ஆசிரிய மாணவ உறவின் புனிதத்தன்மை

திருமதி செல்லையா யோகரத்தினம் MA

மாணவன் எல்லாம் நல்லவனே பள்ளியில் சேர்கையிலே
அவன் அல்லவனாவதும் வல்லவனாவதும் ஆசிரியன் வல்லமையே!

சிரியர் மாணவர் உறவு என்பது தாய் மகன் உறவு போன்றது. ஒரு தாய் எப்படித் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாளோ அதே போன்றதொரு அக்கறையையும் ஆர்வத்தையும் ஆசிரியர் செலுத்தும் போதுதான் ஆசிரியர் மாணவர் உறவு வலுப்பெறுகிறது.

ஆசிரியர் மாணவனைப் புரிந்து, மாணவன் ஆசிரியரைப் புரிந்து இருவரிடையே அன்பெனும் பாலம் அமைந்து இருவருக்குமிடையில் நல்லுறவு மலர்ந்து
(Rapport) நல்லதோர் எதிர்காலம் பிறக்கும். ஆசிரியத்துவம் புனிதமானது. தனது மாணவன் தன்னை விட உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்ற உன்னத மன நிலை பெற்றோரைத் தவிர ஒரு ஆசிரியனிடம் மட்டும் தான் இருக்க முடியும் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. மறக்கவும் கூடாது.

ஆசிரிய மாணவ உறவு என்பது பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து செயல்படும் உறவு ஆகும். ஒரு சிற்பியிடம் ஒரு கல்லைக் கொடுத்தால் அதை எப்படி நல்ல வடிவமாக மாற்றி ஒரு சிலையை உருவாக்குவாரோ அதே போன்றதே ஒரு ஆசிரியனின் தொழிலுமாகும். பல்வேற வகைகளிலும் பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களை, பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களை ஒரு சமூகத்திற்குப் பயன்தரும் உன்னத பிரசையாக மாற்றும் பின்புலம் ஆசிரியமே.

ஆசிரியர் என்பது எந்தக்காலத்தும் எவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதாகும். நம் சமூகத்தில் ஆசிரிய மாணவர் உறவு முறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ததாகும். பொதுவாக ஒரு மாணவன் ஒரு ஆசிரியரை வெறுத்தானாகில் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்பமாட்டான். இதனைச் சரிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் ஆசிரியருடையதாகும். ஆசிரியரை விரும்பத் தொடங்கிய பின்; அவர் சொல்லும் வார்த்தைகள் தேவ வாக்காக அமைந்துவிடும்.

ஒரு குழந்தை தன்னுடைய தாயின் கருவறையில் இருந்து வெளிவந்த அடுத்த சில வருடங்களில் சந்திக்கும் தாய்க்கு நிகரான ஒருவர் தான் ஆசிரியர். இந்த ஆசிரியர் பற்றிய சிந்தனைகள் நல்லவிதமாக அமைய வேண்டும். பின்பு அந்தக் குழந்தைக்கு ஆசிரியரும் பள்ளிக்கூடமும் தான் தன்னுடைய எதிர்காலம் என்ற உணர்வு வலுப் பெற்றுவிடும். இந்த நிலையில் பெற்றோர்கள் பிள்ளைக்கு ஆசிரியர், பாடசாலை பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். பாடசாலை தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் என்று பிள்ளையின் மனதில் பதிய வேண்டும். சிறுவயது முதலே இது பயிற்றுவிக்கப்பட வேண்டியதாகும். ஆசிரியரைச் சொல்லியோ பாடசாலையைக் காட்டியோ பிள்ளையை வெருட்டக்கூடாது. அப்பொழுதுதான் நாம் விரும்பும், எதிர்பார்க்கும் ஆசிரிய மாணவ உறவு வலுப்பெறும். நம் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற நல்ல மாணவனாக, சமூகத்திற்குப் பயன்படும் நல்ல மனிதனாக நல்லதொரு எதிர்காலத்iதைக் காணும் மனிதனாக உருப்பெறுவான்.

வீடு உறவுகள் தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை ஏற்படுத்திக் கொடுப்பது பள்ளிக்கூடம். இங்கிருந்து தான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கவும் பழகவும் கற்றுக் கொள்கிறான். இதனை தமது வாழ்நாள் முற்றாக நினைவு வைத்திருப்பான். தமக்குப் பாடம் கற்றுத்தந்த ஆசிரியர்களைப் போற்றி அவர்கள் பற்றிய நல்ல தகவல்களைத் தமது குழந்தை குட்டிகளுடனும் பரிமாறிக் கொள்வான். இது அடுத்த சந்ததிக்கும் பரவி ஒரு தொடர்கதையாகிவிடும். தாத்தா பாட்டியைப் போற்றுவது போல ஆசிரியர்களும் போற்றப்படுவார்கள். நினைவு கூரப்படுவார்கள். நெஞ்சில் நிறுத்தப்படுவார்கள்.

