கோ.வசந்தகுமாரனின் கவிதை உலகு

பேராசிரியர் இரா.மோகன்

“கவலைகள் பிசைந்து
பெருங்கவலை செய்தேன்.
பெருங்கவலை பிடறியைத் தாக்க
தற்கொலை முனையில்
தத்தளித்த என்னை
ஒரு பூவை நீட்டிக் கேலி செய்தது
பாறை பிளந்து முளைத்த செடி”    
(சதுர பிரபஞ்சம், ப.80)

என்னும் முத்திரைக் கவிதைக்குச் சொந்தக்காரரான கோ.வசந்தகுமாரன், ‘ஊருக்கெல்லாம் சோறு போட, நெல் மட்டுமே விதைக்கும், தஞ்சாவூர்காரர்’ (மனிதன் என்பது புனைபெயர், ப.16). இவரது பிறப்பிடம் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஒரத்தநாடு. வேதியியல் பயின்ற இவர், கவிதை உலகில் அடி எடுத்து வைத்த ஆண்டு 1986; ‘பாலைவனத்துப் பூக்கள்’ என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு ஆகும். ‘சொந்த தேசத்து அகதிகள்’ (1987), ‘மனிதன் என்பது புனைபெயர்’ (1994), ‘மழையை நனைத்தவள்’ (1995) என அடுத்தடுத்து வெளிவந்த கவிதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு ‘சதுர பிரபஞ்சம்’. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதையும் திருப்பூர் தமிழ்ச் சங்க விருதையும் தமது ‘மனிதன் என்பது புனைபெயர்’ என்னும் கவிதை நூலுக்காகப் பெற்றுள்ள வசந்தகுமாரன், மனித வள மேம்பாட்டுத் துறையின் உதயபாரதி தேசிய விருதினைத் தமிழ் மொழிக்காகப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த சாகித்திய அகாதெமியின் ‘புதிய குரல்கள்’ (New Voices) என்னும் கவியரங்கில் இவர் வாசித்த கவிதை, மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் பாராட்டினையும் ஒட்டுமொத்த அவையினரின் வரவேற்பினையும் பெற்றது. இனி, ஒரு பறவைப் பார்வையில் வசந்தகுமாரனின் கவிதை உலகு குறித்து ஈண்டுக் காண்போம்.

நெகிழ்வூட்டும் நினைவுச் சித்திரங்கள்

சொந்த ஊர், உற்றார் உறவினர்கள், பழகிய மனிதர்கள், எதிர்ப்பட்ட காட்சிகள் என்று நினைவுச் சித்திரங்களாக ‘மனிதன் என்பது புனைபெயர்’ தொகுப்பில் பல கவிதைகளைப் படைத்துள்ளார் வசந்தகுமாரன். “இந்த நூலைப் புரட்டுகிற போது அவரைச் சுற்றிச் சூழ வாழ்ந்த மனிதர்கள் பக்கம் பக்கமாய் நம்மோடு வசிக்கிறார்கள்… வாழ்விலும் மனித உறவுகளின் மேன்மையைச் சொல்வதற்காகவே இந்தக் கவிதைகள் பிறந்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன்” (‘மழை…காற்று…பனி…வெய்யில்…கவிதை’, மனிதன் என்பது புனைபெயர், பக்.8;9) என்னும் கவிஞர் பழநிபாரதியின் கூற்று இவ் வகையில் கருத்தில் கொள்ளத் தக்கது. ‘விழி பிதுக்கி, காதளவோடிய மீசை வைத்து, ஆறடி உயர அரிவாள் தூக்கி, ஆளைப் பயமுறுத்தும் அய்யனார் தலை மீது, எச்சமிட்டுப் பறக்கும் தவிட்டுக் குருவிகள்’ (மனிதன் என்பது புனைபெயர், ப.14) தொடங்கி, ‘எவ்வளவுதான் சம்பாதித்தாலும், நகரத்துக்கு வந்து, இழந்த கிராமத்துச் சுகங்கள்’ (பக்.21-22) வரை கவிஞர் பதிவு செய்திருக்கும் நினைவுச் சுவடுகள் பசுமையானவை; உயிரோட்டமானவை. அம்மா, அப்பா, தாத்தா, அப்பாயி, செருக்கத்தாக் குட்டி, ஒத்தாசைக்காகப் பொன்னமராவதிப் பக்கம் இருந்து அம்மா அழைத்து வந்த பெண், தொப்புளான் ஆகியோர் உயிர்க்களையும் தனித்- தன்மையும் துலங்க வசந்தகுமாரனின் கவிதை உலகில் வலம் வரும் மாந்தர்கள் ஆவர்.

