தமிழ்மொழி கற்பித்தலில் நவீனப் புதுமைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா



முன்னுரை:

க்களை பிற உயிர்களிடமிருன்து வேறுபடுத்துவது மொழி. மொழி இயல்பனது. தன் உள்ளத்து உணர்வுகளை எளிமையாக வெளிபடுத்த உதவுவது. நமது பண்பட்டினை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. தமிழ்மொழியைப் பயில்வதால் மொழிப்பற்றும் நட்டுப்பற்றும் மேம்படும். பிற பாடங்களை படிப்பதற்கும் அடிப்படையானது தாய் மொழி. எனவே தாய் மொழி கற்றலும் கற்பித்தலும் அவசியமாகிறது.

தாய்மொழி முதல் மொழி குழந்தை தன் தாயிடமே முதல் கற்றலைத் தொடங்குகிறது. தாய் தன் குழந்தைக்கு முதன் முதலில் தன் தாய் மொழியையே பயிற்றுகிறாள். பின் தன் உறவினர்கள் தன் வீட்டைச்சுற்றியுள்ள சமூகத்திடமிருந்தும் ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொள்கிறது. இவ்வாறு ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொண்ட பின்பே பள்ளிக்கு வருகிறது. ஆசிரியர் குழந்தையின் மழலைச்சொற்கள் கொச்சைச் சொற்கள், வட்டார வழக்குகள் நீக்கி பேசவும், கேட்கவும், படிக்கவும், எழுதவும் கற்பிக்கிறார். இவ்வாறு பள்ளியிலேயே மொழிக்கற்றல் முழுமைபெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மையான மொழிகள் என்பதாக கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், அரபு, ஹிப்ரூ ஆகிய மொழிகளே மொழிப்பட்டியலில் இடம் பெற்றன. ஆனால், இம்மொழிகளின் மூலமொழி, ஆதிமொழி 'தமிழ்' என்ற உண்மை அனைவராலும் மறக்கப்பட்டிருந்தது அல்லது மறைக்கப்பட்டிருந்தது. இவ்இழிநிலை மாற்றி தமிழை 2004 அக்டோபர் திங்களில் செம்மொழிப்பட்டியலில் இடம்பெறச் செய்தது அன்றைய தமிழக அரசு. தகுதியால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் அங்கிகாரத்தால் இன்றும் செம்மொழியான நம் தமிழ்மொழி தமிழரோடு சேர்ந்து பன்மொழியினரையும் ஈர்த்து, கோர்த்து தமிழ்த்தொண்டு புரியச் செய்தது. இப்படி பலரது உரைப்பாலும் உயரிய முயற்சியாலும் கிடைத்த தமிழ்ப்பாடல்கள் ஏராளம். சங்கம் தொடங்கி இன்றளவும் வளர்ந்து நெடிதுயரும் இத்தமிழ்ப் பாக்களை மாணாக்கர் உளம் புகுத்தும் முறைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

அடிப்படை திறன்களைக் கற்றல்

மொழிப்பாடம் கற்றல் கற்பித்தலில் முதன்மையான நோக்கம் மாணவர்கள் மொழித்திறன்களைப் பெறுதலே ஆகும். கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கும் தமிழ்மொழியின் அடிப்படைத் திறன்கள் ஆகும். இவற்றுள் கேட்டல், பேசுதல் ஆகிய இரண்டும் ஒலியை அடிப்படையாகக் கொண்டது. படித்தலும், எழுதுகலும் வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மேலும் கேட்டல் படித்தல் ஆகிய இரு திறன்களும் செய்திகளை உட்கொள்ள உதவுபவை. கேட்டல் மூலமும் படித்தல் மூலமும் செய்திகள் நம்மிடம் வந்து சேர்கின்றன. பேசுதல், எழுதுதல் ஆகிய இரு திறன்களும் கருத்தை அல்லது செய்திகளை வெளியிட உதவுபவை. பிறருக்குத் தெரிவிக்கவேண்டிய கருத்துக்களைப் பேச்சு மூலமும் எழுத்து மூலமும் வெளிபடுத்துவதால் இவை வெளியிடும் திறன்கள் எனப்படும்.

