குழந்தை வளர்ப்பு
திருமதி செல்லையா யோகரத்தினம்
MA
'நல்லதோர்
குடும்பம் பல்கலைக் கழகம்';
எவ்வளவு சத்தியமான வாக்கியம். இங்கே அன்பு தான் ஆட்சி செய்யும்.
விட்டுக் கொடுத்தலும் புரிந்துணர்தலும் நிலைபெற்று நிற்கும். மகிழ்ச்சி
தாண்டவமாடும்.
சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் பொருளாதாரத்தில்த்; தான்
ஆரம்பிக்கும். அதுவே
'ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை:
அரிதரோ சென்ற இளமை தரற்கு' எனும் கலித்தொகைப் பாடலாக அமைந்து
விட்டால் வேறென்ன வேண்டும்.
'ஈதல் அறம் தீவினைவிட்டீட்டல் பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர்
கருத்து ஒருமித்து வாழ்தலே இன்பம், இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு'
என்பது ஒளவையின் கூற்று. இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைந்துவிட்டால்
வேறு பல்கலைக்கழகமே வேண்டியதில்லை.
விஜயதசமி அன்று பிள்ளைகளுக்கு ஏடு தொடக்குவது மரபு. மூன்று வயசிலோ
அல்லது ஐந்து வயசிலோ இதனைச் செய்வார்கள் காலம் காலமாகச் செய்துவரும் ஒரு
செயற்பாடு. உண்மையிலே ஒரு குழந்தை அதன் பிறகுதான் தன்னுடைய கல்வியைத்
தொடங்குகிறது என்பது ஒரு சந்தேகமே.
ஒரு குழந்தை எப்பொழுது கருவிலே உற்பத்தியாகி வளரத் தொடங்குகிறதோ
அப்பொழுதே அதன் கல்வி வளர்ச்சி ஆரம்பமாகி விடுகிறது என்று அறிவியல்
வல்லுனர்கள் கூறுகின்றனர். குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய் நல்ல
சூழலில் வாழவேண்டும், சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான்
பிறந்தகத்திற்கு அனுப்புவது மரபாக இருந்து வந்துள்ளது. தற்காலச் சூழல்
அதனைச் சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டது. எனினும் கருவுற்ற தாய், தாய் வீடு
இல்லாவிட்டாலும் தனிவீட்டில் நல்லதொரு சூழலை உண்டாக்கி மகிழ்ச்சியாக
வாழ்ந்திட முடியும். அதுதான் செய்ய வேண்டியதுமாகும்.
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே – பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்று கவிஞர் கண்ணதாசன்
பாடிவைத்துச் சென்றுள்ளார். இந்தமாதிரி அமைந்த ஒரு குடும்பத்தில் ஒரு
குழந்தை பிறந்துவிட்டால் பாக்கியசாலி வேறு யாரும் இருக்கமுடியாது.
அந்தக் குழந்தை தானாகவே அடிப்படைப் பழக்கவழக்கங்களைப் பெற்றுக் கொள்ளும்
என்பது உறுதி.
‘Children learn What they live’
என்று
Dorothy Law
எனும் அறிஞர்
கூறியுள்ளார். அவருடைய வாக்கியம் நிலைபேறுடையதாகும்.
குழந்தைகள் எந்தச்சூழலில் வாழ்கிறார்களோ அந்தச் சூழலுக்கு அமைய
அவர்களுடைய பழக்க வழக்கங்களும் உருவெடுக்கும். அதனையே பிள்ளைகள் தாங்கள்
பார்ப்பவை, கேட்பவையிலும் தாங்கள் அனுபவப் படுவதையே கற்றுக்கொள்வார்கள்
என்று ஆய்வாளர்கள் கூறுவர். எனவே பெற்றோர்கள் எப்பொழுதும் பிள்ளைகளுக்கு
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாம் எப்படி நடக்கிறோமோ அதுபோலவே
பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே நாம் எப்பொழுதும் பேச்சு,
மூச்சு, செயல் அனைத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அப்படியான
முறையில் குடும்பம் இருந்தால் பிள்ளைக்கு எதுவும் தேங்காய் உடைத்துக்
கற்பிக்கத் தேவையில்லை. அப்படியே செய்தாலும் பிரயோசனம் இருக்காது. நாம்
எதை விதைக்கிறோமோ அதனைத்தான் அறுவடை செய்ய முடியும். பாகல் விதையை
விதைத்துவிட்டு புடலங்காயை எதிர்பார்க்க முடியாது. தந்தை தாய் என்ன
பழக்க வழக்கமுடையவர்களோ அவை தான் பிள்ளைக்கும் வரும். இதனைத்தான்
பிள்ளைகள் தாம் அனுபவப்பட்டதையே கற்றுக் கொள்வார்கள் என்பதாகும்.
