பூமி எங்கள் தாய், அதனைப் பேணிக்காப்போம்

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A



லகில் கோடானு கோடி மனிதர்களுக்கும் கணக்கிட முடியாத உயிரினங்களுக்கும் உணவும் உறையுள்ளும் கொடுத்து வருவது நம் பூமித் தாய். சூரிய குடும்பத்திலுள்ள கோள்களுள் பூமிக்கு மட்டுமே உயிர் வாழ்வினம் வாழக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. நாம் வாழும் பூமித்தாயைப் பேணிக்காக்க வேண்டியது நமது தலையாய கடமை. நாம் என்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பூமியைப் பேணிக்காப்பாற்ற வேண்டியது அவசியம். புவி நாள் ஏப்ரல் 22ம் நாளாகும். 1970ம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளுடன் பூமி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 டின் கருப்பொருள் பிளஸ்ரிக்கினால் ஏற்படும் மாசுபடுத்தலுக்கு முடிவு கட்டுதலாகும். பிளாஸ்டிக் பொருட்கள் மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டு உடனே கழிவாகத் தூக்கி வீசப்பட்டு நிலத்தி;ல் கழிவாகக் கொட்டப்பட்டுக் கிடக்கின்றது. இவை சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றது, கட்டுக்கடங்காமல் ஏறக்குறைய நூறு கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானவை என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பூமி பிளாஸ்டிக் கிராமமாக மாறும் காலம் வந்துவிடுமோ என்றும் அஞ்;சப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

மனித இனம் மட்டுமே பூமியிலிருக்கும் பல்வேறு வளங்களைக் கூடதலாகப் பயன்படுத்துகிறது. பூமியை மாசுபடுத்துவதும் அதே மனித இனம்தான். 'எந்த அளவிற்கு எடுக்கிறோமோ அந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும்;' என்ற தத்துவத்தின் அடிப்படையில் மனித இனம் இயங்குவதில்லை. ஆனால் பூமியிலிருந்து எடுப்பதெல்லாம் எடுத்துக்கொண்டு கொடுப்பதெல்லாம் குப்பையும் கூளமும்தான். பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத இடம் வரை அது பரவியுள்ளது. இதற்கான ஆய்வறிக்கை கடந்த ஏப்பிரல் 24ல் வெளியாகியுள்ளது. பூமியின் வடதுருவப் பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண்ணிய அளவிலான பிளாஸ்டிக் அதிகம் காணப்படுகிறது. யாரும் வாழாத பனிப்பரப்பைக் கூட பிளாஸ்டிக்குகள் விட்டுவைக்கவில்லை. ஒரு லிட்டர் கடல் நீர் பனிக்கட்டியில் மட்டும் 12,000 நுண்ணிய பிளாஸ்டிக்குகள் உள்ளன என்றால் மிகுதி எப்படி இருக்கும்! இது ஆர்டிக் கடல் பகுதி முழுவதும் காணப்படுகிறதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஆய்வாளர்கள் கருதியதின் பார்க்க மூன்று மடங்கு அதிகம். இப்பனிக்கட்டிகளை ஆராயும் பொழுது மனித தடங்கள் உள்ளதாகத் தெரிகிறது. அதனைப் பின்பற்றிப்போனால் சைபீரியாவின் மீன்பிடிக்கப்பல்கள் இம் மாசுக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இதுமட்டும் இந்தப் பெரிய பிரச்சனைக்குக் காரணமாக இருக்க முடியாது. தினமும் பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து மிகப்பெரிய குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான 'த கிரேட் பசிபிக் கார்பேஜ் பார்ச';
(The Great Pacific Garbage Patch)  தான் இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப் பகுதியில் வாழக்கூடிய கடல்வாழ் உயிரினங்கள் இந்த நுண்ணிய துகள்களை உட்கொள்ளும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இதனால் அப்பகுதியின் உணவுச்சங்கிலியே பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மேலும் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இப்பனிக்கட்டிகள் உருகும்போது பிளாஸ்டிக் இல்லாத கடற்பரப்பிற்கும்கூட இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் சென்றடைந்தவிடும். அதனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உலகம் முழுக்க பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. அதனால் ஏற்படும் சூழலியல் விளைவுகளும் அதிகமாகவே உள்ளன. நம் நாளாந்த பாவனையிலுள்ள பிளாஸ்டிக் உட்பட்ட பல்வேறு கழிவுகளும் கடலைத்தான் சென்று அடைகின்றன. பல்வேறு உயிரினங்கள் இதனால் பாதிப்படைகின்றன. ஆர்டிக் பகுதியில் இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை, என்றாலும் இனிமேலும் அப்படி எதுவும் நிகழாமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்வது முடியாத காரியம். இருந்தாலும் அதனை மீள்சுழற்சி செய்வது, அதன் தயாரிப்பில் இருக்கும் ஒழுங்கு முறைகளை இன்னும் இறுக்கமாக்குவதன் மூலமும் கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பூமியானது மனிதருக்கும் கணக்கிடவே முடியாத உயிரினங்களுக்கும் உணவு மற்றும் உறைவிட வசதியை உறுதி செய்கிறது. ஆனால் மனிதர்கள் அதனை உணரவுமில்லை, அதனைப் பொருட்படுத்தவுமில்லை. அதனால் பூமியையும் அதன் பாதுகாப்பையும் சிந்திக்கவேயில்லை. மறந்தேவிட்டனர். அதன் பயனையும், அதன் பாதுகாப்பையும் மனதில்க் கொண்டு நினைவில் நிறுத்தவே பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
‘Every action has an equal and opposite reaction’ என்பது நியூடனின் விதி இங்கே பொருத்தமாக இருக்கும். நாம் இயற்கைக்குத் தீங்கு விளைவித்தால் இயற்கை நமக்கு எதிராகச் செயற்படும். இதற்குச் சுனாமி, வெள்ளம், சூறைக் காற்று போன்றவை உதாரணங்களாகும். இன்றைய நவீன உலகின் அவசர வாழ்க்கையில் நமக்கும் இயற்கைக்குமான உறவு பற்றிச் சிந்திப்பதுமில்லை அதற்கு நமக்கு நேரமுமில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறோம். குழந்தைகளையும் அதே முறையில் வளர்க்கிறோம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் தானே தெரியும்! அதனால் குழந்தைகளுக்கும் இயற்கை பற்றிய ஆர்வமும் இல்லை. அதுபற்றிய அறிவும் இல்லை.

