சீனத்துப் பேரறிஞர் கன்பூசியஸின் சிந்தனைகள்

பேராசிரியர் இரா.மோகன்

சீனநாட்டின் முதன்மையான சிந்தனையாளர் கன்பூசியஸ். அவர் 73 ஆண்டுகள் – கி.மு.551, ஆகஸ்ட் 27 முதல் கி.மு. 479 பிப்ரவரி 11 வரை – வாழ்ந்தார். அவரைத் தத்துவ ஞானி என்பதை விட, மூதறிஞர் (Sage) என்று கூறுவதே சாலவும் பொருந்தும் என்பர் அறிஞர். மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ – வையத்துள் வாழ்வாங்கு வாழ – சீனத்துப் பேரறிஞர் கன்பூசியஸ் வலியுறுத்தும் சிந்தனைகளை ஈண்டுக் காணலாம்.*

1. ஒரு முறை கன்பூசியஸிடம், “மரணம் என்பது யாது? மரணத்திற்குப் பின் மனிதனுடைய நிலை யாது?” என்ற கேள்விகளைச் சிலர் கேட்டனர். உடனே, அவர் சிறிதும் தயக்கமின்றி, “வாழ்க்கையைப் பற்றியே ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை! இந்நிலையில் மரணத்தைப் பற்றி நீ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?” என்று திருப்பிக் கேட்டார்.

2. கன்பூசியஸ் வாழ்க்கையைப் பற்றி ஓர் ஒழுங்கான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்; நல்ல பழக்கங்களைப் பின்பற்றி வந்தார். சாப்பிடும் போது அவர் பேசுவதில்லை; அதிகமாகவும் சாப்பிடுவதில்லை. சாப்பிடும் நேரம் வந்த பிறகே அவர் சாப்பிடுவார். அவர் எப்போதும் சரியான முறையில் படுத்துத் தூங்குவார். “சாப்பிடும் போது பேசாதீர்கள்; தூங்கப் போகும் போது பேசாதீர்கள்” என்னும் அவரது அறிவுரை இவ்வகையில் அமைந்தது.

3. முறையாகத் திட்டமிடப்படாத வாழ்க்கை, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் துன்பமே தரும். எனவே, “நீண்ட காலத் திட்டங்கள் இல்லாதவன் கடைசியில் கவலையால் வாடுவான்” என்றார் கன்பூசியஸ். அவரது கண்ணோட்டத்தில் வாழ்க்கை என்பது முன்னேற்றத்தை ஏற்படுவதற்கான ஒரு தொடர் முயற்சி ஆகும்.

4. பொருள் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சியை அளவிட முடியாது. ஓர் ஏழை மனிதனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்; ஒரு பணக்காரனும் தூக்கம் வராமல் படுக்கையில் புரள நேரலாம். “எளிய உணவு உண்டு, கையை முட்டுக் கொடுத்து சிறுதுயில் கொள்வதுவே எனக்கு மகிழ்ச்சி. தீய வழியில் பணக்காரர் ஆனவர்கள் எனக்கு வானில் கடந்து போகும் மேகங்கள் போலத் தான்” என்கிறார் கன்பூசியஸ்.

5. “மனிதனை அளப்பதற்கு உரிய சிறந்த அளவுகோல் மனிதனே” என்பது கன்பூசியஸின் கோட்பாடு. அவர் மனிதன் மனிதனாக, மனச்சான்று உடையவனாக, மனிதப் பண்புகள் கொண்டவனாக வாழ வேண்டும் என்று விரும்பினார். அத்தகைய மாண்புமிக்க மனிதனை உருவாக்குவதற்கு அவர் இமைப்பொழுதும் சோராது பாடுபட்டார்.

6. கன்பூசியஸ் காலத்தில் கல்வி என்பது அரசர்களுக்கும், பிரபுக்-களுக்கும், செல்வர்களுக்கும் மட்டுமே கிடைக்கக் கூடிய அருஞ்செல்வமாக இருந்தது. இந்நிலையில் கன்பூசியஸ் தம் மாவட்டத்தில் ஒரு பள்ளியை நிறுவி எத்தகைய வேற்றுமையும் பாராட்டாமல் மூவாயிரம் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். “வேற்றுமை பாராட்டாது அனைவருக்கும் கல்வி கற்பிக்க வேண்டும்” என்பது அவருடைய கருத்து.

7. ஒருவர் கன்பூசியஸிடம் கேட்டார்: “ஏழையாக இருந்தாலும் பணக்காரரைப் புகழ்ச்சி செய்யாதவரை அல்லது பணக்காரராக இருந்தாலும் அகந்தை இல்லாதவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” கன்பூசியஸ் அவருக்குக் கூறிய மறுமொழி: “அவை நல்லவை தான். ஆனால் அவற்றையும் விடச் சிறந்தவை – ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பது; பணக்காரராக இருந்தாலும் கருணையோடு இருப்பது”. கன்பூசியஸின் கருத்தில் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனநிறைவோடு இருப்பதே உண்மையான செல்வ வளம் ஆகும். ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்னும் குமரகுருபரரின் வைர வரி இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

8. கன்பூசியஸ் உலகிற்கு வழங்கியுள்ள செய்திகளுள் முதன்மையானது ‘நடுவழிக் கோட்பாடு’ (The Doctrive of Mean) ஆகும். “எதிலும் நாம் அளவாக இருக்க வேண்டும்; இரு எல்லைகளுக்குச் சென்றுவிடக் கூடாது” என்பது இக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து ஆகும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்னும் தமிழ்ப் பழமொழி இங்கே நினைவு கூரத் தக்கதாகும்.

9. “எதைப் பிறர் நமக்குச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்பதே எல்லா நிலைகளிலும் நாம் பின்பற்றத்தக்க சிறந்த அறம் ஆகும்” என்பது கன்பூசியஸின் அழுத்தம் திருத்தமான கருத்து.

“ இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்”
(316)

என்னும் திருக்குறள் இங்கே ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

10. “ஒரு படை தனது தளபதியை இழக்கலாம். ஆனால் ஒரு மனிதன் தனது இலட்சியங்களை ஒரு போதும் இழக்கக்கூடாது” என்பதில் உறுதியாக இருந்தவர் கன்பூசியஸ். ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்னும் அப்பர் பெருமானின் வாக்கு இங்கே கருதத் தக்கதாகும்.

பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு கூறுவது போல், “கன்பூசியஸின் அற-நெறிக் கருத்துக்கள் காலத்தால் பழமையானவை; அனுபவத்தின் வாயிலாகக் கனிந்த முதுமொழிகள்; மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வாய்-மொழிகள் எனலாம்” (திருக்குறள் நீதி இலக்கியம், ப.282).


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்