கவிஞர் பா.விஜய்யின் கண்ணாடிக் கல்வெட்டுகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முன்னுரை:

'தேமதுரத் தமிழோசை உலக மெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்'
1 (பா. கவிதைகள் ப.53)

என்று முரசறைந்தார் மகாகவி. இவரது கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில், தற்பொழுது தமிழ் மொழி ஷசெம்மொழி' என்று பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு உலக அரங்கில் செம்மாந்த நடையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. இத்தகு பெருமைக்கு உலகத்தமிழ் கவிஞர்களின் பங்களிப்பு முதற் காரணமாக அமைகின்றது எனலாம். இதனை கருத்தில் கொண்டே பாரதியார்,

'நமக்குத் தொழில் கவிதை' 2 (பா. கவிதைகள் ப.112)

என்றும்

'பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட வேணும்'3 (ப.127)

என்றும் குறிப்பிட்டார். தமது படைப்புகளை தமிழ்மொழிக்கு அள்ளிக் கொடுத்த கவிஞர்களின் வரிசையில் கவிஞர் பா.விஜய் அவர்களின் கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற கவிதை நூலில் இடம்பெற்ற கவிதைகள் எடுத்துரைக்கும் முற்போக்கான சிந்தனைகளை பிரதிபலிப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞரும் அவரது படைப்புகளும்

'வாழையடி வாழையென' உலகில் கவிஞர்கள் பலர் தோன்றினாலும் தமிழ் மொழியில் கவிஞர் பா.விஜய் தனக்கென தனிப்பெரும் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். கவிதை நூல்களாகவும், நாவல்களாகவும் பதினேழுக்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார். தேசிய விருது உட்பட இருபத்தி இரண்டுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை - 800க்கும் மேல்
பணியாற்றிய படங்கள் - 300க்கும் மேல்
பெற்ற சிறப்பு – 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற விருதினை
ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு பெற்றது.
கலைஞர் திரு.மு. கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியது.
கவிஞர் வாலி அவர்கள் தனது கலையுலக வாரிசாக அறிவித்தது.
24.08.2004 அன்று இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழ் இலக்கியங்கள் பற்றி உரையாடியது.

கண்ணாடிக் கல்வெட்டுகள்

கவிஞர், மக்களை ஊர்ஊராக நேரிடையாகச் சென்று சந்தித்த பொழுது, அவர்கள் கூறிய உண்மை நிகழ்ச்சிகளை ஷகண்ணாடிக் கல்வெட்டுகள்' என்ற நூலில் தெளிவாக பா. விஜய் பதித்துள்ளார். பழங்கால மன்னர்கள் செய்த சாதனைகள், வெற்றி, புகழ் ஆகியவற்றை அறியும் கருவூலப் பெட்டகமாக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் இருக்கின்றன. ஆனால் சாதாரண மக்கள் செய்த சரித்திரங்களுக்கு மக்களால் சொல்லப்படும் ஆதாரமான உண்மை நிகழ்வுகளே, இக்கவிதை நூலின் பாடுபொருளாக அமைகிறது.

ஒவ்வொரு ஊருக்கும், மண்ணுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகள் தொன்று தொட்டு இருந்து வருகின்றன. இந்நிகழ்வுகள், சிலரின் மனதில் அழியாத உண்மைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும். அவ்வாறான உண்மைகளைத் தேடி எடுத்து எழுதியதே ஷகண்ணாடிக் கல்வெட்டுகள்' என்ற கவிதை நூல். இக்கவிதைத் தொடர் ஷகல்கி' வார இதழில் வாரந்தோறும் வெளிவந்த கவிதைத் தொடர்களின் தொகுப்பு ஆகும்.

