கபிலர் படைக்கும் நயத்தக்க, நாகரிகமான காதல்
சித்திரிப்பு
முனைவர் இரா.மோகன்
குறிஞ்சிக்
கலியின் முதற்பாடல். கபிலர் இயற்றியது. தோழி கூற்றாக அமைந்தது.
தலைவியின் களவொழுக்கத்தினைத் தோழி, அவளது மேனியில் ஏற்பட்ட புதிய மணம்,
புதுத் தோற்றப் பொலிவு, அவளது நடைமுறைகளில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்,
உண்ணும் அளவு முன்பை விடச் சுருங்குதல், தனது செயல்களை யாருக்கும்
தெரியாமல் மறைத்துச் செய்தல், குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கியே
செல்லுதல், ஒரே இடத்திலேயே பலகாலும் சுற்றித் திரிதல் ஆகிய செயல்களால்
உய்த்துணர்ந்து கண்டுகொள்ள முயலுவாள்; மேலும், தலைவனது புணர்ச்சியை
எதிர்நோக்கித் தலைவியின் உள்ளத்துள் எழும் மறைவான வேட்கை கொண்டும் அவளது
நுண்ணிய முகக் குறிப்புக்களாலும் தோழி உணர்வாள். இங்ஙனம் உணர்ந்த பிறகு,
தலைவியின் வாய்மொழி-யாகவே அவளது களவு ஒழுக்கத்தினை அறிய வேண்டும் என்று
விரும்பி, மெய்யாகவும் பொய்யாகவும் இரு பொருள் படும்படியான சொற்களை,
மரபு முறை வழுவாமல் கூறுவாள். இதனைத் தொல்காப்பியர் களவுக் காலத்தில்
தோழிக்கு நிகழும் கூற்று வகைகளைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில்,
'நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்...'
எனக் குறிப்பிடுவர். இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகக் கபிலர்
குறிஞ்சிக் கலியில் படைக்கும் தோழி விளங்குகிறாள். அவள் தலைவியிடம்
உட்பொருள் குறிப்பாக அமையப் பொய்யாகப் படைத்து மொழிவது வருமாறு:
'பொய்கையில் மலர்ந்த கரு நீல மலர் போன்றதும், மை தீட்டப் பெற்றதும்
ஆகிய கண்களை உடையவளே! யான் கூறுவதைக் கேள். ஓர் இளைஞன் தலைமாலை அணிந்து,
கையில் வில் ஏந்தி, விலங்குகளின் காலடிச் சுவட்டைத் தேடி வருபவன் போல
இங்கு வந்தான். வந்தவன் என்னைப் பார்த்ததும், தனது மனத் துன்பத்தைக்
குறிப்பால் உணர்த்துவது அன்றி வாயாலே கூறாமல், வறிதே பல நாளும்
திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். அவனோடு தொடர்பு இல்லாத யானும் அவன்
என் செய்தான் என்னும் எண்ணம் மிகுந்து, உறக்கம் இன்றித் துயரத்தில்
அழுந்தினேன். அவனோ என் முன்னே வந்து நின்று தன் குறையைத் தானே கூறத்
துணியான். 'உன் வருத்தத்திற்கு யானும் வருந்தினேன்' என்று கூறுவது பெண்
தன்மை அன்று. ஆதலின் யானும் ஏதும் கூறவில்லை.
இந்நிலையில், 'இதனை ஆராயாமல் அவன் ஒருவேளை இறந்து பட்டாலும் படுவான்'
என்று எண்ணி, இடையில் ஒரு நாள் என் தோள்கள் மெலிந்து யான் உற்ற
துயரத்தால், பெண்கள் செய்யத் துணியாத ஒரு நாணமற்ற செயலை யான் செய்தேன்.
நாம் பறவைகளை ஓட்டிக் காவல் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் ஒரு
நாள் ஊஞ்சலில் ஏறி ஆடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவன் அங்கு வந்தான்.
அவனைப் பார்த்து யான்இ 'ஐயனே! சிறிது நேரம் ஊஞ்சலை ஆட்டு' எனக் கூறினேன்.