இயற்கையின் ஆதரவு இல்லாது மனிதனால் ஒரு நிமிடம்கூட இவ்வுலகில் வாழ முடியாது. இது இன்றைய குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும். சந்தேகமே இல்லாமல்ச் சொல்லிவிடலாம் மனிதன்தான் பூமியின் முதல் எதிரி. இயற்கைக்கு எதிரான எந்த ஒரு கண்டுபிடிப்பும் மனிதனுக்குத் தற்காலிகத் தீர்வை மட்டுமே தருவதோடு மட்:டுமல்லாமல பூமிக்கு நிரந்தரமான தீமைகளைப்; தருகின்றது. சுற்றுச் சூழல் மாசு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. பருவமழையின்மையால் குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி மக்கள் சிரமப்படுதல், விவசாயம், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்திப் பூமியைப் பாதுகாக்கும் முகமாக ஆண்டு தோறும் அனைத்து நாடுகளிலும் 1970 ஆம் ஆண்டு முதல் ஏப்பிரல் 22ம் தேதி தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு சிறப்பு நாளாகும்.

ஜான் மெக்கானெல்
(John McConnell) உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலை மாசுபடுத்தாது காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ஆண்டு தோறும் புவி நாள் என்று ஒரு நாளைக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தார். அதே சமயம் அமெரிக்காவின் சுற்றுச் சூழலியல் நிபணர் கேலார்ட் நெல்சன் சுற்றுச் சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ம் திகதியை தேர்ந்து எடுத்தார். இந்த நாளின் போது புவியின் வட கோளப் பகுதி வசந்த காலமாகவும் தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் இருப்பது பொருத்தமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்தநாளை ஆண்டுதோறும் பூமி நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிசிகளும் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றன.