குழந்தைகளின் அறிவு, சமூக ஒழுக்கம், மற்றும் மனவெழிச்சி வனர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது தொடக்கக் கல்வியாகும். குழந்தைகளின் கல்வி தாயின் வயிற்றிலிருக்கும் போதே ஆரம்பமாகி விடுகிறது. அது தொடர்ந்து பிள்ளை பிறந்தபின்னும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அம்மாவின் அரவணைப்பிலும் சுற்றத்தின் கண்காணிப்பிலும் வளர்கிறது. ஆறுமாதம் ஒரு வருடத்தின் பின் அந்த எல்லை விரிவாக்கப்பட்டு விளையாட்டுப் பாடசாலை, சிறுவர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை என்று பல ஆசிரிய முகங்களை பிள்ளை சந்திக்கின்றது. இந்த முகங்களைத் தொடர்ந்து சந்தித்து நினைவில் வைத்திருக்கும் சந்தர்ப்பம் குழந்தைக்கு அமைவது கடினம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் பிள்ளைக்கு நினைவாற்றல் வளர்ந்து ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கும் தன்மை பெருகுகிறது. தொடர்ந்து இந்த நிலையில், தனது ஆசிரியர்களை பிள்ளை நினைவில் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது, குறிப்பாக அந்த ஆசிரியர் பாசமாகவும் நேசமாகவும் ஒவ்வோர் சந்தர்ப்பத்தில் நடந்து கொண்டிருந்தால் அதனைப் பிள்ளை பசுமரத்து ஆணிபோல நினைவில் கொள்கிறது. அதே போன்று ஒரு பிள்ளையின் வாழ்நாளில் பல அசிரியர்களைச் சந்திக்கலாம். ஆனால் ஒரு சில ஆசிரியர்களை பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருப்பான். அங்கே தான் மாணவ ஆசிரிய உறவு புலப்படுகிறது. வலுப்பெறுகிறது. ஒரு ஆசிரியன் ஒரு மாணவனின் கருத்தில் இடம் பிடித்து விட்டால், அந்த மாணவன், அந்த ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகளை அவனை அறியாமலே மேற்கொள்வான், குறிப்பாகச் சொல்லப் போனால் அந்த ஆசிரியரின் கையெழுத்தை அச்சுப் பிசகாது எழுதக் கற்றுக்கொள்வான். இது அவன் அறியாமலே நடக்கும் செயற்பாடுகள். இந்தக் கையெழத்துப் பழக்கம் பல மாணவர்களிடையே கண்கூடாகக் காணமுடிகிறது. ஒரு மாணவனின் கையெழுத்தைப் பார்த்து அவன் இன்ன ஆசிரியரியனின் மாணவன் என்று கூறிவிடலாம். இங்கே குறிப்பிட வேண்டியது அந்த ஆசிரியரின் கையெழுத்து ஒழுங்கானதாக அமைந்திட வேண்டும்! ஆசிரியர் சிறந்த பண்பாடுடையவரானால் கையெழுத்தும் ஒழுங்கானதாகவே அமைந்துவிடும். இதே போன்றே வேறும் பல பழக்க வழக்கங்களும் அமையும். சுருக்கமாகச் சொல்வதானால் ஆசிரியர் அவனது உதாரண
(Role model)  புருசனாகவே ஆகிவிடுவார்.

இங்கே ஓரு வேடிக்கைக் கதை. பெண்பிள்ளைகள் படிப்பகம் ஒன்றில் படித்துக் கொண்டு இருந்தார்கள். கையெழுத்துப் பற்றி உரையாடல் முற்றிவிட்டது. அப்பொழுது 'ஒழுங்கான கையெழுத்து எழுதுபவர்கள் தங்கள் அம்மாமேல் அதிகம் பாசமுள்ளவர்களாக இருப்பார்களாம்.' என்று ஒரு விவாதம். இதற்கு ஒரு பெண் கூறயதென்ன வென்றால், 'என்னுடைய கையெழுத்து ஒழுங்கில்லாமல் இருக்கலாம் ஆனால் நான் என்னுடைய அம்மாமேல் வைத்திருக்கும் பாசம் சொல்லில் அடங்காது.' என்றார். அவர் தகப்பன் இறந்துவிடத் தாயாரால் தனித்து வளர்க்கப்பட்டவர். மற்றைய பெண்கள் வாய் அடைத்துப் போய்விட்டார்கள். மனம் மிக வருந்தி மன்னிப்பும்; கேட்டுக்கொண்;டார்கள். ஆகவே எதற்கும் நாம் வரையறை கூறிவிட முடியாது. விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும்.

கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேறவேண்டிய திறன்களை வளர்த்தெடுத்து ஒருங்கிணைந்த ஆழுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும். ஆசிரிய மாணவ நல்லுறவு ஏற்படுவதற்கு மாணவர்கள் சுதந்திரமாக வினையாற்றும் வகையில் பாடசாலைச் சூழல் அமைய வேண்டும். அவர்களின் இயல்பான திறன்களை வெளிக் கொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணங்கள், ஆசிரியர் பயன்படுத்தும் உத்திகள், பன்முகத் திறன்களை மேம்படுத்தும் செயற்பாடுகள், மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடவடிக்கைகள் ஏனைய பழக்கவழக்கங்களாகும். இவற்றில் ஆசிரியர் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் ஆசிரியருடன் சுதந்திரமாகவும் சுமுகமாகவம் பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. மாணவர்கள் ஈடுபடும் பாடசாலைச் செயற்பாடுகளில், பாடசாலை நிகழ்வுகளில் மாணவர்களுடன் ஆசிரியர் இணைந்து செயற்படும் போது ஆசிரியருடன் இணக்கமாகப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அவையே அவர்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு ஏதுவான வாய்ப்புக்களின் கதவுகளைத் திறந்து விடுகிறது.

மாணவர்கள் பாடசாலை நூலகத்தை நன்கு பயன்படுத்த உதவ வேண்டும். நூலகத்தைப் பாவிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வாசிக்கும் பழக்கத்தை பயிற்றுவித்து அவனை முழு மனிதனாக உருவாக்கும் முயற்சியைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் தமது கடமையை உணர்ந்து நன்கு செயற்பட வேண்டும். பாடசாலையில் உள்ள விஞ்ஞானகூட மற்றும் கணனி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற இன்னோரன்ன உபகரணங்களை மாணவன் தாராளமாக உபயோகிக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும். அப்பொழுது தான் கூச்ச மின்றி, இடைவெளியின்றி ஆசிரிய மாணவ பந்தம் பயனுள்ளதாக அமையும். சில கல்லுரிகளில் பல உபகரணங்கள் பாவிப்பாரற்றுத் தேடுவாரற்றுக் கிடப்பதைப் பார்க்க முடியும். அதனைப் பார்த்து மாணவர்கள், இது எதற்கு, எப்போது பாவிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருப்பர். அதற்குக்காரணம் ஆசிரியர்களா அல்லது நிர்வாகமா என்பது யாருக்கும் தெரியாது. அதனைத் தெரிந்தும் யாரால் என்ன செய்துவிட முடியும்? அதனால் இவை போன்ற தர்க்கத்திற்கு இடமளிக்கும் செயற்பாடுகளைத் தவிர்த்து ஒரு இயல்பான சுமுகமான சூழலில்ச் சேவை ஆற்றும் ஆசரியரையே நாம் கருத்தில்க் கொள்வோம். மேலும் ஆசிரியர்களில் இருபாலாரும் உளர். அவர்களில் பெண் ஆசிரியர்கள் மென்மையானவர்கள். சுறுசுறுப்பானவர்கள். இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு ஆசிரியர் மிகவும் நல்லவர், வல்லவரும் கூட. ஆனால் கண்டிப்பானவர், பிள்ளைகளிடம் கையை நீட்டுவதில் வல்லமை படைத்தவர். இதனை பக்கத்து வகுப்பறையில் இருந்து பார்த்த ஒரு மாணவன், அவனும் அந்த ஆசிரியரைப் போல நல்லவனும் வல்லவனும்கூடத் தான். வகுப்பேற்றப்பட்டு அடுத்த வகுப்பிற்குப் போகும் போது, அந்த ஆசிரியரின் வகுப்பிற்குத் தன்னைப் போட்டுவிட வேண்டாம் என்று பல விதமாக முயற்சிகளையும் எடுத்துள்ளான். வல்லவன் தானே! ஏன் என்று விசாரிக்கப் போக அடிவாங்க முடியாது என்று தெளிவு படுத்தியுள்ளான். எனினும் இந்த ஆசிரியருக்கும் பாசமுள்ள மாணவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எதனையும் எடுத்தெறிந்து பேசிவிட முடியாது. இந்தமாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஆசிரியர் மாணவர்களை நாம் விலத்தியே பார்க்க வேண்டும்.

