‘இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!’

பேராசிரியர் இரா.மோகன்


‘எ
ங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கு ஓர் இடம் வேண்டும்’ என அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புவதால் நிம்மதி கிடைத்து விடாது. ‘ஆயிரம் தான் வாழ்வில் வரும், நிம்மதி வருவதில்லை. அன்பே, வா வா வா!’ என வேண்டி விரும்பி மூன்று முறை அழைத்தாலும் நிம்மதி ஓடி வந்து விடாது. பின், வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மன நிறைவும் நிலவ வேண்டும் என்றால் என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? கவியரசர் கண்ணதாசனின் அனுபவ முத்திரை பதிந்த இரு திரை இசைப் பாடல்களில் இருந்து உங்கள் கேள்விக்கான பதில் இதோ:

1. “வரவு எட்டணா செலவு பத்தணா
     அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா…
     நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
     நிம்மதி இருக்காது - ஐயா
     நிம்மதி இருக்காது…
     யானையைப் போல பூனையும் தின்னா
     ஜீரணம் ஆகாது - ஐயா
     ஜீரணம் ஆகாது!”

                    (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, பக்.374-375)

2. “பரமசிமவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
     ‘கருடா சௌக்யமா’ என்று? ‘யாரும்
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்யமே!’ கருடன் சொன்னது!
    அதில் அர்த்தம் உள்ளது!”

                     (திரை இசைப் பாடல்கள்: நான்காம் தொகுதி, ப.432)

‘பாமா விஜயம்’ திரைப்படத்திற்காக எழுதிய பாடலில் கவியரசர் கண்ணதாசன், ‘நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது – ஐயா, நிம்மதி இருக்காது’ என அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதனை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ‘யானையைப் போல பூனையும் தின்னா, ஜீரணம் ஆகாது – ஐயா, ஜீரணம் ஆகாது’ என்கிறார். எனவே, யானை அதன் பெரிய உருவத்திற்கு ஏற்பவும், பூனை அதன் சிறிய வடிவத்திற்குப் பொருந்தும் வகையிலும் தின்றால்தான் எளிதில் ஜீரணம் ஆகும் என அறிவுறுத்துகிறார். ‘சூரிய காந்தி’ திரைப்படத்திற்காக எழுதிய பிறிதொரு பாடலில், பரமசிவன் கழுத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு பாம்பு, ‘கருடா நலமா?’ என்று கேட்ட போது, கருடன் ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் நலமாகவே இருக்கும்’ என்று நடப்பியல் உண்மையை நறுக்குத் தெறித்தாற் போல் எடுத்துரைக்கின்றது. ‘கருடன் சொன்னதில் அர்த்தம் உள்ளது’ என அனுபவப் பொருள் விளங்க அடித்துக் கூறுகின்றார் கண்ணதாசன்.

அண்மையில் ‘தி இந்து’ நாளிதழில் ‘மாயா பஜார்’ பகுதியில் உதய சங்கர் ‘சிறிய யானையும் பெரிய பூனையும்’ என்னும் தலைப்பல் எழுதி இருந்த சிறுவர் கதை இங்கே நினைவுகூரத் தக்கது. சிந்தனைக்கு விருந்தாகும் அக்கதை வருமாறு:

“யானைக்குத் திடீரென்று தன் பெரிய உருவத்தை நினைத்து, கவலையாகி விட்டது. எதிரில் பூனை வந்தது கூடத் தெரியாமல் நின்றது யானை.

‘என்ன சிந்தனையில் இருக்கீங்க?’ என்று யானையைப் பார்த்து கேட்டது பூனை.

‘உன் மாதிரி உடல் இருந்தால் நானும் பாய்ந்து ஓடலாம். எதிரியைக் கண்டால் ஒளிந்து கொள்ளலாம். என்ன வாழ்க்கை இது!’ என்று சலிப்போடு பூனையிடம் சொன்னது யானை.