காவல் மரம்: (ஆனைமலைப் பகுதி)

தமிழகத்தின் ஆனைமலைச் சாரலில் அமைந்த 'கொன்காணம்' என்ற நிலப்பகுதியை ஷநன்னன்' என்ற வேந்தன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நட்டு வைத்த

'காவல் மரத்தினிலே காய்த்த ஒரு மாங்கனி
தானாய்க் கனித்து தன்னிச்சையாய் விழுந்து
ஆழியாற்றங் கரையோரம் அசைந்து அசைந்து வந்தது'
4 (க.க.வெ –ப.24)

இக்கனியை மாமூலர் என்னும் செல்வ வணிகரின் மகள் ஷநங்கை' என்பவள் எடுத்து அறியாமை காரணமாக கடிக்கத் தொடங்கிய குற்றத்திற்காக நன்னனின் சபை நோக்கி காவலர்கள் அவளை அழைத்துச் செல்கின்றனர், அப்பொழுது நங்கையும், அவளது தந்தையும் மிகவும் துயரத்துடன் கெஞ்சி மன்றாடியும் நன்னன் மனம் இரக்கம் அடையவில்லை. அவன் வெகுண்டெழுந்து,

'காவல் மரக்கினியை பறித்து உண்ண முயன்ற
இந்தப் பெண்ணை வெட்டுப்; பாறையில்
வைத்து தலையை துண்டியுங்கள்'
5 (க.க.வெ – ப. 24)

என்று ஆணையிட்டும், அதனை நிறைவேற்றியும் ஒரு பாவமும் அறியாத இனம் பெண் நங்கையின் தலையை துண்டிக்கச் செய்கிறான்.

இச்செயல் அவனது மனிதநேயமற்ற, இரக்கமற்ற மிருகத்தன்மையும், ஒருவன் அரசனாகவும் அதிகார பலம் பெற்றவனாகவும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அவனது செருக்கையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. அதேசமயத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுவதையும் வெளிப்படுத்துகிறது. சங்க காலகத்தில் நடத்த இந்நிகழ்வு எக்காலத்தவர்க்கும் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஒரு காலகட்டத்தில் எழுதிய தீர்ப்பு பிற்காலத்தில் மக்களால் திருத்தப்படலாம் என்பதை கவிஞர் குறிப்பிடுகையில்,

'எழுதிய தீர்ப்பு மாறிவிடும் என்று நம்பிய
மக்கள் சினந்தனர்;: நன்னனுக்கு தோள் கொடுத்த
கோசர்கள் வாளெடுத்தனர்: நன்னனுக்கு உரம்
கொடுத்த வேளாளர்கள் வேலெடுத்தனர்'
6 (க.க.வெ.பக்.25,26)

என்றும்,

'மகுடம் கழண்டுவிழ, சிம்மாசனம் சிதைந்துடைய ஓடினான்
மானம் முறிந்துவிழ கொற்றக்குடை சாய்ந்து
போக ஓடினான்'
7 (க.க.வெ.ப. 26)

எனறும் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தில் நடந்த இம்மக்கள் புரட்சியை நோக்குங்கால், மன்னனை வீழ்த்தவும் நாட்டை விட்டே விரட்டவும் செய்யலாம் என்ற உண்மை வெளிப்படுகிறது. இந்நிகழ்வு தமிழர்களின் நேர்மை உள்ளத்தையும், அவர்களின் வீரத்தையும், அநீதியை எதிர்க்கும் மன வலிமையையும் உறுதிப்படுத்துகின்றது. மக்கள் சக்தி ஒன்று திரண்டால் அதிகார பலம், ஆட்சி பலம் அத்தனையும் சுட்டு பொசுக்கப்படும் என்ற சிந்தனை இங்கு விளக்கப்படுகிறது. எனவே, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் பெண்ணினத்திற்கு அநீதியை இழைக்கும் சர்வாதிகாரிகளுக்கு நங்கையின் வாழ்க்கை ஒரு மிரட்டல் அத்தியாயம் எனலாம்.

கண்ணகி வந்த ஊர் (சிறுவாச்சூர்)

ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டினை உலகிற்கு எடுத்துக்காட்டுவது, அந்நாட்டு மக்களின் கற்பொழுக்க நெறியே. கற்புக்கரசியாம் கண்ணகியின் கற்பு நெறியால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஷசெல்லி' என்னும் செண்பகவல்லி சிறுவாச்சூரில் உள்ள கோயிலில் வசிக்கும் தெய்வபக்தி நிரம்பிய இளம்பெண். இக்கோயில் இருக்கும் காட்டினுள் இளம் கன்னியரை வேட்டையாடும் காளிங்கன் என்ற மாந்திரீகன் நுழைகிறான். கவிஞர் மாந்திரீகர்களையும், சாமியார்களையும் வன்மையாக கண்டிக்கும் விதமாக,

