கம்பனின் அறத்தின் ஆற்றலும் அரசனின்
மாண்பும்
முனைவர் சு.அட்சயா
முன்னுரை:
'காலம் என்னும் பெருங்கடலில் அமைக்கப்பெறும் கலங்கரை விளக்கங்கள்
நூல்கள். அயோத்திமா நகரைத் தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆண்ட
சிறப்பிற்குரியவன் தசரத மன்னன். அவனது ஆட்சியில் அறம் வளர்கின்றதுளூ
மறம் தேற்கின்றது. அன்பு தழைத்து அறம் மலர்ந்து எங்கும் இன்பம் கனிந்து
இலங்குகின்றது. அத்தகைய நாட்டில் அமைந்த அரசியலும் அறத்தையே ஆதரவாகக்
கொண்டு அமைகின்றது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற நீதியை
நிலைநாட்டிய பெருமைக்குரிய தீந்தமிழ்க் காப்பியம். தௌ;ளுதமிழ்ச்
தீஞ்சுவை கூட்டி, தேன்கலந்து பால்கலந்து தந்ததுபோல ஒன்பான் சுவைகளையும்
ஒருசேரக் சேர்ந்தளிப்பது கம்பராமாயணம். இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட
காப்பியத்தில் இடம் பெறுகின்ற அறக்கருத்துக்களை எடுத்துரைப்பதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறம் விளக்கம்:
இல்லறம், துறவறம் என இருவகை. இல்லறம் கொடுத்தலு மளித்தலும்
கோடலும்,இன்மையும், ஒழுக்கம், புணர்தல், புணர்ந்தோர்ப் பேணல்
மற்றையவுமாம். துறவறமாவது துறவும், அடக்கமும் தூய்மையும், தவமும்;,
அறவினை யோம்பலும், மறவினை மறத்தலும், பிறவுமாம் (வீரசோழியம்).
அறம் முப்பத்திரண்டு
ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குண்டி, பசுவிற்கு
வாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டம், நல்கல், அறவைச்சோறு,
மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப்பிணஞ்சுடல்,
அறவைத் தூரியம், கண்ணம், நோய் மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி,
காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், பிறந்துயர்காத்தல்,
தண்ணீர்ப்பந்தர், மடம், தடம், கா, ஆவுறிஞ்சுதறி, விலங்கிற்குணவு,
ஏறுவிடுத்தல், விலைக்கொடுத்துயிர் காத்தல், கன்னிகாதானம் முதலியனவாம்.
(ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி செம்பதிப்பு, தமிழ்க்
களைஞ்சியம்)
அறம்:
தருமம், புண்ணியம், அறச்சாலை, தருமதேவதை, யமன், தகுதியானது, சமயம்,
ஞானம், நோன்பு, இதம், இன்பம், தீப்பயன் உண்டாக்கும் சொல் (மெய்யப்பன்
தமிழ் அகராதி, ப.77)
ஆற்று வெள்ளமும் அறவொழுக்கமும்:
இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆரமாய் விளங்குவது ஆறேயாகும். இதனாலேயே
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்றும் அழகு இல்லை என்பதும் ஆன்றோர் வாக்கு.
நதியே நாட்டை அழகு செய்கின்றது. நீர்வளம் அமைந்த நிலமே நாடாகுமென்று
வள்ளுவர் கூறுவதை,
'நாடென்ப நாட வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு' (குறள். 739)
என்று போற்றப்படுகின்றது. மக்கள் மெய் வருத்தப்பயனளிக்கும் நிலம்
நாடாகதென்றும் இயற்கையின் வளம் சுரக்கும் இனிய நிலமே நாடாகுமென்றும்
வள்ளுவர் கூறும் கருத்து நன்கு விளங்குகின்றது. நதியே நாட்டு உயிராக
இருத்தலால் அதன் பெருமையைப் புலவர் போற்றுகிறார். கம்பன் நாட்டு வருணனை,
மக்கள் வருணனை என்று இரண்டையும் சொல்லும் போது நாட்டினுடைய வளத்தைவிட,
மக்களுடைய வளம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விருப்பத்துடன்
பாடுகிறான் என எண்ணத் தோன்றுகின்றது.