அப்பாவைப் பற்றிய கவிஞரின் நெகிழ்வான ஒரு நினைவுச் சித்திரம் ‘அப்பாவின் ஞாபகம்’. ‘அப்பா / அழுது பார்த்ததில்லை நான். தாத்தா செத்துப் போன போது கூட / சாராயத்தில் குளித்தவர் தானே இவர்?’ என அப்பாவின் ஆளுமைப் பண்பினைக் குறிப்பிட்டுத் தொடங்குகிறது அக் கவிதை. கவிஞரது பார்வையில், ‘எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தேவை என்பதால் / அப்பாவின் பிறப்பும் / அவதாரமோ என்னவோ? வார்த்தைகளற்று படுத்த படுக்கையாய் / கையது கொண்டு மெய்யது பொத்தி கிழிந்த நாராய்க் கிடக்கும் / அப்பாவின் இறுதி ஆசை என்னவாக இருக்கும், கொஞ்சம் சாராயத்தைத் தவிர?’ என நடப்பியல் பாங்கில் அப்பாவின் தனிப்பண்பினைக் கூறித் தொடரும் கவிதை, “அரிவாளும் கையுமாக, ஊரையே ஆட்டிப்படைத்த அப்பா / மசானத்தோடு (மயானம்) மட்டும் மல்லுக்கட்ட முடியாமல் / செத்துப் போனார்!’ (மனிதன் என்பது புனைபெயர், ப.91) என அப்பாவின் மரணத்தைச் சுட்டி முடிவடைவது உள்ளத்தைத் தொடுகின்றது!

அப்பாவுக்கு நேர்முரண் தாத்தா. கவிஞரின் மனப்பதிவில் அவர், ‘கிராமத்து ஆச்சர்யம். காந்தியவாதி. சட்டை போட மாட்டார், கதர் வேட்டி தான். அரசாங்கம் நியமிக்காத நீதிபதி. கவிஞரின் காயங்களுக்கு மூலிகை, அவருக்குச் சிறகு முளைக்க வேண்டும் என்று வரம் கொடுத்தவர். அவருக்கு விரால் மீன் சாப்பிடப் பிடிக்கும். மருமகள் வைக்கும் மீன் குழம்பு ருசிக்காகவே உயிர் வாழ்வதாக அடிக்கடி சொல்லிச் சிரிக்கும் அவர், கடைசிக் காலத்தில் கஞ்சி குடிக்கவும் முடியாமல் செத்துப் போனார்’ (பக்.17-18) என்பது அவலத்தின் உச்சம்.

‘சாராய வாடையோடு, கலப்பை தொட மாட்டான்; செருப்புக் காலோடு, வயலில் இறங்க மாட்டான்; பயிர் மீது எச்சில் துப்பமாட்டான்; இரண்டு மனைவிகளை வைத்துக் குடும்பம் நடத்தினாலும், பாசாங்கு இல்லாத வாழ்க்கை அவனுக்கு’ எனத் ‘தொப்புளான்’ என்னும் தலைப்பில் கிராமத்து மனிதர் ஒருவரைக் குறித்து வசந்தகுமாரன் படைத்திருக்கும் கவிதை கவிஞர் கல்யாண்ஜி குறிப்பிடுவது போல், ‘ஒரு முழுமையான சிற்பம். மகாமகக் கூட்டத்திலும் அவனை அடையாளம் சொல்ல முடியும்’ (மேற்கோள்: மனிதன் என்பது புனைபெயர், ப.92).