பண்டைய கால பயிற்று முறைகள்

பண்டையத் தமிழர்களின் கல்வி முறையை சற்று ஆய்ந்து நோக்கின் பாடத்தின் மூலத்தை அப்படியே நெட்டுறுச் செய்து மனத்தில் பிரதியெடுக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர் என்பது புலனாகும். பழந்தமிழரின் இந்நெட்டுறு பழக்கத்தைப் பற்றி நன்னூல் வாயிலாக அறிய முடிகிறது.

'உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து' என்ற இந்நன்னூல் நூற்பா ஆசிரியர்; பாடம் சொல்லும் போது, தான் முன்பு நெட்டுறுச் செய்ததை நினைவிற்கு கொண்டு வருதலைக் குறிக்கிறது. இன்னும் ஒருபடி மேற்சென்று இந்நூல் மாணாக்கர் பாடம் கேட்கும் வரலாற்றை கூறுகையில், 'செவி வாயாக நெஞ்சு களனாகக்' என்னும் உரையில் மாணவர் ஏடுகள் இன்றி மனனம் செய்து சிந்தையைக் கொள்கலன் ஆக்கினர் என்பது இங்கு துணிவாகிறது. இந்நெட்டுரு பழக்கத்தின் பின் 'வினா விடை முறை' ஒரளவு பிரபலியமாக இருந்து வந்ததை,

'எழுத்தெனப் படுவ
அகர முதல
னகர விறுவாய் முப்பஃதென்ப'


என்ற தொல்காப்பிய நூற்பா இயம்பா நிற்கிறது. தொல்காப்பியரின் இக்கூற்று 'எழுத்து எனப்படுவது யாது' என்ற வினாவிற்கு விடை கூறும் முறையில் அமைந்திருப்பதால் பண்டைய கல்வி முறையில் 'வினா – விடை முறை' சிறப்பிடம் பெற்றதை அறிய முடிகிறது. ஆக, பண்டைய காலத்தில் கடுமையான நெட்டுருப் பழக்கம் வினா விடை முறை, இன்னின்னோர் கல்வி கற்க வேண்டும் என்ற இனத்தகவு முறை ஆகியவற்றால் மிகச் சொற்பமான மனிதருக்கே கற்பிக்கப்பட்டு வந்த கல்வி முறை இன்று அனைவருக்கும் பொது என்ற முறையில் மாற்றம் பெற்றுவிட்டது. இம்மாற்றத்திற்கு ஏற்ப மாணாக்கர் உளம் கொள்ளும் வகையில் தமிழை புகுத்த சில புதுமைகளும் ஏற்கப்பட்டன. இந்த நவீனங்களையே இக்கட்டுரை கீழ்வருமாறு சுட்டுகிறது.

இசைப்பாடல் முறை

தமிழை பக்தியின் மொழி என்றார் தனிநாயகம் அடிகள். பக்தியின் வேர் இசை. ஆனால், அந்த இசைக்கு உயிர் தமிழ் என்பதை உள்ளுர் அனுபவித்தோ என்னவோ, 'தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்பதாக விளம்புகிறார் அப்பர். நாவுக்கரசரின் நாவுக்கரசான இந்த இசையே கல்வி முறையில் மாணாக்கரை ஐந்தில் வளைக்கும் கருவியாகிறது. 'முத்தமிழின் மையம் இசைத்தமிழ் இது இயற்றமிழோடும் நாடகத்தமிழோடும் தொடர்புடையது' என்ற ஹரி.விஜயலட்சுமியின் கூற்று இயலும், செய்யுளும் கலந்த தமிழை மாணவர்களின் உளம் புகுத்தலோடு ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்தது. முத்தமிழின் மையமான இவ்விசைக் கொண்டு செய்யுளை மாணவர்களுக்கு கற்பிக்கும் போது, இராகங்களுக்கு, இணையாக வார்த்தைகளும் அதன் இனிமைக்கு இணையாக உட்பொருளும் மாணாக்கர் உளம்புகும் என்பது உண்மை. சான்றாக,

'பல்சான்றீரே பல்சான்றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் முப்பின் பல்சான்றீரே
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்'
(புறம்.195)

என்ற புறப்பாடலை பயிற்றுவிக்கும் போது, இப்பாடலோடு மிக இனிமையாக ஒன்றிவரும் ராகங்களான மோகனம், பூபாளம் ஆகிய இரண்டு ராகவழிப்பயிற்றுவித்தல் நலம். இஃதே போல இசைத் தேர்ச்சி உடைய ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பாடலுக்கும் உரிய ஏற்ற ராகத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். இசையில் பயிற்சியில்லா ஆசான்கள் ஏற்றத் திரையிசை மெட்டுகளை நாகரீகமான முறையில் பயன்படுத்தலாம். இன்று, இவ்விசைப்பாடல் முறை தமிழகத்தில் 66மூ க்கு மேற்பட்ட பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நடிப்பு முறை

