சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 29
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
ஊரும்
கொடியது, அவன் உள்ளமும் கொடியது.
பண்டைத்
தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமமாகிய மருத நிலத்தில் வாழ்ந்த
மக்கள் உழவுத்தொழிலால் உயர்ந்து நின்றார்கள். நல்ல வருமானம், வளமான
வாழ்க்கை, வசதியான வீடு, போதிய ஒய்வு நேரம் என்றிப்படி எல்லாமே அமைந்து
நாகரிகத்தில் சிறந்திருந்தார்கள். அத்தகையவர்களில் அவனும் ஒருவன்.
முறைப்படி திருமணம்செய்து தலைவியுடன் வாழ்க்கை நடத்திவந்த அந்தத்
தலைவனுக்கு, அவளிடம் பெற்ற இன்பம் அலுத்திருக்க வேண்டும், அல்லது
பரத்தையரிடம் பெறுகின்ற இன்பம் இனித்திருக்க வேண்டும். அதனால், அவன்
என்ன செய்கிறான், அடிக்கடி புதிய புதிய பரத்தைப் பெண்களை நாடுகிறான்.
தலைவியை நிரந்தரமாகவே விட்டுப் பிரிந்தவன்போல அவளை எட்டியும்
பார்க்காமல் இருக்கிறான். அவனின் நினைவால் வாடும் தலைவிக்கு
அவனைப்பற்றித் தலைவியின் தோழி எடுத்துரைக்கிறாள். அவனின் கெட்ட
குணங்களைப்பற்றி விளக்குகின்றாள்.
'தலைவனின் ஊர் நண்டுகளுக்கும், முதலைகளுக்கும் பெயர் பெற்றது. அந்த
நண்டுகளின் ஓடுகளிலே புள்ளிகள் நிறைந்திருக்கும். அத்தகைய நண்டுகள்
குஞ்சுபொரிக்கும்போது அவற்றின் தாய் இறந்துவிடும். அதுதான் நண்டு
இனத்தின் வாழ்க்கை முறை. அந்த ஊரிலுள்ள முதலைகள் எப்படிப்பட்டவை
தெரியுமா? தான் ஈன்ற குட்டிகளையே விழுங்கித் தின்றுவிடும் கொடுமை
நிறைந்தவை. எனவே, பிறக்கும்போதே பெற்ற தாயைச் சாகடிக்கும் நண்டுகளும்,
தான் ஈன்ற குட்டிகளையே விழுங்கி ஏப்பமிடும் முதலைகளும் வாழ்கின்ற அந்த
ஊரைச் சேர்ந்த அவன் மட்டும் நல்லவனாக இருக்க முடியுமா? அவனும்
கொடுமைக்காரனாகத்தான் இருப்பான். அவன் இங்கே இன்னும் வரவே இல்லையா?
எப்படி வருவான். அவன்தான் கெட்டவனாயிற்றே! அவன் உன்னைப் பிரிந்து,
உனக்கு மட்டும் துன்பம் தருகிறான் என்று நீ நினைத்துக்கொள்ளாதே. ஆசையோடு
அவனைத் தழுவிய எத்தனையோ பெண்களிடம் இன்பத்தை அனுபவித்துவிட்டுப் பின்னர்
அவர்களையெல்லாம் துயரத்தில் தவிக்கும்படி உதறிவிட்டுப் போகிறவன அவன்.
அப்படியெல்லாம் ஏன் செய்கிறான்? அவன் தீயவன் என்பதனால்தானே? எனவே நீ
அவனை நினைத்துக் கவலைப்படாதே. அவனை மறந்துவிடுவதுதான் உனக்கு நல்லது'.
இவ்வாறெல்லாம் தோழியானவள் தலைவிக்கு எடுத்தரைக்கும் காட்சியினைக் கூறும்
பாடல் இது.
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
ஐங்குறுநூறு. மருதத்திணை. பாடல் இலக்கம்: 24 பாடியவர்: ஓரம்போகியார்.
இதன் நேரடிக்கருத்து:
அன்னையே!(தலைவியைத் தோழி அன்னை என்று அழைப்பது வழமை). தான்
பிறக்கும்போது தன் தாயைச்சாகடிப்பதும், புள்ளிகளைக்கொண்டதுமான
நண்டுகளையும், தன் குட்டிகளையே விழுங்கி உண்ணுகின்ற தன்மையுடைய
முதலைகளையும் உடையது தலைவனின் ஊர். அவன் இங்கே இன்னும் வரவில்லையோ?
தாங்கள் அணிந்துள்ள பொன்னாலான தொடிகள் ஒலியெழப்பும்வண்ணம் தன்னைத்
தழுவிய பெண்களின் இன்பத்தைக் கவர்ந்துகொண்ட அவன் பின்னர் அவர்கள்
பிரிவுத் துன்பத்திலே வருத்தமுற்று நலன்கெட்டுப்போகுமாறு அவர்களைக்
கைவிடுவதுதான் எதனாலோ? (என்று தோழி தலைவியிடம் கேட்பதாக அமைந்த பாடல்
இது)
பிற்குறிப்பு:
நண்டுகள் குஞ்சுபொரிக்கும்போது தாய் இறந்துவிடும் என்று இரண்டாயிரம்
வருடங்களுக்க முன்னர் வாழ்ந்த புலவர் கூறியிருக்கிறார். ஆனால் கடலோரம்
நண்டெல்லாம் தான்பெற்ற குஞ்சோடு ஒன்றாக விளையாடுவதாக தமிழ்த்
திரைப்படப்பாடல் ஒன்று ஒலிக்கிறது.
(காட்சிகள் தொடரும்....................................)
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|