'அன்றிலிருந்து இன்றுவரை எந்திர தந்திர மந்திரவாதியெல்லாம்
கன்னி' சாமியார்களாகவே காலத்தைத் தள்ளுகின்றனர்'
8 (க.க.வெ –ப.56)

என்றும்

'சாமியார்கள் பலர் சர்வாதிகாரிகளாக
சம்சார தேசிகனாக அன்றே உலா
வந்திருக்கின்றனர் உல்லாசமாய்'
;9 (க.க. வெ.-ப.62)

என்றும் குறிப்பிடுகிறார். இக்கூற்று பெண்களின் கற்பொழுக்க நெறிக்கு மேற்கண்ட மாந்தர்களால் களங்கம் ஏற்படும் என்ற ஆணித்தரமான கருத்தை எடுத்துரைப்பது ம்டுமல்லாமல் பெண்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்வதாகவும் உள்ளது.

செல்லியின் கற்பை சூறையாட எண்ணிய காளிங்கனிடமிருந்து, செல்லியை காப்பாற்றுவதை தனது கடமையாகக் கொண்ட கண்ணகி அவள் முன்னே தெய்வமாக காட்சி அளிக்கிறாள். அப்பொழுது சீறியெழுந்து காளிங்கனின் ஆணவம் பற்றி குறிப்பிடுகையில்,

'உண்மையை பழிக்க வந்த பேயே! தாய்மையை ஓழிக்க வந்த தீயே!
நீ விச விருட்சத்தின் விதை! நீ முடிய வேண்டிய கதை!
உன் ஒவ்வொரு பார்வையிலும் களங்கப்படும் பெண்ணினம்'
10

                                                            (க.க.வெ.–ப.70)

என்று ஆவேசமாகக் கூறி, காளிங்கனை கொல்கிறாள்.

மேற்கண்ட நிகழ்வால் செல்லி என்ற பெண்ணின் கற்பு காக்கப்படுகிறது. கற்பின் அரசியாக மட்டும் கண்ணகி இருக்காமல், கற்பின் காவல் தெய்வமாகவும் இங்கு காட்சி அளிக்கிறாள். பெண்களின் கற்பை சூறையாடும் காமவெறியர்களுக்கு மேற்கண்ட நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

கவிஞனின் ஜனனம் (தேரழுந்தூர்)

'தோன்றின் புகழொடு தோன்றுக'
11 (குறள்-236)

என்ற இலக்கணத்திற்கு ஏற்பத் தோன்றியவர்களால் அவர் பிறந்த மண்ணுக்கு பெருமை உண்டாகும். இத்தகைய தேரெழுந்தூர் மண்ணில் தோன்றியவர்தான் கம்பநாடன். கம்பரின் புலமை, ஆற்றல், பெருமை போன்றவற்றை அறிந்த சடையப்ப வள்ளல், கம்பரை தனது அரண்மனையில் கவிச்சக்கரவர்த்தியாக நியமித்தார்.

எனவே, ஒருவர் பிறந்ததன் பயன் யாதெனில், தனக்கும், தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும், பயின்ற பள்ளிக்கும் நற்புகழைச் சேர்க்க வேண்டும் என்று கவிஞர் தனது கவிதையில் தெளிவாக குறிப்பிடுவதை நாம் அறியலாம்.

ஒரு தேவதை கல்லானாள்: (எட்டையபுரம்)

உயிரை விட மானம் பெரிதென கருதும் சிவகாமி என்ற பெண்ணிற்கும், அவளது குடும்பத்தாருக்கும் நேர்ந்த துயரத்தை விவரிப்பதே இப்பகுதியில் இடம் பெற்ற கவிதைகள். சிவகாமியின் அழகில் மயங்கி அவளை அடைய எண்ணினான் எட்டையபுர மகாராசன். இதற்காக

'சிவகாமியின் கற்புக்கு ராஜசேவை
என்ற சொல்லால் விலை கேட்டனர்'
12 (க.க.வெ.-ப 86)

எட்டையபுர அரசவை பணியாட்கள். இதை அறிந்த இவளது குடும்பத்தில்

'வேதனையும் விரக்தியும் வெறுப்பும் வேர் விட்டன'
13 (க.க.வெ. ப.89)

