சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 33

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)


கவலைப்படாதே தோழி! காதலன் சென்றது நல்ல வழி!

முல்லை நிலத்து மக்களின் தொழில் ஆடுமாடுகளை மேய்ப்பது. அதன் மூலம் கிடைக்கும் பால். தயிர், நெய் என்பவற்றை ஏனையோர்க்கு விற்று அல்லது பண்டமாற்றுச் செய்து தமக்குரிய பொருட்களை வாங்கி வாழ்க்கை நடத்துவதே அவர்களது வாழ்வியலாக இருந்தது. கோடைகாலத்தில் தம் மந்தைகளை மேய்ப்பதற்காகப் புல்தரைகளை நாடியும், நீர்நிலைகளைத் தேடியும் செல்லவேண்டிய தேவை ஆடவர்களுக்கு இருந்தது. அதனால் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மட்டுமன்றி, மாதக்கணக்கிலும் அவர்கள் தம் சொந்த இடத்தைவிட்டுத் தொலை தூரம் சென்று தங்கவேண்டி ஏற்படும். அப்போதெல்லாம் ஆடவரைப்பிரிந்த அரிவையர் தம் காதலர் திரும்பிவரும்வரை கவலையொடு காத்திருப்பார்கள்.

அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் வேனிற்காலத்தில் வெகுதூரம் சென்றதலைவன் வெப்பத்தின் கொடுமையால் கடுமையாகத் துன்பப்படுவான் என்று நினைத்துத் கவலைப்படுகின்றாள தலைவி. 'வேனிற்காலம் கடந்துவிட்டது, இப்போது வெப்பம் தணிந்துவிட்டது, அதனால் கவலைப்படாதே' என்றுசொல்லி அவளைத் தேற்றுகிறாள் தோழி. அவ்வாறு தலைவியின் கவலையைப் போக்குவதற்கான தோழியின் வார்த்தைகளாக அமைந்த பாடல்கள் முல்லை நிலத்தின் அழகையும், அந்த மக்களின் வாழ்க்கை முறையினையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகின்றன.

ஐங்குறு நூற்றில், முல்லைத்திணையில் 'புறவணிப்பத்து' என்ற அதிகாரத்தின் கீழ் வரும் பத்துப் பாடல்கள் தோழியானவள் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு அவன் சுகமாக இருப்பான் என்பதற்கான காரணங்களைப் வரிசைப்படுத்திக் கூறுவதாக அமைந்தவை.

தோழியின் கூற்று முல்லைத்திணைக் காட்சியினை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. அவள் தலைவியைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறாள்:

'அழகிய நிறம் கொண்ட பெரியமலையில் கான மயில்கள் களிப்போடு நடனம் புரிகின்றன. அது அந்த மலையில் நீலமணிகள் பதித்ததைப்போல உள்ளது. மயில்கள் மலையில் நின்ற ஆடுகின்றன என்றால், அது மழைக்காலத்திற்கான அறிகுறி அல்லவா? எனவே மயில்கள் ஆடக்கூடியவாறு பசுமையாகவும், உடலுக்கு இதமான குளிராகவும் இருக்கும் அந்த மலையின் வழியே பயணம் செய்யும் தலைவனுக்கு எவ்வித தன்பமும் நேராது. அவன் சுகமாக இருப்பான்.

சுட்ட பொன்னைப் போன்ற நிறத்தையுடைய கொன்றை மலர்களைச் சூடிக்கொண்டு இளம் வீரர்கள் (மள்ளர்கள்) தங்கள் காதலிகளோடு பொழிலாட்டயர்தலுக்குச் செல்லும் காடு அது. அங்கே கள்வர்களாலோ, விலங்குகளாலோ எவ்வித ஆபத்துமில்லை. அதனால்தானே இளைஞர்கள் சோடிகளாக அங்கே இன்பம் துய்க்கச் செல்கிறார்கள். எனவே எத்தகைய ஆபத்துக்களும் உன் காதலனுக்கு இல்லை.