குடும்ப வாழ்க்கை என்பது சுலபமானது. ஏதோ வாழ்ந்து விட்டு வாழ்க்கையைப்
போக்கிவிடலாம். ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை இலகுவானதல்ல. அது
ஒரு தனிக்கலை. பெண்மை முழுமை பெறுவது தாய்மையால், குழந்தையால். அதற்கு
இயற்கை தேர்ந்தெடுத்த கருவிதான் பெற்றோர்கள். உயிராகிக் கருவாகி
உருவாகிப் பிள்ளைக்கனி அமுதாய்ப் பிறந்து முகம் பார்த்துச் சிரித்து
விழுந்து எழும்பி நடந்து அழகு நடை போட்டு ஓடிச் சிரித்து அழுது பேசி
வளர்ந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் குழந்தைகளுக்கு
எல்லாமே புதியவை. நெடுங்காலம் பெற்றோரையும் மற்றோரையும் அடுத்த வாழ்ந்து
பலவற்றைக் கற்கவேண்டிய நிலையில் உள்ளனர். பிறக்கும் போது உள்ள அறிவு பசி
அறிந்து தாய்ப்பாலை உறிஞ்சிக் குடித்தல் ஒன்றுதான். சிறிது வளர்ந்தபிறகு
மற்றவர்களைப் பார்த்து அவர்கள் செய்வது போல் செய்யும் ஆற்றலைப்
பெறுகின்றனர். இந்தச் சிறப்பியல்புதான் அவர்களை மற்றவர்களைப் பார்த்தும்
கேட்டும் இயற்கையில் அமையாத ஆற்றல்களை கற்றுக்கொள்ள உதவுகின்றது. இவற்றை
முற்று முற்றாக முதலில் பெற்றோர்களிடமே பெறுகின்றனர். தொடர்ந்து உற்றார்,
உறவினர், ஆசிரியர் என பட்டியல் நீளுகின்றது. இந்த நிலையில் ஒரு விதை
முளைப்பதற்கு பக்குவமான இடத்தில் விழுந்து நீர், வெளிச்சம், காற்று,
வெப்பம, ஒளி; எல்லாவற்றையும் அளவோடு பெற்றுவிட்டால் எப்படி வளர்ந்து
பலன் தருகிறதோ அதேபோலக் குழந்தைகளும் நல்லமுறையில் வளர்ந்து
நற்பிரசையாக வருகின்றனர்.
ஒரு விதை முளைப்பதற்கு பக்குவமான இடம், நீர், காற்று, வெப்பம், ஒளி
எவ்வளவுக்கு அத்தியா அவசியமோ அதே போல குழந்தைகள் நல்ல முறையில்
வளர்வதற்கும் அவர்கள் பிறந்து வளரும் சூழல் அவசியம். பெற்றோர்
அவர்களுக்கு உதாரண புருசர்களாக வாழவேண்டும் வாழ்ந்து காட்டவேண்டும்.
மறுப்பதற்கில்லை. தற்காலத்தில் சங்ககால வாழ்க்கை முறையைப் பற்றிப்
பேசலாமா? பேசுவதில் பிரயோசனம் உண்டா? எது எப்படியோ தற்காலத்தில் எந்த
ஒரு குடும்பமும் நிம்மதியாக இல்லை. நாய்கடி பூனைகடிதான். அதெல்லாம்
ஒன்றுமில்லை அந்தக்கால ஊடலும் கூடலும்தான் என்றே சொல்லிவிடலாம். ஆனால்
எதற்கும் பெண்ணியம் பேசும் சுதந்திர வேட்கை எங்களைச் சும்மா
இருக்கவிடுமா?! அதனால்த்தான் கையாலை உரிக்கிற பனம் கிழங்குக்கு ஆப்பு
வல்லீட்டுக் குத்தியெல்லாம் தேவைப் படுகிறது. அதனாலக்; குழந்தை
வளர்ப்புக்கு பாடம் கற்கவேண்டியுள்ளது. போகாத இடத்திற்கு வழி
தேடுவதாகிறது.
எனவே குழந்தை வளர்ப்புப் பற்றிப் பேசும்பொழுது எப்படி ஒரு நல்ல
குடும்பம் அமைய வேண்டும், எப்படி அமைக்க வேண்டும் என்று தெரிந்து
கொள்வது அவசியம்.
'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.'
என்பது வள்ளுவர் வாய்மொழி.