ஓரு பையன் வீட்டுப்பாடம் செய்யும் போது அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அம்மா விளக்கம் கொடுத்திருக்கிறார், அவன் அதனை ஏற்கவில்லை, மறுநாள் தனது ஆசிரியரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வேன் என்று அம்மாவிடம் கூறியுள்ளான். அவனுக்கு அம்மாவிலும் ஆசிரியரிடம் நம்பிக்கை அதிகம். இந்தமாதிரி அமையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஆசிரியர் பற்றியது, மாணவர்களே பகிரங்கமாகச் சொல்வது. ஆதலால் மிகையில்லை. சொல்வதில்த் தப்புமில்லை. ஆசிரியர் பாடம் ஒழுங்காகச் சொல்வது வேறை, வகுப்பறையில் தூங்குவது வேறை. தூங்கிக் கொண்டே இருப்பாராம், பிள்ளைகள் தமது இயல்பான முறையில் விளையாடுவார்ககளாம். அதிபர் வரும் காட்சியைக் கண்டு வகுப்பு அமைதி கொள்ளும், இதனை எப்படியோ உணர்ந்து ஆசிரியர் தடால் என்று எழும்பிச் சுற்றி எல்லா மாணவனுக்கும் அடி போடுவாராம். இதுதான் அவருடைய வழமை. இதனை எப்படி நியாயப் படுத்துவது! இன்னொரு ஆசிரியர், ஆசிரய ஆலோசகரும் கூட, குரு என்றால் குற்றமில்லையா? அவர் இரவெல்லாம் தனது முன்னேற்றத்திற்காக தூக்கமின்றிப் படிப்பார் ஆனால் வகுப்பறையில் தூங்குவார். இவற்றை எல்லாம் சொல்லி யாரிடம் போய் முட்டுவது!

ஆசிரியர்களை எடைபோடுவதில் மாணவர்களே சிறந்தவர்கள். ஆதலால் விதிவிலக்குகளை நாம் கருத்தில் கொள்ளக்கூடாது. உதாசீனம் செய்யவும் கூடாது எடுத்துக்காட்டாகவும் கொள்ளக்கூடாது. எதிலும் சிறந்ததையே கணிப்பில் கொண்டு செயற்பட வேண்டும். கையிலே உள்ள ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லை. ஆனால் ஐந்து விரலும் ஒன்றாகவே செயலாற்ற வேண்டும். அதே போல எல்லா ஆசிரியரும், ஒரே மாதிரி இல்லை, ஆனால் எல்லோரும் சமூகத்திற்கு வேண்டியவர்களே. அதேபோல மாணவர்களிலும் முதல், இடை, கடை என்ற நிலையில் மாணவர்கள் உள்ளனர். கடை மாணவனைத் தள்ளி வைக்கவோ முதன் மாணவனைத் தலையில் தூக்கி வைக்கவோ முடியாது. அவரவர் தங்கள் தங்கள் திறமையால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ஆனால் எல்லா அசிரியர்களுக்கும் எல்லா மாணவர்களுக்கும் உளரீதியாக ஈடுபாடு உண்டு. அங்கே தான் ஆசிரிய மாணவ உறவின் புனிதத்தன்மை புலப்படுகிறது.

மாணவச் செல்வங்கள் தமது ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக்களும் வசதிகளும் ஏற்படுத்தி அவற்றிற்கு வேண்டிய பயிற்சியும் கொடுத்து உதவவேண்டும். வகுப்பறை செயல்பாடுகள் நிரம்பியதாகவும் உயிரோட்டம் உள்ளதாகவும் அமைய வேண்டும். பட்டிமன்றங்கள், விவாதங்கள், மாதிரிக் கூட்டங்கள் போன்ற முயற்சிகள் மாணவனின் பேச்சு ஆற்றலையும் ஆளுமைத் தன்மையையும் தலைமை தாங்கும் ஆற்றலையும் வலுப்படுத்தும். இவற்றிற்குச் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கவேண்டியது ஆசிரியரின் கடமை. இவற்றிற்கு நிர்வாகம் ஒத்தழைப்புத் தரவில்லையெனின் ஆசிரியர்பாடு சங்கடம்தான்.