குற்றத்தை மிகுதியாகச் செய்கின்ற, ஐந்து பொறிகளாகிய அம்புகளும்,
மணியாரங்கள், ஒலிக்கின்ற மார்பகங்களை உடைய பெண்களின் கண்களாகிய
போர்த்தொழில் வல்ல அம்புகளும் ஒழுக்க நெறிக்கு அப்பால் சொல்லாத கோசல
நாட்டை அழகு செய்கின்ற சரயு ஆற்றின் அழகின் வாயிலாக கம்பன் முதல்
பாட்டின் வரியிலேயே மக்கள் மனவளத்தை எடுத்துப் பேசுவதை கோசலத்தில்,
'ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்' (ஆற்றுப்படலம், பா.12)
என்கிறார் கம்பன். எவ்வளவோ வளங்களைப் பற்றி பின்னே கூறினாலும் அவை
எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த வளம் எது என்றால்,
'அம்பு புறஞ் செலாக் கோசலம்'
என்பதுதான். எனவே மக்களாக வாழப்பிறந்தவர்கள் மிகப் பண்புடையவர்களாக,
பொறிபுலன்களை அடக்கி ஆள்பவர்களாக வாழ்வதுதான் அவர்கள் சிறந்தவர்களாக
ஆவதற்குரிய அடிப்படையாகும் என்பதை இப்பாடலின் வாயிலாக கம்பன்
மெய்ப்பித்துக் காட்டியிருப்பதை அறியமுடிகின்றது. மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கேற்ப கோசல நாட்டு மக்கள்
வாழ்ந்துள்ளனர் என்பதையும், மக்களின் நல்லொழுக்கத்திற்கும்
தீயவொழுக்கத்திற்கும் அவர் வாழும் நிலத்தின் தன்மை காரணமாகும்.
கோசலத்தின் நீர்வளமே அந்நாட்டு மக்களின் ஒழுக்க மேம்பாட்டுக்குக் காரணம்
என்பது குறிப்பால் அறியமுடிகின்றது. கோசல நாட்டில் பாய்கின்ற சரயு
நதியின் வளத்தால் அந்நாட்டு மக்கள் நல்லொழுக்கத்துடனும், ஒழுக்க
நெறியோடு வாழ்வதால் ஐம்பொறிகளாகிய அம்புகளும், பெண்களின் கண்களாகிய
அம்புகளும் பாய்ந்து செல்லாத நிலையில் இருப்பதை அறியமுடிகின்றது.
இதற்குக் காரணம் மன்னனது செம்மையான ஆட்சியேயாகும் என்பதை அறிய
முடிகின்றது.
'நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே'
(புறம், 312)
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற முதுமொழிக்கேற்ப மன்னன் செம்மையான
ஆட்சி நடத்தியதால் மக்களும் செம்மையான அறவாழ்வு வாழ்ந்தார்கள் என்ற
உயரிய அறக்கருத்தை கம்பன் இப்பாடலின் வாயிலாக உணர்த்தியிருப்பதை அறிய
முடிகின்றது. சரயு ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கம்பன்
பின்வரும் பாடலின் வாயிலாக கூறுகிறார். மான உணர்வு பொருந்தியும்,
தருமநெறி கருதியும், மனுநீதிப்படி நடக்கும் குளிர்ந்த குடை நிழலின் கீழ்
இருக்கும் மன்னனின் புகழைப் போலவும், ஞான வழியை நாடுகின்ற நான்கு
மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும் சரயு ஆற்றில்
வெள்ளம் பெருகியது என்று கம்பன் கூறுவதை,
'மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண்குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே' (ஆற்றுப்படலம், பா.16)
என்ற பாடலின் வாயிலாக மானம் பேணி அறநோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட்
காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின்
பயன் ஓங்கும். இவைபோலச் சரயு நதியின் வெள்ளப் பெருக்கும் ஓங்குகின்றது
என்பதை அறியமுடிகின்றது. திருவோலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல்
நிழற்றும்குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று என்றும் துன்புறும்
உயிர்க்குலத்தின் துயர் துடைக்கும் ஓர் அடையாளம் ஆகையால் தண்குடை
வேந்தன் என்று மன்னனைச் சிறப்பித்துக் கம்பன் கூறியுள்ளதை
அறியமுடிகின்றது.
அயோத்தி நகரும், கல்வி அறமும்:
அயோத்தி நகரில் கல்வியும், செல்வமும் ஒருங்கே நிறைந்திருந்த பெருமையைக்
கம்பன் கவி கூறுவதை,
'கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லைளூ அவை வல்லர் அல்லாரும் இல்லைளூ
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லைளூ உடையார்களும் இல்லை மாதோ' (நகரப்படலம், பா.167)
என்ற கம்பனின் கவி வாயிலாக ஒருவரிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்து
அமைவது அரிதாகும் என்பது விளங்குகின்றது.