ஐம்புலன்களால் கிடைக்கும் இன்பத்தை அழகிய நகையணிந்த இந்த மாதிடமிருந்தே
பெறலாம். இதனை மையமாக வைத்தே திருமணங்கள் நடந்து முடிகின்றன. காதல்
திருமணமாக இருந்தாலென்ன, இல்லை பெற்றோர் பொருத்தம் பார்த்து
செய்ததாயிருந்தாலென்ன, பொருத்தமும் இல்லை காதலுமில்லை இரண்டு
குடும்பங்களும் தம்முள்ளே மனம் பொருந்திச் செய்தாலென்ன திருமணம்
நடந்தேறிவிட்டால் தம்பதிகளின் கையிலேதான் குடும்பம். இங்கே இன்ப உணர்வு
முன்னிற்கிறது. எல்லாப் பிரச்சனைகளும் மறக்கப் படுகிறது.
தாயே அன்பின் உருவம். அன்னையே வீட்டை ஆள்பவள். அவளே வீட்டின்
தலைவியுமாவாள். அத்தகைய தாயின் வாழ்க்கையை அடியொற்றி அப்பெண் நடக்க
வேண்டும். அதுவே அவள் கடமை. நல்ல மனைவி வாய்க்கப் பெற்றவன் பாக்கியசாலி;.
நடத்தை கெட்ட மனைவி ஒரு நரகம். இதுவே ஆண்களுக்கும் பொருந்தும். தாயைத்
தெய்வமாகக் கருதி அவளுக்குச் செய்யும் சேவையே பெரிதென மதிக்கும் எவரும்
தப்புச் செய்யமாட்டார்கள். பலர் தீயவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய
தாய் ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. அத்தகைய தாயைத்
தெய்வமாகக் கருதி அவளுக்குச் செய்யும் சேவையே முதற் சேவையாகக்
கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். இப்படியாகத்
தொடங்கும் இல்லறம் நல்லறமாகவே அமையும்.
வீட்டிலே நிம்மதியில்லை ஒரே பிரச்சனை என்றால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.
கணவன் மனைவி எவராயினும் கோபக்காரராகவோ குணம் கெட்டவராகவோ
இருந்துவிட்டால் திருத்தி வழிக்குக் கொண்டுவர வேண்டும். பண்பான மனைவி
கிடைத்தும் கோபதாபங்களால் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது.
தகராறு இல்லாத குடும்பம் இல்லை என்று கூறிவிடலாம் ஆனால் அதற்கும் நாமே
தான் காரணம். பொருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியாக
இல்லாத குடும்பங்களும் உண்டு. இரண்டு பேரும் சரியாக இருந்தாலும்
பொருளாதாரம் சரியாக இல்லாத குடும்பங்களும் உண்டு. இங்கே குறுந்தொகைப்
பாடல் வரியை நினைவு கொள்ளல் வேண்டும்.
கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் குறை, குற்றம் பாராது அன்பாக
ஒருவருக்காக ஒருவர் என்ற புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் சண்டை
சச்சரவு வருவதற்கு வாய்ப்பில்லை. குடும்பம் தெளிந்த நீரோட்மாக இருக்கும்.
குழந்தைகள் ஒருபோதும் பாதிப்படைய மாட்டார்கள். இவர்களுக்கு குழந்தை
வளர்ப்பு முறை பற்றிப் பாடம் சொல்லத் தேவையில்லை. அவர்கள் குழந்தைகளை
வளர்க்கமாட்டார்கள் வளரவிடுவார்கள்.
குழந்தைகளை
எப்படித் தன்னிச்சையாக வளர விடுவது? அரசமரமும் ஆலுமரமும் வேப்பமரமும்
கேட்பாரற்று தன்னிச்சையாக வளர்கின்றன. வேண்டிய பலனைத் தருகின்றன.
எந்த வயதுக் குழந்தையாக இருந்தாலும் அவர்களை உடல் ரீதியாகவோ மன
ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. திட்டுவதோ அடிப்பதோ தவிர்க்கப்பட
வேண்டும். தப்புச் செய்தால் அன்பாகவும் ஆதரவாகவும் எடுத்துச் சொல்லிப்
புரிய வைக்க வேண்டும். பண்பாக வளர்ந்த குழந்தைகள் இலகுவில் பிடித்துக்
கொள்வார்கள்.
குழந்தைகளைத் தானாகச் சாப்பிட விட வேண்டும் கொட்டிச் சிந்திவிடுவான்,
போதமான அளவ உண்ணமாட்டான் என்று கவலை வேண்டாம். அவன் முயற்சித்தபின்
நீங்களும் கொஞ்சம் ஊட்டிவிடலாமே. நாளடைவில் வென்றிடலாம்.
குழந்தைகளை அதைச் செய்யாதை இதைத் தொடாதை என்று தடுப்பதற்குப் பதில்
அவர்களையும் வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளுதல் ஆரோக்கிமாக இருக்கும்.
பிள்ளையும் வேலையைப் பழகிக்கொள்ள வசதியாகவும் இருக்கும்.