அவனும் இசைந்து, 'பெண்ணே! நீ கூறியது நன்று' என்று சொல்லி ஊஞ்சலை ஆட்டத்
தொடங்கினான். அப்பொழுது யான் கை நழுவி விழுவது போல நடித்த, பொய்யாக அவன்
மார்பின் மீது வீழ்ந்தேன். அதனை அவன் உண்மையாகக் கருதி விரைந்து என்னை
வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். அப்பொழுது யான் உணர்வு வந்து மயக்கம்
தெளிந்து எழுந்து விட்டேன் என்றால், அவன் பிறர் அறிவர் என்று கருதி
விரைந்து, 'உயர்ந்த குழை அணிந்தவளே! எழுந்து செல்!' என்று கூறி உடனே
அனுப்பி விடும் இரக்கப் பண்பும் உயர்ந்த பண்பாடும் உடையவனாக இருந்தான்.
ஆதலின், உடனே எழாமல் அவன் மார்பில் மெய் மறந்தவள் போல் விழுந்து
கிடந்தேன். இதுவே நடந்தது'.
உட்பொருள் துலங்கும் தோழியின் இவ்வனுபவ மொழியினைத் தன்னகத்தே கொண்ட
குறிஞ்சிக் கலிப்பாடல் வருமாறு:
'கயமலர் உண்கண்ணாய்! காணாய், ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன், வில்லன் வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான்உற்ற
நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்;
பாயல் பெறேஎன், படர்கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்அன்று உரைத்தல் நமக்காயின், இன்னதூஉம்
காணான்இ கழிதலும் உண்டுஎன்று ஒருநாள் என்
தோள்நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்துஓர்
நாண்இன்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல்
இனக்கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்துஅயல
ஊசல்ஊர்ந்து ஆட, ஒருஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத்,
'தையால்! நன்று' என்றுஅவன் ஊக்கக், கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்;
மெய்அறியா தேன்போல் கிடந்தேன்மன்; ஆயிடை,
மெய்அறிந்து ஏற்றுஎழுவேன் ஆயின்இமற்று ஒய்யென
'ஒண்குழாய்! செல்க' எனக்கூறி விடும் பண்பின்
அங்கண் உடையவன் அவன்'
'தோழி இங்ஙனம் கூறுவதால, தலைவன் தன்னிடம் தனது கருத்தைக் கூறித்
தலைவியிடம் அதனை உணர்த்துவாயாக! என்று வேண்டிக் கொண்டதை மறைமுகமாகப்
புலப்படுத்துகிறாள். இது மரபுப்படி சரியானதே. இருபொருள்-படுமாற, உறக்கம்
கொள்ளேன் என்றும், துயர் உழப்பேன் என்றும், உரைத்தல் பெண் தன்மை அன்று
என்றும் ஒரு நாணின்மை செய்தேன் என்றும், அவன் மார்பின் மேல் வீழ்ந்தேன்
என்றும் கூறுவதால் தோழி பொய் கூறுகிறாள் என்பது தெளிவு. ஆயினும் அதுவும்
ஒரு பயனைத் தரும். அதைக் கேட்டுத் தலைவி, தன் களவை வெளிப்படுத்துவாள்
என்பது தோழியின் கருத்து' (கலித்தொகை: மக்கள் பதிப்புஇ பக்.126-127) என
இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் மொழிவார் பேராசிரியர்
சுப.அண்ணாமலை.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் குறிப்பிடுவது போல், 'இந்த அகத்திணைக் கல்வி
இளைஞர்கட்கு இளமையில் முறையாகக் கற்பிக்கப்பட்டால், இன்பக் குமுறல்களும்
குடும்பக் கோணல்களும் குறைவுபடும்' என்பது உறுதி; இத்துடன், இளையோரின்
ஒருதலைக் காதல் மற்றும் சாதி மறுப்புக் காதல் காரணமாக இன்று
சமுதாயத்தில் நடைபெற்று வரும் கண்மூடித்தனமான கொடுமைகளுக்கும் ஆணவக்
கொலைகளுக்கும் தடித்த ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பெறும் என்பது
உறுதியிலும் உறுதி.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|