எது உயர்ந்த கவிதை?

பேராசிரியர் இரா.மோகன்


“உள்ளத்து உள்ளது கவிதை – இன்ப
உருவெடுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை”


எனக் கவிதைக்கு இலக்கணம் வகுப்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிக்கோ அப்துல் ரகுமான் இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘முத்துக் குளிக்க வாரீகளா…’ என்னும் தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில், “எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப்புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை” (தி இந்து: அக்டோபர் 17, 2015, ப.14) என உயர்ந்த கவிதைக்கு இலக்கணம் உரைக்கிறார். அவரது கண்ணோட்டத்தில், காமத்துப் பாலில் வரும்,

“கண்ணுள்ளார் காத லவர்ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து”

என்னும் திருக்குறள் உயர்ந்த கவிதை ஆகும். எப்படி என்பதை அவரது சொற்களைக் கொண்டு இங்கே காண்போம்.

வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.

“ஏனடி, இன்று நீ கண்ணுக்கு மை தீட்டவில்லை?” என்று தோழி தலைவியைக் கேட்கிறாள்.

தலைவி தோழிக்கு இங்ஙனம் மறுமொழி கூறுகிறாள்: “என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்து விடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது”.

இந்த உயர்ந்த கவிதையால் மீட்டப்பட்டு அப்துல் ரகுமான் என்னும் கவிஞருக்குள் இருந்து புறப்பட்டு வந்த புதிய ராகங்கள் இவை:

“‘கண்ணில் ஏன்
மை தீட்டவில்லை
என்கிறாயா, தோழி?’
சொல்கிறேன்.
கண்ணுக்குள் என்
காதலர் :
அவர் முகத்தில்
கரி பூசலாமா?
என் சூரியன் மீது
இருட்டைத் தடவுவதோ?
வீட்டிற்குள்ளே அவர்:
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம்?
அவரையே தீட்டி
அழகு பெற்ற கண்ணுக்கு
மையலங்காரம்
வேண்டுமா?
கண்ணை விட மென்மையானவர்
காதலர்:
தோல் பட்டால் வலிக்காதா?
அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
கற்புக்கு இழுக்கல்லவா?”
(நேயர் விருப்பம், ப.70)

‘கண்ணும் எழுதேம்’ என்னும் தலைப்பில் ‘நேயர் விருப்பம்’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதையில் கவிக்கோ படைக்கும் காதலி தன் கண்ணுக்கு மை தீட்டாமைக்கான காரணங்களாக ஆறினைக் கூறுகிறாள். இத் தொகுப்பு 1978-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்தது. ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்கு பிறகு, ‘கண்ணுக்கு மை எதற்கு?’ என்னும் தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் கவிக்கோவே இன்னும் இரு காரணங்களைத் தலைவி கூறுவதாகக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. அந்த இரு காரணங்கள் இதோ:

“மை போட்டு
மயக்கினேன்
மயங்கி விட்டார்
இன்னும் எதற்கு மை?
அவர் தான்
சிக்கி விட்டாரே
பிறகு எதற்கு வலை?”
(தி இந்து: அக்டோபர் 17, 2015, ப.14)

இதில் இருந்து கவிதை அனுபவம் குறித்து ஒன்று தெளிவாகின்றது; உறுதியும் ஆகின்றது. ராஜமார்த்தண்டன் கூறுவது போல், “எந்தக் காலத்திலும் புதுமை குன்றாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதிய இலக்கிய அனுபவம் தருவது தான் நல்ல கவிதையின் இலக்கணம்” (புதுக்கவிதை வரலாறு, ப.12). சரி தானே?



'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்