சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 27
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
நோயை
அறியாத தாய்!
அவள் ஓர் அழகிய இளம் பெண். அவளது ஊருக்குப் பக்கத்தே இருக்கும் பசுமை
நிறைந்த மலைநாட்டுக்குரியவனான ஒருத்தன்மேல் அவள் காதல் கொண்டாள். இருவர்
மனமும் கலந்தது. இடைவிடாமல் காதல் வளர்ந்தது. ஊரிலே சிலருக்கு
இதுபற்றித் தெரிய வந்தது. அதனால் வதந்தியாகப் பரவிக்கொண்டது. அவளது
தாய்க்கும் ஊரவரின் அலருரை(வதந்தி பேச்சு) எட்டியது. அதனால் மகளுக்குக்
கட்டுக்காவல் போட்டு வீட்டிலே சிறைவைத்தாள்.
எத்தனை நாட்கள்தான் காதலனைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியும்.
அவளால் ஒழுங்காக உண்ண முடியவில்லை. சரியாக உறங்க முடியவில்லை. அவளுக்கு
யாரோடும் பேசப் பிடிக்கவில்லை. நாட்கள் நகர நகர அவளது உடல்
மெலிந்துகொண்டு வந்தது. கண்கள் எந்நேரமும் கலங்கியபடியே இருந்தன. முகம்
காய்ந்துபோனது. உதடுகள் வெளுத்துப் போயின. இவற்றையெல்லாம் கண்ணுற்ற
அவளின் தாய் காரணம் எதுவெனத் தெரியாமல் கவலைப் படுகிறாள். தெய்வக்
குற்றமோ என்று சந்தேகிக்கின்றாள். மகளின் நோய்க்கான காரணத்தை அறியவும்,
வைத்தியம் செய்யவும் அவள் அந்த ஊரிலே உள்ள வேலன் என்னும் ஒரு வெறியாடியை
நாடுகிறாள்.
அது குறிஞ்சி நிலம் என்பதால் பூசாரிகள் முருகக் கடவுளை வழிபட்டு, தங்கள்
மேல் முருகன் வந்துவிட்டதாகக் கற்பித்து வெறியாடல் நிகழ்த்தி முருகக்
கடவுளின் அருள் வாக்கினைத் தங்கள் வாயால் சொல்லுவதாக சொல்வார்கள்.
மக்கள் தங்கள் பிரச்சினைகளை வெறியாட்டில் உள்ளவரிடம் கூறிப் பரிகாரம்
கேட்பார்கள். அவரும் சொல்வார். அவர் சொல்வதையெல்லாம் கடவுள் சொல்வதாக
மக்கள் நம்பினார்கள்.
அத்தகையதொரு வெறியாட்டை நடாத்தவே இப்போது தலைவியின் தாய் வேலனை
நாடுகின்றாள். இதையறிந்த தலைவியின் தோழி கவலைப்படுகிறாள். வேலன் வந்து
வெறியாட்டு நிகழ்த்தினால், தலைவியின் குட்டு வெளிப்பட்டவிடுமே என்று
கலங்கினாள். இதுவரை ஊரவரின் வெறும் வதந்தி என்ற அளவிலேயே
எண்ணியிருக்கும் தாய்க்கு உண்மை தெரிந்துவிடுமே என்று பயந்தாள்.
தலைவியின் நோய்க்கக் காரணம் காதலனைச் சந்திக்க முடியாமல் இருப்பதுதான்
என்று வேலன் வெறியாடிச் சொல்லிவிட்டானென்றால் விபரீதமாகிவிடுமே என்ற
அவள் பதறினாள். அதனால் தனது கவலையை அவள் தலையியிடம் கூறுகிறாள்.
இந்தக்காட்சியை வெளிப்படுத்தும் பாடல்:
நாமுறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தா ளாயினவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறியெயிற் றோயே!
(ஐங்குறுநுர்று. குறிஞ்சித்திணை. பாடியவர்: கபிலர். பாடல் இல: 241)
இதன் கருத்து:
செறிவான பற்களைக் கொண்டவளே! நாம் படுகின்ற துன்பத்தை அறிந்துகொண்ட நமது
தாய், அதற்கான காரணத்தை அறிய வெறியாடும் வேலனை அழைதால் அவன் மணம்கமழும்
மலைகளைக்கொண்ட நாட்டினனான நம் காதலனோடு நாம் கொண்டுள்ள காதல்
உறவுபற்றியும் சொல்லிவிடுவானோ? (என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)
வெறியாடல்மூலம் தலைவியின் காதல் விவகாரம் வெளிப்படுவதைவிட நாமாகவே
எப்படியாவது நயமாகச் சொல்லிவிடுதல் நல்லது என்று நினைக்கிறாள் தோழி.
அதனால் வெறியாட்டு நிகழ்த்துவதைத் தவிர்க்கக்கூடியவிதமாக அவள் தலைவியின்
தாயிடம் பேசிப் பார்க்கின்;றாள். 'உனது மகளின் நோய்க்குக் காரணம்
என்னவென்று அறிய நீ வெறியாடும் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த
எண்ணுகிறாய். வேலனோ ஒன்றுமே அறியாதவன். அவன் ஓர் அறிவிலி. முருகக்
கடவுளை வணங்கிவிட்டு வெறியாடுவதால், அவன் சொல்வதெல்லாம் உண்மையென்று
நீயும் வீணாக நம்பிக்கொள்வாய். ஆனால் அவன் சொல்வதெல்லாம் உண்மையல்ல.
