எக்காலத்திற்கும் ஏற்ற சங்கச் சான்றோரின் அறிவுரை

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்


புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 204-ஆம் பாடலைப் பாடியவர் கழைதின் யானையார் என்னும் சங்கச் சான்றோர். இவருடைய இயற்பெயர் தெரிய-வில்லை. கரும்பினை விரும்பித் தின்னும் யானையைக் ‘கழைதின் யானை’ என்று சிறப்பித்துப் பாடியதால் இவர் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்பர் அறிஞர்.

வல்வில் ஓரி கொல்லிமலைப் பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனை வன்பரணர் என்ற சான்றோர் புகழ்ந்து பாடிய இரு பாடல்கள் (152, 153) புறநானூற்றில் காணப்படுகின்றன. ஒரு முறை, கழைதின் யானையார் வல்வில் ஓரியைக் காணச் சென்றார். அச் சமயம் வல்வில் ஓரி ஏனோ அவருக்குப் பரிசில் அளிக்கவில்லை. எனினும், அவருக்கு ஓரியின் மீது சிறிதும் வெறுப்பு எழவில்லை. இந் நிலையில் அவர் ஓரியிடம் கூறுவது வருமாறு:

“ஒருவனிடம் சென்று ‘இதனைத் தருக’ எனச் சொல்லி இரந்து நிற்றல் இழிந்தது. அவ்வாறு ஒருவன் கேட்ட பிறகும், அதற்கு எதிராகக் ‘கொடுக்க மாட்டேன்’ என்று சொல்லி மறுத்தல், அவ்விரத்தலினும் இழிந்தது. ஒருவன் இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தால் உணர்ந்து, ‘இப்பொருளைக் கொள்வாயாக’ என்று சொல்லிக் கொடுப்பது உயர்ந்தது. அதனை அவன் அப்படிக் கொடுக்கும் போது, அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி மறுப்பது, அக் கொடையினும் உயர்ந்தது. நீர் வேட்கை (தாகம்) கொண்டோர் தெளிந்த நீர்ப்பரப்பை உடைய கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் சென்று குடிப்பதால் கலங்கிச் சேற்றுடன் கிடக்கும் நீர் சிறிதளவே இருந்தாலும் அதனைத் தேடிப் பலரும் பல வழிகளில் செல்வர்.

பரிசில் பெற இரவலரை நாடிச் செல்வோர் தாம் கேட்ட பரிசில் கிடைக்கவில்லை என்றாலும், பறவை நிமித்தத்தையும் புறப்பட்ட நேரத்தையும் பழித்துக் கூறுவார்களே அல்லாமல், தமக்கு ஈயாதவரை ஒருபோதும் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ எனக்குப் பரிசில் நல்கவில்லை என்றாலும், வானத்தில் திரண்ட கரிய மேகம் மழை பொழிவது போல், யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வள்ளலே, நான் உன்னை வெறுக்க மாட்டேன்; ஓரியே, நீ வாழ்வாயாக!”

கழைதின் யானையாரின் இக்கூற்றினைத் தன்னகத்தே கொண்ட புறநானூற்றுப் பாடல் வருமாறு:

“ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்,
புலவேன் வாழியர் ஓரி; விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.”


இப் பாடலில் கழைதின் யானையார் ஈவோர்க்கும் ஏற்போர்க்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்துரைத்து, ஈவோர் ‘ஈயேன்’ என்பதால், ஏற்போரை விட இழிந்தவர் ஆவார் என்றும், ஏற்போர் ‘கொள்ளேன்’ என்பதால் ஈவோரை விட உயர்ந்தவர் ஆவார் என்றும் விளக்கி இருக்கும் திறம் நனி நன்று.

மூதறிஞர் தமிழண்ணல் குறிப்பிடுவது போல், “இப் பாடலின் முதல் நான்கு அடிகள் மானுட வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விழுமியத்தைப் படிப்படியாக வைத்து விளக்கியிருப்பது மிகுந்த சிந்தனைக்குரியது. பாடலில் அறநெறிப் படிகள் அழகுடன் சித்திரிக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு படியும் மேல் நோக்கிச் செல்கிறது. மனித வாழ்க்கையின் முன்னேற்றப் படிகள் இவை எனலாம்” (புறநானூற்றுக் குறும்படங்கள், ப.88)

உண்ணும் நீர்நிலை வற்றிச் சேறுபட்டது ஆயினும், அதனை நாடிச் செல்வோர் பலர் ஆவது போல, வரையாது கொடுக்கும் வள்ளலை நாடிப் பலரும் செல்வர்; பரிசில் நாடிச் செல்வோர் ஒருகால் தாம் கேட்டது கிடைக்கா-விட்டாலும், அவர் தம்மை நொந்து கொள்வதன்றிப் பரிசில் கொடுக்காத வள்ளலை ஒரு போதும் பழிக்க மாட்டார்கள் என்று குறிப்பிடுவது, வறுமையிலும் செம்மையாக, நயத்தக்க நாகரிகத்தோடு வாழும் பரிசிலரின் மாண்பினைப் பறைசாற்றுவது நோக்கத்தக்கது.

“புறநானூற்றில் கூறப்படும் அறவுரைகள் எக்காலத்தவர்க்கும், எந்நாட்ட-வர்க்கும், எச்சமயத்தார்க்கும் ஏற்றவை என்பதற்கு இப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” (மேற்கோள்: இர.பிரபாகரன், புறநானூறு: மூலமும் எளிய உரையும், ப.44) எனப் பேராசிரியர் ப.மருதநாயகம் கூறுவது ஈண்டு மனங்கொளத் தக்கது.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 






 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்