மதுரைக்காஞ்சியும் ஐந்திணை வளங்களும்

முனைவர் அ.இந்துமதி

சிறந்த நாகரிகமும் பண்பாடும் கொண்ட பண்டைத் தமிழர்களின் வாழ்வைச் சிறப்புற எடுத்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள். அவற்றுள் பத்துப்பாட்டு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள நூல் மதுரைக்காஞ்சி. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது இந்நூல். 782 வஞ்சி அடிகளால் ஆனது. இதில் இடம் பெற்றுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளின் வளங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

நிலமும், பொழுதுகளும், இயற்கையையும் பின்னணியாகக் கொண்ட மனித வாழ்வும் இயைபு படப் புனையப்படுவதே திணை இலக்கியமாகும். நிலமும், அதில் வாழும் உயிரினங்களும், மனித வாழ்வும் ஓவியமாகப் படிந்து கிடப்பதே திணை இலக்கியம் எனப்படும்.

குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல். பாலை என்று வரிசைப்படுத்தப்பட்ட நிலையில் மதுரைக்காஞ்சியில் நில வர்ணனையை மருதம், முல்லை, குறி;ஞ்சி, பாலை, நெய்தல் என்று முறைப்படுத்தி மருத நில வளத்தினை முன்வைக்கும் பாங்கு ஆசிரியரின் சிறப்பினைத் தெளிவுற எடுத்தியம்புகின்றது.

மருத நில மாட்சி

மேகங்கள் கீழ்த்திசைக் கடலில் நீரை முகந்து மேற்திசையில் கடலுக்கருகே உள்ள மலைப்பகுதிகளில் தங்கி இரவும் பகலும் எங்கே செல்வது என்று அறியாது பள்ளமும் மேடும் உள்ள நிலப்பகுதிகளில் சென்றன. கவலைக்கிழங்கு தோண்டிய குழிகளில் மழை நீர் நிறைந்தது. மழை நீரால் அருவிகள் பெருகி ஒலித்தன. மூங்கில் வளர்ந்த மலைப்பகுதிகளில் வாழுகின்ற யானைக் கூட்டங்கள் நடுங்குமாறு இடியுடன் மழை பெய்தது. மழை நீரானது குளங்களை நிறைத்து கடலை நோக்கிச் சென்றது. இக்காட்சியை,

'அதனால்,குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது
இல்லும் மிசையும் நீhத்திரன்பு ஈண்டி
கவரை அம்குழும்பின் அருவி ஒலிப்ப
கழை வளர் சாரல் களிற்றினம் நடுங்க
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரற் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூவப் புனல் உரூதி'


                                                        (மதுரைக்காஞ்சி 238-244)

பொய்கை எழில்

பொய்கையிடத்து இலைகளுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் முட்தாளையுடைய ஒளிமிகு தாமரையும், இதழ் பிரிந்த நீலப்பூக்களும், மெல்லிய இலைகளைக் கொண்ட வண்டுகள் மொய்க்கும்படி தேன் நிறைந்த ஆம்பல் பூக்களும் மலர்ந்து காணப்படுகின்றன. இதனை,

'வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை' (மதுரைக்காஞ்சி 253)

மருத நிலத்தில் எழும் ஓசைகள்

மூப்பு காரணமாகச் சேற்றில் செல்ல வலிமையில்லாமல் தங்கிய எருதுகள் உற்ற வருத்தத்தைக் கள்ளை உண்ணும் உழவர்கள் நீக்கும் ஆரவாரம், நெல் முற்றிய வயல்களில், அந்நெல்லை வலிய கைகளால் அறுப்பவர்கள் தம் கைகளால் அடிக்கும் பறையோசை, திருப்பரங்குன்றத்தில் விழாக் கொண்டாடும் ஆரவாரம், புதுநீர் விழவில் கணவவருடன் நீராடி மகிழும் பெண்களின் ஆரவாரம், பாணர் குடியிருப்புக்களில் இருந்து பாடலொடு ஆடல் கேட்ட வண்ணம் இருக்கும் ஆரவாரமும் மருத நிலத்தின் வளத்தினை எடுத்தியம்புகின்றன.

முல்லை நிலக்காட்சி

மலைகளுக்குக் கீழே இருந்த காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லை எனப்பெயர் பெற்றன. மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்படும் முல்லை நிலக்காட்சிகள் இயற்கை வளம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. சிறிய தினைகளை உடைய கதிர், கொய்யும் பதத்தை அடையவும், எள்ளின் பசுமை நிறமுடைய காய்கள் முற்றவும், கிழங்கு தோண்டி எடுக்கப்பட்ட குழிகளில் அழகிய மணிகள் கிடந்து ஒளிவீசவும், பெரிய அழகினையும் சிறிய தலையினையும் உடைய மான், தான் வளர்ந்த காட்டில் மாற்றுக் குறையாத பொன் வெளிப்பட்டுத் தோன்றுமாறு மடப்பத்தை உடைய கண்களைக் கொண்டு பிணையுடன் துள்ளித் திரியவும், ஒளி வீசும் பூக்களை உடைய கொன்றையும், நீலமணியைப் போன்ற பயிர்களிடையே முறுக்குண்ட முசுண்டையுடன், தெளிந்த நீர் நிரம்பிய பள்ளங்களில் நீலமணி என்று மயக்கத்தை உண்டாக்குமாறு நெய்தல் பூக்கள் மகளிர் தோளிலும், மார்பிலும் செம்பஞ்சுக் குழம்பு கொண்டு வடிவமாகத் தீட்டப்படுகின்ற கோலத்தைப் போல மலர்ந்து இருக்கின்றது. இதனை,

'சிறுதினை கொய்ய, கவ்வை கறுப்பு,
கருங்கால் வரகின் இருங்குரல் புலர,...
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்'


                                                               (மதுரைக்காஞ்சி 271-285)

என்னும் மாங்குடி மருதனாரின் வரிகள் முல்லை நிலத்தின் செல்வ வளத்தைப் புலப்படுத்துகின்றன.