'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தௌ;ளிய ராதலும் வேறு' (குறள். 374)
என்று வள்ளுவரும் எடுத்துரைத்துள்ளார். இந்த உலகத்தில்
பொருட்செல்வமுடையார் பேதைராகவும், அறிவுடையார் வறியவராகவும்
அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இந்த இயல்பிற்கு மாறாக அயோத்தி
மாநகரில் வாழ்ந்த மக்களிடம் செல்வமும் கல்வியும் சேர்ந்திருந்தமையால்
செந்நெறி திறம்பாது அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை இப்பாடலின்
வாயிலாக உணர முடிகின்றது. அந்நகரில் பேதையர் எவரும் இல்லாமையால் மேதையர்
என்னும் புகழ் யாவருக்கும் இல்லை. வறியவர் எவரும் இல்லாமையால் செல்வர்
என்னும் சிறப்பு யாருக்கும் இல்லை என்று கம்பன் கவிகளில் நயம்படக்
கூறியிருப்பதை அறியமுடிகின்றது. இவ்வாறாக பெறுவதற்குரிய செல்வமும்
கல்வியும் பெற்று இனிது வாழ்ந்த அந்நகர மக்கள் அடைந்த பேரின்ப
பெருவாழ்வை கம்பனின் கவிகள் படம் பிடித்துக் காட்டியுள்ளதை
அறியமுடிகின்றது.
இணையற்ற பெருமை வாய்ந்த அந்நகரில் கல்வி என்னும் விதை முளைத்து எழுந்து
கேள்வி என்னும் கிளை பரப்பித் தவம் எனும் இலை தழைத்து அன்பென்னும்
அரும்பீன்று அறம் என்னும் மலர் பூத்து இன்பம் என்னும் கனி பழுத்ததென்று
கம்பன் கூறுவதை,
'ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண்பணை போக்கி, அருந்தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே' (நகரப்படலம், பா.167)
என்ற செய்யுள் வரிகளின் வாயிலாக கல்வியால் வருகின்ற கலையறிவு,
கேள்வியால் பெருகும் என்ற கற்றறிந்தோரின் கருத்து ஏற்புடையதாக
இருக்கின்றது. கல்வியின் பின் கேள்வியால் கிளைத்து வளரும் கலை அறிவு,
தனித்திருந்து ஒருமையுடன் நினைத்தால் தெளிவடைகின்றது. எனவே கற்றல்,
கேட்டல், சிந்தித்தல் என்னும் மூன்றும் உண்மை அடைவதற்கு இன்றியமையாதது.
உறுதிப் பொருள்களை இவ்வாறு தெளிந்த பின் மக்கட் பிறப்பின்
உயர்நிலையாகிய அன்பு தோன்றுகின்றது. அவ்வன்பினால் ஆற்றப்படும் செயல்கள்
அறமாய்த் திகழ்கின்றது. அவ்வறத்தினால் அடையும் பயன் பேரின்மாகிறது
என்பதை கம்பனின் கவிகள் வாயிலாக அறிய முடிகின்றது.
தயரத மன்னனும் அறப்பண்புகளும்
நற்பண்புகள் தசரத மன்னனிடம் ஏவல் கேட்டல்
முதன்மையாகிய மெய்யறிவும், அருளும், தனக்கு கூறிய அறநெறி தவறாமையும்
சார்ந்த குணமும், குற்றமற்ற வலிமை பொருந்திய வீரமும், கொடையும் நீதியின்
கண் நிற்றலும் போன்ற நற்பண்புகள் இவை. மற்ற அரசர்களுக்குப் பாதியே
நின்றன. இந்த நற்பண்புகள் முழுவதும் ஒருசேரப் பெற்ற தசரத மன்னனிடம்
அந்த நற்பண்புகளே ஏவல் கேட்டு நிற்பதாக கம்பன் பின்வரும் பாடலில்
கூறுவதை,
'ஆதியும் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்
நீதிந் நிலையும், இவை நேமியினோர்க்கு நின்ற
பாதிளூ முழுவதும் இவற்கே பணி கேட்ப மன்னோ' (நகரப்படலம், பா.169)
என்ற பாடல் வரிகளின் வாயிலாக மெய்யறிவு, அருள், அறநெறி தவறாத குணம்,
வீரம், கொடை நீதியின் கண் நிற்றல் போன்ற நற்பண்புகள் யாவும் தசரத
மன்னனிடத்தில் ஏவல் கேட்டு நிற்கின்றன என்பதிலிருந்து தசரத மன்னனின்
உயர்ந்த பண்பினை அறிய முடியகின்றது. அரசர்க்கரசனான தசரதன் புறப்பட்டு
நீங்கிய பிறகு வெற்றி பொருந்திய வேந்தனான உரோமபதன்ளூ அரிய மறைகளே
வடிவெடுத்து வந்தது போன்றுள்ளளூ முனிவனான கலைக் கோட்டு முனியின்
இருப்பிடத்தை அடைந்துளூ அம்முனிவனது தாமரை போன்ற இரு பாதங்களையும்
அழகிய தனது பொன்முடிக்கு அணியாகுமாறு வணங்கி வேண்டிய உபசாரங்களைச்
செய்து நிற்க (முனிவர் அரசனைப் பார்த்து), நீ இங்கு வந்த காரியம் என்ன
என்று கேட்களூ (அதற்கு மன்னன்) அடிகளே! அடியேனுக்கு ஒரு வரம் தரவேண்டும்
என்று சொல்ல அது என்ன என்றான்.
ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தரத் துணிந்து
தராசுத்தட்டிலேறியளூ பெருந்தகையான சிபிச் சக்கரவர்த்தியினது புகழ்
பொருந்திய பெருங்குடியில் தோன்றிய அறப்பண்பு பொருந்திய நல்ல மனத்தினனும்
தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரனின் வலிமையை அழிந்த வேலை உடையவனும்,
தயரதன் என்னும் பெயர் கொண்ட புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது
வலிமையை அணியாகக் கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி நகரத்தை
அடைந்து பின் இங்கு மீண்டு திரும்புதலே (நான் வேண்டும் வரமாகும்) என்று
உரோமபதன் கூறுவதை,
'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மணத்தான், அமரர்களுக்கு
இடர் இழைக்கும் ஆவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், 'தசரதன்' என்று
உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்
விறல் கொண்ட மணிமாட அயோத்தி நகர்
அடைந்து, இவண் நீ மீள்தல்!' என்றான். (திருஅவதாரப்படலம், பா.243)
என்ற செய்யுள் வரிகளின் வாயிலாக உரோபதன் கலைக்கோட்டு முனிவரிடம் தனக்கு
ஒரு வரம் வேண்டும் என்று கூறுமிடத்து தசரத மன்னனின் பண்புகளைக் கூறி 'அயோத்தி
நகர் அடைந்து பின் இங்கு மீண்டும் திரும்புதலே யான் வேண்டும் வரம்'
என்று கூறுவதை அறியமுடிகின்றது. அவ்வாறு கூறுமிடத்து, தயரதன் சிபிச்
சக்கரவர்த்தியின் புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றியவன், அறப்பண்பு
பொருந்திய நல்ல மனதை உடையவன் என்பதை, 'அறன் ஒன்று திரு மனத்தான்' என்று
கூறுவதிலிருந்து தயரதன் அறப்பண்பு மிக்கவன், அவன் தோன்றிய குடியும் அறம்
சார்ந்தது என்பதை உரோபதன் கூறுவதன் வாயிலாக அறிய முடிகின்றது.
ஆதுலார்க்கு அன்னம் அளித்தலும் கோசல மகளிரின் அறமும்
இல்லறம் என்னும் நல்லறம் செம்மையாய் நிகழ்ந்து இன்பம் பயக்க
வேண்டுமாயின் அவ்வறம் புரியும் காதலர் இருவரும் அறிவுடையராய் இருத்தல்
வேண்டும். அற்றாரது அரும்பசி தீர்த்து, அறவோர்க்கும், துறவோர்க்கும்
ஆதரவாய் அமைவதே இல்வாழ்க்கையின் குறிக்கோளாகும்.
