புத்தகங்கள் பரிசளிப்போம்
திருமதி செல்லையா யோகரத்தினம்
M.A
எப்பிரல் 23 சர்வதேச புத்தக தினம்:
வீட்டுக்கு
ஒரு பூசை அறை இருப்பதைப் பார்க்கலாம் ஆனால் புத்தக அறை இருப்பது கிடையவே
கிடையாது. எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஓரிரு புத்தகம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம். புத்தக அறைகூடப் பூசை அறைதான் என்பதைப் பலரும்
உணருவதில்லை. இன்றைக்கு சகல துறைகளிலும் அறிவு வளர்ந்து, பரந்து,
விரிந்து, உயர்ந்து கொண்டே வருகிறது. கலை, இலக்கியம், விஞ்ஞானம், தொழில்
நுட்பம் எனச் சகல துறைகளிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்
சிறந்து வளர்ந்து எல்லை கணிக்க முடியாது போய்க் கொண்டே வருகிறது.
இவற்றின் நுட்ப திட்பங்கள் எழுத்தில் வடிக்கப்பட்டுப் புத்தக உருவத்தில்
விளங்குகின்றன. 'வீடு தோறும் நூலகம் வேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா.
இந்த மின்னணு யுகத்தில் கணினி, இiணைம், இணையத்தளம், மின்னணு நூலகம்
ஆகிவற்றின் மூலம் தேவையான செய்திகளை அறிந்திட முடியும். ஏன்
புத்தகங்கள்கூட பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் நூலகம்
தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம்
வளர்ந்தாலும் ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து படிப்பதிலுள்ள சுகமே தனி.
இன்ரநெட்டில் ஒன்றைப் படிக்கவேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி
செய்யப் படவேண்டும். ஆனால் புத்தகம் நம் கையில் இருந்துவிட்டால்
படிப்பதற்குத் தடை ஏதுமில்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம்
சாய்ந்தவாறு படிக்கலாம், கட்டிலில், மொட்டை மாடியில், படிக்கட்டில், மர
நிழலில், வயல் வரம்பில், எங்கும் எப்படியும் எந்த நேரத்திலும் ஏன்
பிரயாணத்தில் கூடப் படிக்கலாம். என்னதான் இலத்திரனியல் வாசிப்பு, இணையத்
தளங்கள், கூகிள் போன்ற வசதிகள் இருந்தாலும் கையிலே ஒரு புத்தகத்தை
வைத்து பார்த்து இரசித்து வாசிப்பதற்கு ஈடாகாது. வீட்டுக்கு ஒரு நூல்
நிலையம் என்பது ஓர் அறிவுக் கோயிலின் வாயில் திறக்கப்பட்டுவிட்டது
என்பதே உண்மை. இனிக் கோயிலைத் தரிசிப்பதில் நடைமுறைச் சிக்கல் எதுவும்
இருக்கப்போவதில்லை.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் வாழ்நாளை அதிகரிக்கும் என ஆய்வுகள்
கூறுகின்றன. வீட்டுக்கு வெளிச்சம் தருவது யன்னல். அதேபோல மக்களுக்கு
அறிவைத்தருவன புத்தகங்கள். புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். புத்தகங்களை
விடச் சிறந்த நண்பன் வேறில்லை என்பதைப் புத்தகப் பிரியர்கள் மனமார
ஒப்புக்கொள்வார்கள். நல்ல புத்தகங்களைப் படிக்கும்போது நல்ல சிந்தனைகள்
தோன்றுகின்றன. நம்முடைய ஆற்றலும் அறிவும் வளர்கின்றன. மனதில் உள்ள
சோர்வு விலகுகிறது. அதனால்த்தான் 'ஒரு நூலகம் திறந்தால் நூறு
சிறைச்சாலைகள் மூடப்படும்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட வாசிப்புப்
பழக்கம் மக்களிடையே வளரவேண்டும். வளர்க்கப்பட வேண்டும். அதற்காகவே
வீட்டுக்கு வீடு நூலகம் அவசியமாகிறது. விழாக்கள், சடங்குகளின் போது
புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் பழக்கம் நம்முள் வேரூன்றிவிட்டால்
வீட்டு நூலகங்கள் மேலோங்கி வளரும். இளமையில்த்தான் மிகச்சிறந்த பண்புகள்
