சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
30
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
கண்கள் சிவந்தன, காட்டிக் கொடுத்தன!
அகன்று
பரந்து கிடக்கும் அழகான ஏரி. அதிலே ஆங்காங்கே மக்கள் நீராடிக்
கொண்டிருக்கிறார்கள். தம்பதிகள், காதலர்கள். இளைஞர்கள், மங்கையர்கள்.
சிறுவர்கள் என்றிப்படிப் பலதரப்பினரும் தனியாகவும், குழுக்களாகவும்
பொங்கும் பூம்புனலில் நீராடிக் களித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே ஒருத்தன் மட்டும் தனியாக ஓரிடத்தில் நீராடிக்கொண்டிருக்கிறான்.
அதற்குச் சற்றுத் தொலைவில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த பரத்தையர்கள்
அவனைக் கண்டுவிடுகிறார்கள். அவனை அவர்களுக்கு தெரியும். அவர்களின்
முன்னாள் வாடிக்கையாளர்களில் அவனும் ஒருவன். இப்போது பரத்தையர்
உறவைவிட்டு தனது மனைவியோடு வாழ்ந்தகொண்டிருக்கிறான். அவர்கள் எல்லோரும்
தண்ணீரில் நீந்தியவாறே அவனருகே வருகிறார்கள். அருகே வந்து அவனைச்
சீண்டுகிறார்கள். அவர்களில் ஒருத்தி அவனைத் தன்னொடு சேர்ந்து
நீராடவருமாறு அழைக்கிறாள். ஏற்கனவே உள்ளத்திற்குள் உறங்கிக் கிடந்த சபல
புத்தி அவனைப் பின்னின்று தள்ள, முன்னர் அவர்களோடு பழகிய பழக்கம்
முன்னின்று இழுக்க அவனும் அவர்களின் அருகே சென்று, நீராட அழைத்தவளின்
கையைப்பற்றி 'இவள் யாருடைய மகள்' என்று தெரியாதவன்போலக் கெட்கிறான்.
அவர்களும் 'யாருடைய மகளாக இருந்தாலும் இப்போது உனக்குத் தெரியாதுதான்.
அதுசரி, நீ யாருடைய மகன் என்று சொல்வாயா?' என்று வக்கணையாகக்
கேட்கிறார்கள். அவனுக்குத் தன் பழைய உறவின் இன்ப உணர்வு
கிளர்ந்தெழுகிறது. அழைத்தவளோடு சேர்ந்து நீராடுகிறான். நீரில் விளையாடி
மகிழ்கிறான்.
கீழ்க்காணும் பாடலில் இந்தக் காட்சியை முகிழ்ந்தெடுக்க முடிகிறது.
பாடல்:
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார்மகள் இவள்? எனப்பற்றிய மகிழ்ந!
யார்மகள் ஆயினும் அறியாய்
நீயார் மகனை, எம் பற்றி யோயே?
ஐங்குறுநூறு. மருதத்திணை. பாடல் இலக்கம்: 79 பாடியவர்: ஓரம்போகியார்.
'புதுப் புனலிலே நீராடியதனால் சிவந்திருக்கும் கண்களையுடைய இவள்
யாருடைய மகள்? என்று கேட்டுக்கொண்டே அவளது கையைப் பற்றிய தலைவனே!
யாருடைய மகளாக இருந்தாலும் நீ அறியமாட்டாய் தான். அப்படியென்றால்,
நீதான் யாருடைய மகனோ?' என்று தோழி தலைவனைப் பார்த்துக் கேட்கிறாள்.
புனலாடி மகிழ்ந்த தலைவன் வீட்டுக்குச் செல்கிறான். தன்னையும்
அழைத்துக்கொண்டு போகாமல் தனியாகப் புனலாடச் சென்ற கணவன்மேல் ஊடல் கொண்டு
காத்திருக்கிறாள் மனைவி. புனலாடி வந்த கணவனின் கண்கள் மிகவும்
கடுமையாகச் சிவந்திருப்பதைப் பார்க்கிறாள். அவளுக்கு விடயம்
விளங்கிவிடுகிறது. தனியாகச் சென்ற தன் கணவன் தனியாகப் புனலாடவில்லை
என்பதை அவள் உணர்கிறாள். எப்படித்தான் நெடுநேரம் தனியாக நீராடினாலும்,
இப்படிக் கண்கள் சிவக்கமாட்டா. இருவரோ பலரோ ஒருவருக்கொருவர் நீரடித்துக்
களித்துவிளையாடும்போதுதான் கண்கள் இந்த அளவுக்குச் சிவக்கும் என்பதை
அவள் அறிவாள். ஏற்கனவே அவன்மீது கொண்டிருந்த ஊடல் மேலும் சூடாகிறது.
சற்றுக் கோபமாகவும், கணவனின் கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டதை
அவனுக்கு உணர்த்தும் விதமாகவும் அவனிடம் கேட்கிறாள்.
'நான் ஒன்றும் உன்னுடன் ஊடல் கொள்ளமாட்டேன். அதனால் பொய்சொல்லாமல்
உண்மையைச் சொல்லிவிடு. நீ தனியாக நீராடவில்லை. தங்கள் உடலழகைப்
பேணுவதில் சிரத்தையுள்ள பரத்தைப் பெண்களோடு சேர்ந்துதான் நீ
புனலாடியிருக்கிறாய். அதனால்தானே உனது கண்கள் இப்படிக் கடுமையாகச்
சிவந்திருக்கின்றன' என்று தலைவனைக் குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்துகின்றாள். இந்தக்காட்சி இதற்கு முன்னர் மேலே நாம் கண்ட
காட்சியின் தொடர்ச்சியாக அடுத்த பாடலிலேயே வருகின்றது.
பாடல்:
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகை மகளிர்க்குத் தோள்துணையாகித்
தலைப்பெயற் செழும்புனல் ஆடித்
தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.
ஐங்குறுநூறு. மருதத்திணை. பாடல் இலக்கம்: 80 பாடியவர்: ஓரம்போகியார்.
இதன் நேரடிக் கருத்து:
மகிழ்நரே! உம்மோடு நான் ஊடல் கொள்ள மாட்டேன். அதனால் பொய்யாகச்
சொல்லாமல் உண்மையைச் சொல்வீராக. அழகைப் பேணுவதிலே சிறந்தவர்களான
பெண்களின் (அதாவது பரத்தையர்களின்) தோள்களுக்குத் துணையாக நின்று
முதலமுதலாக எழுந்து பெருகிவருகின்ற புதுப்புனலிலே நீராடியதால்தானே உனது
கண்கள் இப்போது மிகவும் சிவந்திருக்கின்றன. (என்று தலைவி தலைவனைப்
பார்த்துக் கேட்பதாக அமைந்த பாடல் இது) இவையும் இவைபோன்ற இன்னும் பல
பாடல்களும், பண்டைத்தமிழ் மக்களின் இன்பம் நிறைந்த வாழ்க்கை முறையிலே,
பொய்கைகளில் புனலாடுதலும் மகிழ்ச்சியானதொரு நிகழ்வாக அமைந்திருந்தது
என்பதற்குச் சான்றாக உள்ளன.
(காட்சிகள் தொடரும்....................................)
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|