இங்ஙனம் நினைவின் சுவடுகளாகக் கவிஞர் படைத்துள்ள கவிதைகள் உயிர்க்களையும் தனித்தன்மையும் கொண்டனவாக விளங்குகின்றன.

முரணிலே தொடங்கி முரணிலே முடியும் கவிதை

அன்றாட வாழ்வில் – உலக நடப்பில் – இந்நூற்றாண்டு மனிதரின் நடத்தையில் காணப்படும் முரண்களை வசந்தகுமாரன் தம் கவிதைகளில் நுட்பமாக எடுத்துக்காட்டியுள்ளார். ‘முரண்’ என்னும் தலைப்பிலேயே அவர் ஒரு சிறந்த கவிதையைப் படைத்துள்ளார். கவிஞரின் சொற்களிலேயே அக் கவிதையை இங்கே காணலாம்.

கவிஞர் குடை மறந்த நாளில், மழை பெய்கிறது; அவர் அருந்தும் வேளை, தேநீர்க் கோப்பையில் ஈ விழுகிறது; கிழக்கே பயணிக்கக் காத்திருக்கும் வேளையில், மேற்கே போகும் பேருந்துகள் அவரைக் கடந்து செல்கின்றன; முடி திருத்திக் கொள்ளும் யோசனையோடு சலூனுக்குச் செல்கையில், ‘செவ்வாய்க்-கிழமை விடுமுறை’ என்ற அறிவிப்புடன் மூடிய கதவு அவரைக் கேலி செய்கிறது; கைக்கடிகாரம் பழுதுபட்டிருக்கும் பொழுது, அழகிய பெண் ஒருத்தி அவரிடம் நேரம் கேட்கிறாள்; எப்பொழுதும் அவர் காத்திருக்கும் லிப்ட் மேலேயே நின்று விடுகிறது, அவர் படியேறிச் செல்ல எத்தனித்த போது கீழே இறங்குகிறது; வாங்கிய கடனைக் கொடுக்க வந்தவனை, அவர் உறங்குவதாகச் சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறாள் அவரது மனைவி. இதற்கெல்லாம் பரிகாரம் தேடி பக்கத்து ஊர் ஜோசியனைப் பார்க்கப் போகிறார் கவிஞர். அப்போது அவருக்குத் தெரியவருவதுதான் முரணின் உச்சகட்டம்!

“இடிவிழுந்து நேற்று அவன் (ஜோசியன்) /  இறந்து போனதாய்ச்
சொன்னார்கள்”     
  (பக்.47-48)

என முரணிலே தொடங்கிய கவிதை முரணிலேயே முடிவடைவது முத்தாய்ப்பு.

தாயுள்ளத்தின் இயல்பான படப்பிடிப்பு

‘மனிதன் என்பது புனைபெயர்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கவிதைகளுள் ஒன்று ‘விருது’. தாயுள்ளத்தில் இயல்பான படப்பிடிப்பு அக் கவிதை. தேசிய விருது தமக்குக் கிடைத்தது குறித்து அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறார் கவிஞர். ஒரிசா ஆளுநரிடம் விருது வாங்க இருப்பதையும், அப்படியே கல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங் போகத் திட்டமிட்டு இருப்பதையும் அதில் தெரிவிக்கிறார் அவர். பத்து நாள் கழித்து அம்மாவிடம் இருந்து கவிஞருக்கு இப்படி பதில் வருகிறது:

“கடிதம் கிடைத்தது / கவிதா நலமா?
கல்கத்தா போனால் / ப்ரவீணாவைக்
கேட்டதாகச் சொல்.
டார்ஜிலிங்கில் / நல்ல டீத்தூள் கிடைக்குமாம்
வரும்போது வாங்கி வா.”  
(ப.55)

கவிஞருக்கு அவரது படைப்பாற்றலுக்குக் கிடைத்த விருது பெரியது, அதைத் தரும் ஆளுநர் ஆகப் பெரியவர் என்றால், அம்மாவுக்கு அவரைச் சுற்றியுள்ள உறவுகளும் மனஉணர்வும் தான் பெரியவை! இதை இந்தக் கவிதையில் உள்ளது உள்ளபடி, அப்பட்டமான மொழியில் அழகுறப் பதிவு செய்துள்ளார் வசந்தகுமாரன்.