குழந்தைகள் முன்னிலையில் வாக்குவாதம் செய்வதோ சண்டை சச்சரவுகள் வைத்துக்
கொள்வதோ, தகாத வார்த்தைகள் பேசுவதோ தவிர்க்கப்பட வேண்டும். அவை
மனரீயாகத் தாக்கத்ததை ஏற்படுத்தும்.
எந்தக் குழந்தையாயினும் ஒருத்தரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசக் கூடாது.
தாழ்வு மனப்பான்மை வளர வழிகோலியதாகும்.
குழந்தைகள் எதிரில் வேற யாரையாயினும் இழிவுபடுத்தியோ வசைபாடியோ
திட்டக்கூடாது. மரியாதைக் குறைவாகப் பேசவோ செயற்படவோ கூடாது. நல்லதையே
பேசிட வேண்டும்.
குழந்தைகளுக்கு பெரியவர்களுடன் பண்பாக நடக்கவும் உபசரிக்கவும் பழக்க
வேண்டும். கண்டவர்களுடன் பிள்ளையைத் தனியே அனுப்பக்கூடாது.
பிள்ளைகள் தங்கள் வேலையைத் தாங்களே செய்ய வாய்ப்பும் வசதியும் தர
வேண்டும். விளையாட்டாகவே செய்து முடிக்க விடவேண்டும். தவறு ஏற்படின்
புரியவைக்க வேண்டும். திட்டக்கூடாது.
உறவுகளை மதிக்கவும் விட்டுக்கொடுத்து நடக்கவும் அன்பாக நடக்கவும் ஆதரவு
கொடுக்கவும் புரிய வைக்கவேண்டும்.
எப்பொழுதும் சுய பாதுகாப்பின் அவசியத்தை பக்குவமாகப் பழக்க வேண்டும்.
வீட்டில் குழந்தைகளுக்கு ஆபத்துத் தரக்கூடிய எந்த ஒரு பொருளையும்
குழந்தைகள் எடுக்கக் கூடியதாக வைக்கக் கூடாது.
பிள்ளை பள்ளி செல்லத் தொடங்கியதும் ஆசிரியரைச் சொல்லி வெருட்டக்கூடாது.
ஆசிரியரை நட்புரிமையுடன் பார்க்க வைக்கவேண்டும். மாதா, பிதா, குரு
தெய்வம் என்பதைச் சொல்லித்தர வேண்டும்.
பள்ளிப்பாடத்தை விளையாட்டு மாதிரி பயில விடவேண்டும். வேடிக்கைக்குக்கூட
வெருட்டக்கூடாது.
பள்ளியில் சக மாணவர்களுடண் போட்டி ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
பாடசாலை ஆசிரியரை அடிக்கடி சந்தித்து பிள்ளையைப் பற்றிய வளர்ச்சி நிலையை
அறிந்து கொள்ள வேண்டும்.
பிளளையின் பள்ளிப் பையில் வீட்டு முகவரி தொலைபேசி இலக்கம் வைக்கவேண்டும்.
தொடர்பில்லாதவர்களுடன் பேசவோ பழகவோ கூடது என்பதை வலியுறுத்தி
தெரியாதவர்களுடன் செல்லக்கூடாது என்பதும் விளக்கிச் சொல்லவேண்டும்;.
அச்சுறுத்தக் கூடாது.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு ஆபரணங்கள் அணிந்து விடக்கூடாது.
ஆபத்து ஏற்படலாம். பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் சொல்லித்தர வேண்டும்.
பிள்ளையின் படிப்பில அக்கறை காட்டவேண்டும் பிள்ளை படித்துக் கொண்டு
இருக்கும் போது அவனிடம் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக தொலைக்
காட்சி பார்க்கக்கூடாது. போன் பேசக்கூடாது. அவர்களோடு அமர்ந்து
பங்காளராக வேண்டும். அவனில்த்தான் கருத்து இருக்க வேண்டும். தவறின் அவன்
கருத்துடன் படிக்க மாட்டான்.
பிரத்தியேக படிப்புகள் இருக்க வேண்டும் அதுவே சுமையாக
இருக்கக்கூடாது.அவனுக்கும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
விளையாட விடவேண்டும் நண்பர்களுடன் சேர விட வேண்டும். அவனையும் ஒரு தனி
மனிதனாகக் கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் சுதந்திரமாக இருப்பான்.
குழந்தைகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த உபயோகிக்கக்கூடிய சில
வார்த்தைகள்.
கெட்டிக்காரன், நல்ல பிள்ளை, விடாதைபிடி இவனல்லோ பிள்ளை, யாரென்று
தெரிய வேண்டாம் போன்றவை.
Vow. Super. Amazing. Excellent.
Outstanding, Great, Good Job,
I am proud of you, Fantastic, Good.
You are on the right track, That is better than ever
My son is So great, No one can excel.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|