நாட்டுப்புறக் கலைகளில் இடம் பெறும் இசையும், இசைக்கருவிகளும்

முனைவர் சு.அட்சயா

முன்னுரை:

செம்மொழியாம், தமிழ் மொழியில் நாட்டுபுற வழக்காறுகள் மிகுதியாக வழங்கி வருகின்றன. தழிழர்களின் பாரம்பரியத்தினையும், பண்பாட்டுச் சிறப்பினையும் பற்றி அறிவதற்குரிய கருவூலமாகத் திகழ்ந்து வருகின்றன. தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

'கொங்கில் வாழான் எங்கும் வாழான்
கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்'

என்னும் பொன்மொழி, வாழ்வாங்கு வாழும் நெறிகளும், முறைகளும் வாய்ப்புகளும், வசதிகளும் நிறைந்திருக்கும். கொங்கு நாட்டில் வாழ இயலாதவன் எங்கும் வாழ இயலாது என்பதையும், கொங்குநாடு தன்னிறைவு பெற்றால் தமிழகமெங்கும் தன்னிறைவு பெறும் என்ற உண்மையையும் உணர்த்திநிற்கிறது. 'பாரத நாடு என்னும் வதனத்தில் திலகம் போல் அழகொளிரும் திருநாடு தமிழ்நாடு. அதில் ஒரு பகுதியே கொங்குநாடு. நாட்டுப்புறவியல் என்பது ஒரு கடல் இந்த கடலில் மூழ்கி திளைத்து எடுத்த முத்தாக இடம் பெறுகின்ற நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுகின்ற இசையும், இசைக் கருவிகளும் குறித்து எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிறுபறை:

முருக வழிபாட்டில் சிறுபறை முக்கியமான இடம் வகிக்கின்றது. 'தொண்டகச் சிறுபறை குரவை அயர' என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது. (திருமுருகாற்றுப்படை 196-197) 'தொண்டம் தொடுமின் சிறுபறை தொடுமின்' என்று சிலப்பதிகாம் குறிப்பிடுகின்றது. (சிலப்பதிகாரம் குன்றக் குரவை. 16-20) தொண்டகம் என்பதற்கு குறிஞ்சிப்பறை என்று உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.

பறை அடித்தும் குரவைக் கூத்து நிகழ்த்தியும் குறவர்கள் முருகப் பெருமானை வழிப்ட்டதைச் சிலப்பதிகாரம் மூலம் அறியமுடிகின்றது. முருகனுக்கு மலை நிலத்தார் விழாவெடுக்கும் போது நம் சுற்றத்தார்களையும் அழைத்து அவரோடு கள்ளுண்டு மகிழ்ந்து குரவை ஆடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது.

'மான் தோல் சிறுபறை கறங்க' என்று மலைபடுகடாம் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்மக்கள் மான் தோலைக் கொண்டு சிறு பறையைச் செய்துகொண்டதை அறியமுடிகின்றது.

மலைநில மக்கள் சுற்றத்தாரோடு உண்டு, தொண்டகச் சிறுபறையை முழக்கி அதன் தாளத்திற்கியைய ஆடினர் என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது. மிகப் பழங்காலத்தில் முருக வழிபாட்டில் 'சிறுபறை' முக்கிய இடம்பெற்றிருந்தது என்பதை அறிய முடிகின்றது.

திடும்:

பழனி முருகன் கோவில் தைப்பூசத்திருவிழா பங்குனி உத்திர விழா முதலிய பெருவிழாக்களின் போது நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் காவடிக் கூட்டத்துடன் 'திடும்' இசைக்கருவியை முழக்கிக் கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. ஒவ்வொரு காவடிக் கூட்டத்தினரும் 5 முதல் 60க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளில் பல்வேறு வகைகளைக் காணலாம். திடும் இசைக்கருவியை இடுப்பில் கட்டிக்கொண்டு, பெரிய தடியால் 'திடும், திடும்' என்று முழங்குகின்றனர்.

பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவின் போது வெள்ளிரதம் புறப்படுவதற்கு முன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவடிக்கூட்டத்தினர் - மூன்று பெரிய குழுக்களாக கூடி, நீண்ட நேரம் 'திடும்' இசையை முழங்குகிறர்கள். திடும் இசையை முழங்கிய பிறகு இவர்கள் பழனியாண்டவரைத் தரிச்க்கப் புறப்பட்டு விடுகின்றார்கள்.

