அவ்வை யார்?
அவுஸ்திரேலியாவிலிருந்து செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா
அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே
இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ்
மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப
வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.
அவ்வையார் என்றதும், முருப்பெருமான் சுட்டபழம்வேண்டுமா சுடாத பழம்
வேண்டுமா என்று கேட்ட புராணக்கதை நினைவுக்கு வருகின்றது. அதியமான் என்ற
அரசன் நெல்லிக்கனி வழங்கிய இலக்கியக்கதை எண்ணத்தில் தோன்றுகின்றது.
பாரிமன்னனின் பிள்ளைகளுக்குப் பரிவுகாட்டிய வரலாற்றுக்கதை மனக்கண்முன்
நிற்கின்றது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்று அவ்வையார் இயற்றிய நூல்கள்
அறிவுக்கு வருகின்றன. இவையெல்லாம் நூற்றுக்கணக்கான வருடங்கள் காலத்தால்
வேறுபட்ட நிகழ்ச்சிகள். வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த அல்லது
நிகழ்ந்திருக்கக்கூடிய சம்பவங்கள். அவை அத்தனையும் அவ்வையார் என்ற அறிவிற்
சிறந்த மூதாட்டியான புலவர் ஒருவரையே அடையாளப்படுத்தி நிற்கின்றன. அந்த
அவ்வையார் என்பவர் ஒருவரே என்பதுபோல நம்மை நினைக்க வைக்கின்றன.
ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில்
வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில்
தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள்
ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு
பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின்
யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார்
என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்.
பெண்பாற் புலவர்கள் மிக அரிது என்பதால் காலத்துக்குக் காலம் தோன்றுகின்ற
பெண்புலவர்களையெல்லாம் அவ்வையார் என்ற பட்டப்பெயர் சேர்த்து
அழைத்திருக்கலாம். காலப் போக்கில் சொந்தப்பெயர் தொலைந்துபோய், அவ்வையார்
என்ற பெயர் நிலைத்திருக்கலாம். அவ்வையார் என்பதே எல்லா அவ்வையார்களுக்கும்
சொந்தப்பெயராகவும் அமைந்திருக்கலாம்.
அதியமான் கொடுத்த கருநெல்லிக்கனியை உண்டதால் அவ்வையார் ஆயிரம்
வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்க முடியும் என்றும், ஆகவே, மூன்று
காலகட்டங்களிலும் வாழ்ந்த அவ்வையார் மூவரல்ல ஒருவரே என்றும்,
நெல்லிக்கனியின் சக்தியினால் நீண்ட நெடுங்காலம் அவர் வாழ்ந்திருக்க
முடியும் என்றும் கருதுவோரும் உள்ளனர்.
ஆனால், 16 நூற்றாண்டுகளுக்கு மேலாக,
அதாவது 1600 வருடங்களுக்கும்
அதிகமாக அவ்வையார் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அது
அறிவுக்குகந்தாகவுமில்லை. அவ்வாறு அவர் வாழ்ந்திருந்தால் அது உலக
அதிசயமான வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். வரலாற்றை எழுதிவைப்பது
பண்டைத் தமிழனுக்கு வழக்கமில்லை என்றாலும், எந்தப் புலவராவது அதுபற்றிப்
பாடியிருப்பார். ஆனால் அவ்வாறு எந்தத் தகவலும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவ்வையார் என்ற பெயரில் கவித்துவம் மிக்க அறிஞராக விளங்கியவர்கள் மூவர்
என்பது இலக்கிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களது முடிவாகும். அவ்வையார்
பாடியவையென்று கிடைக்கப்பெறும் பாடல்களின் சொல்லமைப்பு, விடயப்பொருள்
பொருள், அவ்வையாருக்குத் தொடர்பிருந்த மன்னர்கள், புலவர்கள் ஆகியோர்
வாழ்ந்த காலம் என்பவற்றையெல்லாம் ஆய்வுக்குட்படுத்தியே அவ்வையார் என்பவர்
ஒருவரல்ல மூவர் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சங்ககாலம் என்பது கி.மு.500 ஆம்
ஆண்டு முதல் கி.பி.200 ஆம் ஆண்டவரை
ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளைக்கொண்ட காலப்பகுதியாகும். அதில் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஓர் அவ்வையார். அடுத்தவர் கி.பி.12
ஆம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் காலத்தில் வாழ்ந்தவர்.
மூன்றாமவர், இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், பதினாறாம்
நூற்றாண்டில், அதிவீரராம பாண்டியர் காலத்தில் வாழ்ந்த அவ்வையார்.
சங்ககாலத்து அவ்வையார்
மூன்று அவ்வையார்களிலும் காலத்தால் முந்தியவர் சங்ககாலத்தில் வாழ்ந்த
அவ்வையாராவார். பாணர் மரபிலே பிறந்த அவர் இளமையில் ஆடல் பாடல் கலைகளில்
தேர்ச்சிபெற்று விளங்கினார். திருவள்ளுவரும் அவ்வையாரும் ஒருதாய்
வயிற்றுப் பிள்ளைகள் என்ற ஆதாரமற்ற கதையொன்றும் உள்ளது.
சங்ககாலத்து அவ்வையார், தகடூரிலிருந்து ஆட்சிசெய்த, அதியமான் நெடுமான்
அஞ்சி என்றுசொல்லப்படும் மன்னனிடம் பேரன்பு கொண்டவர். அதியமானும்
அவ்வையாரிடம் அன்பும், மதிப்பும் வைத்திருந்தான் என்பதற்கு ஆதாரங்கள்
உள்ளன.
நீண்டநாள் உயிர்வாழும் சக்தியைக் கொடுக்கக்கூடிய நெல்லிக்கனியொன்று
அதியமானுக்குக் கிடைத்தபோது. அவன் அதைத் தான் உண்ணாது தமிழ் வளர்க்கும்
அவ்வையாருக்கு உண்ணக்கொடுத்தான் என்பது அவ்வையார் மேல் அவன் வைத்திருந்த
அன்புக்குச் சான்றாகும். போரென்றை நடவாது தடுப்பதற்காகத் தொண்டைமான் என்ற
அரசனிடம் அதியமான் அவ்வையாரைத் தூது அனுப்பினான் என்ற செய்தி அவன்
அவ்வையார் மேல் வைத்திருந்த மதிப்புக்குச் சான்றாகும்.