நம்பக்கூடியவையல்ல' என்று தாயின் மனதில் வெறியாடலின் உண்மைத் தன்மைபற்றி
அவநம்பிக்கையை விதைக்க முயல்கிறாள். வேலனை அழைப்பதைத் தடுக்கவேண்டும்,
அல்லது தப்பித்தவறி அவனை அழைத்து வந்து, அவன் வெறியாடும்போது தலைவியின்
காதல் விவகாரம்பற்றி உளறிவிட்டாலும் அது முற்றுமுழுதாக நம்பக்கூடிய
வார்த்தையல்ல என்ற ஒரு கருத்தை இப்போதே தாயின் மனதில்
பதியவைத்துவிடவேண்டும் என்பதே தோழியின் நோக்கமாக இருக்கிறது. இதனை
வெளிப்படுத்தும் பாடல் வருமாறு:
கறிவளர் சிலம்பிற் கடவுள் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை, அனை! இவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நொய்க்கே!
(பாடல் இல: 243)
இதன் கருத்து:
அன்னையே! புதிதாகப் பூத்த மலர்போன்ற உனது மகளின் கரிய கண்கள்
கலங்கியழுகின்ற அந்த நோய்க்கான காரணம் வெறியாட்டுக் குற்றம்தான் என்று
ஒன்றுமேயறியாது வெறியாடும் வேலன், மிளகுக்கொடி வளருகின்ற மலையிலே
உறைகின்ற கடவுளாகிய முருகனை வணங்கி சொல்லுவதையே நீயும் உண்மையென
நம்பிக்கொள்வாய். (ஆனால் காரணம் அதுவல்ல. அவள் காதலில் வீழ்ந்திருப்பதே
காரணம்) – என்று தோழி தலைவியின் தாயிடம் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.
மெல்லமெல்ல விடயத்தைத் தலைவியின் தாயிடம் சொல்லிவிடவேண்டும் என்று தோழி
முயல்கின்றாள். அதனால் தலைவியின் வளர்ப்புத் தாயின் காதுகளில் முதலில்
விடயத்தைப் போட்டுவைக்க முயல்கிறாள். 'நமது தலைவனின் நாடு பலவகை
நமலர்கள் பூத்துக்கலங்கி நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் சோலைகளைக்
கொண்டது. குளிர்ச்சியான பசிய சோலைகள் நிறைந்த குன்றுகளைக் கொண்டது.
வெறியாட்டு நிகழ்த்தவரும் வேலன் பாடும்போது என்ன பாடுவான்? முருகக்
கடவுளைப் பற்றி மட்டுமா பாடுவான்? அவன் உறைந்திருக்கும் அந்தக்
குன்றுகளைப்பற்றிப் பாடாமல் விடுவானா? பாடாது விட்டால் அவனது
வெறியாடலுக்கே பயன் இல்லாமல் போய்விடுமே. அதனால் கட்டாயம் அந்தக்
குன்றுகளைப்பற்றிப் பாடுவான். அந்தக் குன்றுகளோ நமது தலைவனுக்குரியவை.
தலைவனைக் காணமுடியாமல் தடை ஏற்பட்டுவிட்டாலும் அவனது ஊரைப்பற்றியும்,
அவனுடைய அந்த மலைகளைப் பற்றியும் வேலன் பாடுவதையாவது கேட்டு
இன்புறலாமல்லவா?' என்று தலைவியிடம் கூறுகின்றாள். அது அருகிலேயிருக்கும்
வளர்ப்புத் தாய்க்குக் கேட்கிறது. கேட்கவேண்டும் என்பதுதானே அவளது
நோக்கம். இனி செவிலித்தாய் மூலம் மெல்ல மெல்ல விடயம் தாயின் காதுகளில்
சென்று சேரும். தலைவியின் காதலும் நிறைவேறும் என்று தோழி நம்புகிறாள்.
இத்தகைய காட்சியை அடுத்த பாடல் தருகின்றது.
அம்ம வாழி தோழி! பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயம் செய்யுமோ வேலற்கவ் வெறியே!
(பாடல் இல: 244)
இதன் கருத்து:
அடி தோழியே நீ வாழ்க! பலவகை மலர்களின் நறுமணம் வீசுகின்ற குளிர்ச்சியான
பசுஞ்சோலைகளையுடைய நாட்டையுடையவன் நம் தலைவன். நீண்ட
புகழைக்கொண்டவனாகிய அவனது குன்றை வாழ்த்திப் பாடாது விட்டானென்றால்
வேலனுக்க அவன் ஆடுகின்ற வெறியாட்டு வேறு என்ன பயனைத்தான் கொடுக்குமோ? (என்று
தொழி தலைவியிடம் அவளின் செவிலித் தாய்க்கும் கேட்கக்கூடியதாகச்
சொல்கிறாள்)
(காட்சிகள் தொடரும்....................................)
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|