புதுமைப்பித்தனின் குழந்தைச் சித்திரிப்பு
பேராசிரியர் இரா.மோகன்
இருபதாம் நூற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும்
புத்துயிரும் ஊட்டியவர் பாரதியார்; தமிழ்ச் சிறுகதைக்குப் புதுமையும்
புத்துயிரும் தந்தவர் புதுமைப்பித்தன். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்
புதுமைப்பித்தனுக்கு நிலையான ஓர் இடம் உண்டு. ‘கம்பனை நீக்கிய காப்பிய
வரலாறு எத்தகைய கருத்தற்றதோ அத்தகைய கருத்தற்றது புதுமைப்பித்தனை
நீக்கிய சிறுகதை வரலாறு’ என்னும் கா.சிவத்தம்பியின் கூற்று முற்றிலும்
உண்மை. இக் கட்டுரை புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் குழந்தைப்
பாத்திரங்களைக் கொண்டு அவரது படைப்பாற்றலை வெளிப்படுத்த முற்படுகின்றது.
குழந்தைகள் மீது மிகுந்த ஈடுபாடு
‘புதுமைப்பித்தன் வரலாறு’ எழுதிய ரகுநாதன் புதுமைப்பித்தனுக்குக்
குழந்தைகள் மீதிருந்த ஈடுபாட்டினைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
புதுமைப்பித்தனுக்குக் குழந்தைகள் என்றால் மிகுந்த அன்பு. குழந்தைகளின்
மீது, அவருக்கு உள்ள ஆர்வமும் ஈடுபாடும் அளவிட முடியாதவை.
புதுமைப்பித்தன் குழந்தைகளிடம் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என்பதை
அவரது கதைகளில் வரும் குழந்தைப் பாத்திரங்கள் மூலம் நாம் ஓரளவு உணர்ந்து
கொள்ள முடியும். புதுமைப்பித்தன் இன்று விட்டுச் சென்றிருக்கும் ஒரே
குழந்தை தினகரி என்ற பெண்குழந்தை. ‘ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த
கருவேப்பிலைக் கொழுந்து!’ என்று ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’
கதையில் வரும் கந்தசாமிப் பிள்ளை, கடவுளிடம் தமது குழந்தையை
அறிமுகப்படுத்தி வைக்கிறாரே அந்த மாதிரியான கருவேப்பிலைக் கொழுந்து தான்
தினகரி. அதனால் தான் அவர் ஒருமுறை தம் புதல்வியை ஒரு நண்பருக்கு
அறிமுகப் படுத்தி வைக்கும் போது, ‘தினகரி இருக்காளே, அவள் வழிச்சு
விட்ட தோசை மாதிரி. புரியலையா? தோசை சுடும்போது கடைசியிலே தண்ணி
விட்டுக் கழுவி கடைசி மாவையும் தோசையாகச் சுடுவாஹ. எனக்குப்
பிறந்ததெல்லாம் தவறிப் போச்சு. இது என் கடைசிக் காலத்தில் வந்தது.
அதனாலே தான் வழிச்சு ஊத்தின தோசைன்னேன்’ என்று குறிப்பிட்டாராம்.
‘அவளுக்கு என்ன வயது?’ என்று நண்பர் கேட்ட போது, ‘அவளுக்கா? அவளுக்கு
வயசே கிடையாது. அவள் அறிவை வைத்துப் பார்த்தால் எனக்கு அவள் அம்மைப்
பிராயம், என்று பெருமைப்பட்டுக் கொண்டாராம் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன் தம் கதைகளையும் குழந்தைகளைப் போலவே நேசித்தார். ‘என்
கதைகள் என் குழந்தைகள்’ என அவர் அடிக்கடி கூறுவாராம்.
குழந்தைகளைப் பற்றிய அழகிய வருணனைகள்
தமது கதைகளில் வரும் குழந்தைப் பாத்திரங்களின் புறத்தோற்றத்தையும்
செயற்பாட்டையும் வருணிப்பதில் புதுமைபித்தனுக்குத் தனி ஈடுபாடு உண்டு.
‘ஒரு குழந்தை, நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு.
கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம்’ என்பது ‘கடவுளும்
கந்தசாமிப் பிள்ளையும்’ கதையில் வரும் சிறுமி வள்ளியைப் பற்றிய வருணனை,
‘இந்த விஷயத்தில் அவன் குழந்தையும் – அதற்கு மூன்று அல்லது நான்கு
வயதிருக்கும் – அதுவும் வரும். அதற்கென்ன? உத்ஸாகமான சிட்டுக் குருவி,
உலகத்தின், தகப்பனின் கவலைகள் ஏதாவது தெரியுமா? எப்பொழுதும்
சிரிப்புத்தான்’ – ‘கொடுக்காப்புளி மரம்’ கதையில் வரும் பெர்னான்டெஸ்
என்ற பிச்சைக்காரனின் பெண் குழந்தையைப் பற்றிய சொல்லோவியம் இது.
‘சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை. நான்கு வயசுக்
குழந்தை. பாவாடை முந்தானையில், சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்
துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.
சின்னக் கால்காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் பொழுது ஓய்ந்து போன
சூரிய கிரணம் அதன் மேல் கண்சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு
ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக
இருந்தால் என்ன? குழந்தையின் பாதத்துளிக்குத் தவம் கிடந்து தான் ஆக
வேண்டும்’ – ‘சாமியாரும், குழந்தையும், சீடையும்’ என்னும் கதையில் வரும்
இப்பகுதி படித்துறையில் உட்கார்ந்து தன் காலைத் தண்ணீரில் விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கும் ஒரு சின்னக் குழந்தையைப் படிப்பவர் மனக்கண்
முன்னே கொண்டு வந்து நிறுத்த வல்லதாகும். ‘சூரியனாக இருந்தாலும்
குழந்தையின் பாதத் துளிக்குத் தவம் கிடந்து தான் ஆக வேண்டும்’ என்னும்
வரி புதுமைப்பித்தனுக்குக் குழந்தைகள் மீதுள்ள கொள்ளை ஈடுபாட்டைப்
புலப்படுத்துவதாகும்.
‘புதிய ஒளி’ கதையில் தாயின் அன்பில் – அரவணைப்பில் – மகிழ்ந்து தூங்கும்
ஒரு குழந்தையை நயம்பட வருணிக்கின்றார் புதுமைப்பித்தன்: ‘குழந்தை எந்தக்
கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழ்ந்து தூங்கினான் …
குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு’.
‘முல்லைச் சிரிப்பு’ என்றும், ‘நிலவுச் சிரிப்பு’ என்றும் குழந்தையின்
சிரிப்பழகைக் கவிதை நடையில் படைத்துக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.
குழந்தைச் சித்திரிப்பு
புதுமைப்பித்தன் கதைகளில் வரும் குழந்தைகள் இயல்பானவை; நடப்பியலை ஒட்டி
அமைந்தவை; படிப்பவர் மனத்தைத் தொடும் சிறப்புப் பெற்றவை. சுருங்கக்
கூறின், அவரது கதைகளில் வரும் குழந்தைகள் அத்தனையும் குழந்தைகளாகவே
இருக்கின்றன; குழந்தைகள் நினைப்பது, உணர்வது, பேசுவது, கேட்பது,
இயங்குவது முதலான எல்லாவற்றையும் அவர் தம் கதைகளில் கலைநயத்தோடும்
நடப்பியல் பாங்கிலும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ‘கடவுளும்
கந்தசாமிப் பிள்ளையும்’, ‘மகாமசானம்’, ‘ஒரு நாள் கழிந்தது’,
‘பாட்டியின் தீபாவளி’ ஆகிய கதைகளில் வரும் குழந்தைகளைக் கொண்டு,
புதுமைப்பித்தனின் குழந்தைச் சித்திரிப்பின் சிறப்பினையும்
சீர்மையினையும் நாம் நன்கு உணரலாம்.
‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையில் வரும் வள்ளி புதுமைப்பித்தன்
கதைகளில் வரும் குழந்தைகளில் சிறப்பாகக் குறிப்பிடத்-தக்கவள். அறிவுக்
கூர்மையும் சுறுசுறுப்பும் செயல் திறனும் நிறைந்த குழந்தை அவள்.