பக்தர் ஒருவர் மிகச் சிறிய திடும் இசைக் கருவியை கழுத்தில் அணிந்து கொண்டு சிறிய குச்சியால் அழத்துக் கொண்டு வந்ததைப் பங்குனி உத்திர விழாவின்போது காண முடிந்தது. சிறிய மண் செப்பில் தோல் போர்த்தப்பட்டு இருந்தது. இந்த சிறிய திடும் முருகனுக்கு மிகவும் பிடித்தமானது.

முருகன் உவக்கும் இசைக் கருவிகள் குறித்து திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது. (திருமுறுகாற்றுப்படை 239 -246)

நறும்புகை எடுத்து, குறிஞ்சி பாடி,
தமிழ் இசை அருவியொடு இன்இயம் கறங்க,
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பி, குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,
முருக ஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப்பாடி, பலவுடன்
கோடுவாய் வைத்து, கொடுமணி இயக்கி,


அவை,

1.குறிஞ்சியாழ்
2.தொண்டகம்
3.சிறுபறை
4.கோடு.

இவற்றை முருகியம் என்று அழைத்தனர்.

ஊது கொம்புகள் பலவற்றை ஊதி, கொடுமணி இயக்கிப் பழந்தமிழர்கள் முருகப் பெருமானை வழிபட்டார்கள். பழந்தமிழர்களின் முருக வழிபாட்டில் ஆடல், பாடல், இசை இம்மூன்றும் பின்னிப் பிணைந்திருந்தமையை திருமுருகாற்றுப்படையின் மூலம் அறிய முடிகின்றது.

திருவிழாக்களும் இசைக்கருவிகளும்

பழனி முருகன் கோவிலில் அக்கினி நட்சத்திர விழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திர விழா ஆகிய பெருவிழாக்களின் போது கொண்டு வரப்படும் இசைக் கருவிகள் மூன்று வகைப்படுத்தலாம்.

தோற்கருவிகள்:

1. தப்பு
2. திடும்
3. நாகர்
4. பெரியபறை
5. பம்மை
6. உறுமி
7. கிணுக்குச்சட்டி
8. காசுப்பலகை
9. மேளம்
10. நையாண்டி மேளம்
11. கஞ்சிரா (சிறுபறை)
12. லவண்டை
13. உடுக்கை
14. செண்டை மேளம்.

ஊறு கருவிகள்

1. நாதசுரம்
2. 2.சத்தக்குழல்
3. 3.கொம்பு
4. 4.சங்கு
5. 5.தாரை
6. 6.திருச்சின்னம்

உலோகக் கருவிகள்

1. மணி
2. சேகண்டி
3. சிறிய காற் சலங்கை
4. கைத்தாளம்
5. பெரியதாளம்

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் அரங்கேற்ற காதையில் 31 வகையான தோற்கருவிகள் பற்றி குறிப்பிடுகின்றார்(சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்)

நாட்டுப்புற இசைக்குருவிகள் (இயற்கை இசைக் கருவிகள்)

இயற்கையில் கிடைத்த பொருள்களை புராதன மக்கள் இசைக்கருவிகளாக பயன்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மூங்கிலில் துளையிட்டுச் செய்யப்படுவது புல்லாங்குழல் ஆகும். கொங்கு நாட்டு கிராம மக்கள் பல்வே வகையான புல்லாங்குழல்களைத் தங்கள் வீடுகளில்; வைத்;திருக்கின்றார்கள். புல்லாங்குழல் ஊதத்; தெரிந்தவர்கள் சிறுவர்களுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுத் தருகின்றனர். இவ்வாறு தான் நாட்டுப்புற இசை பரவி வருகின்றது.

'முல்லைத் தீம்பாணி இசை' என்பது பழந்தமிழிசையாகும். முல்லை நில மக்கள் ஆடு மாடு மேய்க்கும் போது புல்லாங்குழல் வாசித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியது குறித்து சங்க இல்க்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. ஊதுகுழல்களைச் செய்து வாசிக்கும் வழக்கம் இன்றும் நாட்டுப்புற மக்களிடம் காணப்படுகிறது.
பழந்தமிழர்கள் சில பழங்களைக் காய வைத்து அதன் உட்பகுதியை நீக்கிவிட்டு அதன் தோற்பகுதியை இசைக் கருவியாகப் பயன்படுத்தி வந்தது பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஆற்றங்கரையில் விளையும் நாணலிலிருந்து சிறு ஊதுகுழல்களைச் செய்து வாசிக்கும் வழக்கம் இன்றும் நாட்டுப்புற மக்களிடம் காணப்படுகிறது. கடலில் கிடைத்த இயற்கை பொருள்தான் 'சங்கு' பெருமாள் கோவில் வழிபாட்டில் சங்கு முதலிடம் பெறுகினறது.