தன் தங்கையை இம்மன்னனின் காமவெறிக்கு இரையாக்க விரும்பாத சிவகாமியின் அண்ணன்மார் இருவரும், அவளை தனது வீட்டின் முற்றத்தில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் இறக்கினர். இதைப்பற்றி கவிஞர் கூறுகையில்,

'சிவகாமி மெதுவாய் அப்பள்ளத்தினுள் இறங்கினாள்
இமை மூடினாள், மௌனமானாள: புதைந்தாள் சிவகாமி! புனிதமாய்
மறைந்தாள் சிவகாமி! மானமாய் இருப்பாள் சிவகாமி தெய்வமாய்'
14

                                                                (க.க.வெ-ப.93)

என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட கூற்றின் மூலம், சகோதரியின் கற்பை காக்கத் துடிக்கும் சகோதரர்களின் கடமையும் பாச உணர்வும் வெளிப்படுகிறது. உயிரினும் மேலான கற்பு நெறியை போற்றும் தமிழர்களின் ஒழுக்கநெறியும், கற்பை இழப்பதைக் காட்டிலும் தான் இறப்பதே மேல் என்ற தமிழர்களின் தன்மான உணர்வும் வெளிப்படுகிறது.

யாருமில்லாத கோட்டை (மேலை நாகை)

ஆங்கில அரசு பாரதிக்கு விலங்கிடும் ஆணையை பிறப்பித்த பின், மேலை நாகை நகரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கோட்டையில் பாரதி தலைமறைவாகி இருக்கும் இடத்தை சிலர் ஆங்கிலேயரிடம் துப்பு கொடுக்கின்றனர். இத்தகைய மனிதர்களைப் பற்றி கவிஞர் குறிப்பிடுகையில்,

'துப்பு கெட்டவர்கள் துப்பு கொடுத்திருக்கிறார்கள்
சில வெட்டி ஆசாமிகள் விசமம் செய்திருக்கிறார்கள்'
15 (க.க.வெ.-ப.114)

என்று கடுமையாக சாடுகிறார்.

மேற்கண்ட இக்கூற்றால், தற்காலத்திலும் இதுபோன்ற மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், இவ்வாறான சமூகத்தில் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் கவிஞர் நமக்கு அறிவுறுத்துகிறார்.

பாரதியை கைது செய்து ஆங்கிலேயர் அழைத்துச் செல்லும் பொழுது, காளி கோயிலின் முன் நின்ற பாரதி,

'தேடிச் சோறு நிதம் தின்று
சில சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே                          
(க.க.வெ.-114)
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'
16               (பா.க. ப.149)

என்று கம்பீரக் குரலில் கேட்கிறார். அப்பொழுது

'இல்லை! இல்லை! என்பதைப் போல்
கோயில் மணி கொட்டி முழங்கியது
ஊர்மக்கள் உண்மையறிந்து
உணர்ச்சிமயமாய் நின்றிருந்தனர்'
17                       (க.க.வெ. ப-115)

என்று கூறும் கூற்றால், ஊர் மக்கள் உண்மை அறிந்து பாரதியின் பால் தவறேதுமில்லை என்று வருந்தியதை நாம் காண முடிகிறது. பாரதி பாடிய பாடலின் பொருளுணர்ந்து, கோயில் மணி இல்லை இல்லை என்று ஒலித்த நிகழ்வு மக்களிடையே நிலவும் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை மேற்கண்ட பாரதியின் பாடல் மூலம் விளக்குவதோடு கவிஞர் அதை வழிமொழிகிறார்.

சிறைக்குள்ளே சிறுத்தை (பாளையங்கோட்டை)


விடுதலைப் போரின் போது ஆங்கில அரசு கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொன்றதுடன் நிற்காமல், அவர்களது குடும்பத்தாருக்கும் சிறை தண்டனையை அளித்தது. ஊமைத்துரையை சிறைச்சாலையில் இருந்தும், மரண தண்டனையில் இருந்தும் மீட்கும் பணியை அவனது நண்பன் புலிகுத்தி நாய்க்கன் நிறைவேற்றி வைப்பதை இப்பகுதியில் கவிஞர் தெளிவாக விளக்குகிறார். புலிகுத்தியான் சிறைச்சாலையில் விறகு வெட்டுபவனாக தனது நண்பர்களுடன் சிறைச்சாலையின் உள்ளே செல்கிறான். ஊமைத்துரைக்கு மரணதண்டனை நிறைவேற்றி, அவனது உடல் இறக்கப்பட்டது. அப்பொழுது வெள்ளைக்கார சிப்பாய் ஒருவன்