வசந்தகுமாரனின் கவிதை உலகு

கோ.வசந்தகுமாரனின் கவிதை உலகு பரந்தது; விரிந்தது; ஆழ்ந்தது; அகன்றது; நுண்ணியது. அதில் அருமையும் உண்டு; எளிமையும் உண்டு. அழகும் உண்டு; ஆழமும் உண்டு. மென்மையும் உண்டு; மேன்மையும் உண்டு. காதல் செவ்வியும் உண்டு; சமூகச் சாடலும் உண்டு. தத்துவப் பதிவும் உண்டு; வித்தியாசமான பார்வையும் உண்டு. மெல்லிய நகைச்சுவையும் உண்டு; நடைமுறைச் சிந்தனையும் உண்டு. முத்தாய்ப்பாக, வசந்தகுமாரனின் ‘சதுர பிரபஞ்சம்’ தொகுதிக்குக் கடித வடிவில் எழுதிய அணிந்துரையில் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், “எல்லாவற்றையும் கவிஞனே சொல்லி முடித்துவிடும் போக்கிலிருந்து மாறி, பாதி கவிதையை நீங்கள் சொல்லி, மீதி கவிதையை வாசகன் பங்கேற்று எழுதி முடிப்பதற்கான வாய்ப்பை இந்தக் கவிதைகளில் தந்திருக்கிறீர்கள்” (ப.16) எனக் குறிப்பிடுவது இங்கே மனங்கொளத் தக்கது.

“இருள் என் முகவரி.
ஒளி / நான் ஒளிந்து கொள்ளும்
இடம்”     
      (சதுர பிரபஞ்சம், ப.129)

என்னும் குறுங்கவிதை வழக்கமான செல்நெறியில் இருந்து மாறுபட்டு, புதிய நோக்கில் இருளையும் ஒளியையும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

“நான் வழிப்போக்கன்
இடைவழியில் / என்னைச் சந்திக்க வந்தவர்களே
என் மனைவியும் குழந்தைகளும்” 
(ப.128)

என்ற கவிதை, புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றையே சுருங்கிய வடிவில் கோடிட்டுக் காட்டி இருப்பது போல் தோன்றுகின்றது.

“ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என்  பீடு”   
  (1088)

எனக் காமத்துப் பாலில் தலைவனின் கூற்றாக வரும் குறளின் கருத்தினை நறுக்குத் தறித்தாற் போல் நான்கே சொற்களில் நயமுற வடித்துத் தந்துள்ளார் வசந்தகுமாரன்:

“வளைவாள் பெண் / உடைவான் ஆண்”   (ப.82)

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். வசந்தகுமாரனோ வழியில் கிடந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகுக்காக மனம் வருந்துகிறார்.

“மனசு சரியில்லை / வழியில் கிடந்தது
வண்ணத்துப் பூச்சியின் / சிறகு.”        
        (ப.51)

‘ஒரு நாள் உணவைஒழி என்றால் ஒழியாய், இருநாளைக்கு ஏல்என்றால் ஏலாய் – ஒருநாளும், என் நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது’ என வயிறு படுத்தும் பாட்டினைத் தமது நல்வழிப் பாடல் ஒன்றில் (11) எடுத்துரைப்பார் ஔவை மூதாட்டி. அவரது வாக்கினை நினைவுபடுத்தும் வகையில்,

“எப்பொழுதாவது / பெய்கிறது மழை
எப்பொழுதாவது / விளைகிறது வயல்
எப்பொழுதாவது / நடக்கிறது அறுவடை
எப்பொழுதும் / பசிக்கிறது வயிறு”        
    (ப.32)

என வயிற்றின் கொடுமையைப் பதிவு செய்துள்ளார் வசந்தகுமாரன்.