'நடி' என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டு எழுந்ததே 'நாடகம்' என்னும் சொற்றொடர். இஃது நடிக்கப்படுவதாலும் நடிப்பை மக்கள் நாடுவதாலும் நாடகம் ஆயிற்று. காட்சி இன்பமும் கேள்வி இன்பமும் ஒருங்கே அளிக்கும் இந்நாடகம் பயிற்று முறையில் மிகச் சிறந்த நவீன கருவியாகும். மாணவர்களின் வகுப்பறை நேரம், ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள காலஅளவு, பாட அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரே ஒரு சிக்கலை மையம் கொண்டு 'ஒரங்க நாடகத்தை' பயிற்றுக் கருவியாக்கலாம். ஏனெனில் 'ஓரங்க நாடகத்தில் பாத்திர வர்ணணை கருத்து முக்கியத்துவம், நிகழ்ச்சித் தொடர்பு, சிறந்த கதை அம்சம் உணர்ச்சிப் போராட்டம் ஆகிய மிகக் குறுகிய கால அளவிற்குள் இடம் பெறுகின்றன' இதற்குச் சான்றாக, கம்பராமாயணத்தில் உள்ள ஒரு பாடலை காணலாம்.

'தையலை வணங்கற் கொத்த கிடைபெறுந் தன்மை நோக்கி
ஐயா யான் இருந்த காலை அலங்கல்வேல் இலங்கை நோக்கி
எய்தினன் இரந்து கூறி யிறைஞ்சின்ன இருந்து நங்கை
வெய்துரை சொல்லச் சீறிக் கோறல் மேற் கொண்டு விட்டான்'

                                                                     (திருவடிதொழுத படலம் - 37)

என்ற பாடலை எடுத்துக்கொண்டு, மாணாக்கரை முறையே சீதை, இராவணன், அனுமன் என்பார் போல் வேடம் புனையச் செய்து சிறுசிறு உரையாடல் அமைத்து உடல் அசைவின் வழி உணர்வுகளை வெளிப்படுத்தும்படி செய்தால் அஃது இக்காப்பியத்தையே மாணாக்கர் உளம் நிறுத்தும் என்பது உண்மை. தற்போது இந்நடிப்பு முறை தமிழகப் பள்ளிகளில் தமிழ் மன்றங்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது என்பது வருத்தத்திற்கு உரியது.

நாட்டியம் அல்லது அபிநய முறை

ஒரு செய்யுளை முறைப்படி ஆசான் சீரிய ஆற்றலோடும் பாடலூக்குரிய உணர்ச்சிகளோடும் வெளிப்படுத்தினால், அஃது மாணாக்கரின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். ஆசிரியரின் அவ்வாற்றலும் உணர்ச்சியும் புதுமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டால் அஃது மாணாக்கரின் வாழ்க்கை முழுவதிலும் நினைவுச் செம்மை ஆகும். அஃதாவது செய்யுளைக் கற்பித்தலின் மாணாக்கர் புதுமை என்று ஏற்கும் 'புதுமை' அவசியம். இந்நவீனமுறைக்கு ஒரு சிறந்த சான்று செய்யுட் பகுதிகளில் உணர்வுப்பூர்வமான சில மையங்களை தெரிவு செய்து அதை பயிற்சி பெற்ற நாட்டிய ஆசிரியர்கள் மூலம் அபிநயங்களாகப் பிடிக்கச்செய்வதே. இப்புதுமை முறைக்கு பொருட் செலவும், காலச் செலவும் மிகுதியும் ஏற்படும். இம்முறைக்குச் சான்றாக,

'நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
........................................................
.........................................................
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவானில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்'
(ஊர்சூழ்வரி 21:57-60)

என்ற சிலம்பு பாடலில் உள்ள கண்ணகியின் தோற்றத்தை உள்வாங்கி கண்களில் அழுகையும், முகத்தில் வெகுளியையும் கலந்து அபிநயம் பிடிக்கச் செய்தால் 'சிலம்பு' என்று மாணாக்கர் மனதில் நீங்காத நிலைபெறும். இஃது புதுமைகளில் மிகவும் நூதனமான ஒன்று.

