சிரித்தாலே இனிக்கும்!
முனைவர் இரா.மோகன்
ஒரு
பத்திரிகையை வாங்கியவுடன் முதலில் நகைச்சுவைத் துணுக்குளை ஆர்வத்தோடு
படிப்பவர்கள் உண்டு. நகைச்சுவைத் துணுக்குகளுக்காகவே குறிப்பிட்ட
பத்திரிகையை விரும்பி வாங்குவோரும் உண்டு. ஒரு பத்திரிகையில் எத்தனையோ
பகுதிகள் வெளிவந்தாலும், வேறு எதற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை -
அனைவரையும் ஈர்த்து ஆட்கொள்ளும் இயல்பு - நகைச்சுவைத் துணுக்குகளுக்கு
உண்டு. படித்தவர் - பாமரர், சிறியவர் - பெரியவர், ஆடவர் - மகளிர்,
நகரவாசி - கிராமவாசி என ஒட்டுமொத்தமாக எல்லாத் தரப்பு வாசகர்களையும் தன்
பிடிக்குள்ளே வைத்துக்கொள்ளும் ஆற்றல் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு
உண்டு. இன்னமும் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வெற்றி பெற்ற தொடர்கதையில்
வரும் நல்ல பாத்திரத்தை வாசகர்கள் என்றென்றும் பசுமையாகத் தங்கள்
நினைவில் வைத்திருப்பது போல், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தாம்
படித்து மகிழ்ந்த நகைச்சுவைத் துணுக்குகளையும் மறக்காமல் தங்கள்
நினைவிலே பசுமையாக வைத்துக் கொண்டிருப்பார்கள்ளூ அவ்வப்போது அவற்றைத்
தமது நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பரிமாறிக் கொள்ளவும்
செய்வார்கள். சின்னஞ்சிறு வடிவில் கருத்துள்ள படத்துடன் வெளிவந்து
சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டுவதால் நகைச்சுவைத் துணுக்குகள்
எப்போதும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று நிற்கின்றன எனலாம்.
நகைச்சுவைத் துணுக்குகளின் தனித்திறன்
துறைதோறும் நிகழும் கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டும் துணிவும்,
இன்றைய அரசியல், சமூக, பொருளாதார நடப்புகளைக் கூர்மையாக விமர்சனம்
செய்யும் நெஞ்சுரமும், மனித உறவுகளையும் உணர்வுகளையும் நகைச்சுவையோடும்
நையாண்டியோடும் பதிவு செய்யும் பாங்கும், சொற்சிலம்பமும் படைத்த
நகைச்சுவைத் துணுக்குகளுக்கு உள்ள ஆற்றலே தனி. இத்தகைய இலக்கியத் தரமும்
திறமும் பொருந்திய நகைச்சுவைத் துணுக்குகளே வாசகர்களால் எப்போதும்
விரும்பிப் படிக்கப்படுகின்றன எனலாம்.
நகைச்சுவைத் துணுக்கில் தனி முத்திரை பதித்த வாரப் பத்திரிகை ஒன்று தனது
பவள விழாப் பரிசுத் திட்டத்தில் வெளியான 75 நகைச்சுவைத் துணுக்குகளைத்
தொகுத்து 'முத்திரை ஜோக்ஸ்' என்னும் பெயரில் ஒரு சிறு நூலாக வெளியிட்டது.
அந்நூலில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருமாறு:
'அந்தக் கூட்டணியிலிருந்து எதுக்காக வெளியேறினீங்க?'
'தன்மானம்தான் காரணம்!'
'அப்புறம் ஏன் இன்னொரு கூட்டணியில் சேர்ந்தீங்க?'
'சன்மானம்தான் காரணம்!'
இந்த நகைச்சுவைத் துணுக்கு வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தேர்தல்
நேரத்தில் கட்சி மாறும் அரசியல்வாதிகளின் போக்கினை நயமாகச் சாடுகின்றது.
'தன்மானம்', 'சன்மானம்' என்னும் இரு சொற்களை வைத்துக் கொண்டு இத்
துணுக்கு தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று உணர்த்தி விடுகின்றது.
வார இதழில் வெளிவந்த பிறிதொரு அருமையான நகைச்சுவைத் துணுக்கு:
சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்
மனைவி கணவரிடம்: 'வேலை செய்திட்டிருக்கும் போது
இப்படி இடுப்பிலே கிள்ளாதீங்கனு எத்தனை தடவை
சொல்லியிருக்கேன்? கேட்க மாட்டேங்கறீங்களே!'
கையில் விளக்குமாற்றோடு பெருக்கிக் கொண்டிருக்கும் வேலைக்காரி:
'நல்லா சொல்லுங்க. நானும் எத்தனையோ தரம் சொல்லியாச்சு..'
இத்துணுக்கிற்கு ஜெயராஜ் வரைந்திருக்கும் ஓவியம் சிறப்பானது. கணவன்,
மனைவி, வேலைக்காரி மூவரது முக பாவங்களைப் பார்க்கும் எவருக்கும்
சிரிப்பு வராமல் போகாது. என்றாலும், இந்த நகைச்சுவைத் துணுக்கைப்
படிப்பவர் நெஞ்சில் தூய கணவன் மனைவி உறவு இங்ஙனம் கொச்சைப்
படுத்தப்பட்டுள்ளதே என்ற நெருடலும் எழத்தான் செய்யும்.
