பாரதிதாசன் போற்றும் ‘தகத்தகாயத் தமிழ்!’

முனைவர் இரா.மோகன்


“தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு, இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு”

என்பது ‘பாரதி கவிதா மண்டல’த்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினக் கவிஞரின் முழக்கம். ‘பாவேந்தர்’, ‘புரட்சிக் கவிஞர்’, ‘புதுவைக் குயில்’, ‘இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்’. ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்’, ‘தமிழ்நாட்டு விட்மன்’ என்றெல்லாம் தமிழ் கூறு நல்லுலகால் போற்றி அழைக்கப்படும் பாரதிதாசன், ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு – தமிழ்நாட்டிற்கு – தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றியவர். நாடு, தொழில், இயற்கை, காதல், புதிய உலகம், இளைஞர் உலகு, பெண்ணுலகு முதலியன அவருக்குப் பாடு-பொருள்கள்; தமிழோ அவருக்கு ஊடுபொருள். அவர் நெஞ்சின் ஊடகத்தே என்றென்றும் நிலைத்திருக்கும் உணர்வு. தமிழே அவருக்கு மூச்சு, உணர்வு, வாழ்வு, இன்பம் அனைத்தும். தமிழே அவர்; தமிழே அவருக்கு உலகம், வழிகள், எல்லாம். தமிழ் இன்றேல் அவர் இல்லை; தமிழ் இல்லாத வாழ்வை அவரால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. ‘மொழியின்றேல் நாம் யார்?’ என்னும் கவிதையில் அவர் மொழியின் அருமைப்பாட்டினையும் இன்றியமை-யாமையினையும் அழகுற வெளிப்படுத்துகின்றார்:

“விழி இல்லாத வாழ்வும்
வெற்றி பெறுதல் கூடும்;
வழி இல்லாத ஊர்க்கும்
வரப்பைக் கடந்து சேர்வோம்;
எழில் இல்லாத பெண்ணும்
எவர்க்கோ மனையாய்க் கூடும்;
மொழி இல்லாத வாழ்வை
நினைக்க முடியா தன்றோ?”

எனப் பாவேந்தர் தொடுக்கும் வினா அடிப்படையானது; ஆழமானது.

புலவர் ஆ.பழநி கூறுவது போல், “பாரதிதாசனோ தமிழை ஒரு மொழி என்ற அளவிலே நோக்குவதில்லை. தமிழனின் மானமாக – உயிராக – செல்வமாக – ஏன் அனைத்துமாகத் தமிழ் விளங்குவதாக எண்ணுகின்றார்”.

‘தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர்!’


“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்து உறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில் போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் – தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்!”


‘தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்’ என்றும், ‘தமிழும் நானும் மெய்யாய் உடல் – உயிர் கண்டீர்’ என்றும், ‘உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே’ என்றும் பாவேந்தர் தமிழுக்கும் தமக்கும் உள்ள தனியுறவினைக் குறித்துப் பாடியுள்ளார். மங்கை தரும் சுகத்திற்காக எதையும் செய்வோர் – ஏன் மணிமுடியையே துறந்தோர் – இந்த உலகில் உண்டு; ஆயின், பாரதிதாசனோ ‘மங்கை ஒருத்தி தரும் சுகமும் – எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை!’ என்று பறைசாற்றுகிறார். ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்பது பழமொழி; ஆயின், பாரதிதாசனோ ‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்!’ என முழங்குகிறார். இங்ஙனம் மனித உறவுகளுக்கு அப்பாற்பட்ட – அறிவு வடிவமான – ஓர் அடிப்படையான, ஆழமான உறவைத் தமிழோடு கொண்டுள்ளார் பாரதிதாசன்.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’


மொழி வாழ்த்து என்னும் பாடுபொருள் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையிடம் அரும்பாக இருந்தது; பாரதியாரிடம் போதாக விரிந்தது; பாரதிதாசனிடம் மலராக மலர்ந்தது. ‘தமிழே நீ என்றன் ஆவி’; ‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்’: ‘கன்னற் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி’; ‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை, மூச்சினை உனக்கு அளித்தேனே!’; ‘தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’; ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்றாற் போல் பாவேந்தர் தமிழினைக் குறித்துப் பாடியிருக்கும் வரிகள் இவ் வகையில் மனங்கொளத்தக்கவை; பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கவை.