பறம்புமலையை ஆட்சிசெய்த வள்ளலாகிய பாரியின் மேலும் அவ்வையார் மிகுந்த
பாசம் கொண்டிருந்தார். பாரியை மூவேந்தர்கள் வஞ்சகமாகக் கொன்றார்கள்.
அவனின் இரண்டு பெண்பிள்ளைகளும் அனாதையானார்கள். அவர்களுக்கு
மணமுடித்துவைக்கக் கபிலர் எடுத்த முயற்சி கைகூடாமல்போயிற்று. பின்னர்,
அவ்வையார் அவர்கள் இருவரையும் திருக்கோவலூருக்கு அழைத்துச் சென்று அங்கே
அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்.
வேட்டையாடச்சென்ற அதியமான் காட்டிலே கிடைத்த கருநெல்லிக்கனியை, அதன்
பெருமைபற்றி எதுவுமே கூறாது அவ்வையாருக்குக் கொடுத்து அவரை உண்ணவைத்தபோது,
அதுபற்றிப் பின்னர் அறிந்த அவ்வையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் பாடல்
மிகவும் சுவையானது. புறநாநூற்றில் 91 அவது பாடலாக அது இடம்பெறுகின்றது.
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கலந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியல் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே. (புறநானூறு – 91)
களத்திலே பகைவரை வென்று வீர வளை அணிந்துள்ள தலைவனே! வீரச்செல்வமும்,
பொன்மாலையும் உடைய அஞ்சியே! மலைச்சரிவிலே கடும் முயற்சியுடன் பெற்ற அந்த
நெல்லிக்கனியானது பெறுதற்கு அரியது என்று எண்ணாது, அதனை உண்பதால்
கிடைக்கும் பேறையும் கூறாது உனது மனதிற்குள்ளேயே அடக்கிக்கொண்டு நான்
சாகாமல் இருப்பதற்காக எனக்கு அளித்தாயே! பிறைசூடிய நீலமிடற்றுப்
பெருமானான சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக என்பது இதன்
கருத்து.
அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற அவ்வையார் புகழ்வதுபோல அவனை
இகழ்ந்து பாடுகின்ற பாடல்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியில் விஞ்சிநிற்கின்றன.
இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகர் அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே. (புறநானூறு – 95)
புறநானூற்றில் 95 ஆவது பாடலாக இடம்பெறுகின்ற இப்பாடல், தொண்டைமானிடம்
தூதுசென்றபோது அவனது படைக்கலச் சாலையைப்பார்த்து அவ்வையார் கூறியதாகும்.
இவைதான் - இங்கே உள்ள ஆயுதங்கள் எல்லாம் பீலி அணிந்து, மாலை சூட்டி,
நெய்பூசப்பட்டு காவல் நிறைந்த உன்னுடைய அரண்மனையிலே அழகாக இருக்கின்றன.
ஆனால், இருந்தால் உணவுகொடுத்தும், இல்லையென்றால் இருப்பதைப் பகிர்ந்தும்
உண்ணுகின்ற இயல்புடையவனும், ஏழைகளின் தலைவனுமாகிய எங்கள் மன்னன் நெடுமான்
அஞ்சியின் வேல்களோ பகைவர்களைக் குத்தியதனால் நுனி மழுங்கிச் சிதைந்து
கொல்லனின் உலைக்களத்திலேயல்லவா கிடக்கின்றன என்பது இதன் பொருள்.
குறுந்தொகையில் 102 ஆவது பாடலாக
இடம்பெறும் ஒளவையாரின் பாடல் காதல்நோயில் வாடும் பெண்ணொருத்தியின்
மனநிலையை அழகாகச் சித்தரிக்கின்றது.
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் என அளவைத்து அன்றே வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம்மரீஇ யோரே (குறுந்தொகை – 102)
தலைவி, தோழியிடம் தன் காதலனைப்பற்றிக்கூறுகிறாள். தோழி, நம் தலைவரை நாம்
நினைக்கும்போது அவர் நம்மை நினைக்காமல் பிரிந்திருக்கிறாரேயென்று உள்ளம்
துன்பப்படத் தொடங்கும். அதற்காக அவரை நாம் நினைக்காமல் இருப்போமென்றால்
அதுவும் நமது சக்திக்கு உட்பட்டதல்ல. நமது காமநோய் வானமளவு வளர்ந்து
பெருகுகிறது. எம்மைக் காதலித்த தலைவர் இவ்வாறு தீமை செய்கிறாரே அதனால்
அவர் சான்றோர் என்று சொல்லத்தக்கவரேயல்ல.
அதாவது காதலித்த தலைவன் சொன்னசொல்லைப் பேணாதுவிட்டால் தலைவி காமநோயால்
துன்பப்படவேண்டிவருகிறது என்பதை இப்பாடலில் அவ்வையார் அழகாகக்
காட்டியுள்ளார்.
நற்றிணையில் அவ்வையாரின் ஏழு பாடல்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் ஒரு பாடல்:
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக்
கல்தேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப்
பல்பூங் கானலும் அல்கின் றன்றே
இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம்தொழுத ஒழியத்
தேரும் செல்புறம் மறையும் ஊரொடு
யாங்கா குவதுகொல் தானே தேம்பட
ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே (நற்றிணை – 187)
மனமே! நெய்தலில் மலர்கள் குவியத் தொடங்கிவிட்டன. மரங்களின் நிழல்களும்
கிழக்குத் திசையிலே விழத் தொடங்கிவிட்டன. மேற்கு மலையிலே மறைகின்ற
சூரியனும் சிவந்து பூமியில் வெப்பம் தணியத் தொடங்கிவிட்டது. பல்வகைப்
பூங்காவனமும் இருளடைந்து பொலிவு குறைகின்றது. உடலில் மிகுதியாகும்
காமத்தையுடைய நாமும் இவ்விடத்திலேயே கழிக்கின்றோம். மணியொலியெழுப்பும்
குதிரைகள் பூட்டிய அவரது தேர் நமது பார்வையிலிருந்து மறைகின்றது. ஆகையால்,
தேனை ஊதுகின்ற வண்டுகள் ஆரவாரித்தபடியிருக்கும் மாலையையணிந்த
மார்பினையுடைய தலைவளோடு நாம் இனிதாக விளையாடியிருந்த இந்தப் பொழில் நமக்கு
எத்தகைய துன்பத்தைத் தரப்போகின்றதோ?