அறிமுகக் காட்சியில் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வீட்டிற்குள்
நுழைகின்றனர். ‘அப்பா!’ என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக்
கட்டிக் கொள்கிறாள்; அண்ணாந்து பார்த்து, ‘எனக்கு என்னா கொண்டாந்தே?’
என்று கேட்கிறாள். ‘என்னைத்தான் கொண்டாந்தேன்’ என்கிறார் கந்தசாமிப்
பிள்ளை. ‘என்னப்பா, தினந்தினம் உன்னெத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது
கொண்டாரப் படாது?’ என்று சிணுங்குகிறாள் வள்ளி. வெளியே சென்று
வீட்டிற்குத் திரும்பும் தந்தையிடம் ஒரு சிறு குழந்தை எப்படி நடந்து
கொள்ளும், என்ன கேட்கும் என்பதைப் புதுமைப்பித்தன் இங்கே நடப்பியல்
பாங்கோடு சித்திரித்துள்ளார்.
கதையின் இடையே கடவுளும் குழந்தையும் உரையாடுவதாக வரும் பகுதிகள் சுவை
மிக்கவை. ஓர் எடுத்துக்காட்டு: பொட்டலத்தை அவிழ்த்து லட்டைத் தின்று
கொண்டிருக்கும் குழந்தை, ‘ஏன் தாத்தா அப்பா கிட்டப் பேசுதே?
அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு’
என்று கடவுளை அழைக்கிறது. குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளைச்
சாப்பிட்டுக் கொண்டே, ‘பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!’
என்கிறார் கடவுள். குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில்
வைத்துக் கொண்டே யோசிக்கிறது. ‘தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே,
உதுந்தா உனக்குன்னு சொல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?’ என்று
புத்திசாலித்தனமாகக் கேட்கிறது. கடவுள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
‘அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்’ என்கிறார். ‘அவ்வளவுமா! எனக்கா!’ என்று
வியப்போடு கேட்கிறது குழந்தை, ‘ஆமாம். உனக்கே உனக்கு’ என்கிறார் கடவுள்.
‘அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம்
குடுப்பாங்களே’ என்று தனக்கே உரிய இயல்பில் குழந்தை கவலைப் படுகிறது.
இங்ஙனம் உளவியல் பாங்கோடு வள்ளியின் பாத்திரப்படைப்பைத் திறம்பட
உருவாக்கியுள்ளார் புதுமைப்பித்தன். இக் கதையில் வரும் குழந்தை வள்ளி
ஒரு குழந்தையாகவே இருக்கிறாள் என்பது தான் சிறப்பு. ஒரு குழந்தையைப்
போலவே வள்ளி பேசுகிறாள், இயங்குகிறாள். புதுமைப்பித்தன் தம்
அறச்சிந்தனையையோ தத்துவ விளக்கத்தையோ வெளிப்படுத்தும் ஓர் ஊதுகுழலாகக்
குழந்தை வள்ளியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இக் கதைகளில் வரும்
மாந்தர்களுக்குக் கந்தசாமி, வள்ளி எனப் புராணப் பெயர்களை இட்டிருப்பது
புதுமைப்பித்தனின் கைவண்ணம். அதே போல் கடவுளும் குழந்தையும் லட்டு
பற்றிப் பேசிக்கொள்ளும் உரையாடலில் ஓர் அறிவுமுதிர்ந்த வாசகர்
நுண்பொருள் பலவற்றை உய்த்துணருவதற்கு இடமுள்ளது. ஆனால், குழந்தையை அந்த
நினைவோடு – அறிவோடு – பேசவிடாமல், இயல்பாகப் பேசவிட்டிருப்பது
புதுமைப்பித்தனின் குழந்தைச் சித்திரிப்பின் சிறப்பியல்பு எனலாம்.