கருவி பயன்பாட்டு முறை

செய்யுளைக் கையாளும் ஆசிரியர்களின் ஒவ்வொரு நடத்தும் முறையிலும் புதுமை இடம்பெற வேண்டும் என்பது இன்றியமையாமை. அதைவிட இன்றியமையாதது, 'புதுமையாகக் கருதப்படுவதில் உள்ள 'புதுமை' ஏற்றுக்கொள்வோரால் புதிய சிந்தனை அல்லது புதிய அணுகுமுறை என்று கருதப்பட வேண்டும்' இவ் அணுகுமுறையில் புதுமையை நிலைக்கச் செய்ய புதுமையில் எளிமை அவசியம். இவ்இன்றியமையாமையைக் கருதியே கருவிகளின் பயன்பாடு மிகுதியாக வரவேற்கப்பட்டது. கருவிகளை இயங்கு கருவி, இயங்கா கருவி என்பதாகப் பிரித்து கையாளப்பட்டது. இம்முறைக்குள் செய்யுளைப் புகுத்துவது மாணாக்கரின் நினைவுத்திறனில் நேரடியான விளைவை ஏற்படுத்த முடியும். சான்றாக,

'ஆளாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார்பூஞ் சோலேத் திருவேங்க டச்சுனையல்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே'


                                                (பெருமாள் திருமொழி பா.எ.32)

இந்நான்கடி பாடலில் ஒரே ஒரு மையப்பொருள் மீன். ஆகையால், நீரில் ஒரு மீன் மிதக்கும் வண்ணம் இயங்கு கருவி அமைத்து இப்பாடலை மாணவருக்கு பயிற்று விக்கலாம். இம்முறை எங்ஞான்றும் மாணாக்கரது மனதில் நின்று இப்பாடலின் மையப் பொருளை மறக்கச் செய்யாது.

செய்யுளைக் கற்பிக்க சில அறிவியல் முறைகள்

தமிழால் தமிழர்பால் அறிவியல் பரவி வருகின்றது. பரவும் இவ்அறிவியலை முறையாய் நாம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். எவ்வாறெனில் மாணாக்கர் பயிற்றுவித்தலில் சில அறிவியல் முறைகளை உட்புகுத்தலின் மூலம் இதனைச் சாதிக்கலாம். மேலும், இவ்வறிவியல் முறை என்ற புதுமை 'சிறந்த பயன், ஏற்புடைமை குறைந்த சிக்கல் தன்மை சோதித்து அறியக்கூடிய தன்மை மற்றும் கண்டுணரக் கூடிய தன்மை' ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது. ஆகையால் இதன் வரவேற்பு மிகுதியாக உள்ளது. இம்முறைக்குச் சான்றுகள்,

வகுப்பறைக் கற்பித்தலில் கணினியைப் பயன்படுத்தலாம்

  • 'கண்டணென் கற்பினுக்கு அணியை கண்களால்' (திருவடி தொழுதல் பா.எ.25) என்ற பாடலை நடத்துங்கால் அதன் நுட்பத்தை விளக்க சில சொற்பொழிவாளர்கள் இவ்வடிக்கு விளக்கும் நுட்பமான பொருளை திரையில் ஒலிபரப்பி மாணாக்கரைக் பார்க்கும்படி செய்தால், அஃது அவர்களது கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை மிகுவிக்கும்.
     

  • மாணாக்காரது நெட்டுரு பாடல்களை மிக மெல்லிய இசை பின்னணியுடன் மிக மென்மையான ராகங்கள் சேர்ந்த ஒலிப்புத்தகங்களாக வழங்கினால், அஃது அவர்களது படிக்கும் திறனை இரு மடங்காக்கும்.
     

  • மாணாக்கர்களுக்கு சில பாடல்களை வாசிப்பதிலும், உச்சரிப்பதிலும் இடையூறு ஏற்படும். அதற்காக சில நல்ல தமிழ் வாசகர்களால், தெளிவான முறையில் உச்சரிக்கப்பட்ட பாடல்களை பல் ஊடகத்தில் ஒளிபரப்பி, அவர்களது உச்சரிப்பு முறையையும், ஒலி உறுப்பு அசையும் முறையையும், வல்லினம் மிகும், மிகா முறையையும் அறிந்து கொள்ளச் செய்யலாம். இம்முறை மாணாக்கருக்கு பிழையின்றி செய்யுளை படிக்கவும் எழுதவும் துணை செய்யும். தர்போது பத்து பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்யுள் பகுதிகளை மென்மையான இசையுடன் பதிவு செய்து மாணவர்களுக்கு வழங்கும் பணியை 'தற்கால தமிழக அரசு' மேற்கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.


