சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 31

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)


அன்பினால் இணைந்த இன்ப வாழ்க்கை!

னது அழகான மகளை அன்பும், ஆண்மையும் நிறைந்த ஒருத்தனுக்கு மணம் முடித்துக்கொடுத்த தாயொருத்தி, தன் மகள் எப்படி வாழ்க்கை நடாத்துகிறாள் என்பதை அறிய விரும்பினாள். தனது மகளைப் பிறந்தநாள்முதல் நன்கு வளர்த்து, பராமரித்தவளான செவிலித்தாயை மகளின் புகுந்த வீட்டுக்குச் சென்று நிலைமையை அறிந்து வருமாறு அனுப்புகிறாள். செவிலித்தாயும் மகளின் வீட்டுக்குச் சென்று சிலநாட்கள் தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வந்து, பெண்ணின் தாயிடம் அவளின் மகள் நடாத்தும் இன்பமான வாழ்க்கையைப்பற்றி எடுத்துரைக்கிறாள்.

அன்பான கணவனோடு அவள் நடாத்தும் இல்லறத்திலே அவர்களுக்கு அழகானதொரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு அவள் முலைப்பாலை ஊட்டிக்கொண்டிருக்கிறாள். அப்போது சிறிய மலைகள் பலவற்றைக்கொண்டிருக்கும் நாட்டைச்சேர்ந்த அவளின் கணவன், அவளின் முதுகை அன்போடு தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறான். பாசத்தோடு தன் பிள்ளைக்குப் பாலூட்டி மகிழ்கிறாள் உள் மகள். அவள்மேல் தான் கொண்ட தணியாத காதலால் அவளின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து அவளையும் மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்து இன்புறுகிறான் உன் மகளின் கணவன், உன் மருமகன். அதனை நான் கண்டேன் என்று செவிலித்தாய் நற்றாயிடம் சொல்கின்றாள்.

அவ்வாறு அடைந்த பாடல் இதோ.
வாணுதல் அரிவை மகன்முலையூட்டத்
தானவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும்பூந் தண்புற வணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே!


ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 404 பாடியவர்: பேயனார்.

இதன் நேரடிக் கருத்து:

நறுமணங்கொண்ட பல்வேறுவிதமான பூக்கள் நிறைந்திருக்கும் முல்லை நிலங்களையும். பல குன்றுகளையும் உடைய நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட அரிவை அவனது மனைவி. அவள் தன் மகனுக்கு முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கும் போது அவளின் முதுகைத் தழுவி அவன் அன்புகாட்டிக்கொண்டிருந்தானே!

அது மட்டுமா? இன்னுமொருநாள் நான் கண்ட காட்சியைச் சொல்லவா? என்று கேட்டு செவிலித்தாய் மேலும் சொல்கிறாள்.

ஒருநாள் அவர்கள் மூவரும் தங்கள் வீட்டிலே படுத்திருந்தார்;கள். எப்படித் தெரியுமா? தந்தை தன் மகனைத் தன் மார்போடு அணைத்தபடி படுத்திருக்கிறான். எப்போதும் மெல்லிய குரலில் இனிமையாகப் பேசுகின்ற அவளோ கணவனையும், மகனையும் சேர்த்து தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள். அவ்வாறு அவர்கள் மூவரும் படுத்திருப்பது காண்பதற்கு இனிமையான காட்சியாக இருந்தது. இந்தப் பரந்த உலகம் முழுவதும் கிடைக்கப்பெற்றால் அதனால் அடையக்கூடிய இன்பம் ஒன்றுதான் அந்த இன்பத்திற்குச் சமமானதாகும், என்று அந்தப் பெண்ணின் தாயிடம் செவிலித்தாய் கூறுகின்றாள். அதனைச் சொல்லும் பாடல் இது.

புதல்வன் கவைஇயினன் தந்தை, மென்மொழிப்
புதல்வன் தாயோ, இருவருங் கவையினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நுனியிரும் பரப்பின்இவ் வுலகுடன் உறுமே


ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 409 பாடியவர்: பேயனார்.

செவிலித்தாய் மேலும் சொல்கிறாள்.

மற்றொருநாள் மாலை நேரத்திலே, அவர்களது வீட்டின் முற்றத்திலே போடப்பட்டிருந்த குள்ளமான கால்களைக்கொண்ட மிகவும் பதிவான கட்டிலின் மேலே அவன் படுத்திருக்கிறான். அவனருகே அவன் மனைவி - உன்மகள் அமர்ந்திருக்கிறாள். அவர்களது மகன், தந்தையின் மார்பிலே ஊர்ந்து தவழ்ந்து மகிழ்ந்து விழையாடிக்கொண்டிருக்கிறான் அப்போது அந்தக் குழந்தை மகிழ்ச்சியால் சிரித்து எழுப்புகின்ற மழலைச் சத்தம், அங்கே பாணன் தன் யாழினை மீட்டுவதனால் எழுகின்ற முல்லைப் பண்ணின் இன்னிசைக்கு நிகராக இன்பக் கிளர்ச்சியைத் தருகின்றது.

அவ்வளவு மகிழ்ச்சியாக இன்பமாக அவர்கள் வாழ்கின்றார்கள் என்பதாகச் செவிலித்தாய் நற்றாயிடம் எடுத்துச் சொல்கின்றாள்.

பாடல்:

மாலை முன்றிற் குறுங்காற் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணன் தியாழே.


ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடல் இலக்கம்: 410 பாடியவர்: பேயனார்.

 


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)
 

 

 



பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா   

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்