மாலையாகும்போது தலைவன் இல்லாவிட்டால் அவனோடு இன்பமாய் இருந்த இடம்
துன்பத்தைத் தரப்போகிறதே என்று கவலைப்படும் தலைவியின் கூற்று
இந்தப்பாடலில் சொல்லப்படுகின்றது.
இதைத்தான் திருக்குறளில்,
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும் (1224)
என்று திருவள்ளுவரும் பின்னர் கூறினார்
காதலர் இல்லாதபோது, கொலைக்களத்தில் நம்மைக் கொல்பவர் வருவதுபோல,
மாலைப்பொழுது வருகின்றது என்பது இக்குறளின் கருத்து.
சங்ககாலத்து அவ்வையார் காதலைப் பாடியுள்ளார். காதல் உறவின் இன்பத்தைப்
பாடியுள்ளார். பிரிவின் துன்பத்தைப் பாடியுள்ளார். வீரத்தைப் பாடியுள்ளார்.
வீரத்தால் விளைந்த சோகத்தைப் பாடியுள்ளார். காதலையும், வீரத்தையும்
கருவாக்கிப்பாடிய அவரது அகத்திணைப் பாடல்களும், புறத்திணைப்பாடல்களும்
சங்கத்தமிழுக்குச் சுவைகூட்டி நிற்கின்றன.
அதியமானின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அவனின் பேராற்றலை வியந்து அவர்
பாடியுள்ள புறத்திணைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் புகழ்படைக்கின்றன.
அதியமானை மட்டுமன்றி அவனின் மகன் பொகுட்டெழினி, பாரி, உக்கிரப் பெருவழுதி,
பெருநற்கிள்ளி, சேர்மான் மா வெண்கோ, தொண்டைமான், கிள்ளி வளவன், முடியன்,
கொண்கானத்து நன்னன் ஆகிய மன்னர்களையும் அவ்வையார் பாடியுள்ளார்.
நற்றிணையில் 7 பாடல்களும்,
குறுந்தொகையில் 15 பாடல்களும்,
அகநாநூற்றில் 4 பாடல்களும்,
புறநாநூற்றில் 33 பாடல்களுமாக
அவ்வையாரின் 59 பாடல்கள் சங்க
இலக்கியமான எட்டுத்தொகையில் அடங்குகின்றன.
சொற்சுவையும், பொருட்சுவையும் மிக்க இப் பாடல்கள் சங்கத் தமிழ்
இலக்கியத்திற்குப் பெருமைசேர்ப்பனவாகும். அவ்வையாரின் பாடல்களில்
கருத்துச் செறிவும், கற்பனை வளமும் நிறைந்திருக்கும். கவித்துவச்
சிறப்பிருக்கும். நகைச்சுவை நயம் இருக்கும். அதனால் சங்ககால அவ்வையார்
சங்கத்தமிழ்ப் புலவர்களில் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கின்றார்.
இடைக்கால அவ்வையார்
இதுவரை, காலத்தால் முந்திய சங்ககாலத்து அவ்வையாரின் திறமையையும்
புலமையையும் பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம். இனி, காலத்தால்
இரண்டாவதாகக் கருதப்படுகின்ற அவ்வையாரின் அருமையையும், பெருமையையும்
பற்றிச் சற்று நோக்குவோம்.
இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கவிச்சக்கரவர்த்தி கம்பர்
வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர். எண்ணிக்கையற்ற தமிழ்ப்பாடல்களைப் பாடியவர்.
ஆனால் இப்போது 71 தனிப்பாடல்களும்,
31 அதிகாரங்களைக் கொண்ட 310
குறள்கள் அடங்குகின்ற அவ்வைக்குறளும் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன.
இந்த இடைக்கால அவ்வையாரின் பாடல்கள் பெரும்பாலும் தத்துவக்கருத்துக்களை
சொல்வனவாகவே உள்ளன.
இனியது என்ன, கொடியது என்ன, அரியது என்ன, பெரியது என்ன என்றெல்லாம்
விளக்கும் பாடல்களை இயற்றியவர் இந்த அவ்வையாரேயாவார். அவ்வைப்பாட்டி என்று
அழைக்கப்படுபவர் இவரே.
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக்குணம்
என்பதும் இவரது பாடலாகும்.
வேளமுடைத்து மலைநாடு மேதக்க
சோழவளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர்வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து
என்ற பாடல் மூலம் தமிழ் மக்கள் வாழ்கின்ற நாடுகளின் வளச்சிறப்புக்களை
அழகாகப் பாடியுள்ளார். சேரநாட்டிலே யானைகள் அதிகம். அதனால் பெறுமதிமிக்க
யானைத்தந்தங்கள் மூலம் சேரநாடு செல்வம் கொளித்திருந்தமையைச் சொல்கிறார்.
சோழநாடு செழிப்பானது. நெல்வயல்கள் நிரம்பப் பெற்றது. அதனால் சோழவளநாடு
சோறுடைத்து என்று கூறி அந்நாட்டின் உணவுத் தன்னிறைவை
எடுத்துக்காட்டுகிறார். முத்துக்குளிக்கும் கடல்வளம்பெற்ற பாண்டிநாடு
முத்து வணிகத்தால் செல்வம் மிகுந்த நாடாக இருந்தது. நீர்வளம் மிக்க
தொண்டைநாட்டில்தான் அறிஞர்கள், பெரியோர்கள் அதிகமாக இருந்தனர். அதனால்
சான்றோர் உடைத்து எனப்பாடியுள்ளார்.
அவ்வையார் ஒரு பெண்ணாக இருந்தபோதும் பிரச்சினைக்குரிய ஒரு பெண்ணோடு
வாழ்வதை விடுத்துத் துறவியாகிவிடு என்று ஆண்களுக்கு அறிவுரை
கூறியிருக்கிறார். அந்தப் பாடல் மிகவும் இரசிக்கத் தக்கது.
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.
கணவனுக்கு உகந்த மனைவியாக, கற்புள்ளவளாக இருந்தால் எப்படியென்றாலும்
அவளுடன் வாழலாம். கொஞ்சமாவது அவள் அப்படியிப்படி இருந்தால் கூறாமல்
சந்நியாசம் கொள். கூறாமல் என்பதை, அவளிடம் கூறாமல் என்றும் எடுக்கலாம்.
