போர்க்களிற்றின் நாணம்

கலாநிதி பால.சிவகடாட்சம்


ண்டைக்காலத்தில் தமிழரசர்களின் படைபலத்துக்கு உறுதுணையாக இருந்தது அவர்களின் யானைப்படை. இன்றைய டாங்கிகளைப் போல் கோட்டை மதில்களையும் பாதுகாப்பு அரண்களையும் இடித்துத்தள்ளப் போர்யானைகள் பயன்பட்டன. பலநாடுகளுக்கும் படையெடுத்துச் சென்று வெற்றிகண்ட சோழமன்னனின் படையில் யானைப்படை முக்கிய பணியாற்றியது. காஞ்சியில் ஒருகாலும் உஜ்ஜைனியில் ஒருகாலும் ஈழத்தில் ஒருகாலுமாய் எப்போதும் ஓடித்திரிந்து போர் புரியுமாம் சோழன் கிள்ளியின் போர்க்களிறு.

கச்சி ஒர் கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர் கோக் கிள்ளி களிறு


                                                           முத்தொள்ளாயிரம் 49

ஏதிரியின் பலமான கோட்டை மதில் ஒன்றை இடித்துத் தள்ளும்போது தனது கொம்பை முறித்துக்கொண்ட சோழன் நலங்கிள்ளியின் யானை பற்றிய கோவூர்கிழாரின் பாடல் ஒன்றைப் புறநானூற்றில் காணமுடியும்

நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு


                                                               புறநானூறு 31

போரினால் ஏற்பட்ட தழும்பு வீரனுக்கு பெருமை சேர்ப்பது என்னும் விடயம் சோழன் கிள்ளியின் போர் யானைக்குத் தெரியவில்லை.

எதிரியின் கொடிபறக்கும் மதிலை இடித்துத் தள்ளும்போது முறிந்த தனது கொம்பையும் பகைமன்னர்களின் முடிகளை இடறித் தேய்ந்துபோன கால்நகங்களையும் அங்கே வந்த பெண்யானை பார்த்துவிடுமே என்று வெட்கப்பட்டு ஓர் ஒதுக்குப்புறமாக ஒளிந்து நின்றதாம் கிள்ளியின் போர்க்களிறு. முத்தொள்ளாயிரம் காட்டும் காட்சிகளுள் ஒன்று இது. (களிறு என்றால் ஆண்யானை பிடி என்றால் பெண்யானை).

கொடி மதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் பிடி முன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
ஆர் தோள் கிள்ளி களிறு

                                                           முத்தொள்ளாயிரம் 48

இந்த யானையைவிடப் பாண்டிய மன்னனின் போர் யானை ஒன்று புத்திசாலியானது. அது பெண்யானையைக்கண்டு ஒழிக்கவில்லை. முனை மழுங்கிய தனது கொம்புகளப் பெண்யானை பார்த்துவிடாமல் கொல்லப்பட்ட முடிமன்னர்களின் குடல்களால் மூடி மறைத்துக்கொண்டு நின்றதாம் இந்தக் களிறு.

அடு மதில் மாய அழிந்த தன் கோட்டைப்
பிடி முன் பழகதலில் நாணி முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல் வேல்
தென்னவர் கோமான் களிறு


                                                             முத்தொள்ளாயிரம் 102

போர் நிகழ்வுகளைக்கூட ஒரு அங்கதச் சுவையுடன் சித்தரிப்பதில் பண்டைத் தமிழ்ப் புலவர்களை மிஞ்ச எவரும் இல்லை.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்