ஒரு காலத்தில் குரு குலக் கல்வி இருந்தபோது மாணவர்கள் குருவுக்குப் பணிவிடை செய்து அவரிடம் வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் ஒழுங்கு முறை இருந்தது. அப்பொழுது குரு சிஷ;யன் என்ற பண்பாடு இருந்தது. கால ஓட்டத்தில் குருகுலக் கல்விமுறை மாறித்திண்ணைக் கல்வி முறை அறிமுகமாயிற்று. அங்கேயும் வாத்தியார் மாணவன் உறவு நிலைபெற்றிருந்தது. இப்பொழுது அதுவும்மாறி ஆசிரியர் மாணவர் என்ற அடிப்படையில் இருதரப்பு உறவும் பேணப்படுகிறது. அப்பொழுது இல்லாத ஒன்று இப்பொழுது, சகலருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி வளர்ந்து வந்துள்ளது. அப்பொழுது கைநாட்டுப் பேர்வளிகளே அதிகம் இருந்தார்கள். தற்பொழுது அந்தநிலை மாறி பட்டப்படிப்பு இல்லாதவர் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எப்படி என்றாலும் குருவுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் மாறவேயில்லை. தரத்திலும் குணத்திலும் மாற்றம் இருக்கலாம் ஆனால் பண்பில் எந்த மாற்றமுமில்லை.

ஆசிரியரிடம் நல்ல உறவைப் பேணும் மாணவன் பாடம் சம்பந்தமான பிரச்சினைகள் மட்டுமன்றித் தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து அதற்கான அக்கறையுள்ள ஆலோசனைகளையும் பெறுவான். வீட்டிலே குடும்பப் பிரச்சினைகள் இருக்கலாம். அதனால் அவன் படிப்பப் பாதிக்கப்படலாம். பொருளாதாரப் பிரச்சினை, கடும் உறவுகளின் தகராறு பொன்றவை. இந்த நிலையில் மாணவனுக்கு மாத்திரமன்றி ஆசிரியர் அவன் குடும்பத்திற்கே ஆலோசகராக மாறிவிடுகிறார். சமூகத்திறகே ஆலோசகராக மாறிவிடுகிறார். இந்த வகையில் ஆசிரியருடன் நல்ல உறவு பேணப்படுகிறது. ஆசிரியர் பெருமைப்படுத்தப் படுகிறார்.

சக்திவாய்ந்த சிந்தனையாளரான சாக்ராடீஸ் மாணவர்களுக்குக் கூறிய அறிவரை ஆசிரிய மாணவ உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு மாணவன் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் கூறிய பதில் அற்புதமானது.

'மாணவன் கொக்கைப்போல் இருக்க வேண்டும். கோழியைப்போல் இருக்கவேண்டும். உப்பைப்போல் இருக்கவேண்டும். உன்னைப் போல் இருக்க வேண்டும்.' என்றார்.

மாணவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்; என்று கேட்டான். அவனும் சுட்டிதான். அதற்கு அவர் 'கொக்கு ஒற்றைக் காலில் நீண்ட நேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயற்பட்டு மீனைப் பிடித்துவிடும். அது போல ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்ய வேண்டும்.'

'கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால் அந்தக் குப்பையை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும். அதுபோல மாணவன் தான் சந்திக்கும் தீமைகளைத் தூரத் தள்ளிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.'

'உப்பு எந்த உணவோடு சேர்த்தாலும் அது இருக்கிறது என்று தெரியும். ஆனால் சேர்த்த உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அது போல மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்.'

'அதெல்லாம் சரி. உன்னைப்போல் இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம்தான் என்ன?' என மாணவன் அங்கலாய்த்தான். அதற்கு அவர் ;மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை எந்தவிதத் தயக்கமுமில்லாது ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும்' என்றார். அதனை அந்த மாணவன் செய்துகாட்டி விட்டிருந்தான். அதனால் 'உன்னைப் போல்' என்பது பொருந்தும்.

இங்கே ஆசிரிய மாணவர் தொடர்பால், பிணைப்பு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. அதனால் புனிதத்தன்மை பேணப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆசிரிய மாணவ உறவு வலுப்பெற்றால் சமூகம் ஓர் உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயப்பாடில்லை.

Education is the most powerful weapon which you can use to change the world – Nelson Mandela.

Those who educate children well are more to be honored than they who produce them. – Aristotle.

The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences---- Rabindranath Tagore.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்