யாரிடமும் கூறாமல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, பெண் நடத்தைகெட்டால் ஆண்
துறவியாகப் போகவேண்டும் என்று சொல்கின்ற இவர், ஆண் நடத்தை கெட்டால்
பெண்ணுக்கு வழியேதும் சொல்லிவைக்கவில்லை. ஆண்கள் ஏறுமாறாக நடப்பது
அந்தக்காலத்தில் சாதாரணமானது என்பது காரணமாயிருந்திருக்கக் கூடும்.
'கற்றதுகைம் மண்ணளவு கல்லாதது உலகளவு'
'காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்' என்றெல்லாம் தமிழ்
மக்களால் அடிக்கடி எடுத்தாளப்படுகின்ற வரிகள் அவ்வையாரின் பாடல்களிலே
இடம்பெற்றிருப்பவையே.
இடைக்காலத்து அவ்வையாரின் பாடல்களில் பெரும்பாலானவை
தத்துவக்கருத்துக்களையும், மக்களுக்கு அறிவுரை சொல்லும் கருத்துக்களையுமே
கொண்டுள்ளன.
'மதியாதார் முற்றம் மிதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்'
'உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடியுறும்'
'கோடி கொடுத்தும் குடிபிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்
'கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்
என்றெல்லாம் அறிவுறுத்துகின்றார் அவ்வையார்..
மேலும்,
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று
திருக்குறளின் பெருமைபற்றிக் குறள்வடிவில் பாராட்டிய அவர் திருவள்ளுவரின்
திருக்குறளைப் போல, இரண்டுவரிகளும் ஏழுசொற்களுமாக அமைகின்ற குறள்களையும்
எழுதியுள்ளார் 'அவ்வைக்குறள்' என்று அவை அழைக்கப்படுகின்றன. திருக்குறளில்
முப்பால் உள்ளதுபோல, அவ்வைக்குறளிலும் வீட்டு நெறிப்பால், திருவருட்பால்,
தன்பால் என மூன்று பாகங்கள் உள்ளன. முதலிரண்டு பாகங்களிலும் பத்துப் பத்து
அதிகாரங்களும் மூன்றாம் பாகத்தில் பதினொரு அதிகாரங்களுமாக மொத்தம்
முப்பத்தியொரு அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்தில் பத்துக்குறள்கள் என்ற
அடிப்படையில் 310 குறள்கள்
அவ்வைக்குறளில் உள்ளன.
சைவசமயமும், வைணவசமயமும் மக்களிடையே பரப்பப்படுகின்ற பணி நடைபெற்றிருந்த
காலத்தில் இவர் வாழ்ந்ததால் அதே நோக்கத்திற்காகச் சைவசித்தாந்தக்
கருத்துக்களை அவ்வைக்குறளில் பாடியுள்ளார். சித்தர் பாடல்கள் மக்களிடையே
பரவியிருந்ததும் அக்காலத்திலேதான். இறைவனை அடைவதற்குச் சைவசித்தாந்தம்
கூறும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றில்
யோகவழிபற்றி அவ்வைக்குறள் எடுத்துரைக்கின்றது. மனிதன் தன் உடலின்
செயற்பாட்டினால் இறைவனை அடைவதே யோக வழிபாடு.
திருமந்திரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம் என்பவற்றில் மிகுந்த
ஈடுபாடு கொண்டவராக இவர் இருந்திருக்கிறார் என்பதை அவ்வைக் குறளைப்
படிக்கும்போது உணரமுடிகின்றது. அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களும்,
சொல்லமைப்புக்களும் அவ்வையாரால் அவ்வைக்குறளில் பலஇடங்களில்
எடுத்தாளப்பட்டுள்ளன.
அவ்வைக்குறளின் முதலாம் அதிகாரத்தின் மூன்றாவது குறள்,
'ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்
ஆசை படுத்தும் அளறு' என்பதாகும்.
திருக்குறளில்; 27
ஆவது குறள்,
'சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு'. என்பது.
ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசையே உயிர்களைச் சிக்கவைக்கும் நரகம் என்பது
அவ்வைக்குறளின் கருத்து. ஐம்புலன்களின் உண்மைநிலையைச் சரிவர அறிந்தவனுக்கு
உலகமே அடிமையாகிவிடும் என்பது திருக்குறளின் கருத்து. இரண்டும் தருகின்ற
விளக்கம் ஒன்றேயாகும். ஆசைகளை அடக்கியவன் உலகை வெல்வான் ஆசைகளுக்குள்
அடங்கியவன் உழல்வான் என்பதே அது.
'பற்றிலா தொன்றினைப் பற்றினால் அல்லது
கற்றதனால் என்ன பயன்' (214)
என்கிறது அவ்வைக்குறள்.
அதாவது, பற்றுக்கள் இல்லாதஇறைவனின் திருவடிகளைப் பற்றுவதைவிட படித்ததனால்
என்ன பயன் உண்டு? எதுவுமே இல்லை என்பது கருத்து.
இதே கருத்தைத்தான், வள்ளுவர்,
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் என்று தனது இரண்டாவது குறளிலேயே கூறியுள்ளார்.
'அல்லல் பிறப்பை அகற்றுவிக்கு ஆய்ந்தாய
தொல்லை உடம்பின் தொடர்பு' என்பது அவ்வைக்குறள் (25)
'அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று..' என்பது மணிவாசகரின் சிவபுராணத்தின்
வரி.
'ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தால்
அன்பதில் ஒன்றாம் அரன்' என்பது அவ்வைக்குறள். (30)
'ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' என்பது அப்பர் தேவாரம்.
'பாலின்கண் நெய்போல் பரந்தெங்கு நிற்குமே
நூலின்கண் ஈசன் நுழைந்து' என்கிறது அவ்வைக்குறள் (142)
'விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்'
என்கிறது அப்பர்சுவாமிகளின் தேவாரம்.
'விண்நிறைந்து நின்று விளங்கும் சுடரொளிபொல்
உள்நிறைந்து நிற்கும் சிவம்' என்பது அவ்வைக்குறள். (192)
'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்'
என்பதும்,
'உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற'
என்பதும் மணிவாசகரின் சிவபுராண வரிகள்.