குன்றம் சார் குறிஞ்சி

அகில், சந்தனம், தோரை, ஐயவி, ஐவனம், வெண்ணெல், இஞ்சி, மஞ்சள், மிளகு, தினை. கிளி, ஆமா, கேழல். வேங்கை, புலி ஆகியவை குறிஞ்சி நிலக் கருப்பொருட்கள். மணம் மிகுந்த அகிலையும், சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினை உடைய வெண்சிறு கடுகும், வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும் மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப் பட்டிருக்கும்.

மேலும் தினை விளையும் மலையில் அவ்றைத் தின்ன வருகின்ற கிளியினை ஓட்டும் ஆரவாரமும், அவரையின் அழகிய தளிர்களைத் தின்னும் காட்டுப் பசுக்களை ஓட்டும் கானவர்களின் ஆரவாரமும், ஆண் பன்றியைக் கொன்றதினால் உண்டாகும் ஆரவாரமும், வேங்கை மரத்தின் சிறிய கொம்புகளில் பூத்த மணம் பொருந்திய மலர்களைப் பறிக்கும் மகளிர் எழுப்பும் புலி-புலி என்னும் ஆரவாரமும், கரியநிறத்தை உடைய பன்றியைக் கொல்லும் வலிமை மிகுந்த புலியின் ஆரவாரமும், அருவிகளில் இருந்து, விழும் நீரின் ஒலியானது பக்க மலைகளில் பட்டு எதிரொலிப்பது ஆகியவை குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளத்தைப் பறைசாற்றுவனவாகும். இதனை,

'நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுஞ்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி...
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து,
அருங்கடி மாமலை தழீஇ, ஒரு சார்'


                                                              (மதுரைக்காஞ்சி 286-301)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன.

பாலை நிலக்காட்சி

பெரிய மூங்கில்களில் தோன்றிய நெருப்பு, பசுமையான செடி, கொடிகளை எரித்ததால் தளர்ந்த யானைகள் உணவு வேண்டி மேய்வதற்குரிய நிலங்களை நாடிச் செல்கின்றன. அருவி அற்ற மலையும், வைக்கோலைக் காண்பது போன்ற தோற்றத்துடன் உள்ள ஊகம் புல்லும். சூறாவளிக் காற்று, கடல் போன்று ஆரவாரத்துடன் விளங்கும். குழையால் வேயப்பட்ட குடில்களில் மான் தோலாலாகிய படுக்கையையும், தழை விரவித்தொடுத்த கண்ணியையும், கடிய சொல்லினையும் உடைய இளையர், வில் ஏந்திய கையராய்ப் பல வழிகளில் நின்று கள்வர் வராமல் காவல் புரிகின்றனர். மேலும் நிழல் இல்லாத அருஞ்சுரம் ஆகியவை பாலையின் தன்மையை உணர்த்துவதாக உள்ளன. இதனை,

'இருவெதிர்ப் பைந்தூறு கூர்எரி நைப்ப,
நிழத்த யானை மேய்புலம் படர...........
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார்'


                                                           (மதுரைக்காஞ்சி 301-314)

என்ற வரிகளால் அறியலாம்.

கடல் சார் எழில் நெய்தல்

கடல் சார்ந்த நிலம் நெய்தல். நெய்தல் நிலத்து மக்;கள் பரதவர் என்றும், பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். மதுரைக்காஞ்சியில் இந்நில இயல்பினை,

'முழங்கு கடல் தந்த வியங்கு கதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை,
பரதவர் தந்த பல்வேறு கூலம்,
இருங்கழிச் செறுவின் தீம்பளி, வெண் உப்பு
புரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல்,
வழமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்புரை
நெய்தல் சான்ற, வளம்பல பயின்று, ஆங்கு
ஐம்பால் திணையும் கவினி அமைவர'

                                                                     (மதுரைக்காஞ்சி 315-326)

என்னும் பாடல் வரிகளின் மூலம் நெய்தல் நில இயல்புகள் வெளிப்படுகின்றன.

முழங்கு கடல், முத்து, சங்கு, பரதவர் தரும் பொருட்கள், வெண்மையான உப்பு, தீம்புளி, கானல், மீன், நாவாய் ஆகிய பொருட்களும். கடல் வாணிகம், முத்துக்குளித்தல், சங்கு அறுத்து வளையல் செய்தல், உப்பு எடுத்தல், மீன் பிடித்தல், மீன் வாணிகம், மேலைநாட்டுக் குதிரைகள் மரக்கலங்களில் வந்து இறங்குதல், உள்நாட்டு அணிகலன்கள் பிறநாடுகளுக்கு அனுப்பப்படுதல், முத்து, சங்கு, கூலம் ஆகியவற்றை ஏற்றிய மரக்கலங்கள் செலுத்துதல் ஆகிய தொழில்கள் நடைபெற்றமை நெய்தல் நிலத்தின் வளத்தினைப் புலப்படுத்துகின்றன.

இவ்வாறு மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் ஆகிய ஐந்திணைகளிலும் வாழ்ந்த பாண்டிய நாட்டு மக்கள் வளமான வாழ்க்கையினை வாழ்ந்தனர் என்பது மதுரைக்காஞ்சியின் மூலம் புலப்படுத்தப்பட்டுள்ளது.
 


முனைவர் அ.இந்துமதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர் - 641 035.










 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்