பதியம் போடப் படுகின்றன. புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தைப் பிள்ளைகளுக்கு
இளமையிலேயே ஊட்டிவிட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து
கற்றுக் கொள்வதைவிட அவர்கள் செய்வதைப் பார்த்து 'போலச் செய்து'
மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் புத்தகம்
வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். .சில பாடசாலைகளில்
ஒவ்வொரு வகுப்பிலும் நூலகம் உண்டு. ஒரு அதிபர், மாணவன் என்ன தப்புச்
செய்தாலும் தண்டிக்க மாட்டார், இதமாகப் பேசித்திருத்தி விடுவார். ஆனால்
அவன் புத்தகப் பையில் வாசிப்பதற்கான புத்தகம் இல்லையென்றால் 'தோலை
உரிப்பது' என்பது உண்மையாகவே நிகழ்ந்துவிடும். பையன் வாசிக்கிறானோ
இல்லையோ புத்தகப் பையில் வாசிப்பதற்குப் புத்தகம் கண்டிப்பாக
இருக்கவேண்டும். அதுதான் அவருடைய கொள்கையும் கோட்பாடும். இதே மாதிரி ஒரு
தந்தை தன் மகளை இரவு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை படிக்கும் மேசையை விட்டு
நகர அனுமதிப்பதில்லை. இதுதான் சட்டம். மேலும் அந்தப் பாடசாலையில் ஒரு
பாடத்திற்கு ஆசிரியர் வகுப்புக்கு வரவில்லை யென்றால் வகுப்பில் பயங்கர
அமைதி நிலவும், சத்தமே கேட்காது. காரணம் சகல மாணவர்களும் வாசிப்பில்
ஈடுபட்டிருப்பர். இதற்குக் காரணம் அந்த அதிபர். அந்த அதிபரின்
அனுசரணையில் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்ற மாணவர்கள் வாழ்க்கையில் ஏதோ
ஒரு விதத்தில் முன்னுக்கு வந்திருப்பார்கள். வந்துவிடுவார்கள்.
சந்தேகமேயில்லை. 'உங்கள் மனத்திற்குப் பிடித்த இன்ப மயமான இடம் எது'
வென்று ஆப்பிரகாம் லிங்கனைக் கேட்டபோது 'என் மனத்திற்குப் பேரின்பத்தை
அள்ளி அள்ளி வழங்குவது நூலகமே' என்று கூறியுள்ளார்.
'இன்றைய செய்தி நாளைய சரித்திரம்.' எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது
நிகழ்ந்தவாறு இன்று நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ
எப்பொழுதோ நடந்;ததை நடந்தவாறு கண்டுபிடித்து எடுத்து விளக்குபவை
புத்தகங்களே. எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான்
வாழவேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அறிவையும்
அனுபவங்களையும் பயன்படுத்தி அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத்
தொடர்வதனாhல்த்தான் மனிதவாழ்க்கை இனிதே வளர்ச்சி பெற்று வருகிறது. நம்
முன்னோர் அறிவையும் அனுபவங்களையும் அருஞ்செல்வங்களாக நமக்கு தரும் இனிய
நண்பர்கள் புத்தகங்களே. சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். நூலைப்
படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒருநாள் மாண்டு போகலாம் ஆனால்
என்றென்றும் வாழ்பவை நூல்களே. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரம்
தேன் கூடாகிறது. அதுபோல ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரம்
புத்தகமாகிறது. இவை உண்மைகளின் ஊற்றுக்கண். புத்துலகு நோக்கி மனிதனை வழி
நடத்துபவை புத்தகங்கள். புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச்சுரங்கத்தின்
வாயிலைத் திறக்கிறான். 'வாசிப்பு ஒருவனை முழுமனிதனாக்குகிறது.' என்றார்
பிரான்சிஸ் பேக்கன். ;உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை
முழுமையாக அளிக்கும் நண்பனே புத்தகங்கள்.' என்றார் கவிஞர் லோங்பலோ.
காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியவை புத்தகங்கள்.