புவி வெப்பம் அதிகரித்துப் பனிப்பாறைகள் உருகத்தொடங்கியுள்ளதோடு பலநாடுகளில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட:;டுள்ளது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனவிலங்குகள், பறவைகள். சோலைகள், வளிமண்டலம், கடற்கரைகள், இவை அனைத்தும் மனிதகுலம் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டவை. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசங்களாகும். இவை அனைத்தினதும் பாதுகாப்பு சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஏன் ஆபத்தாகவும் அமைந்துவிடுகின்றன. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்த்துறை வளர்ச்சியின் காரணமாகச் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர்நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. எனவே சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிற்கு மனிதன் தள்ளப்படுகிறான். அதன் அவசியத்தை உணர்ந்து செயற்ப்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் வறட்சி மறுபுறம் வெள்ளத்தின் கொடுமையும் சூறாவளியும் என இயற்கையின் அனர்த்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுழற்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு சிறுய அளவில் முயற்சிகள் ஆரம்பமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது. மனிதனின் வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை யாரும் உணர்வதில்லை. ஆனால் மரங்கள் இல்லாவிட்டால் மனிதர் உயிரவாழ முடியாது. மனிதர்கள் செய்யும் மிக மூர்க்கத்தனமான செயல் மரங்களை அழிப்பதாகும். இதன் மூலம் பூமியை பாலவனமாக ஆக்குவதாகம். மனித அபிவிருத்திக்கும் அடுத்த சந்ததியினர்க்காகவும் மனிதன் காடுகளையும் மரங்களையும் திட்டமிட்டுப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்புடையவன். புவி வெப்பமடைந்து வருவதும். ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்பதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட சமநிலை மாற்றத்தின் விளைவுகளாகும்.

பூமி மனிதனுக்குத் தந்திருக்கும் வளங்கள் சொல்லில் அடங்காதவை. அவற்றை முறையான திட்டமிடலுடன் பயன்படுத்த வேண்டும். அதேபோன்று ஏனைய உயிரினங்களையும் சுதந்திரமாக வாழவிடவேண்டும். அப்பொழுது தான் பூமியின் எதிரகாலம் சிறப்பாகவும், மனித சமுதாயம் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும். இதன் அடிப்படையிலேதான் பூமி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாம் இழந்து கொண்டிருக்கும் இயற்கை அமைப்பை மீழப்பெற்றுவிடுவதே இந்த நாளின் பொதுவான நோக்கமாகும். இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த நாம் செய்ய வேண்டியது இயன்றமட்டில் மரங்களை நடவேண்டும். குறைந்தது ஒருவர் ஒரு மரமாவது நட்டுப் பாதுகாத்து வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும். பாடசாலைகளிலும் சுற்றுப்புறங்களில் மாணவர்களைக் கொண்டு மரங்களை நட்டுப் பாதுகாத்திட வேண்டும். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரிடமும் விழிப்புணர்வு எற்படுத்தி வீட்டில் பாவனைக் குறைப்பு, மீழ்பாவனை, மீழ்சுழற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பின் போக்கை அறிந்து ஆவன செய்திட ஊக்கப்படுத்த வேண்டும். புவி நாளன்று பச்சை அல்லது மண்ணிற உடைகளை அணிந்து புவி நாளைக் கொண்டாடிப் பரப்ப முயற்சிக்கலாம். ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச் சூழலியல் நிபுணர் கேலார்ட் நெல்சன் சுற்றுச் சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 அம் ஆண்டு ஏப்பிரல் 22 ல் நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் புவி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஏப்பிரல் 22 உலகெங்கும் உள்ள பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் புவிநாளாக, ஒரு சிறப்பு நாளாக இந்நாள் இருந்து வருகிறது.
புவிநாள் பேணுவோம்! புவியைப் பெருமையுடன் போற்றிக் காப்போம்!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்