‘தமிழ் படித் தேன்; அதை உண்ணப் படித்தேன்’


பாரதிதாசன் படைத்துள்ள மாந்தர் – இளையவராயினும் சரி, முதியவராயினும் சரி, ஆடவராயினும் சரி, மகளிராயினும் சரி, ஏழையராயினும் சரி, செல்வராயினும சரி – தமிழைத் தம் உயிருக்கு நிகராக மதிக்கிறார்கள்; தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அன்னைத் தமிழ் மொழிக்கே தர விரும்புகிறார்கள்; தமிழைப் பயில்வதில் – தமிழுக்குத் தொண்டு செய்வதில் – தனியின்பம் காண்கிறார்கள்.

‘இளைஞர் இலக்கிய’த்தில் ஒரு பாடல். ‘தமிழ் தான் நீயா?’ என்பது பாடலின் தலைப்பு. கவிஞருக்கும் தமிழ்ச் சிறுமி ஒருத்திக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வடிவில் அப்பாடல் அமைந்துள்ளது. ‘தமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே, தமிழ் படித்தாயா?’ என்று கேட்கிறார் கவிஞர். ‘தமிழ் படித்தேன் தமிழ் படித்தேன், தமிழ்ப் பெண் நானே’ என்கிறாள் சிறுமி. ‘தமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே, தமிழை ஏன் படித்தாய்?’ என்று சிறுமியிடம் கேட்கிறார் கவிஞர். ‘தமிழ் படித் தேன் (தமிழானது ஒரு படி அளவுள்ள தேன் போல் இனிப்பது), அதை உண்ணத் தான் தமிழ் படித்தேன் நான்’ என்று விடை கூறுகிறாள் சிறுமி. தொடர்ந்து கவிஞர், ‘அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி அதை நீ உண்பாயா?’ என்று கேட்கிறார். சிறுமியோ சிறிதும் தயங்காமல், ‘அமிழ்தும் தமிழுக்கு அதிக இனிப்பா? அதுவா எனை வளர்க்கும்?’ எனப் பதில் அளிக்கிறாள்.

அடுத்து, பாவேந்தரின் காதல் கவிதை ஒன்றில் வரும் இளம்பெண் ஒருத்தியின் தமிழுணர்வினைக் காணலாம். அவள் தனக்கு மணமகனாக வரவிருக்கும் ஆடவன் பத்திலக்கம் உள்ளவன் (நூறாயிரம் உடையவன்) – ஆனால் தமிழ்ப் பாட்டுப் படியாதவன் என்று கேள்விப்பட்டதும், வீட்டுப் படியேற வேண்டாம் என்று விரட்டியடிக்கிறாள்; எளிய நிலையில் இருக்கும் பிறிதோர் இளைஞன், ‘வள்ளுவன் படித்தேன்’ என்றதும், ‘நீ வழங்கிடு! நான் கொள்ளுவன் படித் தேன்!’ என்று விரைந்து கூறி, அவனது காதலை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறாள்.

‘குடும்ப விளக்’கின் ஐந்தாம் பகுதி ‘முதியோர் காதல்’. அதில் இடம்பெறும் மணவழகருக்கு ஆண்டு நூற்று ஐந்து; தங்கம் அம்மையாருக்கு ஆண்டு நூறு. இருவரும் முதுமை உற்றவர்கள்; மக்களைப் பெற்றவர்கள்; பேரர் பேர்த்திமார் கண்டவர்கள். தள்ளாத முதுமைப் பருவத்திலும் அவர்கள் குறட்பாவில் இரண்டு செய்யுளைப் படிக்கிறார்கள்; அவற்றினுக்கு விரிவுரை பலவும் ஆய்ந்து முடிக்கிறார்கள். நரை, திரை, மூப்பு உற்று, ஆடிய பம்பரங்கள் ஆன நிலையிலும் மணவழகர் தமிழ் இலக்கியம் படிக்கத் தவறவில்லை; தங்கம் அம்மையார் தம் துணைவர் படிப்பதைக் கேட்கத் தவறவில்லை.