எருது அல்லது மாடுகளின் கொம்பிலிருந்துதான் புராதன காலத்தில் 'கொம்பு' இசைக்கருவிசைய் செய்து கொண்டார்கள். சக்கையாட்டத்தில் பயன்படுத்தும் சக்கைகள் சிறிய தேக்கு மரத்துண்டுகளால் ஆனவை ஆகும்.

மண்பானை 'கடம்' எனும் இசைக்கருவியாக விளங்கி வருகின்றது. மண்பானையிலிருந்துதான் 'தபேலா' என்ற இசைக்கருவி தோன்றியது என்பர் (முனைவர். பே. சுப்ரமணியன் . தமிழ் நாட்டுப்புற சிகை ஆய்வுகள்-149)

'ஓணவில்' என்பது கேரளாவில் தென்னை மட்டைகளைக் கொண்டு செய்த வில்;லாகும். ஓணவிழாவின் போது இவ்வில் வாசிக்கப்படுவதால் இதற்கு ஓணவில் என்ற பெயர் உண்டாயிற்று.(பி. சைதண்ய தேவ், இசைக்கருவிகள் பக்.26-27) 'மண்முழா' என்பது பெரிய மொடாவில்' தோல் போர்த்துக் கட்டியதாகும். இம் மண் முழவிகளைப் பல்லடம், குண்டடம், தாராபுரம் வட்டாரங்களில் மிகுதியாக காணமுடிகின்றது.

மண்குடம்:

புராதனகால மனிதன் மண்பானையை இசைக்கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றான். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பல பாத்திரங்கள் காலப்போக்கில் இசைக்கருவிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன. 'தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், அளப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படும் பானைகள் பாத்திரங்கள் முதலியவை தோலினால் மூடப்பட்ட பொழுது தோற்கருவிகளாக மாறின.தபலா, டக்கா முதலிய கருவிகள் இவ்விதம் உண்டாயின என்று கூறுவர் பி. சைதன்ய தேவ். பரிமாறுவதற்குப் பயன்படும் உலோகத்தட்டு தாலி என்ற கிராமிய தாளவாத்தியமாக உருமாறியது. சாலைகளைப் சீரமைக்கும் பொழுதும் தரையைத் தட்டும் பொழுதும் திமிசு கட்டையைத் தட்டிக் கொண்டு ஆண்களும், பெண்களும் பாட்டுப்பாடிக் கொண்டு திப்பணி நடனம் ஆடுவார்கள் என்பர். (சைதன்ய தேவ் இசைக் கருவிகள் ப.3)

மனிதன் தொழில் செய்யும் போதும் அன்றாட வாழ்க்கையின் போதும் பயன்படுத்துகின்ற பொருள்களைக் கொண்டு இசைக் கருவிகளைச் செய்து கொண்டான் என்பதை மேற்கூறிய சான்றுகளின் வாயிலாக அறிய முடிகின்றது.

மண்ணால் செய்யப்பட்ட குடத்தை இசைக்கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டுப்புறங்களில் மண்குடத்தை வைத்து தாளம் போடும் வழக்த்தைக் காணலாம். இசைக் கச்சேரிகளில் பயன்படத்தப்படும் 'கடம்' மண் குடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குடம் எழுப்பும் ஒலி மிக இனிமையாக இருக்கும் கடம் வாசிப்பவர் மிக உற்சாகமாக வாசிப்பதைக் காணமுடிகின்;றது.

மோடா மத்தளம்

சிவந்த மண்பானையின் இருபுறமும் தோல் போர்த்தி மொடா மத்தளத்தைச் செய்து கொள்கின்றார்கள். மொடா மத்தளம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது. மொடா மத்தளத்தைக் கைகளாலும், குறுந்தடிகளாலும் அடித்து வாசிக்கின்றார்கள். மொடா மத்தளம் வாசிப்பவர்கள் ஆட்டம் ஆடிக்கொண்டே வாசிக்கின்றார்கள். ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் மொடா மத்தளம் வழக்கில் உள்ளது. சென்னிமலை வட்டாரத்தில் உள்ள கிராமப்புற மக்கள் பழனி முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்து வரும் போது, மொடா மத்தளத்தை வாசித்துக் கொண்டு வருகின்றார்கள். ஒரு காவடி கூட்டத்தில் இரண்டு மொடா மத்தள்தை வாசித்துக்கொண்டு வருகின்றனர். காவடிக்காரர்கள் காவடியாட்டம் ஆடும் பொழுது மொடா மத்தளம் வாசிப்பவர்கள் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டு வருகின்றனர். மொடா மத்தளம் மிகப் பழமையான இசைக்கருவி என்று குறிப்பிடலாம். 'மத்தளம் என்பதற்கு அடியார்க்கு நல்லார் பின்வரும் விளக்கம் தருகின்றார். மத்து ஓசைப்பெயர் இசையுடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலான் மத்தளமென்று பெயராயிற்று. இக்கருவி பல கூத்துகளுக்கு உரித்தாகலானும் பாடலெழுத்தால் உள்ளே பிறத்தலாலும் முடிவுகளெல்லாம் இதனுள்ளே பிறத்தலானும் இதனை நான்முகனென்பர் என்று கூறுகின்றனர். ( சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் ப.106)