‘மகாமசானம்’ கதையில் தெரு ஓரத்தில் உள்ள நடைபாதையில் ஒரு மர நிழலில்
படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருக்கிறான் கிழட்டுப்
பிச்சைக்காரன் ஒருவன்; இளைய பிச்சைக்காரன் ஒருவன் அவன் பக்கத்தில்
தலைமாட்டில் அமர்ந்து அவனுக்குப் பணிவிடைசெய்து கொண்டிருக்கிறான்.
தந்தையார் மாம்பழம் வாங்கி வருவதற்காகச் சென்ற போது, நாலைந்து வயதான
அவரது சிறுபெண் குழந்தை, வேடிக்கை பார்க்கும் ஆவலோடு இரு
பிச்சைக்-காரர்களையும் பார்க்கிறது; அருகில் செல்லுகிறது. ‘அம்மா, நீ
இங்கு நிக்கப்பாடாது; அப்படிப் போயிரம்மா’ என்கிறான் இளைய பிச்சைக்காரன்.
‘ஏன்?’ என்று கேட்கிறது குழந்தை. ‘இவரு சாவுறாரு’ என்கிறான்
பிச்சைக்காரன். ‘அப்படின்னா?’ ‘சாவுறாரு அம்மா, செத்துப் போறாரு’ என்று
தலையைக் ‘கொளக்’ கென்று போட்டுக் காண்பிக்கிறான் பிச்சைக்காரன். அது
குழந்தைக்கு நல்ல வேடிக்கையாகத் தோன்றுகிறது. ‘இன்னும் ஒரு தரம்
அப்படிக் காட்டு’ என்கிறது. கிழவனுடைய தலைமாட்டில் அவனுடைய
‘அந்திமக்கிரியைக் காசு’ என்பதைக் குறிக்க இரண்டு தம்படிகள்
போடப்பட்டிருக்கின்றன. அவை குழந்தையின் கண்களில் படுகின்றன. ‘பட்டாணி
வாங்கிக் குடேன்!’ என்று படுத்துக் கிடந்தவரைச் சுட்டிக் காட்டிக்
கூறுகிறது. தனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும்
என்ற நம்பிக்கை அதற்கு! மரணச் சூழல் – உயிருக்கு மன்றாடும் வேளை –
என்றாலும் ஒரு சிறு குழந்தையின் மனத்தில் என்னென்ன சிந்தனைகள் ஓடும்
என்பதைப் புதுமைப்பித்தன் இங்கே நயமாகச் சித்திரித்துள்ளார். அவசர
யுகத்தில் எதையும் கண்டு கொள்ளாமல், எல்லோரும் அவரவர் பாதையில் ஓட்டமும்
நடையுமாகப் போய்க் கொண்டிருக்க, அருகே சென்று ஆதரவோடு பேசும் ஒரு
குழந்தையைப் படைப்பதன் வாயிலாக, குழந்தையின் மனத்தில் என்றும் வற்றாது
ஓடிக் கொண்டிருக்கும் அன்புணர்ச்சியை – இரக்க உணர்வை –
புலப்படுத்துகிறார் புதுமைப்பித்தன். ஒவ்வொருவரும் குழந்தை மனத்தைப்
பெற முயல்வதே சமுதாய மறுமலர்ச்சிக்குச் சரியான வழியாக – வாயிலாக –
இருக்கும் என்பதையும் அவர் இங்கே குறிப்பாக உணர்த்துகின்றார். கதையின்
இறுதியில் மாம்பழத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் தந்தையார் குழந்தையைத்
தூக்கிக் கொள்கிறார்; அது பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கி மோந்து
‘வாசனையா இருக்கே!’ என்று மூக்கருகில் வைத்துத் தேய்த்துக் கொள்ளுகிறது.
குழந்தையின் உள்ளப் போக்கை – எளிதில் மாறிவிடும் அதன் இயல்பை – இங்கே
அழகாகக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.
‘ஒருநாள் கழிந்தது’ கதையில் வரும் முருகதாசர் ஓர் எழுத்தாளர். அவரது
குழந்தையாக வரும் அலமு துடுக்கானவள். முருகதாசர் ‘ஏட்டி!’ என்று
கூப்பிட்டால், ‘இல்லையப்பா, நீ இனிமே என்னை அலமுன்னு கூப்டுவேன்னியே!’