‘நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? உன் மாதிரி பெரிய உடம்பு இருந்தால், என்னைப் பார்த்து எல்லோரும் பயப்பாடுவாங்க. சிங்கம், புலி, சிறுத்தை கூட கொஞ்சம் யோசித்துத் தான் தாக்க வரும். பெரிய உருவமே கம்பீரம், பெரிய உருவமே மரியாதை என்று நான் நினைக்கிறேன். என்னைப் பார்த்தால் இப்போதெல்லாம் எலி கூடப் பயப்படுவதில்லை” என்று யானையிடம் சொல்லி வருத்தப்பட்டது பூனை.
இரவு தூங்கி விழித்தவுடன் யானை பூனை அளவுக்கும், பூனை யானை அளவுக்கும் மாறி இருந்தன.

யானைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

‘ஆஹா! அற்புதம்! நான் நினைத்தது போலவே பூனை அளவுக்குச் சிறுத்து விட்டேன். இனி ஜாலியாகக் காட்டைச் சுற்றி வருவேன், பாய்ந்து ஓடுவேன், எம்பிக் குதிப்பேன்” என்று கூறி குதித்துப் பார்த்தது யானை.
அப்போது சிறிய யானையின் முன்பு ஒரு பெரிய உருவம் வந்து நின்றது.

“அட! பூனையா? பிரமாதம்! நாம் நினைத்தது போல் நீ யானை அளவுக்கும் நான் பூனை அளவுக்கும் மாறிவிட்டோம்! இனி சந்தோஷமாக வாழ்வோம்” என்று யானை உணவு தேடி வேகமாக ஓடியது.

அரை மணி நேரம் நடக்க வேண்டிய தூரத்தை ஐந்தே நிமிடங்களில் கடந்திருந்தது.

“அடடா! எவ்வளவு வேகமாக வந்து விட்டேன்! இனி சிறுத்தையுடன் கூடப் போட்டி போடலாம் போல!” என்று மகிழ்ந்தது யானை.

ஒரு கரும்பைப் பிடித்து இழுத்தது. ஆனால் யானையால் முடியவில்லை. தேங்காய் சாப்பிடலாம் என்று தென்னை மரத்துக்கு வந்தது. ஆனால் அவ்வளவு உயரத்தில் இருக்கும் தேங்காய்களைச் சிறிய தும்பிக்கையால் பறிக்க முடியவில்லை.

யானை பசியோடு நடந்து சென்றது. எதிரில் வந்த காண்டாமிருகம் மிதிப்பது போல் பாவனை செய்தது. உடனே யானை பயந்து விட்டது.

“சே, என்ன வாழ்க்கை இது! உருவம் சிறியதான பிறகு சாப்பிட முடியலை… நண்பன் கூட மிரட்டிட்டுப் போறான்… யாருக்கும் என்னைக் கண்டு பயமில்லை” என்று வருந்தியது யானை.

அப்போது வருத்தத்தோடு வந்து சேர்ந்தது பூனை.

‘உன் அனுபவம் என்ன?’ என்று பூனையிடம் கேட்டது யானை.

‘உருவம் பெரிதானதில் ஒரு எலியைக் கூட என்னால் ஓடிச்சென்று வேட்டையாட முடியவில்லை. என் இனத்தைச் சேர்ந்த சிங்கமும் புலியும் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. நான் பழைய படியே பூனையாகி விடுகிறேன். யானையின் கஷ்டம் யானையாக இருக்கும் போது தான் தெரிகிறது’ என்றது பூனை.

“ஆமாம், ஒரு பூனையின் கஷ்டம் பூனையாக இருக்கும் போது தான் தெரிந்தது” என்றது யானை.

சட்டென்று யானையும் பூனையும் பழைய நிலையை அடைந்தன. மகிழ்ச்சியாகச் சென்றன”.

இச் சிறுவர் கதை உணர்த்தும் இன்றியமையாத வாழ்க்கைப் பாடம் இது தான்:

‘இருப்பதைக் கொண்டு, சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தால் போதும், வாழ்வில் எல்லாம் – எப்போதும் – இன்ப மயமே!’.
 


பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021.

 







 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்