சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
34
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
இசையால்
யாழுக்கு என்ன பயன்?
ஒரு
தாய் தன் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவள் பருவமடைந்ததும்
பாசத்தையும் மீறிய கட்டுக்காவலுடன் அவளைப் பராமரித்து வந்தாள். அங்கே
போகாதே, இங்கே நிற்காதே, அவனைப் பாராதே, இவரோடு சேராதே என்றெல்லாம்
கட்டுப்பாடுகளை விதித்தாள். ஆனால் பூத்துக் குலுங்கும் இளமையோடு
செழித்து நின்ற மகளிடம் இயற்கையாகவே எழுகின்ற பருவத்து உணர்வுகளை
அந்தத்தாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாயின்
கட்டுப்பாடுகள்தான் மகளின் கட்டுமீறும் எண்ணங்களை மேலும்
ஊக்கப்படுத்தின என்றுகூடச் சொல்லலாம்.
அந்தநேரத்திலே அவளது மனதினை ஒருவன் கவர்ந்தான். அவளின் இதயம்
முழுவதிலும் அவன் இடம்பிடித்தான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவரும்
கள்ளத்தனமாக அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தார்கள். அதற்கும்
முடியாது என்கின்ற அளவுக்குத் தாயின் கட்டுப்பாடுகள் அதிகமாகின்றன.
மகளின் காதல் விடயத்தை அறிந்துகொண்ட தாயும், தந்தையும் அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தனர். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில்
காதலர் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்காகத் தம் பெற்றோரைப் பிரிந்து
ஊரைவிட்டே சென்றுவிடுகின்றார்கள்.
இப்போது மகளின் பிரிவால் தாய் தாங்கொணாத துன்பத்திலே தவிக்கிறாள். எங்கே
போயிருப்பார்களோ என்று எல்லா இடங்களிலும் தேடித் திரிகிறாள்.
வீதிவீதியாகப் பைத்தியம் பிடித்தவள் போல அலைகிறாள். கண்ணெதிரே
காண்பவர்கள் எல்லோரிடமும் தன் மகளைப் பற்றி விசாரிக்கிறாள். அவ்வாறு
வழிப்போக்கர்கள் சிலரிடம் அவள் விசாரிக்கும் போது அவர்கள் அவளுக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.
'என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும?'
என்று வழிப்போக்கர்களிடம் கேட்கிறாள் பெண்ணைப்பெற்ற அந்தத் தாய்.
அவர்கள் அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
இங்கே பார் அம்மா! பல்வேறு நறுமணத்துடன் திகழுகின்ற சந்தனம் மலையிலேதான்
உண்டாகின்றது. சந்தனத்தால் அந்த மலைக்கு ஏதாவது பயன் கிடைக்கிறதா?
எதுவுமே கிடைப்பதில்லை. சந்தனத்தை உடலிலே பூசிக்கொள்பவர்களுக்குத்தானே
அது பயன்தரும்? நினைத்துப்பார்த்தால் உன் மகளும் உனக்கு அப்படித்தானே!
முத்துக்கள் நீரிலே பிறந்தாலும் நீருக்கு அவற்றால் என்ன பயன்?
முத்துக்களை மாலையாகக் கோர்த்து அணிபவர்களுக்குத்தானே அவற்றால் பயன்
உண்டாகின்றது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் உன்மகளும் உனக்கு
அப்படித்தானே!
ஏழுநரம்புகளிலே தவழ்ந்துவரும் இன்னிசை பிறப்பது யாழிலேதானே! ஆனால்
யாழுக்கு இசையால் என்ன பயன்? அதனை அனுபவிப்பவர்களுக்குத்தானே பயன்
கிடைக்கின்றது. ஆராய்ந்து பார்த்தால் உன்மகளும் உனக்கு அப்படித்தானே!
எனவே, காதலனுடன் அவள் சென்றுவிட்டாள் என்று வருந்த வேண்டாம். அவளைத்
தேடிச் செல்ல வேண்டாம். கற்பில் சிறந்த உனது மகள் தன் உள்ளத்தால்
விரும்பிய காதலனோடு கூடிச் சென்றிருக்கிறாள். அது அறநெறிதவறாத
ஒழுக்கமாகும் என்பதை நீ அறிந்துகொள்! அவர்கள் நன்றாக வாழ்வார்கள்.
நீபோய் நிம்மதியாக இரு, என்று மகளைத் தேடியலையும் அந்தத் தாய்க்கு வழிப்
போக்கர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
இந்தக்காட்சியை நமக்குத்தருகின்ற கீழ் வரும் பாடல்கள் கலித்தொகையில்
இடம்பெறுகின்றன. சங்ககாலத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கள்
எந்தக்காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாகக் காலத்தை வென்று நிலைத்து
வாழ்வதனை எண்ணி நாம் இன்புறலாம்.
'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
எனவாங்கு,
இறந்த கற்பினாட்குஎவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலைபிரியா ஆறும் மற்று அதுவே.'
(கலித்தொகை. பாலைத்திணை. பாடியவர்: - செந்தமிழ்ப் புலவராகத் திகழ்ந்த
சேரமன்னனான பெருங்கடுங்கோ)
(காட்சிகள் தொடரும்....................................)
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|