செங்கண்ணும் கருங்கண்ணும்
கவிஞர் மா.உலகநாதன்,திருநீலக்குடி
கண்கள் இதயத்தின் நுழைவாயில் என்று ஆன்றோர் குறிப்பிடுவர். அகத்தின்
அழகை அதன் உண்மை உருவத்தை கண்கள் காட்டித் தரும். மனத்தின் உணர்வுகளை
கண்கள் வழி உணர இயலும் என்பதனைப் பல்வேறு இலக்கியங்களும்
உணர்த்துகின்றன. சிலப்பதிகாரம் நான்கு காதைகளில் கண்ணுடன் தொடர்புடைய
செய்திகளைப் பேசுகிறது.
உடம்பின் மிகத் தோற்றம் முகத்து
முகத்தின் மிகத் தோற்றம் கண்ணில்
கண்ணின் மிகத் தோற்றம் கண்ணின் கடையாகத் தென்றவாறு.
(புகார் அரங்கேற்று காதை-ப.84)
என்னும் உரையினால் கண்களின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. இருபத்து
நான்கு அவிநயமும் வெளிப்படுத்தப் பேருதவியாக நிற்பது கண்களே எனில் அது
மிகையன்று.
கம்பனின் குறியீடு:
எந்த ஒரு நாட்டில் பெண்களின் கண்கள் புறம் போகாதிருக்கின்றனவோ
அந்நாட்டின் ஒழுக்கம் போற்றப்படும் என்பது கம்பரின் மதிப்பீடு. கோசல
நாடு அவ்வாறு இருந்ததாக கம்பர் உயர்வு நவிற்சியாகக் குறிப்பிடுகிறார்.
ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்எனும்
பூசலம்பும் நெறியின் புறம்செலாக்
கோசலம். என்பார்.
உவகை,கவல்கை:
இளங்கோவடிகளோ, கண்ணகியின் கண்ணும் மாதவியின் கண்ணும் இருவேறு
தருணங்களில் கருங்கண்ணாகவும் செங்கண்ணாகவும் மாறியதாகக்
குறிப்பிடுகிறார். பிரிவுத் துயரால் கண்ணகிக்கும் ஆனந்த மிகுதியால்
மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன என்கிறார். அழுகையிலும் உவகையிலும்
கண்கள் நீர் உகுக்கும் என்பதை கீழ்க்கண்ட பாடல் வழியாக விளக்குகிறார்
ஆசிரியர்.
உள்ளக நறுந்தாது உறைப்ப,மீது அழிந்து
சிலப்-235
கள் உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும்,மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து,அகத்து ஒளித்து,நீர் உகுத்தன!
எண்ணுமுறை,இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ணவர் கோமான் விழவு-நாள் அகத்து என் -240
உட்புறம் நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு
அவிழ்ந்து தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக் கண்ணகியின்
கருங்கண்ணும், மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை
மறைத்துத்,தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானுடைய
விழா நாட்களிடையே நீரை உகுத்தன. எண்ணும் முறைமையால், அவை கண்ணகிக்கு
இடப்பக்கமும், மாதவிக்கு வலத்தினும் ஆகத் துடித்தன. கண்ணகியின் கண்கள்
புணர்ச்சியின்மை காரணமாக விரகத்தால் கோவலனையே நினைந்து துன்ப மேலீட்டால்
துடித்தன. விரைவிலேயே அவளை நாடிக் கணவன் வருவான் என்ற நல்நிமித்தமாக
இடக் கண் துடித்ததாகவும், மாதவியினைக் கோவலன் பிரிய நேரும் துன்பம்
உணர்த்த வலக் கண்ணும் துடித்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.
துடிக்கும் கண்கள்:
கண்கள் துடித்தல் நன்மைக்கும் தீமைக்கும் என கம்பரும் பேசுவார்.
மகளிரின் கண்கள் இடப்புறம் துடித்தலால் நலம் விளையும் எனவும் வலப்புறம்
துடித்தால் தீங்கு நேரும் எனவும் கருதப்பெற்றது. அசோக வனத்தில் சிறை
வைக்கப்பட்டிருந்த சீதைக்கு உற்ற அன்பு செய்பவளாக, விபீடணின் மகளான
திரிசடை விளங்குவாள். அன்பில் தாயினும் இனியள் என்கிறார் கம்பர். காவல்
அரக்கியர் அனைவரும் கள்ளுண்டு உறங்கும் ஒரு நாளில், தன் புருவமும்
கண்ணும் இடது பக்கம் துடிப்பதாகத் திரிசடையிடம் கூறி இடக்கண் துடிக்கக்
காரணம் யாது என வினவுகிறாள் சீதை. திரிசடை சீதைக்கு மங்கல வாழ்த்துக்
கூறி, உன் துணைக் கணவன் உறுதல் உண்மையால் உன் இடது கண் துடிக்கிறது.
தூதுவன் ஒருவன் நற்செய்தியோடு வருவான், ஆறுதல் கொள் என்கிறாள்.
ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீயவர்க்குஎய்தல் திண்ணம் என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள்.
இடது கண் துடிப்பது நன்மைக்கு எனவும்,வலது கண் துடிப்பது தீமையின்
நிமித்தம் எனவும் இன்றும் கூட ஒரு நம்பிக்கை நிலவுவதை நாமறிவோம். மனித
வாழ்வில் பின்னால் நிகழவிருக்கும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே
உணர்த்தும் நிமித்தங்கள் கண்களுக்கு இருந்ததாக ஒரு நம்பிக்கை
அமைந்திருந்தது. இதனை பல்வேறு இலக்கியங்களும் காப்பியங்களும் உறுதி
செய்கின்றன. ஆடவருக்கு துன்பம் வருவதை உடலின் இடப்பகுதி துடிப்பதால்
அறிந்துகொள்ள இயலும் எனவும் இடக்கண் துடித்தால் துன்பம் அல்லது தீங்கு
வரும் எனவும் கருதப்பெற்றது.
கொடுத்த வில்லை அக் கொண்டல் நிறத்தினன்
எடுத்து வாங்கி வலங்கொண்டு இடக்கையில்
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்த வால் இடக் கண்ணோடு தோளுமே (கம்ப-3௦053)
மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்குவாலி திண் செவித்துளைக்கணே
(கம்ப-3946-4)
முடிவுரை:
சிலப்பதிகாரச் செய்யுள்கள் கண்களின் பல்வேறு கோணங்களையும்,பண்புகளையும்,
அவை வல இடம் துடிப்பதையும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும்,
கண்களால் பெருமை பெற்றவர்களையும் எடுத்துரைத்தன. உவகையிலும்
கவல்கையிலும் கண்கள் கண்ணீர் உகுக்கும் என்பதனை கண்ணகி மாதவியின் கண்களை
ஒப்புமை காட்டி நின்றன.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|