சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 26
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
காவலன்
போல நிற்கும் காதலன்!
அவனும்
அவளும் காதலர்கள். ஊருக்கும் தெரியாமல். உறவினரும் அறியாமல்
ஒருவரையொருவர் நீண்ட காலமாகக் காதலித்து வருகிறார்கள். பகலிலே அவர்கள்
ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. சந்திக்கவும் முடியாது. வெளியில்
எங்காவது ஒருவரையொருவர் காண நேர்ந்தாலும் முன்பின் அறியாதவர்கள்போல,
பழக்கம் இல்லாதவர்கள் போலவே காட்டிக்கொள்வார்கள். ஆனால் அடிக்கடி இரவு
நேரங்களில் இருவரும் சந்திப்பார்கள். தமது எதிர்காலத்தைப் பற்றிச்
சிந்திப்பார்கள். அப்போதும்கூட, அவள் தனது தோழியையும் துணைக்குக்
கூட்டிக்கொண்டே வருவாள். அவர்களது காதல் உறவு அவளது தோழிக்கு மட்டுமே
தெரிந்த விடயம். யாரிடமும் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்பதற்காக இருவரும்
சந்திக்கும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள்.
அன்றும் அப்படித்தான் இரவு நேரத்திலே, ஊர் உறங்கும் சாமத்திலே அவளும்
தொழியும் காதலனைச் சந்திக்கச் செல்கின்றார்கள். அன்று அவர்கள் சந்திக்க
முடிவுசெய்திருந்த இடம் குளக்கரை.
அப்போது இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. இரவு நேரமல்லவா? அதனால்
குளிராகவும் இருந்தது. ஆனால் காதலுக்கு முன்னர் குளிரென்ன கூதலென்ன!
அவளும் தோழியும் குளக்கரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். குளக்கரையை
அண்மிக்கும்போதே அவளின் காதலன் அங்கே காத்துக்கொண்டு நிற்பதைத் தோழி
கண்டுவிடுகிறாள். அவன் நிற்கின்ற நிலை அந்தத் தோழிக்கு
எப்படியிருக்கிறது தெரியுமா?
மாரிகாலங்களிலே மழை அதிகமானால் குளங்களின் கரைகள் உடைப்பெடுக்கும்.
அவ்வாறு உடைப்பெடுத்தால் வெள்ளம் கரைபுரண்டோடும். அந்த வெள்ளம் ஊருக்கள்
பாய்ந்தோடி வீடுகளை, பயிர்பச்சைகளை, கால்நடைகளைச் சேதப்படுத்தும்.
சிலவேளை ஊரையே அழித்துவிடும். அதனால் அத்தகைய காலங்களில் ஊரைப்
பாதுகாப்பதற்காகக் குளங்களை உடைப்பெடுக்காமல் பார்த்துக்கொள்ள 'மாரிக்குளத்துக்
காப்பாளர்கள்' கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரவுபகல் பார்க்காது,
மழையையும், குளிரையும் பொருட்படுத்தாது ஊர் நன்மைக்காகக் கடமையுணர்வுடன்
அவர்கள் செயற்படுவார்கள். மழைக்காலம் முடியும் வரை குளக்கரையிலேயே காவல்
நின்று உடைப்பெடுக்கும் பகுதிகளைச் செப்பனிடுவார்கள். தேவையானபோது
மதகுகளைத் திறந்து வெள்ளத்தைத் திசைமாற்றி விடுவார்கள்.
இப்பொழுது இங்கே அவர்கள் சந்திக்கத் தெரிவுசெய்த குளக்கரையிலே அவன்
நின்றுகொண்டிருக்கிறான். அவன் இடுப்பில் இடைக்கச்சையை இறுக்க
கட்டியிருக்கிறான். அது குளிர்ந்த பனியில் நனைந்திருக்கிறது. அவனது
காலில் அணிந்திருக்கும் கழல்களில் குளத்தின் பாசி பற்றிச் கூழ்ந்து
படிந்திருக்கிறது. அவன் கழுத்தில் மாலை அணிந்திருக்கிறான். இடையில்
பளபளக்கம் வாளையும் செருகிவைத்திருக்கிறான். இலேசாக மழை
தூறிக்கொண்டிருக்கின்றது. அந்தத் மழைத்தூறலிலே நனைந்தபடி குளக்கரையிலே
காதலியின் வருகைக்காக அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அவ்வாறு
நின்றுகொண்டிருக்கும் தலைவனைப் பார்க்கும்போது அவனது அந்த நிலை ஒரு
மாரிக்குளத்துக் காப்பாளன் அங்கே நிற்பதுபோலத் தோழியின் மனதில்
தோன்றுகிறது. அதனை அவள் தலைவியிடம் சொல்கிறாள். 'அதோபார்!
மாரிக்குளத்துக்காப்பாளன்போல அங்கே நின்றுகொண்டிருக்கிறான் உன்காதலன்'
என்று சொல்கிறாள். தோழியின் கூற்று நகைச்சுவையாக தலைவியைக்
கேலிசெய்வதுபோல வெளிப்படையாகத் தோன்றினாலும், மாரிக்குளத்துக்காப்பாளன்
ஊர் மக்களின் நன்மைக்காக எவ்வளவு பொறுப்புணர்வோடு தன் கடமையைச்
செய்கிறானோ அதே போல உன்மேல் கொண்ட ஆழமான காதலால், உன்னில் மிகவும்
அக்கறையோடு நீ வருவதற்கு முன்னரே அவன் இங்கேவந்து மழையிலும் குளிரிலும்
உனக்காகக் காத்துக்கொண்டு நிற்கின்றான் என்பதைத் தோழி அவளுக்கு
எடுத்துரைப்பதுவே உட்கருத்தாக, அவளின் உண்மையான நோக்கமாக உள்ளது என்பதே
பொருளாகும்.
பாடல்:
அன்னாய் வாழி! வேண்டு அன்னை. உவக்காண்
மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்
தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண்பனி வைகிய வரிக்கச் சினனே
ஐங்குறுநூறு. குறிஞ்சித்திணை. பாடியவர்: கபிலர். பாடல் இல: 206
அன்னையே வாழ்க! இதையும் விரும்பிக் கேள். மாரிகாலத்தில் குளம்
உடைப்பெடுக்காதவாறு காத்து நிற்கும் காப்பாளனைப்போல அதோ அங்கே நிற்கும்
உன் காதலனைப் பார்! தூறல் மழையிலே நனைந்த மாலையையும், ஒளிபொரந்திய
வாளையம், பாசிசூழ்ந்து படிந்திருக்கும் கழல்களையும் அணிந்துகொண்டு,
இடையில் இறுக்கிக்கட்டப்பட்டிருக்கும் இடைக்கச்சை குளிர்ந்த பனியில்
நனைந்த நிலையில் அவன் அங்கே நிற்கின்றானே! (என்று தலைவியைப் பார்த்துத்
தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது)
(காட்சிகள் தொடரும்....................................)
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|