சொல் விளையாட்டும் இயல்பான நகைச்சுவையும்
தொலைபேசி வந்த புதிதில் கோபுலுவின் அற்புதமான வண்ணப் படத்துடன் ஒரு வார
இதழின் அட்டையில் வெளிவந்த நகைச்சுவைத் துணுக்கு:
' மகள்: அப்பா, தொலைபேசி.
தந்தை: நீயே பேசித் தொலை.'
இது போன்ற சொல் விளையாட்டுக்களை – சிலேடை நயங்களை இன்றைய நகைச்சுவைத்
துணுக்குகளில் நிரம்பக் காணலாம்.
இயல்பான நகைச்சுவை உணர்வு சிறந்து விளங்கும் பிறதொரு சுவையான
நகைச்சுவைத் துணுக்கு:
'சொந்த ஊரு எதுங்க...?'
'நமக்கு அந்த அளவுக்கு வசதி இல்லீங்க...!'
அறிவார்ந்த சாதுரியம்
பிறிதொரு வாரப் பத்திரிகை தன் பொன்விழா ஆண்டின் போது 'சிரிக்க
வையுங்கள்ளூ சிங்கப்பூர் செல்லுங்கள்!' என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு
ஒரு நகைச்சுவைத் துணுக்குப் போட்டியை நடத்தியது. வாரந்தோறும்
வாசகர்களின் கை வண்ணத்தில் அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்தன.
வாசகர் ஒருவர் எழுதிய ஒரு நகைச்சுவைத் துணுக்கில் தந்தைக்கும்
மகனுக்கும் இடையே நிகழும் உரையாடல் வருமாறு:
'அப்பா, 'ஆழவாநச வுழபெரந' என்என்ற காலத்துக்கு நேரே என்ன எழுதணும்?'
''ரொம்ப நீளம்'னு எழுது!'
ஒரு சிறந்த நகைச்சுவைத் துணுக்கு இயல்பாக இயங்கும் பாங்கினைத் தன்னகத்தே
கொண்டிருக்கும்ளூ அறிவார்ந்த சாதுரியத்தை வெளிப்படுத்தும். இயல்பாய்
இருக்கும் பண்பு (ளுpழவெயநெவைல), அறிவார்ந்த மனப்பாங்கின் வெளிப்பாடு (Pசநளநnஉந
ழக அiனெ) ஆகிய இரண்டுமே சிறந்த நகைச்சுவைத் துணுக்கின் அடிப்படைப்
பண்புகள் ஆகும். இவ்விரு பண்புகளும் பொருந்திய ஒரு நகைச்சுவைத் துணுக்கு
இதோ:
' இண்டர்வியூ:
'மெடுல்லா ஆப்லங்கேட்டா' என்றால் என்ன அர்த்தம்?
'ஏற்கனவே லஞ்சம் வாங்கி ஆளை செலக்ட் பண்ணட்டீங்க'ன்னு அர்த்தம்!'
இந்த நகைச்சுவைத் துணுக்கு இன்றைய நேர்காணல்களில் (ஐவெநசஎநைற)
காணப்படும் கண்துடைப்புக்களை அங்கத நடையில் அழகாக விமர்சனம் செய்துள்ளது.
நறுக்குத் தெறிக்கும் நகைச்சுவை
'பரிசு ரூ.100 பெறும் நறுக்குத் தெறிக்கும் நகைச்சுவை' என்னும்
தலைப்பில் வாரந்தோறும் ஒரு பத்திரிகையில் வெளிவந்த நகைச்சுவைத்
துணுக்குகள் சிறப்பு மிக்கவைளூ படிப்பவர் முகத்தில் குமிண் சிரிப்பைத்
தோற்றுவிக்கும் திறம் வாய்ந்தவை. பதச்சோறு ஒன்று இதோ:
' பையன்: அப்பா நான் தொண்ணூறு மார்க்
வாங்கினேன்னா என்ன செய்வே?
அப்பா: கண்டிப்பா மயக்கம் போட்டு விழுந்திடுவேண்டா!
பையன்: அதனாலதாம்பா முப்பது மார்க் வாங்கியிருக்கிறேன்!'
இந்த நகைச்சுவைத் துணுக்கு வயது வேறுபாடின்றி படிக்கும் அனைவரது
முகத்திலும் புன்முறுவலைத் தோற்றுவிக்கும் திறம் படைத்ததாகும். இத்தகைய
நறுக்குத் தெறிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளின் அணிவகுப்பை இன்று
பரவலாகக் காணலாம்.
கலாமின் கருத்து
'இந்திய மக்கள் குறைவாகச் சிரிக்கின்றார்கள். அதிலும் தமிழ் மக்கள்
மிகக் குறைவாகச் சிரிக்கின்றார்கள். நாம் உடல் நலமுடனும் மன
வலிமையுடனும் வாழச் சிரிப்பு அவசியம்ளூ அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'
என ஒரு பத்திரிகையின் பவள விழா மலருக்கு எழுதிய வாழ்த்துச் செய்தியில்
சிரிப்பின் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் மேனாள் குடியரசுத்
தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம். அவரது அனுபவ உரையை வாழ்வில்
பொன்னே போல் போற்றுவோம்: உடல் நலத்துடனும் மன வலிமையுடனும் வாழத்
துணைபுரியும் நல்ல நல்ல நகைச்சுவைத் துணுக்குகளை நாளும் படித்து
மகிழ்வோம்; சிரித்தாலே இனிக்கும், சரிதானே நண்பர்களே!.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|