எந்தச் சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் பேராற்றலைப் புத்தகங்கள்
புகட்டுகின்றன. சிறந்த பத்தகங்கள் சிந்தனையைத் தூண்டி வளர்ப்பதோடு மனதை
உழுது பண்படுத்தி பயன்பாடுடையதாக ஆக்குகிறது.
நாளாந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்பிலே
குளிப்பாட்டப்பட்டதும் புத்தகங்கள்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம்
காட்டும் செயல்களாகும். அரண்மனை நூலகத்தில் ஏராளமான நூல்களைச் சேகரித்து
வைத்த அக்பர் எழுதப்படிக்கத் தெரியாதவர். இருந்தும் நல்ல நூல்களை
வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப்பொறைமிக்க சான்றோராகவும்,
சான்றாளராகவும் விளங்கினார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் பழம்
காலத்தில் எங்கள் நாட்டிலும் இருந்ததில்லை, புத்தகமே இல்லையே!
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏட்டுச் சுவடிகள் பெறக்கூடியதாக இருந்தன.
ஆனால் அக்பரைப் போலவே கல்வி அறிவின் ஆற்றலை மக்கள் உணர்ந்திருந்தனர்.
தாங்கள் கைநாட்டாக இருந்தாலும் தங்கள் குழந்தைகள் கல்வி அறிவு
பெற்றுவிட வேண்டும் என்ற அவாவினாலும், ஆர்வத்தினாலும்
குருகுலக்கல்விக்கோ, திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கோ அனுப்பிக் கல்வி
கற்றிட வைத்தனர். அந்தக்காலத்தில் செவிவழிக் கல்வியே இருந்தது. அதனால்
எல்லோரும் ஞாபக சக்தி மிகுந்தவர்களாக இருந்தனர். புத்தகம் அச்சேறி வராத
காலம்தொட்டே ஏடுகளைத் தேடித் தேடிப் புரட்டிப்புரட்டிக் கற்றுத் தங்களை
வளப்படுத்திக் கொண்டனர். அவர்கள் புரட்டிய ஓலைச் சுவடிகள் பல அழிந்து
போக சில இப்பொழுதும் சான்றுபகர்வனவாக பெறக்கூடியனவாக உள்ளன. 'காட்டுமிராண்டித்தனமான
நாடுகளைத்தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினாலேயே ஆளப்படுகின்றன.'
என்பது பேக்கன் கூற்று.
பொதுவாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக் குறைவு என்றே
சொல்லலாம். புத்தகம் படிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர்களைப் புத்தகப் புழு
அல்லது பத்தகப்பூச்சி என்று சொல்வார்கள். இசைக் கருவிகளை மீட்டுவதை
வாசிப்பு என்பது போலப் புத்தகம்; படித்தலையும் வாசிப்பு என்பார்கள்.
ஒருவரின் நேரம் வெறும்பொழுதாக இன்றி நறும்பொழுதாகவும், வெட்டிப்
பொழுதாக அகாமல் வெற்றிப்பொழுதாகவும் மாற்றுவது நூல்கள் வாசிப்பிற்கே
உண்டு. சிக்கல்களை எதிர் நோக்குவதற்கும் சவால்களைச் சமாளிப்பதற்கும்
பத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையையும்
எதிர்கொள்ளும் பேராற்றலை புத்தகங்கள் நமக்குத் தருகின்றன. இடுக்கண்
வரும்போது உடுக்கை இழந்தவன் கைபோல ஓடி வந்து உற்ற துணையாக,
வழிகாட்டியாக இருப்பவை புத்தகங்களே. நமக்குமட்டுமல்ல அடுத்து வரும்
தலைமுறை தலைமுறையாக வழிகாட்டி வாழ்வில் ஒழியூட்டுபவை புத்தகங்களே.
'ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான இணைப்பு.
தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் இடையிலான பாலம்'; என்கிறது
யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான அறிக்கை. மேலும் ;புத்தகங்கள்
ஒட்டுமொத்த மனிதகுலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன, மனித
குலத்தின் இலட்சியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்து ஒலிக்கும்
குரல்களைக் கொண்டாடும் நோக்கத்துடன் உலக மற்றும் காப்புரிமை தினம்
அமைந்திருக்கிறது' எனக்குறிப்பிட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ
அமைப்பு ஏப்பிரல் 23ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக
கொண்டாடி வருகிறது. இது உலக புத்தக தினம் என்று அழைக்கப்படுகிறது.
அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள்
பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை
போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம்
ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்பிரல் 23 உலக புத்தக தினமாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்பிரல் 23 அன்று
உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப் படுவதைப் பொருத்தமானதாக யுனெஸ்கோ
நிறுவனம் கருதியது.
பத்தகங்கள் இன்றி மனிதம் இத்தனை உயர்ந்து வளர்ந்திருக்க முடியாது. இது
அனைவரும் அறிந்த உண்மை. காகிதமே கண்டுபிடிக்கப்படாத அந்த நாட்களில்
மலைக்குகைகளில்த் தொடங்கி ஓலைச் சுவடி வரை தமது எண்ணங்களை எமது
மன்னோர்கள் அடுத்த தலை முறையினர் அறிந்து கொள்ளும் வண்ணம் பொறித்து
வைத்தே சென்றுள்ளனர். தமிழ்மொழி இன்று செம்மொழி ஆகிவிட்டது. மிகப்
பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழர் வாழ்வைப் பண்பாட்டைக்
கலாச்சாரத்தை முன்வைக்கும் சங்க இலக்கியங்கள், அற உலகைச் செறிவோடு
செதுக்கி வைத்த திருக்குறள் தொடங்கிக் கல்தோன்றி மண் தொன்றாக் காலத்தே
முன் தோன்றியதே புத்தகம். கன்பூஷpயசின் அனலக்டஸ், ஹோமரின் ஒடிசி,
பிளேட்டோவின் குடியரசு, அரிஸ்டாட்டலின் எத்திக்ஸ் என கி.மு நான்காம்
நூற்றாண்டாண்டிற்குள் மலர்ந்த பொக்கிசங்கள் எங்கள் கைக்குக்
கிடைத்திருக்குமா? கதை கூறும் மரபிற்கு ஈசாப், ஆயிரத்தொரு இரவுகள்,
சாகுந்தலம், மணிமேகலை, காதம்பரி, டாண்டேயின் டிவைன் கொமெடி, ஷேக்ஸ்பியர்
என புத்தகங்கள் புதிய விடியலைத் தேடி மனித இனத்தின் கையிருப்பை காட்;டி
நின்றன. அறிவியலில் கோபர்நிகஸின் ரிவலுஷனர், கலிலியோவின் இரு
தத்துவங்களுக்கான விளக்கம், ஆக்கிமிடிஸின் தத்துவம், ஹார்வேயின்
உடற்கூறுpயல், என அறிவியல் எழுச்சிக்கே வித்திட்டு உலகின் சிந்தனைப்
போக்கையே மாத்திய நூல்கள் பலப்பல. சார்ல்ஸ் டார்வினின் உயிர்களின்
பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு
(On
the Origin of Species)
அன்றைய மூடநம்பிக்கையை
உடைத்தெறிந்தது. சிக்மண்ட் பிராய்ட் டின்
(The
Interpretation of Dreams
) உளவியலின் பல உண்மைகளை
வெளிக்கொணர்ந்தது. கார்ல் மார்க்ஸ்சின் மூலதனம்
(Das
Capital)
கம்யூனிஷத்தின் பைபிள்
என்று அழைக்கப்படும் புத்தகம் நமக்குக் கிடைத்தமை வரப்பிரசாதமே.
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோல நல்ல
புத்தகங்களைத் தெரிவதிலும் கவனமாக இருக்கவேண்டும். உலகப்புத்தக
தினத்தில் வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டு செல்வோம். புத்தகங்களால்
சமூக மாற்றத்தின் விடியலைச் செதுக்கவோம். புத்தகமே உலகம் என வாழ்பவரைப்
போற்றுவோம். புத்தகங்கள் அன்பளிப்புச் செய்வோம். மகிழ்ந்திருப்போம்.
அனைவருக்கும் ஏப்பிரல் 23 உலகப் புத்தகதின வாழ்த்துக்கள்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|