இரசாயன பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களாகும். இது ஈரப்பு நிலைக்கு இட்டுச் செல்லும். பின்பு உணர்வு ரீதிpயாக வளரந்;து இறுதிக்கட்டமாகச் சேரந்;து வாழும் நிலை ஏற்படுகிறது.

திருமணமான ஒரு மாதத்தில், ஒருவருடத்தில், இரண்டு வருடத்தில் என்று மணமுறிவுக் கணக்கு தற்காலத்தில் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? அநத் ஈர்ப்பு இன்மையேயாகும்.

தற்காலத்தில் இந்த ஈர்;பிற்காகவே பல முறைகளில் பெரியோர்கள் பொருத்தம் பாரத்;து திருமணங்களை நடத்திவைக்கிறார்கள். அப்படியிருநதும் அன்புவாழ்க்கை இல்லாமை,, பிரிந்து வாழ்தல், மணமுறிவு என்று பல விதமான சிக்கல்கள் குடும்பங்களில் ஏற்படுகின்றன. அதனால் குழந்தைகள் பலவிதமான இன்னல்களுக்கும் சிரமங்களுககும் ஆனாகின்றனர்.

இதே வேளை இல்வாழ்க்கை என்பது ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக ஏற்றத் தாழ்வின்றி அன்னியோன்யமாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டிலேயே அமைக்கப்படுகிறது. ஆனால் பெண்ணியம்; பேசுவோர், சமத்துவம் கோருவோர் இதனைக் குளப்பி வருகின்றனர்.

தொல்காப்பியர் மணப்பொருத்தத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்து பொருத்தங்கள் ஒத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, அழகு, ஆண்டு அன்பு, நிறை, அருள், அறிவு, செல்வம் ஆகியன ஒப்புமைப் பகுதிகளாகும். இவற்றை மனதில் இருத்தி கலித்தொகையில் காதல் வாழ்க்கையும் குடும்ப அமைப்பும் எப்படி அமைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

இளமையும் வாழ்க்கையும்

இளமை கொஞ்சக் காலம் தான் இருக்கும். அந்தநேரத்தில்த்தான் பொருள் தேடவும் வேண்டிஇருக்கிறது. பொருள் தனக்கோ தன் குடும்பத்திற்கோ அல்ல. வறுமையினால் தங்களிடம் வநது பொருள் வேண்டுவோரக்;கு கொடுக்கவே தலைவன் பொருள் தேடப் போவான்.

பொருள் தேடப் போனால் மனைவியை விட்டுப் பிரிந்து போக வேண்டும். பொருள் தேடி வந்த பின் கணவன் மனைவி இருவருக்கும் வயதாகிவிடுகிறது. வுhழ்க்கையை அனுபவிக்க முடியாமல்ப்போகிறது. பொருள் இல்லாமலும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. என்னதான் செய்வது? இந்தச் சிக்கல் காலம் காலமாகத் தொடர்கிறது. கலித்தொகை அப்படி ஒரு கணவன் மனைவியைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

'ஈதல் இசைபட வாழ்தலே' என்றாலும் பிறருக்கு இரங்கி ஈவதாகச் சொல்பவன், தன் உயிர்த்;துணையான மனைவிக்கு ஏற்படும் துயரினைக் கருதாமை தவறு என்று சொல்கிறது.

மடலேறும் பழக்கம்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளில் மடலேறுதல் என்பதும் ஒன்றாகும். இது களவு கற்பாக மாறுவதற்கு ஒர் அரிய நிகழ்வாகும். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைய முடியாத நிலையில் மடலேறுவான். இது காதல்; வாழ்வில் ஒருவகையான யுத்தியாகும். கலித்தொகையில் மடல்ஏறுதல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தலைவன் காதலியைக் கூடி மகிழும் வழிதான் யாதோ? 'மணிப் பலி சூட்டிய நூலோடு, பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய மலர்களையும் சேரத் துக்கட்டிய என் குதிரையைப் பாருங்கள். இம் மல்லல் ஊர்; மன்றிலே வந்து நின்று இவளையே நினைத்துப் பாடும் என் குறையை எல்லோரும் கேழுங்கள்' என்கிறான் தலைவன். உப்புப் பாவை கரைந்து போவது போல அழிந்து கொண்டே போகின்றதே என் வாழ்க்கை. தலைவன் மடலூர்தல் கண்டு அஞ்சி தலைவியைக் கொண்டு வந்து தலைவனுக்கு மணம் செய்து கொடுத்தலும் கூறப்படுகிறது.

கண்டவர் வருந்துமாறு தலைவன் மடலேறிப் பாட, பெண்ணைப் பெற்றவர்கள் கேட்டு, போர்த் ;தொழிலில் வல்ல பாண்டியனுக்குப் பயந்த பகைவர் கப்பங் கட்டுவதைப் போல, தம் குலப் பெருமைக்கு இழிவு என அஞ்சி மகளைத் திருமணம் செய்து கொடுத்தனர் என விவரித்துக் கூறுகிறது.

