தேவாரத்தில் உடன்பாட்டுச் சிந்தனைகள்

முனைவர் நிர்மலா மோகன்


“ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது ஒரு புடை ஒக்கும் எனின், தமிழ் ‘இரக்கத்தின் மொழி’ எனக் கூறுவது இனிது பொருந்தும்; பக்தியின் மொழி எனலுமாம்” எனப் பெருமிதத்தோடு மொழிவார் தனிநாயக அடிகளார். அவரது கூற்றை நூற்றுக்கு நூறு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தவை பக்தி இயக்கக் காலத்தைச் சார்ந்த தேவாரப் பதிகங்கள் ஆகும். ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும், எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரும் பாடிய ஏறத்தாழ எண்ணாயிரம் பாடல்கள் ‘தேவாரம்’ என்ற பெயரால் சுட்டப்படும் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. இவை இசையொடு இன்ன பண் என்று குறித்துக் காலங்காலமாகப் பாடப்பெற்று வருகின்றன. “இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்குக் கிடைக்கவில்லை” என விதந்து கூறுகின்றார் பேராசிரியர் மு.வரதராசனார். இன்னும் ஒரு படி மேலாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரப் பாடல்கள், இன்று உலகமே போற்றிக் கூறும் உயரிய உடன்பாட்டுச் சிந்தனைகளைத் தன்னதக்தே கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’


திருஞானசம்பந்தர், ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரரால் குறிப்பிடப் பெற்றவர்; ஒரு குழந்தை ஞானியாகப் போற்றப்பட்டவர்; பிள்ளைப் பருவத்திலேயே ‘தோடுடைய செவியன் விடையேறி தூவெண் மதிசூடி என் உள்ளங்கவர் கள்வன்’ என இறைவனைப் பாடிய பெருமைக்கு உரியவர். அவருடைய பாடல்களில் கலக்கத்தையோ மனச் சோர்வையோ துயரத்தையோ மருந்துக்கும் காண்பது அரிது; மாறாக, அவருடைய பாடல்கள் பயில்வோர் நெஞ்சில் ஊக்கமும் நம்பிக்கையும் விதைக்கும் வல்லமை படைத்தவை. சமணரும் பௌத்தரும் இல்லறத்தைப் பழித்து, துறவறத்தையே பெருமையாகப் பேசி வந்த ஒரு கால கட்டத்தில், திருஞானசம்பந்தர் போலித் துறவையும் சாதி வேறுபாடு, தீண்டாமை முதலான சமூக அவலங்களையும் கடுமையாகச் சாடுவதிலும், பெண்களுக்கு நேர்ந்த இழிநிலையைப் போக்குவதிலும் ஆர்வம் காட்டினார். இறைவன் உமை ஒரு பாகனாய் – அர்த்த நாரீசுவரனாய் – இருக்கும் கோலத்தைச் சுட்டிக்காட்டி, இந்த உலகில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழ முடியும் என்ற எண்ணத்தை ஊட்டி, நல்ல கதியை அடைவதற்கு எவ்வகையான குறையும் இல்லை என்று மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஆழமாக ஊன்றும் வகையில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் இவ் வகையில் முத்தாய்ப்பானது. இறையடியவர்களின் திருமணங்களின் போது மகிழ்ச்சியுடன் இசைக்கப்-படுகின்ற அற்புதமான அப்பாடல் வருமாறு:

“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும்ஓர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”.

பெருந்தகையான சிவபெருமான் பெண்ணின் நல்லாளான உமை அம்மையோடு காட்சி தரும் போது மனக்கவலைக்கே இடம் இல்லை; வாழ்வில் நல்ல கதிக்கு யாதொரு குறைவும் நேராது; மண்ணில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழலாம் என அறுதியிட்டு உரைக்கின்றார் திருஞானசம்பந்தர்.

ஒருமுறை திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களோடு வாதிடு-வதற்காகப் புறப்பட நேர்ந்தது. அப்போது உடன் இருந்தவர் அந்த நாள் சோதிடப் படி நல்ல நாளாக இல்லை என்பதைக் குறிப்பிட்டுத் தடை எழுப்பினார். அந்-நிலையில் திருஞானசம்பந்தர், “எங்கள் தலைவன் சிவபெருமான் பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவன். கங்கையையும் பிறைச் சந்திரனையும் தனது முடியில் அணிந்தவன். என் உள்ளத்தில் குடிபுகுந்தவன், அவ்வாறு அவன் என் உள்ளத்தில் வீற்றிருப்பதால், சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஆகிய நாள்களும் ராகு கேது என்னும் பாம்பு இரண்டும் ஒரு தீமையும் செய்ய மாட்டா. அவை எல்லாம் நல்லனவே; இறையடியார்களுக்கு மிக நல்லனவே” என்று அஞ்சாமையும் ஆர்வமும் ஊக்கமும் தெளிவும் நம்பிக்கையும் ததும்பி நிற்குமாறு ஒரு பதிகம் பாடினார்.

“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
       மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
       உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
       சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
       அடியார் அவர்க்கு மிகவே.”


‘நல்ல’ என்ற மங்கலச் சொல் இப் பாடலில் ஐந்து முறை பயின்று வருவது நோக்கத்தக்கது. திருஞானசம்பந்தர் அருளிய இக் கோளறு பதிகத்தினை மனம் கலந்து, பொருள் உணர்ந்து படித்து வந்தால் போதும், எந்நாளும் வாழ்வில் நல்லனவே நிகழும்; அல்லன அகன்று ஓடும்.

‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’

திருநாவுக்கரசர் ‘தாண்டக வேந்தர்’ எனச் சிறப்பிக்கப் பெற்றவர்; ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் மந்திர மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு முறை திருநாவுக்கரசர் மீது பகைமை கொண்ட மகேந்திரப் பல்லவன் அவரை அழைத்து வருமாறு ஆணை இட்டான். அச் சூழலின் போது அவர் பாடிய பாடல் அவருடைய பெருமித உணர்வையும் ஆழ்ந்த இறைப் பற்றையும் ஒருங்கே புலப்படுத்துவதாகும். “நாம் யாருக்கும் குடியாக அடங்கி வாழவில்லை. காலனுக்கும் அஞ்சுவதில்லை. நரகத்தில் சென்று இடர்ப்படுவதில்லை. பொய்ம்மை என்பது எம் வாழ்வில் இல்லவே இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வோம். நோய் அறியோம். யாருக்கும் அடி பணியவும் மாட்டோம். எந்த நாளும் இன்பமே அல்லாமல், துன்பம் என்பது ஒருபோதும் எமக்கு இல்லை. எம் கடவுளாகிய சிவபெருமான் யாருக்கும் குடி அல்லாத தனித்தலைமை உடையவர். அவர் ஒருவருக்கே யாம் என்றும் மீளாத அடிமையாய், அவருடைய திருவடியைச் சேர்ந்திருக்கின்றோம்”.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
      நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
      இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.”


இவ்வாறு ஏழாம் நூற்றாண்டிலேயே விடுதலை முழக்கம் செய்த பெருமை அப்பர் பெருமானுக்கு உண்டு.

‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற அப்பர் பெருமானின் அடியை மையமாகக் கொண்டே, இருபதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான பாரதியாரும்,

“நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் – இது
       நமக்கே உரிமையாம் என்பது உணர்ந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் - பரி
       பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்!”

என்று பாடினார்.

‘மனிதப் பிறவியும் வேண்டுவதே!’

திருநாவுக்கரசரின் பாடல்களில் பக்தியும் குழைவுமே மிகுந்து விளங்கின. கல்வித் தெளிவும் தத்துவ ஞானமும் கைவரப் பெற்றவராக இருந்த போதிலும், கையில் உழவாரம் என்னும் களைக்கொட்டுக் கருவியை ஏந்திக் கோயில்களுக்குச் சென்று, அங்கங்கே தரையில் கிடந்த புல்லையும் முள்ளையும் கொத்திக் கல் முதலியவற்றை அப்புறப்படுத்திக் கோயில் வளாகத்தைத் தூய்மை செய்வதையே தம் வாழ்வின் பெரும்பேறு எனக் கொண்டார்.

என்னதான் துன்பங்கள் அணிவகுத்து வந்து தாக்கிய போதும் – எவ்வளவு தான் நெருக்கடிகள் சூழ்ந்து நின்று சொந்தம் கொண்டாடினாலும் – திருநாவுக்கரசரிடம் இருந்து வாழ்க்கையை வெறுத்து ஒரு சொல் கூட பிறக்கவில்லை; மாறாக,

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே”

என்றே நம்பிக்கையுடன் பாடினார்;

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”

எனத் தமது வாழ்க்கை ஏற்புக் கொள்கையை (Life Affirmation Theory) நாட்டு மக்களுக்கும் அறிவுறுத்தினார்.

என்றும் மணமகன் போன்ற கோலத்தில் விளங்கிய சுந்தரர்

சுந்தரர் பெருமான் வாழ்விலும் வாக்கிலும் இதே போல் நம்பிக்கை ஒளிரும் உடன்பாட்டுச் சிந்தனைகளே மேலோங்கி நிற்கக் காணலாம். என்றும் மணமகன் போன்ற அழகிய கோலத்தில் விளங்கி, உலக வாழ்க்கையில் பெறும் இன்பங்களை எல்லாம் தோழமை நெறி நின்று இறைவனிடமே உரிமையுடன் கேட்டுப் பெற்று மகிழ்ச்சி பொங்கப் பாடியவர் அவர். துறவு மனப்பான்மை-யையோ, உலக வெறுப்பினையோ அவருடைய பாடல்களில் சற்றும் காண முடியாது. பொருள் தர மனம் வராத பொய்ம்மையான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணுலகத்துச் செல்வர்களின் வீடுகளை நாடிச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடி வீணே காலத்தைக் கழிக்காமல், “இறைவனுடைய கோயிலைப் பாடுங்கள். இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; இடர் நீங்கி வாழலாம். மறுமையில் நற்கதியும் கிடைக்கும். ஐயமே இல்லை” எனப் புலவர்களுக்கு அறிவுரை கூறுவதாகச் சுந்தரர் பாடியுள்ள பத்துப் பாடல்கள் இவ் வகையில் சிறப்பானவை.

இங்ஙனம் மண்ணுலக வாழ்வை – உலகை – பெண்மையை – இல்லறத்தை – கலைகளை உயர்த்தியும் போற்றியும் பாடியுள்ள அருமையான பதிவுகள் தேவாரப் பாடல்களில் பரக்கக் காணப்படுகின்றன. அவை தனி ஆய்வுக்கு உரியவை ஆகும்.
 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர் (பணி நிறைவு)
தமிழியற்புலம்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம் - 624302
திண்டுக்கல் மாவட்டம்







 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்