இவ்வாறு திருக்குறள், திருமுறைகள் என்பவற்றின் வரிகளும் கருத்துக்களும்
அவ்வையாரால் எடுத்தாளப்பட்டமைக்குக் காரணம் அவற்றில் அவருக்கிருந்த
அறிவும், பற்றுதலும், பரிச்சயமுமேயாகும். மேலும் சித்தர் பாடல்கள் கூறும்
தத்துவங்களும் அவ்வைக்குறளில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன. அவ்வையார் சைவ
சமயத்தவர். சிவநெறியைக் கடைப்பிடித்தவர். சிவபெருமானையே முழுமுதற்
கடவுளாக ஏற்றுக்கொண்டவர். சிவனடிகளைச் சேர்ந்தாலே பிறவிப் பெருங்கடலை
நீந்த முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.
பத்துத் திசையும் பரந்த கடல்உலகும்
ஓத்து எங்கும் நிற்கும் சிவம் (191)
ஓன்றேதான் ஊழி முதலாகிப் பல் உயிர்க்கும்
(196)
ஓன்றாகி நிற்கும் சிவம்
என்றெல்லாம் சிவனைப்பற்றிக் குறள் வடித்துள்ள அவ்வையார் சதாசிவம் என்ற
தலைப்பிலே பத்துக்குறள்கொண்ட தனியொரு அதிகாரத்தையே பாடிவைத்துள்ளார்.
அறம், பொருள், இன்பம் மூன்றையும்பற்றி வள்ளுவப் பொருந்தகை திருக்குறளில்
உலகுக்குப் பொது நெறி வகுத்தளித்தார். நான்காவதான வீடு பற்றி அதாவது,
வீடுபேறடைந்து இறையடி சேர்வதுபற்றி அவ்வையார் அவ்வைக்குறளில்
அறநெறியுணர்த்தியுள்ளார்.
அவ்வைக் குறளிலே,
பிறப்பின் நோக்கம் பற்றி அறிவுறுத்தப்படுகிறது.
உடலின் நிலையாமை பற்றி உணர்த்தப்படுகின்றது.
உயிரின் இயலாமை பற்றி உணர்த்தப்படுகிறது.
உடலால் செய்யக்குடிய பயிற்சிகள் பற்றி விளக்கப்படுகிறது.
அப்பயிற்சிகள் மூலம் இறைவனை அடையும் வழிமுறை சொல்லப்படுகிறது.
ஆதியும் அந்தமும் அற்ற சோதியே இறைவன் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
அந்த இறைவனே சிவன் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சைவ சித்தந்தக் நெறிமுறையில், உயிர், உடல், உலகம், வீடுபேறு, இறைவன்
என்பனபற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்களை அவ்வைக்குறள் அழகாகவும்
தெளிவாகவும் உணர்த்துகின்றது.
எனவே இடைக்கால அவ்வையார் படைத்த இலக்கியங்கள் பெரும்பாலும் தத்துவக்
கருத்துக்களைப் பரப்புகின்ற வகையிலேயே அமைந்துள்ளன என்று கூறலாம்.
காலத்தின் தேவை அதுவாக இருந்தமை அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று
நாம் ஊகிக்கலாம்.
பிற்காலத்து அவ்வையார்
பிற்காலத்து அவ்வையார் என்று சொல்லப்படுபவர் பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். அவர் நறுந்தொகை எனப்படும் வெற்றிவேற்கை நூலை ஆக்கிய
அதிவீரராம பாண்டியர்காலத்தைச் சேர்ந்தவர். இவ்வுலகில் மக்கள் எல்லோரும்
செம்மையாக வாழ்வதற்கு வழிகாட்டும் நீதிக்கருத்துக்களைப் போதிக்கும்
நூல்களை இயற்றியவர்.
அவர் பாடிய நூல்கள் விநாயகர் அகவல், ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை,
நல்வழி என்ற ஐந்துமாகும்.
அவர் விநாயகக் கடவுளையே தனது தெய்வமாக வழிபடுபவராயிருந்திருக்கிறார்
என்பதை அவரது நூல்களின் மூலம் அறியமுடிகிறது. சிவபெருமானின் மைந்தன்
விநாயகர் என்ற புராணக் கொள்கை அவருடையகாலத்தில் நன்கு வேரூன்றியிருக்கிறது
என்பதற்கு விநாயகர் அகவல் என்ற தனிநூலை அவர் எழுதியிருப்பதுவும், அவரது
மற்றைய நான்குநூல்களுக்கும் கடவுள்வாழ்த்தாக விநாயகரையே பணிந்து
பாடியிருப்பதுவும் சான்றாக அமைகின்றன.
'சீதகளப்பச் செந்தாமரைப்பூம்' என்று தொடங்கி,
'வித்தக விநாயக விரைகழல் சரணே' என்று நிறைவடையும் விநாயகர் அகவல்
எழுபத்தியிரண்டு வரிகளைக் கொண்டது. வடநாட்டு ஆரியர்களால் தமிழ் மக்களிடையே
புகுத்தப்பட்டது விநாயக வழிபாடு. பக்தி இலக்கியங்களி;ல் நாயன்மார்களாலும்,
ஆள்வார்களாலும் சிவனும், முருகனும், திருமாலுமே பாடப்பட்டார்கள். அதனால்
தமிழ் மக்கள் காலத்தால் பிந்திய விநாயக வழிபாட்டுக்கு அவ்வையாரின்
விநாயகர் அகவலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
ஆத்திசூடியின் கடவுள்வாழ்த்தில் அவ்வையார்,
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
என்று பாடியுள்ளார். அத்திப்பூமாலையை அணிந்திருக்கும் சிவபெருமானின்
அன்பிற்குரியவனாக விளங்கும் விநாயகரை நாம் எப்பொழுதும் துதித்து
வணங்குவோம் என்பது அதன் கருத்து.
கொன்றைவேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
என்பது கொன்றைவேந்தன் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்.
கொன்றைப்பூ மாலையைச் சூடியிருக்கும் சிவபெருமானின் செல்லப்பிள்ளையான
விநாயகரை நாம் எப்பொழுதும் போற்றி வணங்குவோம் என்பது அதன் பொருள்.
மூதுரை என்னும் அவ்வையாரின் நூல் வாக்குண்டாம் என்ற பெயராலும்
அழைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதன் கடவுள் வாழ்த்து வாக்குண்டாம்
என்று தொடங்குவதால் ஆகும்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இதிலும் விநாயகக் கடவுளை வாழ்த்தியே நூலைத் தொடங்குகின்றார்.
