சாவித்துவாரம் செய்த பேருதவி
கலாநிதி பால.சிவகடாட்சம்
வெளியே
நண்பர்களோடு சுற்றித் திரிந்துவிட்டு நேரம் கழித்து வீடு திரும்பும்
மகனை ‘இவ்வளவு நேரம் எங்கே உலாத்திப்போட்டு வருகிறாய்’ என்று அன்னை
செல்லமாகக் கடிந்துகொள்வது உண்டு. உலாத்துதல், உலாவுதல், உலாப்போதல்
என்பதெல்லாம் முற்காலத்தில் மன்னர்கள் ஊர்வலம் வருவதைக்குறிக்கும்
‘உலா’ என்னும் சொல்லில் இருந்து பிறந்த சொற்களாகும். இப்பொழுது உலா
வருவதற்கு எம்மத்தியில் மன்னர்கள் இல்லை. ஆனால் கோவில் திருவிழாவில்
குதிரை, யானை, எருது, மயில் போன்ற வாகனம் ஒன்றில் அல்லது தேரில் சுவாமி
ஊர்வலம் வரும் ‘திரு உலா’க்களை நிறையவே பார்க்கின்றோம். இறைவன் என்னும்
சொல் அரசனையும் குறிக்கும்; கடவுளையும் குறிக்கும். இன்று நாம் காணும்
கோயில் திருவிழாக்களில் சுவாமி வாகனம் ஒன்றில் அமர்ந்து ஊர்வலம் வரும்
காட்சி மன்னராட்சிக்காலத்தில் மன்னர்கள் குதிரையில், யானையில் அல்லது
தேரில் ஏறி உலா வருதலை நினைவு படுத்துவதாகவே உள்ளது. மன்னர் உலாப்போகும்
காட்சியை வர்ணிக்கும் ‘உலா’ என்னும் பாமாலை தமிழ் இலக்கிய வகைகளுள்
ஒன்றாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமது சமகால மன்னர்களின் பேரில்
ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் பாடிய விக்கிரம சோழன் உலா,
குலோத்துங்கன் உலா, இராசராசன் உலா என்பவை தமிழ் இலக்கிய வரலாற்றில்
இடம்பிடித்த படைப்புக்களாகும். அரசனின் உலா பின்னாளில் இறைவனின்
திருவுலாவாகத் தொடர்ந்தது. 'திரு உலா' நாளடைவில் ‘திருவிழா' வாகிற்று.
ஊர்வலம் என்றாலே அதைப் பார்த்து இரசிப்பதற்குப் பார்வையாளர்கள்
அவசியமல்லவா. அவர்களுக்காகத்தானே இந்த ஊர்வலம் நடத்தப்படுகின்றது.
ஊர்வலம் வரும் வீதியோரமாக நின்றுகொண்டும், வீதியின் இருபுறமும்
இருக்கும் வீடுகளில் நின்றுகொண்டும் பாலர் முதல் முதியோர் வரை பல்வேறு
பருவத்தினரும் வயது வித்தியாசம் இன்றி ஊர்வலத்தைப் பார்த்து மகிழ்வதை
அவதானிக்கமுடியும். அழகும் கம்பீரமும் சேர்ந்த உருவத்துடன் பிரதானிகள்
புடைசூழ யானை மேலோ குதிரை மேலோ அல்லது தேரின் மீது அமர்ந்தோ உலாவரும்
அரசனைப் பார்ப்பதற்கு ஏழு பருவத்துப் பெண்களும் துடிப்பார்களாம்.
மன்னனினதும் அவனது முன்னோர்களினதும் புகழை முதன்மைப்படுத்தியும் அரசனைப்
பார்க்கும்போது ஏழு பருவத்துப் பெண்களின் உள்ளத்தில் எழும் உணர்வலைகளை
மையமாகக் கொண்டும் புலவர்களால் பாடப்பெற்றதே 'உலா’ என்னும் பாமாலை.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும்
ஏழுபருவத்துப் பெண்களும் உலாப்போகும் மன்னனின் அழகையும் வீரத்தையும்
கண்ணாரக்கண்டு வியந்து நிற்கும் காட்சியினை கவிஞர் வர்ணிப்பதை
இவ்வுலாக்களில் படித்து மகிழலாம். எனினும் இவ்வாறு மன்னனைக்கண்டு
மயங்கும் பெண்களுள் நற்குடிப் பிறந்து கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும்
கற்புடைப் பெண்கள் அடங்க மாட்டர்கள் என்கிறார் ஒருபுலவர். கற்புடைய
பெண்ணொருத்தி அந்நிய ஆடவனை அவன் அரசனாய் இருந்தாலும் ஏறெடுத்தும்
பார்க்கமாட்டாள் என்று இதற்கு விளக்கம் தருகின்றார் இப்புலவர்.