‘புத்தகம் என்ன செய்து விடும்?’ என்றா கேட்கிறீர்கள்? உங்களுக்கு அனுபவப் பொருள் பொதிந்த கவிஞரின் நறுக்கான மறுமொழி இதோ:

“கலைந்து கிடந்த என்னை
அடுக்கி வைத்தது / புத்தகம்”.      
   (ப.113)

‘மனிதனின் உணர்வுகளை ஒழுங்குப்படுத்தி, அவனது ஆளுமையைச் செதுக்குவதில் புத்தகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு’ என்பதே கவிஞர் இங்கே உணர்த்த விரும்பும் செய்தி.

ஒன்றும் இல்லாதவன் இருப்பவனிடம் கேட்கிறான்; இருப்பவனோ இறைவனிடம் இரந்து நிற்கிறான். ‘இதில் யார், யாரிடம் கேட்பது யாசகம்?’ என்பது கவிஞரின் வினா. ஆழ்ந்த தத்துவச் சிந்தனையைத் தன்னகத்தே கொண்ட கவிஞரின் குறுங்கவிதை:

“யாரிடம் கேட்பது / யாசகம்?
எல்லோர் கைகளிலும் / பிச்சைப் பாத்திரம்”.      
  (ப.133)

படிம அழகு மிளிரும் கவிஞரின் சித்திர மின்னல்:

“நதியின் பற்கள் / கூழாங்கற்கள்”    (ப.157)

‘அறிதோறு அறியாமை கண்டற்றால்” (1110) என்ற வள்ளுவத்தின் புதுக்கோலமாய் கவிஞர் படைத்திருக்கும் குறுங்கவிதை:

“எனக்குத் தெரியும் / எனக்கொன்றும்
தெரியாதென”.     
   (ப.176)

‘சொல் விளையாட்டு’ (Pun) என்னும் உத்தி சிறப்புற அமைந்த கவிஞரின் குறுங்கவிதை:

“எழுத நேரமிருக்கிறதா / என்று கேட்டார்கள்
எழுதாமலிருக்கத்தான் / நேரமில்லை என்று
எழுதிக் காட்டினேன்”.       
(ப.192)

‘சதுர பிரபஞ்சம்’ தொகுப்பில் அவ்வப்போது கடவுளை வம்புக்கு இழுக்கும் பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் கவிஞர். பதச்சோறு ஒன்று:

“பூமியை / அழகாக வரைந்து
அதில் / மனிதனைக் கிறுக்கினான்
கடவுள்.”      
(ப.222)

இப்போது புரிகிறதா மனிதன் ஏன் இப்படி இருக்கிறான் என்று?

“கொடுத்து வைத்திருக்க வேண்டும்
ஒரு நட்சத்திரம் / எரிந்து விழுவதைக் காண”     
  (ப.22)

என்னும் கவிதையைப் படித்ததும் ஒரு கூர்மையான வாசகரின் மனத்தில் தோன்றும் உணர்வு இதுவாகத் தான் இருக்கும்: ‘இப்படி ஒரு கவிதையைப் பெற நாமும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’

மென்மையான மலர்களின் மேன்மையைப் பறைச்சாற்றும் ஓர் அற்புதமான குறுங்கவிதை:

“அரசன் ஆனாலும் / தலை தாழ்த்தியே
முகர வேண்டும் / பூக்களை”.        
  (ப.221)

‘குணம் என்னும் குன்று ஏறி நிற்கும்’ கவிஞரின் எழுதுகோலில் இருந்து சில நேரங்களில் சீற்றம் வெளிப்படுவதும் உண்டு. இவ் வகையில் ஓர் எடுத்துக்காட்டு:

“அகிம்சை போற்றிய / என் கவிதையில்
ஈரமில்லையென / எவன் சொன்னான்?
எடு அரிவாளை!”     
                        (ப.161)