நல்வழி அவரது இன்னும் ஒரு நூல். பிள்ளையாரை வணங்கும் தமிழர்கள் எல்லோரும்
வழக்கமாகப் பாடுகின்ற பாடலே நல்வழியின் கடவுள் வாழ்த்தாக அவ்வையாரால்
பாடப்பட்ட 'பாலுந்தெளிதேனும்' என்பதாகும்.
பாலுந்தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா.
அவ்வையாரின் ஆத்திசூடி இவ்வுலகில் மக்கள் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும்,
சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான அறிவுரைகளைக் கூறுகின்றது. இதனை
இதனைச் செய் என்றும் இதனை இதனைச் செய்யாதே என்றும் கட்டளையிடுவதுபோல
அமைந்த கருத்துக் குவியலாக ஆத்திசூடி திகழ்கிறது. இரண்டு அல்லது மூன்று
சொற்களைக் கொண்ட 108 சொற்றொடர்களே
இந்த நூல்
அறம் செயவிரும்பு என்பது முதலாவது சொற்றெடர்.
மேலும் அவ்வையாரின் இந்த ஆத்திசூடியிலுள்ள பலசொற்றொடர்களை அன்றாட வாழ்வில்
பழமொழிபோல நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
சனி நீராடு, பருவத்தே பயிர் செய், இளமையில் கல்,
செய்வன திருந்தச் செய், உத்தமனாய் இரு, ஊருடன் கூடிவாழ்
என்பன அவற்றிற் சிலவாகும். ஆத்திசூடியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள்
எளிமையான சொல்களால் ஆனவை. பொதுவாக எல்லோருக்கும் பயனுள்ளவை.
அவ்வையாரின் கொன்றை வேந்தனும் மக்களுக்கு அறிவுரை சொல்லும் நூலே என்றாலும்
எதையெதைச்செய் என்றோ அல்லது எதையெதைச்செய்யாதே என்றோ ஆத்திசூடியைப்போலக்
கட்டளையிடும் அறிவுரைகள் சில சொற்றொடர்களில் மட்டுமே காணப்படுகின்றன.
பெரும்பாலானவை நல்லது எது அல்லது எது என்று அறிவுரைகூறும் வகையில்
அமைந்துள்ளன. கொன்றைவேந்தனின் சொற்றெடர்கள் ஒவ்வொன்றும் நான்கு சொற்களால்
ஆனவை எல்லாமே எதுகைச் சிறப்போடு ஓசைநயத்துடன் அமைந்தவை.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது கொன்றைவேந்தனின் முதலாவது
சொற்றொடர்.
மேலும்,
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை
கிட்டாதாயின் வெட்டென மற
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சூதும்வாதம் வேதனை செய்யும்
தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
என்பவையெல்லாம் தமிழ் மக்களால் அன்றாடம் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும்
கொன்றைவேந்தன் வரிகளாகும். அந்த அளவிற்கு அவ்வையாரின் கொன்றைவேந்தன்
மக்கள் வாழ்வில் கலந்து மக்களை நெறிப்படுத்திக்கொண்டிருக்கின்றது என்றால்
அது மிகையில்லை.
தமிழ்மொழியின் சொல்லழகைச் சுவைபடக்கூறிநிற்கும் கொன்றைவேந்தனின்
ஒவ்வொருவரியும் மனிதனைச் சீரான வாழ்வில் நெறிப்படுத்தும் தகைமைவாய்ந்தது.
உள்ளத்தைப் பேணவும், உடலைப்பேணவும், ஒழுக்கத்தைப்பேணவும் உயர்ந்த வாழ்க்கை
வாழவும் வையத்து மாந்தருக்கு வழிகாட்டும் அவ்வையாரின் கொன்றை வேந்தன்
தமிழ்மொழியிலுள்ள அரிய சொத்துக்களில் ஒன்றாகும்.
அவ்வையாரின் மற்றொரு நூல் மூதுரை. இது வெண்பாவடிவில் அமைந்த முப்பது
செய்யுட்களால் ஆனது. சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பிய செய்யுட்கள்
சமுதாயத்தில் சிறந்து வாழ்வதற்கு மனிதனுக்கு நல்லறிவு புகட்டுகின்றன.
முப்பது பாடல்களுமே முத்தானவை. அவற்றில் மக்களால் அதிகமாகப்
பயன்படுத்தப்படும் சிலவற்றையும், அவை தரும் பொருள்களையும் நோக்குவோம்.
நன்றி ஒருவற்குச் செய்தற்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தான்உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
நாம் ஒருவருக்கு நல்லது செய்யும்போது அது எப்போது நமக்குத் திருப்பிக்
கிடைக்கப்பெறும் என்று எண்ணிப்பார்க்கக் கூடாது. வேரிலே நாம் ஊற்றிய
நீரைத் தென்னைமரம் வளர்ந்ததும் இளநீராய்த் தருவதைப்போல, நாம் ஒருவருக்கு
நன்மை செய்தால் நிச்சயம் நமக்கு நன்மையே விளையும். என்பது இதன்
கருத்தாகும்.
மற்றவர்க்குச் செய்யும் நன்மை எப்படியும் நமக்குக் கிடைத்தே தீரும் என்பதை
அறிவுறுத்தி, உலகத்தில் மனிதர்கள் எல்லோரும் மற்றவர்களுக்கு நன்மைசெய்து
வாழ்வதனை அவ்வையார் இச்செய்யுள் மூலம் ஊக்குவிக்கின்றார்.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லாக்கும் பெய்யும் மழை.
உழவர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது அங்கேயுள்ள நெற்பயிர் விளைவதற்காகவே.
ஆனால் அவ்வாறு பாய்ச்சப்பட்ட நீர் வாய்க்கால் வழியே செல்லும்போது மண்ணிலே
கசிவடைந்து பக்கத்திலேயுள்ள பயனற்ற புல்லுக்கும் கிடைக்கப்பெறுகிறது.
