எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 1
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம். ஜி. ஆரும் சிறுவர்களும்:
வரும்
ஜுலை பதினைந்தாம் நாள் எம் ஜி ஆரின் 101 பிறந்த நாள் விழா கின்னஸ் சாதனை
புத்தகத்தில் இடம்பெறும் வகையில் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்
கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கு கொள்வோரில் என்பது
சதவீதம் பேர் எம் ஜி ஆர் திரையுலகை விட்டு வெளியேறிய பிறகு அதாவது 1977
க்கு பிறகு பிறந்தவர்கள். அவர்கள் பல பெயர்களில் எம் ஜி ஆர் ரசிகர்
மன்ற குழுக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர் கட்சி சாராத இந்த
ரசிகர் மன்றங்கள் .எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை உலக அளவில் சிறப்பாக
கொண்டாட திட்டமிட்டுள்ளது. எம் ஜி ஆர் வழியில் நிறைய தான தர்மங்கள்
செய்து கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன. இவர்களில் பலர் எம் ஜி ஆர்
திரையை விட்டு வெளியேறிய பின்பு பிறந்தவர்கள். இவர்கள் எப்படி இந்த
கொண்டாட்டத்தை நடத்த முனவந்துள்ளனர்? என்ற வினா எழுந்த போது இவர்கள்
சிறுவர்களாக இருந்த போது பார்த்த எம்.ஜி.ஆர் படங்கள் மனதில்.பசுமையாகப்
பதிந்துவிட்டன. இவர்களின் குடும்பத்தினர் எம் ஜி ஆர் ரசிகர்களாக
இருந்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் மனதில் எம் ஜி ஆர் இடம் பிடித்தது
எப்படி என்ற ஆய்வில் பல கருத்துக்கள் தென்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாக
கான்போம்.
''நல்ல
நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி" என்று
தாலாட்டுப் பாடல்கள் உட்பட குழந்தைகளுக்கான அறிவுரை பாடல்களை சுமார்
இருபதுக்கு அதிகமாகப் பாடிய எம் ஜி ஆர்., சிறுவர்களுக்கும் தம் ரசிகப்
பட்டாளத்தில் முக்கிய இடத்தைக் கொடுத்தார். இன்றைய குழந்தைகளே நாளைய
இளைஞர்கள் என்பதால் சிறுவர்களிடம் தம் பாட்டும் படமும் போய்ச சேர
வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்,
எம் ஜி ஆர் தனக்கு பாடல் எழுதும் பாடலாசிரியரிடம் ‘என் தனி பாடல்கலின்
பல்லவியை இரண்டு வயது குழந்தை பாட வேண்டும்’ என்பாராம், ஏனெனில் இரண்டு
வயதில் பிள்ளைகளுக்கு நன்கு பேச தெரிந்துவிடும். அப்போது அவை நன்றாக
பாடவும் ஆரம்பித்துவிடும், இந்த வயதிலேயே குழந்தைகள் தனது பாடல்களை
பாடத தொடங்கிவிட வேண்டும் என்பது எம் ஜி ஆரின் குறிக்கோளாக இருந்தது.
அது நிறைவேறியதற்கு சரித்திரம் சான்று காட்டுகிறது.
எம்
ஜி ஆரின் பாடல்களை இரண்டு வயது முதல் பாடி வந்த சிறுவர்கள் அவரையே தம்
மானசீக குருவாக ஏற்றுக்கொண்டனர். அவரை தன் வாழ்வின் முன்னோடியாகவும்
தலைவராகவும் போற்றி வந்ததால் இன்றும் அவர்களால் அவரை மறக்க இயலவில்லை..
அன்பான சிற்றன்னையை விளக்கும் சித்தி என்ற பழைய படத்தில் சிறுவர்கள்
எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
என்ற பாட்டை பாடி வரும் காட்சி இடம்பெற்றது, இது அக்காலத்தில்
சிறுவர்களிடம் இருந்து வந்த அன்றாடப்பழக்கம் தான்.
சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நல்லவர்களாகவும்
வல்லவர்களாகவும் வர வேண்டும் என்று விரும்பிய எம் ஜி ஆர் இரு படங்களில்
உடற்கல்வி ஆசிரியராக தன் கதாபாத்திரத்தை அமைத்துக்கொண்டார். ஆனந்த ஜோதி
படத்தில் மாணவர்கள் டிரில் செய்யும் காட்சியில் இடம்பெற்ற ‘ஒரு தாய்
மக்கள் நாம் என்போம்’ என்ற பாட்டு சில பள்ளிகளில் காலையில் பாடப்படும்
பிரார்த்தனை கூட்டத்தின் பாடலாக இருந்தது.
எம்
ஜி ஆர் ரசிகைகள் தம் பிள்ளைகளை எம்.ஜி.ஆர் ரசிகர்களாக வளர்த்தனர்.