வசித்தல் (Existence) வேறு, வாழ்தல் (Living) வேறு என்பதை உணர்த்தும் ஓர் ஆற்றல்சால் கவிதை:

“மனிதனுக்குத் தான் / மிகப் பெரிய கூண்டுகள்
தேவைப்படுகின்றன / வசிப்பதற்கு.
பறவைகளுக்கோ / சிறிய கூடு போதும்
வாழ்வதற்கு”.      
                             (ப.141)

ஆறறிவு படைத்த மனிதன் மிகப் பெரிய கூண்டுக்குள் ஏனோ தானோ என்று ‘வசிக்கிறான்’; சின்னஞ்சிறு பறவையோ சிறிய கூட்டிற்குள் வாழ்வாங்கு ‘வாழ்கிறது’. இதில் யார் உயர்திணை என்ற கேள்வியை வாசகர் சிந்தனைக்கு முன் வைக்கிறார் கவிஞர்.

மனிதனின் சொல் வேறு, செயல் வேறு என்ற இரு வேறுபட்ட போக்கினைச் சாடும் கவிஞரின் தெறிப்பான கவிதை:

“அம்மனுக்குக் / கூழ் ஊற்றுவார்கள்.
அம்மாவுக்குச் / சோறு போட மாட்டார்கள்”.      
(ப.152)

இவர்களை ‘மாக்கள்’ என்ற சொல்லால் சுட்டுவது தானே சரி? பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைக்குச் சோறு போடாமல், அம்மனுக்குக் கூழ் ஊற்றி என்ன பயன்?

“பெளர்ணமியை வரைய / வர்ணம் போதாத போது
பிறைநிலவை / வரைந்து கொள்வான்
சமயோசித ஓவியன்”.        
  (ப.149)

இந்த சமயோசித அறிவு ஓவியனுக்கு மட்டும் அன்று, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருக்கும் தேவைப்படுகின்ற ஒன்றே.

“விருதுகள் வழங்காதீர் / எனக்கு -
என் மிகச் சிறிய வீட்டில் / வரவேற்பறை இல்லை”  
(ப.25)

இக் கவிதை வாயிலாகக் கவிஞர் வெளிப்படுத்தும் உரத்த சிந்தனை ‘எழுத்தாளரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தாமல், வரவேற்பறையில் காட்சிப் பொருளாக வைப்பதற்கு மட்டுமே உதவிடும் விருதுகள் வழங்கி என்ன பயன்?’ என்பதே.

மெல்லிய நகைச்சுவை உணர்வும் கைவரப் பெற்றவர் வசந்தகுமாரன் என்பதற்கான சான்று இதோ:

“அரிவாள் மீதேறி / ஆடு குடித்து
சந்நதம் கொண்டாடிய / சாமியாடிக்கு
கூட்டத்தில் ஒருத்தியாய் / மனைவியைக் கண்டதும்
மலையேறியது சாமி”.        
             (ப.81)

நெடுங்கவிதைகளை விட, குறுங்கவிதைகளே ‘சதுர பிரபஞ்சம்’ தொகுப்பில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. வேறு சொற்களில் கூறுவது என்றால், கவிஞரின் குறுங்கவிதைகளே நெடுங்கவிதைகளைக் காட்டிலும் படிப்பவர் உள்ளத்தை ஈர்ப்பதிலும் முந்திக் கொள்கின்றன.

செவ்விய காதல் சித்திரிப்பு

‘வசந்தகுமாரனின் காதல் குறிப்புகள்’ என்னும் அறிமுகத்துடன் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு ‘மழையை நனைத்தவள்’.

வள்ளுவர் காமத்துப் பாலில் படைக்கும் காதலன் ஒருவன், ‘நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும்; இத்தகைய தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?’ (திருக்குறள், 1104) என வியந்து மொழிவான். வள்ளுவர் வழியில் நடை பயிலும் வசந்தகுமாரனும்,

“சூரியன் / அறியுமோ / காதல் தீ”     (மழையை நனைத்தவள், ப.6)

எனக் காதல் தீயின் தனிப்பண்பினைப் பாடியுள்ளார்.