குடமுழா

குடமுழா முற்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. பண்டைத் தமிழர்கள் மண் குடத்தின் வாய்ப்பகுதியைத் தோலால் மூடி குடமுழா செய்துள்ளார்கள். குடமுழா குறித்து அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏழு வகையான முழவுகள் பற்றியும் ஓழு வகையான முழவுகள் பற்றியும் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார். (சிலமத்ப்பதிகார மூலமும் அரும்தபதவுரையும். அடியார்க்கு நல்லாருரையும் ப.105,106)

நாடுப்புற பாடல்களும் இசையும்

நாட்டுப்புற இசையும் பாடலும் பிறப்புறவுத் தொடர்பு
(Genetic relationship) கொண்டவை. நாட்டுப்
புறப் பாடல்களைப் பாடத் தொடங்கும்மும் வாய்ப்பாடுகளைப் பாடுகின்றனர். இவ்வாய்ப்பாடுகளைத் திரும்பத் திரும்பப் பாடுவதால் ஓசை நயம் உண்டாகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெறும் வாய்பாடுகள் பாடகர் பாட்டை மறக்காமல் பாடுவதற்கு துணை செய்கின்றன. என்று சி.எம்.பௌரா குறிப்பிடுகின்றார். எனினும் இவ்வாய்ப்பாடுகள் பாடலில் ஓசை நயம் உண்டாவதற்குத் துணை செய்கின்றன.

தாலாட்டு, கும்மி, தொழிற் பாடல்கள், காவடிப் பாடல்கள் இவற்றில் வாய்;பாடுகள் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன. நாட்டுப்புற மக்கள் கூட்டாகப் பாடும் குழுப்பாடல்களில் ஓசை மேலோங்கி இருக்கும். கும்மிப்பாடல்களில்; கைத்தாளமும் வாய்ப்பாடும் இணைந்து உற்சாகத்தை அளிக்கும். கரகாட்டப் பாடலுக்கு நையாண்டி மேளம் பின்னணி இசையாக அமையும். நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனையோ உணர்;ச்சிகளை உள்ளடக்கியவை. எல்லையற்ற உற்சாகத்தையும் உள்ளடக்கியவை. சிலபோது மிக ஆழமான சோக உணர்வுகளையும் புலப்படுத்துகின்றன.(கபில வாத்ஸ்யாயன். ப.18-19) பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்கள் மக்கள் தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்களாகும். அவற்றின் சந்தங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

நாற்று நடும்போதும், கதிரடிக்கும்போதும், நெல் குற்றும் போதும் பெண்கள் பாடுகின்றார்கள். மலைச்சாரலில் ஆடு, மாடு, மேய்க்கும் இடையர்கள் தெம்மாங்குப் பாடுகின்றார்கள். ஊஞ்சல் ஆடும் போது பெண்கள் ஊஞ்சல் பாடல்களைப் பாடுகின்றார்கள். வண்டிக்காரர்கள் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும்போது வண்டிக்காரன் பாட்டை மிக உச்சஸ்தானியில் பாடிக் கொண்டு செலுகின்றார்கள். இவ் ஓசைகள் காற்றில் மிதந்து அலை அலையாகச் செல்லுகின்றன.

நாட்டுப்புற மக்கள் ஓய்வாக இருக்கும் போது பாடும் பாடல்கள் உற்சாகமான ராகங்களை கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் கைத்தாளங்களும், சலங்கை ஒலியும் நாட்டுப் புறப் பாடல்களுக்குப் பின்னணி இசையாக அமைகின்றன.