அதேபோலத்தான் இந்த உலகத்திலே நல்லவர்ஒருவர் இருப்பாரென்றால் அவருக்காகவே
பெய்கின்ற மழை எல்லோருக்கும் பயனைத் தரும் என்பது இதன் கருத்து. உலகத்தில்
நல்லவலர்கள் நிறைந்திருந்தால் நன்கு மழைபெய்யும், உலகம் வளம் பெறும்
என்பதையே அவ்வையார் இந்தப் பாடலில் சொல்கின்றார். எல்லோரும் நல்லவர்களாக
இருக்கவேண்டும் என்பதையே இதன்மூலம் உலகிற்கு அறிவுறுத்த விரும்புகின்றார்.
மடல்பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்.
தாழம்பூவின் இதழ் மிகவும் பெரியது. மகிழம்பூவின் இதழ் அந்த அளவுக்குப்
பெரியதல்ல. ஆனால் வாசனையில் மகிழம்பூ தாழம்பூவைவிட சிறந்தது. கடல் எவ்வளவோ
பெரியது. அழுக்கை நீக்குவதற்குக்கூடக் கடல் நீர் உபயோகப்படாது. ஆனால்
அந்தக் கடற்கரையிலே இருக்கக்கூடிய ஒரு சிறிய நீர்ஊற்று குடிப்பதற்கான
நீராகவும் பயன்படும். இவற்றைப் போலவே ஒருவரது உருவத்தைக் கொண்டு சிறியவர்
என்று யாரையும் மதிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பது இதன் கருத்து. கடுகு
சிறிது காரம் பெரிது என்பது போலச் சிறியவராகவோ, ஒல்லியவராகவோ, அல்லது உடல்
வலிமையற்றவராகவோ இருப்பவர்களிடம் மதித்துப் போற்றக்கூடிய அரிய விடயங்கள்
நிறைந்திருக்கலாம். வெளித் தோற்றத்தைக்கொண்டு யாரையும் எடைபோடவேண்டாம்
என்பதே அவ்வையார் இதன்மூலம் அனைவருக்கும் கூறுகின்ற அறிவுரையாகும்.
கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
அழகிய வண்ணத் தோகையை விரித்து மயில் ஆடுகிறது. அதைக் கண்ட வான்கோழியும்
தன்னையும் மயிலாக நினைத்துக்கொண்டு தனது அழகற்ற சிறகை விரித்து ஆடினால்
அழகாக இருக்குமா? வான்கோழி மயிலாக முடியுமா? அதைப்போலவே முறையான
படிப்பறிவில்லாமல், அரைகுறையாக சிலவிடயங்களை மட்டும் அறிந்து கொண்டு;
பேசுகின்றவனுடைய பேச்சு இருக்கும், என்பது கருத்து. எதையும் நன்கு
கற்றறிந்தவர்கள் பேசுகின்ற பேச்சுக்கும், சரியான கல்வியறிவற்றவன்
பேசுகின்ற பேச்சுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கும் என்பதை
அறிவுறுத்துவதன் மூலம் அனைவரும் முறையான கல்வி பெறவேண்டும் என்பதை
வலியுறுத்துகின்ற அவ்வையாரின் நோக்கத்தை இப்பாடல் உணர்த்துகின்றது.
கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர் அவ்வையார். கற்றோரே
உயர்ந்தவர் என்ற கருத்தை மக்களிடம் விதைத்து, கல்வியில் அனைவரையும்
விருப்புடன் ஈடுபடுத்தும் வகையில் அமைந்த மற்றொரு செய்யுள்,
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
என்பதாகும். ஒரு நாட்டின் மன்னன், நன்றாகக் கற்றறிந்த கல்விமான் ஆகிய
இருவரில் உயர்ந்தவர் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் கல்விமானே
சிறந்தவனாவான். ஏனென்றால், மன்னனுக்கு அவனுடைய நாட்டில் மட்டுமே மதிப்பும்
மரியாதையும் கிடைக்கும். ஆனால் கற்றறிந்தவனுக்கோ அவன் எங்கு சென்றாலும்
அவையெல்லாம் கிடைக்கும். ஒரு தேசத்தின் அரசன் ஏனைய தேசங்களில்
எதிரியாகலாம், கைதியாகலாம், அடிமையாகலாம். ஆனால் கற்றவனை எந்தத்
தேசத்திலும் கௌரவிப்பார்கள். இவ்வாறு கற்றவரின் சிறப்பைப் பாடியதன் மூலம்
அவ்வையார் கல்வியின் சிறப்பை மக்களுக்கு வலியுறுத்திக்கூறியுள்ளார்.
அவ்வையார் இயற்றிய மற்றும் ஒரு நூல் நல்வழி. மக்கள் நிம்மதியாக
வாழ்வதற்கான நல்ல வழிகளைக் கூறுகின்ற இந்நூல் கடவுள் வாழ்த்தையும்
சேர்த்து 41 வெண்பாக்களைக் கொண்டது.
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்கு பரிச்சயமான 'பாலுந் தெளிதேனும்' என்று
தொடங்கும் பாடலைக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டது நல்வழி என்பதை முன்னர்
குறிப்பிட்டோம். நல்வழியில் உள்ள நாற்பது வெண்பாக்களுமே நயத்தக்க
கருத்துக்களைச் சுவைபடக்கூறுகின்றன. அவற்றில் அதிகமாக மக்களிடையே
எடுத்தாளப்படும் பாடல்களில் ஆறினை மட்டும் இங்கே நோக்குவோம்.
சாதி இரண்டெழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
இரண்டேயிரண்டு சாதிகளைத்தவிர உலகில் வேறு சாதிப்பிரிவுகளே இல்லை. அவை
எவையென்று சொன்னால், நீதி தவறாத நெறியிலே முறையோடு நின்று, பிறருக்கு
உதவிசெய்பவர்கள் உயர்ந்த சாதியினர். அவ்வாறு உதவிசெய்யாதவர்கள் தாழ்ந்த
சாதியினர் என்று அவ்வையார் தீர்க்கமாக எடுத்துரைக்கின்றார். மனிதராகப்
பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தலாகிய உயர்ந்த பண்புகொண்டு
வாழவேன்டும் என்பதோடு, அவ்வாறு உதவிசெய்பவர்கள் நீதி தவறாதவர்களாகவும்,
நெறிமுறைகளுக்கு அமைந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்று வரையறுத்துக்
கூறுவதிலிருந்து தீயவழியில் சேர்த்த பொருளைக்கொண்டு உதவிசெய்யக்கூடாது
என்பதையும், தீய செயலுக்கு உதவிசெய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகின்றார்.