'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு' (குறள். 81)
என்று வள்ளுவப் பெருந்தகை போற்றியுள்ளார். ஆகவே ஆதுலர்க்கு அன்னம்
அளித்து அறம் வளர்ப்பதே இல்லறத்தின் பயனாக விளங்குகின்றது. இத்தகைய
மனையறம் செம்மையாய் நிகழ்வது மனைவியின் மனப்பான்மையைப் பொறுத்ததாக
இருப்பதால் அம்மங்கையே சிறப்பாக இல்லாள் என்னும் மனையாள் என்றும்
அழைக்கப்படுகின்றாள். வருந்தி வந்த விருந்தினரை இன்முகம் கொண்டு
வரவேற்றுப் பேணும் உரிமை பெண்களுக்கே சிறப்புடையது என்று பெரியோர்கள்
கருதுகிறார்கள். இத்தகைய உயரிய பெறுப்பை ஏற்றுப் பண்புற நடத்தும் உரிமை
பெற்ற பெண்களுக்குக் கல்வி அறிவு இன்றியமையாதது. அறத்தின் தன்மையை
அறிவதற்கும், அறவினையை வழுவாது இயற்றுவதற்கும் அறிவே சிறந்த கருவியாக
அமைகின்றது. இத்தகைய அறிவும் செல்வமும் கோசல நாட்டுப் பெண்களிடம் நன்கு
அமைந்திருந்ததின் பயனாக அந்நாட்டில் இல்லறம் இனிது நடை பெற்றதென்று
கம்பனின் கருத்து கனிந்த இன்பத்தை நல்குகின்றது என்பதை,
'பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?' (நாட்டுப்படலம், பா.67)
என்ற செய்யுள் வரிகளின் வாயிலாக இல்வாழ்க்கையின் பெருமையைக் கம்பர்
எடுத்துரைப்பதை அறிய முடிகின்றது. செல்விருந்து போற்றி, வருவிருந்து
பார்த்திருக்கும் அறமங்கையரது கண்களைப் 'பெருந்தடங்கண்' என்று
கூறுகிறார். மனையறம் புரியும் மனப்பான்மை வாய்ந்த கோசல நாட்டு மங்கையர்
வருந்தி வந்தடைந்த வறியவர்களுக்கு பொருள் வழங்கினார்கள் என்ற கருத்தினை
அறிய முடிகின்றது. சாதி என்றும், குலம் என்றும் கருதாது வருந்தி
வந்தவரது அரும்பசிப் போக்கி அறம் வளர்த்த கோசல நாட்டு மங்கையரது
மனப்பான்மை பிறநாட்டு மாதரால் பின்பற்றும்படி இருக்கின்றது. 'வறியார்க்கு
ஒன்று ஈவதே ஈகை' என்னும் வள்ளுவனார் கருத்தைக் கொண்டு ஆதுலர்க்கெல்லாம்
ஆருயிர் மருந்தாய் அன்னம் அளித்துக் காத்த அந்த மங்கையர்கள் பண்பில் தலை
சிறந்தவர்கள் என்று கம்பர் பாராட்டுவதை இப்பாடலின் வாயிலாக
அறியமுடிகின்றது.
இவ்வாறாக வறியவர்க்கெல்லாம் வரையராது வழங்கும் வண்மை வாய்ந்த மாதர்
மனையறத்தை மேன்மேலும் பெருக்குமாறு அந்நாட்டில் செல்வம் சுரந்து
பெருகியது. நிலம் குன்றாது விளைந்து வந்தது. மரக்கலம் மட்டற்ற செல்வத்தை
வாரிக் குவித்தது. கேணிகள் மாசற்ற மணிகளை மிகுதியாகக் கொடுத்தன என்பதை
பின்வரும் செய்யுள் வரிகளின் வாயிலாக கம்பன் கூறுவதை,
'கலம் சுரக்கும், நிதியம்ளூ கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்ளூ நல் மணி
பிலம் சுரக்கும்ளூ பெறுதற்கு அறிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம் குடிக்கு எலாம்' (நாட்டுப்படலம், பா.69)
என்ற பாடல் வரிகளின் வாயிலாக அறம் செய்கின்ற நாட்டில் அனைத்து
பொருட்செல்வங்களின் வளம் பெருக்கமடையும் என்பதை அறிய முடிகின்றது.
தொகுப்புரை:
இக்கட்டுரையின் வாயிலாக அறத்திற்கான விளக்கம், முப்பத்திரண்டு அறங்கள்
பற்றியும் அறிய முடிகின்றது. ஆற்றுவெள்ளத்தின் வாயிலாக அறவொழுக்கத்தினை,
போதித்த கம்பனின் கவித்திறத்தினை அறியமுடிகின்றது. தசரத மன்னன் தன்
நாட்டு மக்களை உயிராக நேசிக்காமல் சுவாசித்து செம்மையான ஆட்சி
நடத்தியதால் மக்களும் செம்மையான அறவாழ்வு வாழ்ந்தார்கள் என்பதை உணர
முடிகின்றது. அயோத்தியா நகர மக்கள் கல்வியறிவு மிக்கவராகவும், செல்வ
செழிப்பு உடையவராகவும் வாழ்ந்தார்கள் என்பதையும், தசரத மன்னனிடம்
நற்பண்புகள் ஏவல் கேட்டு நிற்பதின் வாயிலாக அறத்திற்கே அறம் செய்தான்
தசரத மன்னன் என்பதை அறியமுடிகின்றது. அதுலர் சாலை என்பது (ஆற்றலற்றோருக்கும்,
ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை) இவ்வறத்தின் படி
கோசலநாட்டு மகளிர்கள் இல்லறம் நடத்தினார்கள் என்ற சிறப்பினை அறிய
முடிகின்றது.
முனைவர்
சு.அட்சயா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயமுத்தூர்- 641 035
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|