‘புரட்சிக் கவி’யில் வரும் கவிஞன் உதாரனுக்குத் தன் ஆருயிர்க் காதலியை இழப்பது பெரிதாகப் படவில்லை; தன் உயிர் போவதைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ‘தமிழறிந்ததால் வேந்தன் எனை அழைத்தான், தமிழ்க் கவி என்று எனை அவளும் காதலித்தாள், அமுதென்று சொல்லும் இந்தத் தமிழ் என் ஆவி, அழிவதற்குக் காரணமாக இருந்ததென்று, சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என் தாய்மொழிக்குப் பழி வந்தால் சகிப்பதுண்டோ?’ என்பதே அவன் ஆழ்மனத்தை அலைக்கழிக்கும் பெருங்கவலையாக உள்ளது.

‘தமிழியக்கம்’


ஆழ்வார்களும் நாயன்மார்களும் தலந்தோறும் பண்சுமந்த பாடல்களைப் பாடிப் பக்தி இயக்கம் கண்டனர்; பாரதிதாசனோ இந்நாள் துறைதோறும் துடித்தெழுந்து தமிழுக்குத் தொண்டு செய்து ‘தமிழியக்கம்’ கண்டார். தமிழ்நாட்டில் நம் தமிழ் பல துறைகளிலும் தாழ்மைப்படுத்தப்பட்டிருப்பது கண்டு மனம் வருந்திய பாவேந்தர், இமைப்பொழுதும் ஓயாது தமிழுக்கு உழைக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்; தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் செயல் செய்ய வேண்டும் – அழகு சேர்க்க வேண்டும் – என்று இளந்தமிழனுக்கு அறிவுறுத்தினார்; இதுதான் செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எனவும் வலியுறுத்தினார்.

1.தமிழகத்தின் தமிழ்த் தெருவில் இன்று தமிழ்தான் இல்லை. இக்குறை நீங்க அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை இவையெல்லாம் அருந்தமிழ்ச் சொல்லால் ஆக்கப்பெறல் வேண்டும். கலைச்சொல்லாக்கங்கள் அழகிய தமிழ் மொழியில் உருவாக்கப் பெறல் வேண்டும்.

2.அரசியலார் அலுவலகம், அற மன்றம், இசையரங்கு ஆகியவற்றில் இன்று தமிழுக்கு முதன்மை இல்லை. இந்நிலை நீங்கி அரசினரின் மொழியாக – அரசியல் மொழியாக – அரசியல்சார் வரிசையுறு சட்டமன்றின் மொழியாக – வையம் அறிமொழியாகத் தமிழ்மொழி ஆக வேண்டும்.

3. தமிழரின் தமிழ்க் குழந்தை தமிழ்ப் பெயர் பெறுதல் வேண்டும். கோயிலில் – வழிபாட்டில் – தமிழிசை வழங்க வேண்டும். திருமண விழாக்களில் தமிழ் முழங்க வேண்டும். கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி தழைக்க வேண்டும். பாட்டு, கூத்து, இசை, திரைப்படம் முதலான கலைகளில் தமிழ் சிறப்பிடம் பெற வேண்டும்.

4. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்தோரே ஏடு (இதழ்) நடத்துதல் வேண்டும்; ஏட்டில் எழுதுதல் வேண்டும். பத்திரிகைத் தமிழ் பிழைத் தமிழாக இல்லாமல், படிதமிழாக இருக்க வேண்டும்.

5. தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்; அறிவுயரும்; அறமும் ஓங்கும். இமயமலை போல் உயர்ந்த ஒரு நாடும் தன் மொழியில் தாழ்ந்தால் வீழும்; எனவே மொழி வாழ்வில் – வளர்ச்சியில் – தமிழர் கண்ணும் கருத்துமாய் இருத்தல் வேண்டும்.

‘தமிழியக்கம்’ வெளிவந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடியும், இன்னும் அந்நூலில் கவிஞர் வெளியிட்டிருக்கும் அரும்பெருங்கருத்துக்கள் நடைமுறைக்கு வராமல் இருப்பது – நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது – வேதனைக்கு உரிய பேரவலமாகும். இன்றே – இன்னே – புதுநாளை உண்டாக்கித் தமிழ் காக்க, தமிழ் நெஞ்சில் புத்துணர்வைக் கொணர, இறந்தொழிந்த பண்டை நலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் படைக்க அதிர்ந்தெழுவோம்.

“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோம் இல்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!”


என்னும் பாவேந்தரின் சீரிய அழைப்பை ஏற்று, செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வோம்; தகத்தகாயத் தமிழை நிலைநிறுத்துவோம்!.


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்