என்று நினைவுபடுத்துகிறாள். கடைக்குத் தீப்பெட்டி வாங்கச் சென்றவள் வீடு
திரும்பும் போது ரிக்ஷாவில் வர விரும்புகிறாள். ‘காலிலே சுளுக்கு’
என்று ரிக்ஷாக்காரன் கூறியும் கேட்காமல் முரண்டு பண்ணுகிறாள். தேடி
வந்த தந்தையிடம் ‘அப்பா, அவன் பங்கஜத்தெ மாத்திரம் கூட்டிக்கிட்டே
போரானே!’ என்கிறாள். ‘பங்கஜம் எதிர் வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை.
அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்
தான் புரியுமா?’ குழந்தைக்குத் தான் புரியுமா? என இவ்விடத்தில்
எழுதுகிறார் புதுமைப்பித்தன். வேற்றுமை உணர்வின்றி எல்லோரையும் –
ஒன்றாகவே சமமாகவே – பார்க்கும் குழந்தையின் மனப்பாங்கினை இங்கே அவர்
குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவழியாகச் சமாதானம் ஆகி
முருகதாசரும் அலமுவும் வீடு திரும்புகின்றனர். பாதி வழியில் ‘அப்பா’
என்கிறாள் அலமு. அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல்
கொஞ்சம் கடினமாக, ‘என்னடி!’ என்கிறார். ‘நீ தான் கோவிச்சுக்கிறியே,
அப்பா! நான் சொல்ல மாட்டேன் போ!’ ஒரு சிறுஎதிர்ப்பையும் ஏளனத்தையும்
புறக்கணிப்பையும் கடுமையையும் கோபத்தையும் பொறுத்துக் கொள்ளாத மனமல்லவா
குழந்தையின் மனம்? எனவே சொல்ல மறுக்கிறாள் அலமு. ‘கோவம் என்னடி, கோவம்!
சும்மா சொல்லு!’ என்று முருகதாசர் சமாதானம் செய்ததும், ‘அதோ பார், பல்லு
மாமா!’ என்று அவரது நண்பர் சுப்பிரமணிய பிள்ளையைச் சுட்டிக்
காட்டுகிறாள். சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை,
வெளியே நீண்டு கொண்டு தமது இருப்பை அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக்
கொண்டிருக்கும். எனவே குழந்தைகளுக்கே உரிய இயல்புப்படி அவருக்குப்
‘பல்லு மாமா!’ என்று காரண இடுகுறிப் பெயரை வைத்துவிடுகிறாள்! வீட்டில்
காப்பி சாப்பிடும் போதும் பிடிவாதமாக அவரிடமே சென்று ஒண்டி, அவருக்குக்
கொடுக்கப் பட்ட காப்பியில் பாதியைக் குடிக்கிறாள். இங்ஙனம் அலமு
குறும்பும் பிடிவாதமும் நிறைந்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாகப்
படைக்கப்பட்டிருக்கிறாள்.
பொதுவாகக் குழந்தைகளிடம் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
மிகுதியாக இருக்கும்; அந்த ஆர்வத்தின் காரணமாகக் கேள்வி மேல்
கேள்வியாகக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. ‘பாட்டியின் தீபாவளி’ கதையில்
வரும் சங்கரிப் பாட்டி குழந்தை மீனுவுக்குக் கதை கூறுகிறாள்.
‘நரகாசூரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம்.
எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடு படுத்தினானாம்…’ என்று பாட்டி கதை
சொல்லும் போது குழந்தை இடையே குறுக்கிட்டு ‘நான் படுத்துவேன்பியே. அது
மாதிரியா?’ என்று இயல்பாகக் கேட்கின்றது. ‘அடி கண்ணே, உம் மாதிரி யார்
சமத்தாட்டம் படுத்துவா’ என்று குழந்தையைத் தழுவி முத்தம் தந்துவிட்டு,
‘அவன் பொல்லாதவன் … அவனைக் கிருஷ்ணன் வந்து அம்பாலே-வில்லாலே…’ என்று
பாட்டி கதையைத் தொடரும் போது, குழந்தை மீண்டும் ‘அம்புன்னா என்ன பாட்டி?’