கரிக்கொம்பு

பழங்கால மக்கள் வேட்டையாடும் போது சில நாட்டுப்புற இசைக்கருவிகளைப் பயன்படத்தியிருக்கின்றனர். 'கொம்பு' எனும் இசைக்கருவியையும் வேட்டையின்போது பயன்படத்தியிருக்கின்றார்கள். முற்காலத்தில் பழனி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் வாழும் வேட்டுவக் கவுண்டர்கள் மலைப்பகுதிகளுக்கு வேட்டையாடச் சென்றுள்ளார்கள். வேட்டைக்குச் செல்லும்போது அரிவாள், ஈட்டி, வேல்கம்பு, கரிக்கொம்பு இவற்றை ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் வைத்து வழிபடடுச் செல்வது பண்டைய வழக்கம் என்று பேட்டியின்போது தெரிவித்தார்கள். சாமி கும்பிட்ட பிறகு 'கரிக்கொம்பை' எடுத்து ஒருவர் ஊதுவார். குரிக்கொம்பு ஊதியவுடன் வேட்டை நாய்கள் கோயில் வளாகத்திற்கு வந்துவிடும். கரிக்கொம்பு ஊதுவதால் வேட்டை கிடைக்கும் என்று இவர்கள் நம்புகிறார்கள். வேட்டை கிடைத்து ஊருக்குத் திரும்பும் போது இவர்கள் கரிக்கொம்பு ஊதுவதை நிறுத்திவிடுவதாகக் கூறினார்கள்.

கொம்புகளைப் புனிதமாகக் கருதி வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளளது. முல்லை நில மக்கள் மகட்கொடை நேரும்போது பெண் எருமையின் கொம்பை, தெய்வமாகக் கருதி வழிபட்டது பற்றி முல்லைகலி குறிப்பிடுகின்றது.

எருது, அல்லது மாட்டின் கொம்பின் நுனியில் சிறு துளையிடுகின்றார்கள். அத்துளை வழியாக வாய் வைத்து ஊதுகின்றார்கள். தொடக்கக் காலத்தில் வேட்டையாடிய மிருகங்களின் கொம்புகளிலிருந்து, ஊது கருவிகளை உண்டாக்கிக் கொண்டார்கள் என்பதை மேற்கூறிய சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.

மிருகங்களின் கொம்புகளே மிகப் பழைய துளைக் கருவிகள் ஆகும். எருது, எருமை ஆகியவற்றின் கொம்புகiளாலான ஊதுகுழல்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளளன. 'தொம்புகள்' மிகப் பழமை வாய்ந்தவை எனினும் அவை இன்றும் பழங்குடி மக்கள் நாட்டுப்புற மக்கள் ஆகியவரிடையே காணப்படுகின்றன. (பி. சைதன்யதேவ் இசைக்கருவிகள் ப.89)
திருமணங்கள், மதசம்பந்தமான ஊர்வலங்கள், சவ ஊர்வலங்கள் இவற்றில் கொம்பு இடம் பெறுகின்றது. பஞ்சவாத்தியம் என்று அழைக்கப்படும் ஐந்து கருவிகளுள் இதுவும் ஒன்றாகும் (பி. சைதன்யதேவ் ப..91) இன்று 'கொம்பு' இசைக்கருவிகள் உலோகத்தில் செய்யப்படுகின்றன. சிறிய கொம்பிற்கு 'திமிரி' கொம்பு என்றும், பெரிய கொம்தபிற்கு 'பாரி கொம்பு' என்றும் பெயர். இதைவிடப்பெரிய கொம்பு ஒன்று 'ளு' வடிவத்தில் உள்ளது.

தொகுப்புரை:

கொங்கு நாட்டின் சிறப்பினை அறிய முடிகின்றது. இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்பதற்கிணங்க இயற்கையில் தோன்றிய இசைகள் பற்றி அறிய முடிகின்றது. திருமுருகாற்றுப்படையின் வாயிலாக இசைக்கருவிகளின் வகைகள் பற்றி அறிய முடிகின்றது. மண்குடம், மொடா, மத்தளம், குடமுழா. கரிக்கொம்பு போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகள் பற்றியும் அதன் சிறப்புகளையும் அறிய முடிகின்றது.

குறிப்புகள்:

  • 1.கபில வாத்ஸ்யான்

  • 2.பி. சைதன்ய தேவ் இசைக்கருவிகள்.

  • 3.சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்

  • 4.திருமுருகாற்றுப்படை

  • 5.சிலப்பதிகாரம் - குன்றக்குரவை

  • 6.தமிழக நாட்டுப்புறவியல்.
     

முனைவர் சு.அட்சயா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் – 641 035.
 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்