தலைவன் மடலேறுவதற்குக் காரணம் தலைவியே என்று ஊர்மக்கள் தூற்றுவார்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தலைவியை அடையலாம் என்ற தலைவனின் மனநிலையையும் புலப்படுகிறது.

மேலும் தலைவி தலைவனின் குறையினைத் தீர்க்காவிட்டால் மடலேறுவேன் என்று தோழியிடம் கூறுவதாகவும் மற்றொரு பாடல் அமைகிறது. காதல் எல்லை மீறும்போது தலைவியே தலைவன் மடலூரந்;து தன்னை அடையவேண்டும்; என்று இறைவனை வேண்டும் தன்மையும் உண்டு. தமர் மறுத்தல், திருமணத்திற்குத்தடை முதலிய காரணத்தால் காதல் நிறைவேறாது போகும் நிலையில் தலைவன் மடலேறுவான் என்பது புலப்படுகிறது.

இயற்கையுடன் பேசும் பழக்கம்

தமது இன்பத்தைப் பிறருடன் பகிர்ந்;துகொண்டு வாழும் மாண்புடையவர்களாகச் சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்ந்ததைக் கலித்தொகை சுட்டிக் காட்டுகிறது. தன் இன்பத்தைப் பகிரந்;து கொள்ள இயற்கையை அழைத்துப் பேசுவதும் மக்களின் பழக்க வழக்கமாக இருந்துள்ளது. அம்புலியை அழைத்து தன் இன்பத்தை வெளிப்படுத்தும் பழந்தமிழரின் வாழ்வியல் பாங்கைக் காணமுடிகிறது.

தமிழர்; பண்பாட்டின் அடையாளமான பழக்கவழக்கம் குறித்துக் கலித்தொகை தெளிவுற மொழிகிறது. தங்களது தலைமுறை தவறாது ஒழுகிய பண்பாட்டின் எச்சமாக விட்டுச் சென்ற மிகச் சிறந்த நற்பண்புகளைப் பின்வரும் தலைமுறையினர் நல்லமுறையில் பின்பற்றும் வகையில் தொகுத்துரைத்திருக்கும் பாங்கு மேன்மையுடையது, போற்றுதலுக்குரியது.

ஏறுதழுவுதல்

முல்லைநில மக்களின் வீர விளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும்; விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதனை ஜல்லிக்கட்டு, காளை விரட்டல் என்றும் பல பெயர்களால் சுட்டுவோம். தமிழர் திருநாளாம் பொங்கலை ஒட்டி ஊர்களில் இவவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகின்றது. வேறு சங்க நூல்களில் காணப்படாத ஏறுதழுவுதல் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலும் வீரமும் தமிழர் தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இதனை முல்லைக்கலியில் பெரிதும் காணலாம். ஆயர்களின் வீரத்தையும் அஞ்சாமையையும் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் எனும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகிறது. எனவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது.

முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக்கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாகப் போர்ப்பயற்சி கொடுத்து ஏறு தழுவலுக்குப் பயன் படுத்துவார்கள். தங்கள் வீட்டில் வளரும் மகளுக்கு காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள்.
ஏறுகோள் காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்;வான். காளைப் போரில் வெற்றிபெற்ற இளைஞரை ஆயர்குலம் வியந்து நோக்கும், இளநங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.

அன்பு வாழ்க்கை

கணவன் மனைவி இருவரும் அகவாழ்வில் அறத்தோடு பொருந்திய இல்லற வாழ்வினை மேற்கொண்டனர.; ஓர் ஆடையைப் பகுத்து உடுத்தி வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம் ஆகும். எந்நிலையிலும் கணவன் மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் வாழ்க்கை நடத்துதல் வேண்டும். அவ்வாறு நடத்தினால் அவ் இpல்லறம் நல்லறமாகதத் திகழும். இத்தகைய அன்பு வாழ்க்கையை இல்லறத்திருப்போர் கைக்கொண்டு வாழவேண்டும் என்பதை 'ஒன்றன்கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்ற வரிகள் விளக்குகின்றன. தற்காலத்தில் வாழ்க்கை முறை இதற்கு நேர்மாறாக அமைந்துள்ளமை பெரும்பாலான மணமுறிவுகளுக்குக் காரணமாகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அடுத்த ஒரு காட்சி. இளமை நலங்கள் கனிந்து விளங்கும் தலைமகன் ஒருவனையும் தலைமகள் ஒருத்தியையும் காட்சிப்படுத்தகிறார் புலவர்.