'ஜெனரல் அவர்களே ஜெனரல் அவர்களே
இது ஊமைத்துரை அல்ல ஊமைத்துரை அல்ல
நம் சிறைக்கு விறகு வெட்ட வரும் புலிகுத்தியான்'
18 (க.க.வெ. ப-159)

என்று கூறுகிறான். இந்நிகழ்வு எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றி கவிஞர் குறிப்பிடுகையில்

'முந்தைய நாள் புலிகுத்தியான் திட்டமிட்டபடி
நால்வரோடு ஒருவராய் - கலந்து
சிறையிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை'
19 (க.க.வெ. ப-160)

என்று கூறும் கூற்றால், ஊமைத்துரை, சிறையிலிருந்து தப்பிக்கப்படுகிறான் என்பதை நாம் அறியலாம். அதே சமயத்தில் புலிகுத்தியான் சிறையிலிருந்து தப்பியிருப்பான் என்ற திடமான நம்பிக்கையுடன் ஊமைத்துரை ஊருக்குள் செல்கிறான் என்பதை நாம் அறியலாம். தன் நண்பனுக்காகவும், இந்திய விடுதலைக்காகவும் உயிரைக் கொடுக்கத் துணியும் விடுதலை வீரர்களின் மனதிடம் இங்கு வெளிப்படுகிறது. புலிகுத்தியான் ஒரு புரட்சி தியாகியாக வரலாறு படைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டான்.

'தமிழனின் சரித்திரம் பல இடங்களில்
நிமிரக் காரணம் தமிழன் செய்த தியாகங்கள்'
20 (க.க.வெ. ப-160)

என்று கவிஞர் தமிழரின் தியாக உணர்வை சிறைக்குள்ளே சிறுத்தை என்ற கவிதைகள் மூலமாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

முடிவுரை:

இவ்வாய்வுக் கட்டுரையில் கண்ட முடிவுகள் பின்வருமாறு தொகுத்தளிக்கப்படுகின்றன.

  • 1. ஆட்சி புரிவர்களும், அதிகார பலம் நிறைந்தவர்களும் பொதுமக்களுக்கு தவறான தீர்ப்பை வழங்கினால் அம்மக்கள் திரண்டெழுந்து புரட்சி செய்து நீதியை நிலைநாட்டுவார்கள் என்ற மக்கள் சக்தியின் மகத்துவத்தை இவரது கவிதைகள் உணர்த்துகின்றன.
     

  • 2. பெண்களின் கற்பொழுக்க நெறிக்கு களங்கம் ஏற்படுத்தும் சமூக விரோதிகளை இனம் கண்டறியும் வகையில் பெண்களை விழிப்புடன் இருக்குமாறு கவிஞர் அறிவுறுத்துகிறார்.
     

  • 3. தனக்கும் தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும், பயின்ற பள்ளிக்கும் புகழ் சேர்ப்பதே ஒருவர் பெற்ற பிறவியின் பயன் என்பதை இக்கவிதைகள் உணர்த்துகிறது.
     

  • 4. மக்களிடையே காணும் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை வெளிப்படுகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் இன்றியமையாமையை இக் கவிதைகள் உணர்த்துகிறது.
     

  • 5. தமிழரின் தியாகவுணர்வையும், நட்புணர்வையும் கவிஞரின் கவிதைகள் வெளிப்படுத்துகிறது.
     

  • 6. இந்திய விடுதலைக்கு போராடிய தியாகச்சுடர்களின் அவல முடிவுகளை இவரது கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகிறது.


பயன்பட்ட நூல்கள்:

1. கண்ணாடிக் கல்வெட்டுகள், 2. பாரதியார் கவிதைகள், 3. திருக்குறள்


குறிப்பு:

1. கண்ணாடிக் கல்வெட்டுகள் - க.க.வெ.
2. பாரதியார் கவிதைகள் - பா. கவிதைகள்

 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்