ராஜாஜி ஒரு பெண்ணை படிக்க வைத்தால் ஒரு குடும்பமே கல்வியறிவு பெறும்
என்றார். அது போல ஒரு பெண் எம்.ஜி.ஆர் ரசிகையானால் அவள் பிள்ளைகளும்
எம்.ஜி.ஆர் ரசிகராக வாய்ப்புக்கள் மிகுதி. தாய்மார் மூலமாக சிறுவர்களை
கவரும் இந்த உத்தியும் இன்று வரை எம் ஜி ஆருக்கு புதிது புதிதாக
ரசிகர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
வணிக நோக்கத்துக்காக எம் ஜி ஆர் சிறுவர்களை கவர முயன்றார் என்று
சொல்லிவிட முடியாது. உண்மையிலேயே அவர் சிறுவர்களின்பால் அதிக அக்கறையும்
பொறுப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். அவருக்கு குழந்தைகள்
இல்லையென்றாலும் அவர் தன வீட்டில் தன அண்ணன் பிள்ளைகளையும் ஜானகி
அம்மாவின் மகனையும் ஜானகி அம்மாவின் அண்ணன் பிள்ளைகளையும் சொந்த தகப்பன்
போல வளர்த்து வந்தார். அவர் வீட்டில் எப்போதும் ஏழெட்டுபிள்ளைகள்
வளர்ந்து வந்தனர். அவர்களிடம் அவர் நல்ல பண்புகள் வளர வேண்டும் என்பதில்
கண்டிப்பாக இருந்தார். அவருடைய நண்பர்கள் வீட்டு பிள்ளைகளும் எம் ஜி ஆர்
வீட்டில் வந்து விளையாடிச் செல்வதுண்டு.
எம் ஜி ஆர் படங்களில் காதல் காட்சிகள் மிகையாகக் காணப்படும், எனவே அவர்
படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று ஒரு சாரார்
அக்காலத்தில் கருதியதுண்டு, எம் ஜி ஆர் படங்கள் இன்பியல் முடிவு
கொண்டனவாகவும் தன்னம்பிக்கை அளிப்பனவாகவும் இருந்ததால் சிறுவர்கள் எம்
ஜி ஆர் படத்தையே விரும்பினர். குடும்பப் படங்கள் என்ற பெயரில் அழுகை,
சாவு போன்றவற்றால் மனதை வருத்துகின்ற வாழ்க்கையில் அச்சம் ஊட்டுகின்ற
படங்களை சிறுவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் எம்
ஜி ஆர் படத்தை பார்க்க விரும்பினர். அவை அவர்களுக்கு மனதுக்கு
மகிழ்ச்சியும் வாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊட்டின.
எம் ஜி ஆர் காபி தேநீர் குடிப்பதில்லை; மது அருந்துவதில்லை; புகை
பிடிப்பதில்லை போன்ற நல்ல பழக்கங்களை பின்பற்றி வந்ததால் அவர் தன
படங்களிலும் அப்படியே நடித்தார். நிஜத்திலும் படங்களிலும் அவர் தன்
அம்மாவை மிகவும் நேசித்தார். படங்களின் தலைப்பை தாய் சொல்லை தட்டாதே,
தாயை காத்த தனயன் என்று தாயை போற்றும் வகையில் வைத்தார், இரண்டு வயதில்
தந்தையை இழந்த எம் ஜி ஆர் தாயின் பராமரிப்பில் வாழ்ந்ததால் அவர் தன்
அன்னையை தெய்வமாக போற்றினார். தாய்க்கு நல்ல மகனாக வாழ்ந்த அவர் மற்ற
பிள்ளைகளும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர வேண்டும் என்று
நினைத்து தன் படங்களில் சிறுவருக்கான நல்ல கருத்துக்களை அமைத்தார்.
ஏழு வயதில் தன அன்னையைப் பிரிந்து மூன்று வேளை சோற்றுக்காக நாடகக்
கம்பெனியில் சேர்ந்த எம் ஜி ஆர் தாய்ப்பாசத்துக்கு ஏங்கினார். அந்த
ஏக்கமானது சிறு வயதுப் பிள்ளைகளின் உணர்வை அறிந்து அவர்களுக்கேற்ற
பாடல்களையும் காட்சியையும் வடிவமைக்க அவருக்கு உதவியது. தாயிடம் கடவுள்
நம்பிக்கையை பெற்ற எம் ஜி ஆர் ஆரம்பத்தில் கழுத்தில் தாமரைமணி மாலை
அணிந்தவராக காங்கிரசில் இருந்தார். பின்பு அண்ணாவில் சமூக சீர்திருத்தக்
கருத்துக்கள் கவரப்பட்டார். ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்
பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்று அண்ணா தெரிவித்ததால்
கடவுள் பக்திக்கு மனதளவில் இடமளித்த திமுகவில் சேர்ந்தார். திமுக
அக்காலத்தில் மக்களுக்கு பகுத்தறிவு மூட நம்பிக்கை அகற்றுதல், தன்மானம்
வளர்த்தல், தமிழ்மொழிப் பற்று போன்ற கொள்கைககளைப் பரப்பி வந்ததால் தன்
படங்களில் அக்கருத்துக்களைய பிரச்சார நோக்கில் இடம்பெறச் செய்தார்.
சிறுவர்கள் எம் ஜி ஆரின் சீர்திருத்தக் கருத்துள்ள பாடல்களாலும்
காட்சிகளாலும் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறாக எம் ஜி ஆரின் கருத்து
பாசறையில் வளர்ந்து வந்த சிறுவர்கள் பெரியவரான பிறகும் வரை மறக்கவில்லை.
அவரை வாழ்வின் வழிகாட்டியாக கொண்டவர்கள் இன்று தெய்வமாகவே கருத
தொடங்கிவிட்டனர். இன்றும் அவருக்கு பல ஆயிரக்கணக்கான மன்றங்கள் இயங்கி
வருகின்றன. அவை கட்சி சார்பில்லாமல் சமூக பணிகள் செய்து வருகின்றன.
இனி மேற்கண்ட கருத்துக்களை அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகக்
காணலாம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|