பாலைநில வழி. நெடுவேல் நெடுந்தகையுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் நம் தலைவி. பேசும் பைங்கிளி, பந்தாடிய ஆயம், அத்தனையும் மறந்து, பெற்ற தாய், செவிலித்தாய், தோழி ஆகியோரைப் பிரிந்து பாலைநில வழியிலே தலைவனைப் பின்பற்றிவிட்டாள்.

கங்குல் புலராத காலை நேரம் பாலைநில வழியிலே போய்க் கொண்டிருக்கிற தலைவனையும் தலைவியையும் அந்தணர்; சிலர் கடந்து வருகின்றனர். தலைவியின் அச்சமும் தலைவனின் ஆழுமையும் அவரகளுடைய மனத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முறுவல் பூக்கின்றனர். தொடர்ந்து செல்கின்றனர்.

அதிகாலை, மகள் தன்னைப் பிரிந்து விட்டாள் என்று அன்னைக்குத் தெரிகிறது. அவ்வைகறைப் பொழுதில், தன் மகளைத் தேடி வருகிற தாய்; அவ் அந்தணப் பெரியோரைச் சந்திக்கிறாள். 'என் மகள் ஒருத்தியும், பிறன் மகன் ஒருவனும் தம்முள்ளே புணர்ந்து, அன்னார் இருவரைக் கண்டீரோ? பெருந்தகையீர்' எனக் கேட்கிறாள். மகளைப் பிரிந்து அவலப்படும் அத்தாயின் மனநிலையை அப் பெருமக்கள் புரிந்து கொண்டனர். உண்மை நிலையைக்கூறி அத்தாயை அமைதிப்படுத்தினர். பலவற்றையும் எடுத்துக்கூறினர் 'அன்னையே, ஆணெழில் அண்ணலோடு உன் மகளைச் சுரத்திடையே கண்டோம். மனம் கலங்காது இவற்றைச் சிந்திக்க வேண்டும். மணம் மிக்க சந்தனம் மலையிலேதான் பிறக்கிறது. இனிய இசை யாழிலேதான் பிறக்கிறது, வெண்முத்து நீரிலே பிறக்கிறது, இருப்பினும், இவற்றால் மலைக்கோ, யாழுக்கோ, நீருக்கோ நன்மையுமில்லை, பெருமையுமில்லை.

சந்தனத்தை அரைத்து மார்பிலே பூசிக் கொள்கிறவர்களுக்குத்தான் நன்மையும் பெருமையும். மலைக்கும் அப்போது தான் பெருமை. அதேபோல இன்னிசை யாழிலே பிறந்தாலும், அனுபவிக்கும் பொழுதுதான் யாழுக்குப் பெருமை, அதேபோல முத்தாலும் அணிபவருக்கே பெருமையாகிறது. இந்த நிலை தான் உன் மகளுக்கும். தான் விரும்பிய ஒருவனுடன் போய்விட்டதாலேயே கற்பெனும் அணியைக் கைவரப் பெற்றாள். களவொழுக்கம் கற்பொழுக்கமாகிவிட்டது. இதுவே அறநிலை. எனவே உன் மகளைப் பற்றிய வருத்தத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்வாயாக என்று கூறிச் சென்றனர் என்கிறது கலித்தொகையின் பாலைக்கலிப் பாடல்.
அனைத்து உயிரக்ளுக்கும் காதல், நல்லுடல் வாய்த்த காதலன் காதலியரோடு உறவாட வைத்த மருதக்கலி ஆசிரியர் ஒரு வேடிக்கையான தம்பதியரை அறிமுகப்படுத்துகிறார். இது நகையாடுவதற்கான ஒன்று என்று கருதுவதிலும் காதலும் காமமும் இயல்பானது, உடற் குறைவுடையாரையும் பற்றிக் கொள்ளும். அவர்களும் பிறர் போன்றே அன்புற்று வாழ்தலும் நிகழும் என்பதே சிறப்புடையதாகும்.

இங்கே ஒரு கூனியும் குள்ளனும் காதலிப்பதாக ஒரு கதை. அதில் இவள் அவனைப் பழிப்பாள், அவன் இவளைப் பழிப்பான். கடைசியில் 'கோன் அடி தொட்டேன்' என அரசன்மீது ஆணையிட்டு காதலின் உண்மையைச் சொல்வான் இவன். அவளும் ஒப்புக் கொள்வாள்.

நல்லுடல் வாய்த்தவர்களுக்கு மட்டுமல்ல மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்கும் காதல் வாழ்க்கை உண்டு. அன்பு கொண்ட அந்த மனங்களுக்கு என்றும் இல்லை மணத்துக்குத் தடை என்பதை மருதக்கலிப் பாடல் செப்புகிறது பண்பாடு மிக்க சங்க காலத்தமிழர்; வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் 'கற்றறிந்தோர் எற்றும் கலி' வழி வகுக்கிறது. வாழ்க காதலர்கள்! வளர்க காதல்!.
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்