காதலன் பிறப்பு எடுத்தது எதற்காகத் தெரியுமா? இதோ, காதலனின் ஒளிவு மறைவு இல்லாத ஒப்புதல் வாக்குமூலம்:

“நீ / அழகாய் இருக்கிறாய் என்று
சொல்வதற்காகப் / பிறந்தவன் நான்”.     
(ப.14)

காதலன் மீன் உண்ணாமைக்குக் காட்டும் காரணம் சுவையானது. அவன் வாய்மொழியாகவே அதனைக் காணலாம்:

“நான் / மீன் உண்ணுவதில்லை
உன் விழிகளைப் போல் இருப்பதால்”.    
(ப.23)

காதலன் காதலியின் நலம் புனைந்து உரைக்கும் விதம் வித்தியாசமானது:

“ஆயிரம் பக்கங்களில் / எழுதப்பட்ட
சிறுகதை நீ”.            
                                    (ப.38)

ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்டால் அது எப்படி சிறுகதை ஆகும்? நெடுங்கதை என்று தானே அதைச் சுட்ட வேண்டும்? காதல் உலகம் விந்தையானது; அதில் எதுவும் நடக்கும், எப்படியும் நடக்கும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும்! கேள்விகளுக்கு அங்கே இடம் இல்லை.

ஈற்றடியால் உலகப் புகழ் பெற்ற கவிதை உண்டு. அது போலக் காதலனுக்குள் காதலி இரண்டறக் கலந்திருக்கிறளாம்!

“புகழ் பெற்ற / ஒரு கவிதையின்
கடைசி வரியாக / எனக்குள் நீ”    
  (ப.51)

என்பது காதலனின் உணர்ச்சி வயப்பட்ட கூற்று!

வசந்தகுமாரன் படைக்கும் காதலன் கவிதை மனம் கொண்டவன்; அதிலும் ஹைகூ கவிதை என்றால் அவனுக்கு உயிர். 

“ஒரு புள்ளிதான் / ஆனாலும் ஹைகூ
உன் உதட்டு மச்சம்”                       (ப.57)

என்னும் காதலனின் கூற்று இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஔவை மூதாட்டியிடம் முருகப் பெருமான் கேட்டது போல், ‘தாங்க முடியாதது எது?” என்ற கேள்விக்குக் கவிஞர் தரும் விடை இது:

“தாங்க முடியவில்லை / காதல் வன்முறை”            (ப.18)

காதல் உலகில் இயைபும் உண்டு; முரணும் உண்டு. “என்னைத் தேடினேன் / நீ அகப்பட்டாய்” (ப.70) எனக் கூறும் காதலன், “உனக்கு / மழை பிடிக்கும் என்பதால் / எனக்குக் குடை பிடிக்காது” (ப.71) எனக் குறிப்பிடுவதில் அழகிய முரண் கொலுவிருக்கக் காணலாம்.

காலம் கடந்து – காலத்தை வென்று – வாழும் வல்லமை படைத்தது உண்மைக் காதல். அக் காதலே,

“ஆயிரம் / ஆண்களுக்குப் பிறகு
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் / கண்டெடுத்து
கண்காட்சி வைப்பான் / நம் காதலை”   
   (ப.78)

எனக் காதலனை அறுதியிட்டு உறுதியாகப் பேச வைக்கின்றது!

பாலைவனம் தொடங்கி பிரபஞ்சம் வரை…

‘பாலைவனத்துப் பூக்க’ளில் தொடங்கிய கோ.வசந்தகுமாரனின் கவிதைப் பயணம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வற்றாத ஜீவ நதியைப் போலத் தொடர்ந்து ஓடி, தற்போது ‘சதுர பிரபஞ்சம்’ வரை வந்து சேர்ந்திருக்-கின்றது. அது ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி இருபத்தியோரம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் புதுவண்ணமும் வனப்பும், வலிமையும் வளமும் சேர்த்திட வேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு; விருப்பமும் கூட.


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்