அவன் சென்ற வழியில் எங்கும் நீர்வளம் நிறைந்துள்ளது. அது மேகங்கள் பொழிகின்ற மழையினால் செழிப்படைந்த காட்டுப்பகுதியைக் கொண்டது. அங்கே அவனுக்குத் தாகம் தீர்க்கவும், நிழலில் இளைப்பாறவும் முடியும் அதனால் அந்தவழி அவன் செல்வதற்கு உகந்ததாகவே இருக்கும்.

உன் காதலர் சென்ற வழி குளிர்ந்த மாரிகால மழையினால் அழகும் பசுமையம் உண்டாகி அதனால் உயிர்கள் எல்லாம் இன்ப உணர்வைப் பெறுகின்ற பகுதி. அங்கே குட்டியோடு பிணைமான் கூடி உலவித்திரியும். எனவே கொடியவிலங்குகள் அங்கே இல்லை என்பது உறுதி. அதனால் அந்தவழி நன்றாகவே இருக்கும்.

அவன் சென்ற காட்டு வழியிலே நிலத்திற்கு அணிசெய்கின்ற நெய்தல் பூக்கள் மலர்திருக்கும். பொன்னின் நிறம் கொண்ட பூங்கொத்துக்களையுடைய கொன்றை மரங்கள் செழித்து நிற்கும். குருந்த மரங்கள் பூத்திருக்கும். பிடவம் மலர்களும் நிறைந்திருக்கும். எனவே அந்தவழி உன் காதலன் செல்வதற்கு மிகவும் இன்பமானதாக இருக்கும்.

அங்கே பனிக்கட்டிகளோடு குளிர்ந்த மழை பெய்யும். அதனால் வெண்ணிற முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கும். எனவே அந்தவழி பயணத்திற்கு மிகவும் இனிமையானது.

அவன் சென்ற வழியில் பசுமைநிறைந்த புதர்களும், செடிகொடிகளும் தழைத்து விளங்கும். அந்தப் புதர்களிலே பலவகைப் பூக்கள் பூத்துக் குலுங்கும். இவைபோன்று இன்புற்று மகிழத்தக்க இயல்புகள் அங்கே நிறைய இருக்கும்.

உன் தலைவன் சென்ற வழி குருந்த மலர்களைச் சூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஆயர்களையும், விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் பண்புகொண்ட ஆய்ச்சியர்களையும் கொண்டது. எனவே அவனும் ஆயர்களின் வீடுகளில் விருந்தினனாகி உண்டுமகிழ்வான். அதனால் உணவுப் பிரச்சினையும் அவனக்கு இருக்காது

எனவே குளிர்ந்த மழையினால் உண்டான செழுமையினால் உடலுக்கு இதமாகவும், அழகாகப் பூத்திருக்கும் மணந்தரும் மலர்கள் நிறைந்துள்ளமையால் மனதுக்கு இன்பமாகவும் இருக்கும் வழியிலேதான் உன் காதலன் சென்றிருக்கிறான். அவனுக்கு எந்தவித துன்பமும் நேராது. நீ கவலைப்படாதே.'

என்று தலைவிக்கத் தோழி செல்கிறாள். இந்தக்காட்சியைப் புலப்படுத்தும் பாடல் கள் பின்வருமாறு:

நன்றே காதலர் சென்ற ஆறே!
அணிநிற இரும்nபொறை மீமிசை
மணிநிற உருவின தோகையும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
சுடுபொன் அன்ன கொன்றை சூடிக்
கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப் பெயற் கெதிரிய கானமும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகளத்
தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
நிலன் அணி நெய்தல் மலரப்
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
நன்பொன் அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண்மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
பைம்புதற் பல்பூ மலர
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே

நன்றே காதலர் சென்ற ஆறே!
தண்பெயல் அளித்த பொழுதின்
ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே

(ஐங்குறுநூறு. முல்லைத்திணை. பாடகள் : 431 - 440 பாடியவர்: பேயனார்)



                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)
 

 

 



பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா   

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்