தனிப்பயிற்சி முறை

செய்யுள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கு கையாளப்படவேண்டிய ஒரு முறை தனிப்பயிற்சி முறை ஆகும். இப்பயிற்சியின் அவசியத்தை, 'மாணாக்கர்களிடம் தனியாள் வேற்றுமைகள் நிறைய உண்டு. செய்திறன், அறிவுத்திறன், மனப்போக்குகள், நாட்டங்கள், விருப்பங்கள், தேவைகள் இவற்றுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு' என்பதாக விளக்கம் அளிக்கிறார் சு.தண்டபாணி. இவ்வாசிரியர் மேற்சொன்ன தனியாள் வேறுபாடுக்கு இணங்க வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்ற முறையில் செய்யுளை அசைத்தல், சீர் பிரித்தல், பா அறிதல், பொருளறிதல், விதி உணர்த்தல் ஆகியவற்றை அவரவர் உளம் கொள்ளும் படி செய்யுளை நடத்தினால் மட்டுமே செய்யுள் கற்பித்தல் வெற்றி அடையும். வகுப்பளைக் கால் அளவும், பாட மிகுதியும் இம்முறைக்கு தடையாக அமைந்தாலும் சில இன்றியமையாத பகுதிகளை இம்முறையில் பயிற்றுவித்தல் நலம் பயக்கும்.

தொகுப்புரை:

பண்டையத் தமிழரின் அகம், புறம் என்ற இரண்டு சார்பிலும் கல்வி தலையாய இடம் வகித்தது. அகச்சார்பான பொருளீட்டுதல், இல்லறம் நடத்துதல் ஆகியவற்றிற்கும். புறச்சார்பான அரசாட்சி, அமைச்சு புரிதல் ஆகியவற்றிற்கும். அடிவேர் கல்வியே ஆகையால் சங்கத் தமிழர் வாழ்வில் கல்வி, தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருந்தது. ஆனால், அறிவியல்மையமாக்கப்பட்ட உலகம், கணினி மயமாக்கப்பட்ட தொழில், மிகமிக நவீனமாக்கப்பட்ட பொழுதுபோக்குகள் என்பதான இயக்கம்சார் கூறுகளைக் கொண்ட இந்த நூற்றாண்டில் கல்வி என்பது தொழில் செய்வதற்கான மூலதனம் அல்லது தொழிலைப் பெறுவதற்கான முன்பணம். ஆகையால் இக்கால கல்விமுறை வாழ்வின் அங்கம் என்பதாக அல்லாமல் ஒரு நிகழ்வின் சிறுபுள்ளி என்பதாகவே இடம் பெறுகிறது. இங்ஙனம் தொழில்மையமாக்கப்பட்ட இக்கல்வி முறைக்குள் நன்னெறிப் போதிக்கும் தமிழ் பாடலை 'புதுமை முறை' அன்றி வேறுமுறையால் மாணாக்கர் தம் மனம் புகுத்துதல் அரிது என்பதையும் தொழில் கல்விக்குள் ஒரு இன்பமயமான கல்வியை, புதுமை என்ற அணுகுமுறையால் ஏற்படுத்தலாம் என்பதையும் இக்கட்டுரை தெளிவாக ஆராய்ந்துரைக்கிறது.

துணைநின்ற நூல்கள்

1. சோம.இளவரசு (உ.ஆ), நன்னூல், நூற்.எண்.36
2. மேலது., நூற்.எண்.40
3. தொல்காப்பியம், நூற்.எண்.1
4. திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை, பா.6
5. ஹரி.விஜயலட்சுமி, தமிழ் இலக்கிய வரலாறு, ப.எ.363
6. வெ.கலைச்செல்வி, கல்வியியல் சிறப்புத் தமிழ், ப.8
7. இ.நாகராஜன், கல்விப் புதுமைகளும் மற்றும் கலைத்திட்ட வளர்ச்சி, ப.5
8. தண்டபாணி.சு, தமிழக் கற்பித்தல், ப.32
 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்