இறப்பு எல்லோருக்கும் நிச்சயமானது. இறந்தவர்களை நினைத்து அழுவது பயனற்றது.
வருடக்கணக்காக அழுதாலும் .இறந்தவர்கள் எழுந்து வருவார்களா? இல்லையே. எனவே,
'அவ்வாறு நாமும் இறக்கும் நாள் வருகின்ற வரையில், நமக்கு என்ன இருக்கிறது'
என்று எண்ணிக்கொண்டு, உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கும் வழங்கி,
நீங்களும் வயிறார உண்டு வாழ்ந்திருங்கள் என்று உலகமக்களை விழித்துக்
கூறுகின்ற அவ்வையாரின் மற்றொரு பாடல் உலக நிலையாமையை உணர்த்தி, மக்களை
நல்லது செய்யத் தூண்டுகின்றது.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டாம்
'நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்' என்று இட்டுண் டிரும்.
சேர்த்த பொருளை மற்றவர்க்கும் கொடுத்து, தாமும் அனுபவித்து
வாழவேண்டுமேயன்றி, மறைத்துவைப்பது மடத்தனமானது என்றுணர்த்தும் இன்னுமொரு
பாடலும் மக்களை இம்மையில் செம்மையாகவும், பிறர்க்கு நன்மையாகவும்
வாழத்தூண்டுவதாகவே அமைந்தள்ளது.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
பசிவந்தால் பத்தும் பறந்துபோகும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அவ்வாறு
சொன்னவரே அவ்வையார்தான். அந்தப் பத்தும் என்னென்னவென்று அழகாகச்
சொல்கின்ற பாடலும் நல்வழியில் இடம்பெற்றிருப்பதுதான்.
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
மனிதனுக்குத் தனது மானம், அவரின் குலம், அவர்கற்ற கல்வி, அவரின்
ஈகைக்குணம், அவரின் அறிவு, அவர் செய்த தானம், அவரின் தவம், அவரின் உயர்வு,
அவர்கொண்ட தொழில் முயற்சி, பெண்களில் விரும்புதல் ஆகிய பத்து விடயங்களும்
தவிர்க்கமுடியாதவை. ஆனால் ஒருவருக்கப் பசியெடுத்தால் இந்தப் பத்தும்
பறந்துபோய்விடும். அதாவது பசிவந்தவருக்கு இவை எல்லாவற்றையும்விட உணவே
இன்றியமையாததாகிவிடும். பசியாறும்வரை இவை முக்கியமற்றவையாகிவிடும் என்று
அவ்வையார் சொல்கின்றார். யாரும் பட்டினிகிடத்தல் கூடாது அவ்வாறு கிடக்க
நேரிட்டால் மேற்சொன்ன பத்தையும் அவர் மறக்க நேரிடும் அதனால் அவர்
இழுக்கடையவேண்டி ஏற்படலாம். எனவே யாரும் பசியோடு இருக்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாயத்திற்கு அவர் இதன்மூலம்
அறிவூட்டுகின்றார் என்று கொள்ளலாம்.
தனது நூல்கள் எல்லாவற்றிலும் கடவுள் வாழ்த்தாக விநாயகரைப் பாடியிருக்கும்
அவ்வையார் சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் சிவனே என்ற சைவசித்தாந்தக்
கருத்திலே நன்கு ஊறியவராகவே இருந்திருக்கின்றார். அதனால்தான்,
சிவாய நமஎன்று சிந்தித்து இருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாதஎல்லாம்
விதியே மதியாய் விடும்.
என்று நல்வழியிலே, சிவநெறியைப் பரப்புகின்றார். சிவாயநமவென்று
சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்கின்ற அவ்வையார்
தொடர்ந்த பாடிய வரிகள், உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே
மதியாய் விடும் என்பனவாகும். அதாவது சிவாய நமவென்று சிந்தித்திருந்தால்
விதியாக எழுதப்பட்ட விபரீதங்கள்கூட வெல்லப்படும், விலக்கப்படும். அந்த
விதியினை வெல்வதற்கான மதிதான் சிவாயநமவென்று சிந்திப்பது. அவ்வாறு
மதியினால் நாம் விதியினை வெல்வதற்கு முயலவில்லையென்றால் விதியே நமக்கு
மதியாகவும் இருந்து நம்மை வீழ்த்திவிடும் என்று ஆணித்தரமாக
அறிவுறுத்துகின்றார் அறநெறியுணர்ந்த அவ்வையார்.
நல்வழியில் அவ்வையார் நவின்றுள்ள நாற்பதாவது பாடல், பண்டைத்தமிழ்
நூல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், சைவசித்தாந்தக் கோட்பாடுகளிலும்
அவருக்கிருந்த பரிச்சியத்தை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
முவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர்.
என்பதே நல்வழியில் நாற்பதாவதாக இடம் பெறும் இறுதிப்பாடல். தேவர் குறள்
என்பது திருக்குறள். திருநான் மறைமுடிவு என்பது உபநிடதங்கள். மூவர் தமிழ்
என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரங்கள், முனி
என்பது மணிவாசகரைக் குறிக்கிறது. அவர் இயற்றிய திருவாசகம் மற்றும்
திருக்கோவையார், திருமூலர் சொல்லும் என்பது திருமந்திரம்; ஆகிய இத்தனையும்
ஒரு பொருளையே சொல்லிநிற்கின்றன என்கிறார் அவ்வையார்.
இவ்வாறு காலத்தை வென்று நிற்கின்ற அறிவூட்டும் கருத்துக்கள் பொதிந்த ஐந்து
நூல்களை ஆக்கி உலகுக்கு அளித்தவர் காலத்தால் பிந்திய 16
ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையார்.
அவ்வையார் மூவராயிருந்தாலும் அவ்வையார் என்ற பெயர் கொண்ட புலவரால்
ஆக்கப்பட்டதாக நமக்கு இன்று கிடைக்கப்பெறும் அத்தனை இலக்கியங்களும்
படிக்கச் சுவைகொடுப்பதோடு மட்டுமன்றி, மக்களை நல்வாழ்வுக்கு
இட்டுச்செல்லும் உயர்ந்த படிப்பினைகள் நிறைந்த அறிவுக்களஞ்சியங்களாகவும்
உள்ளன.
srisuppiah@hotmail.com
|