‘உலா’வில் கூறப்படும் எழுவகை மகளிரும் பொதுமகளிர் (பரத்தையர்) என்றும்
இல்லறம் நடத்தும் குலமகளிர் அல்லர் என்றும் நச்சினார்க்கினியர் போன்ற
உரையாரியர்களும் விளக்கிக் கூறியுள்ளனர்.
கட்டுப்பாடு மிக்க குடும்பத்தில் வளர்ந்த தாயொருத்தி ஊர்வலத்தில் வரும்
மன்னனைத் தன் மங்கைப் பருவத்து மகள் கண்டுவிடக்கூடாது என்பதற்காகத் தன்
வீட்டுக்கதவைச் சாத்திவிடுகிறாள். மகளோ அரசனைக் காணும் தன் ஆவலைக்
கட்டுப்படுத்தமுடியாமல் தாய் மூடிய கதவைத் திறக்கின்றாள். மன்னனைக்
கண்டு மயங்கித் தன் இளவயதுப் பெண் மனம் திரிந்து பித்தாகிவிடக்கூடாது
என்ற அக்கறையில் முன்னெச்சரிக்கையாக அரசன் உலா வரும்போது தன் மகளை
வெளியில் போகவிடாமல் தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துபவள் இந்தத் தாய்.
இவள் மட்டுமல்ல அரசன் பவனிவரும் அந்த வீதியின் அருகில் இருக்கும்
அனைத்து வீட்டுத் தாய்மார்களும் இதையே தான் செய்தார்கள். தாய்மார்கள்
கதவை இழுத்து மூடுவதும் அதனை மகளிர் மீண்டும் திறப்பதுமாக இருந்த
காரணத்தால் அந்த வீடுகளின் கதவுக் குமிழ்கள் (door knobs) தேய்ந்து
விட்டனவாம். இப்படி ஒரு பாடல் முத்தொள்ளாயிரத்தில் வருகின்றது.
தாள் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே ஆய் மலர்
வண்டுலா அங்கண்ணி வயமான் தேர்க்
கோதையைக் கண்டுலா அம்வீதிக் கதவு
முத்தொள்ளாயிரம் 2
‘அடக்க
ஒடுக்கமாக வீட்டுக்குள்ளே இரு’ என்று தனது மகளை அதட்டி உலாவரும்
மன்னனைப் பார்க்க அவள் வெளியே போய்விடாமல் வீட்டுக்கதவைப் பூட்டிச்
சாவியை எடுத்துத் தன்னோடு வைத்துக் கொண்டாள் ஒரு தாய். பாவம் இளமங்கை
என்ன செய்வாள்? ஒரு முறையேனும் அவள் உள்ளம் கவர்ந்த மன்னனைப்
பார்த்துவிடவேண்டும் என்ற தீராத தாகம் அவளுக்கு. அவளது ஏக்கத்தைத்
தீர்க்க உதவியது அந்த வீட்டுக்கதவின் சாவித்துவாரம். அந்தச்
சாவித்துவாரத்தின் வழியே தன் பார்வையைச் செலுத்தி மன்னனைக் கண்டு
மகிழ்ந்த அந்த மங்கை சாவித்துளைபோட்டுப் பூட்டுச் செய்த தொழிலாளிக்கு
எப்படி நன்றி செலுத்துவது என்று ஏங்கி நின்றாளாம். இந்தப் பாடலும்
முத்தொள்ளாயிரத்தில்தான் வருகின்றது.
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனையில் செறித்து
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மாக் கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளை தொட்டார்க்கு
என்னை கொல் கைம்மாறு இனி.
முத்தொள்ளாயிரம் 53
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|