என்று கேட்கின்றது; ‘பாட்டீ, ஒரு பாட்டுச் சொல்லு பாட்டீ!’ என்று
பாட்டியை வற்புறுத்துகின்றது; ‘பாட்டீ. நான் ஓடரேன், பிடிப்பையோ?’ என்று
ஓடிப்பிடித்து விளையாட அழைக்கின்றது.
புதுமைப்பித்தனின் பெரும்பாலான சிறுகதைகளில் பெண் குழந்தைகளே சிறப்பிடம்
பெற்றுள்ளனர்; தனிவாழ்க்கையில் தினகரி என்ற பெண் குழந்தைக்கு-ஒரே
குழந்தைக்கு – தந்தையாக இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
எனினும், அவர் ‘நினைவுப் பாதை’யில் மாறுதலாக ஓர் ஆண் குழந்தையைப்
படைத்துக் காட்டியுள்ளார். பாட்டி இறந்த அவலச் சூழல்; ஆனால் சூழலின்
தாக்கம் – கொடுமை – குழந்தையிடம் சிறிதும் இல்லை. தாத்தா வைரவன்
பிள்ளையிடம் ‘நாந்தான் ஆச்சிக்கு நெய்ப்பந்தன் பிடிச்சேனே!’ என்று தன்
திறமையை விளக்கிக் கூறுகிறான் சிறுவன். பக்கத்தில் இருக்கும் சுந்தரம்
பிள்ளை ‘ஏலே, ஒங்க ஆச்சி எங்கடா?’ என்று கேட்கிறார். ‘செத்துப் போயிட்டா!’
என்று அர்த்தமில்லாமல் சொல்லுகிறான் சிறுவன். இங்கே அவலத்தின் சுவடு
பதியாத – அடி விழாத – குழந்தை உள்ளத்தை எடுத்துக்காட்டுகின்றார்
புதுமைப்பித்தன்.
‘மறக்க முடியாத சிருஷ்டிகள்’
விளையாட்டு மனப்பான்மை, எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,
பிடிவாதம், சுறுசுறுப்பு, மற்றவர்க்குப் பட்டப் பெயர் சூட்டி மகிழ்தல்,
கள்ளங்கரவின்மை, துடுக்குத்தன்மை, புறக்கணிப்பையும் ஏளனத்தையும்
பொறுத்துக் கொள்ளாமை, இரக்க உணர்வு, அறிவுக்கூர்மை, எதையும் எளிதில்
மறந்து விடும் போக்கு, தந்தை மீது மிகுந்த ஈடுபாடு (குறிப்பாக, பெண்
குழந்தைகளுக்கு) முதலான குழந்தைகளின் இயல்புகளைப் புதுமைப்பித்தன் தம்
கதைகளில் கலை நயத்தோடும் நடப்பியல் பாங்கோடும் படம்பிடித்துக்
காட்டியுள்ளார். ‘புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள்
அற்புதமான சிருஷ்டிகள். இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப்
போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை
மறக்க முடியாத சிருஷ்டிகள்’ என்று க.நா.சுப்ரமண்யம் புதுமைப்பித்தனின்
குழந்தைச் சித்திரிப்பினைப் பற்றிக் கூறியுள்ள கருத்து இங்கே மனங்கொளத்
தக்கது. புதுமைப்பித்தனின் குழந்தைச் சித்திரிப்பின் வெற்றிக்குக்
காரணம் அவர் கதைகளில் குழந்தைகள், குழந்தைகளாகவே இயங்குகின்றார்கள்,
குழந்தைகளைப் போலவே செயல்படுகின்றார்கள் என்பதுதான். எதிர்காலத்தில்
‘தமிழ்ச் சிறுகதைகளில் குழந்தைச் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் ஓர்
ஆய்வு மேற்கொள்ளப்படுமாயின், அதில் புதுமைப்பித்தனின் குழந்தைகளுக்கு
ஓர் இன்றியமையாத இடம் உண்டு.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|