எம்.ஜி.ஆரின் சிறுவர் பாடல்களில் ‘உடலை உறுதி
செய்’ கருத்து
எம்.ஜி.ஆர் தன்னை சந்திக்கும் அனைவரிடமும் அடிக்கடி சொல்லும் அறிவுரை
தேகப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது. அவர் இறப்பதற்கு முதல் நாளன்று
பகலில் தன்னைக் காண வந்திருந்த கோவை ஒட்டல் அதிபர் குடும்பத்துச்
சிறுவனிடம் ‘என்ன இப்படி குண்டா இருக்கிற. எக்சர்சைஸ் பண்ணு. அடுத்த
முறை வரும்போது இளைச்சு இருக்கணும்’ என்று சொல்லி அவனது வாட்சை வாங்கி
தனது கையில் கட்டிக்கொண்டு விளையாடினார். அன்று மூன்று மணி வரை
சாப்பிடாமல் அந்த சிறுவனுடன் விளையாடிக்கொண்டும் அந்த குடும்பத்தினரிடம்
பேசிக்கொண்டும் இருந்தாராம்.
மாணவருக்கு உடற்பயிற்சி ஆசிரியராக எம்.ஜி.ஆர்.
சிறுவராயினும் பெரியவராயினும் உடலை உறுதி செய் என்பது எம் ஜி ஆரின்
தாரக மந்திரம். அதனால் தான் அவரது படங்களில் அவர் வாத்தியார் வேடமிடும்
கதாபாத்திரம் இருந்தால் அதை உடற்கல்வி ஆசிரியராக ஆக்கிக்கொள்வார்.
ஆனந்த ஜோதியில் சிறுவர்கள் பங்கேற்கும் ‘’ஒரு தாய் மக்கள் நாமென்போம்’’
என்ற பாட்டு அந்தக் காலத்தில் சில பள்ளிக்கூடங்களில் காலையில் தினமும்
பாடப்பட்டதுண்டு. இப்படத்தில் சிறுவன் கமலஹாசனுக்கு முன் மாதிரி
மனிதராக எம் ஜி ஆர் இருப்பார். அவர் சொல்படி கேட்டு திருத்தமாக வாழ
வேண்டும் என்று அந்தச் சிறுவன் பேசும் காட்சிகள் உண்டு.
பணம் படைத்தவன் படத்திலும் அவர் தனக்கு உடற்பயிற்சி ஆசிரியர் வேலை
கிடைத்திருப்பதாக தன் மனைவியிடம் வந்து சொல்வார். அந்தப் படத்தின்
தொடக்கத்தில் அவர் ஒரு விளையாட்டு வீரராக பல் பரிசுகள் வாங்கி வருவதாக
ஒரு காட்சியில் நடித்திருப்பார். நீரும் நெருப்பும் படத்தில் முதல்
பாட்டான கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று பாட்டுக்
காட்சியில் சிறுவர்களுடன் நடித்திருப்பார் அப்போது அவர்களுடன் அவர்
விளையாட்டாக கத்தி சண்டை போடும் காட்சி அவர்களுக்கு இடையே கத்தியுடன்
பாடிக்கொண்டு வரும் காட்சிகள் அழகாக நயமாக எடுக்கப்பட்டிருக்கும்.
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ
என்று அச்சிறுவர்களுக்கு உடலை உரமேற்றினால் நம் வீட்டையும் நாட்டையும்
காக்க முடியும் என்று எடுத்து கூறுவார். சிறுவர்களும் இப்பாட்டில்
பல்வகையான் உடற்பயிற்சிகளை செய்து காட்டுவர்.
சிறுவர்களுக்கு விளையாட்டின் பயன்
விளையாட்டு என்பது சிறுவர்களிடம் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும்
ஒரு எளிய வழிமுறை ஆகும். ஒரு விளையாட்டு விளையாடும் போது அவர்கள் அதன்
விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விளையாடுவர் அப்போது கட்டுப்பாடு என்ற
உயர்குணத்தை பழகிக் கொள்வர். சிறுவர்களுக்கு உடல் வளர்க்கும்
பயிற்சியாக விளையாட்டு திகழ்கிறது. உடலை வளர்ப்பது தவிர, விளையாட்டு
என்பது தனது கருத்தை வெளிப்படுத்தும் திறன், மற்றவர் சொல்வதை
புரிந்துகொள்ளும் திறன் மற்றும் கூட்டுணர்வு ஆகிய பண்புகளையும்
பிள்ளைகளிடம் வளர்க்கும். இதனை உணர்ந்த எம் ஜி ஆர் தனது படங்களில்
சிறுவர்களுக்கு ஆர்வமு ஊட்டும் நோக்கத்தில் பல விளையாட்டு காட்சிகளை
வைத்ததுண்டு. எம் ஜி ஆருக்கு மற்ற நடிகர்களை விட சிறுவர் ரசிகர்கள்
ஏராளம் பசுமரத்தாணி போல பதிந்து விட்ட எம் ஜி ஆரை இப்போது அவர்கள்
கிழவர்களான பிறகும் கூட பிரிக்க இயலவில்லை. அப்போதே பிள்ளைகளிடம்
ஒழுக்கம் கட்டுப்பாடு உயர்பண்பு ஆகியவற்றை வலியுறுத்தி வசனங்களும் பாடல்
காட்சிகளும் வைக்கும்படி எம் ஜி ஆர் இயக்குனரிடம் கூறி அதை
செயல்படுத்தியது இன்றும் அவருக்கு ரசிகர் பலத்தை தக்க வைத்துள்ளது.
குழந்தையின் முழு வளர்ச்சி
குழந்தையின் வளர்ச்சி என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாவும் சமூக
ரீதியாகவும் அமைய வேண்டும் என்பது உளவியலாரின் கருத்தாகும். எம் ஜி
ஆரின் அரசிளங்குமரி படத்தில் வரும் பாட்டு
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி!
என்ற பாட்டு ஒரு குழந்தையின் முழு வளர்ச்சியை விவரிக்கிறது. சின்னப்பயலே
சின்னப்பயலே சேதிகேளடா என்ற இந்தப் பாட்டையும் நாடோடி மன்னன் படத்தில்
வரும் தூங்காதே தம்பி தூங்காதே பாட்டையும் மலேசியாவில் 1960களில் தமிழர்
படிக்கும் பள்ளிக்கூடங்களில் தினமும் காலையில் பாடும் பழக்கம் இருந்தது.
எம் ஜி ஆர் படங்களில் பெண்களும் சடுகுடு, சிறகு பந்தாட்டம், கிளித்தட்டு,
போன்ற விளையாட்டுக்களை ஆடுவதாகவும் காட்டியதுண்டு. குடும்பத் தலைவன்
படத்தில் பல விளையாட்டுக்களில் விளையாடி எம் ஜி ஆர் பரிசுகளை வாங்கி
குவிப்பார். பணம் படைத்தவன் படத்தில் தடகள வீரராக கல்கத்தாவிற்கு போய்
குண்டெறிதல், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்றவற்றில் பரிசுகள் வாங்கி
வருவார். இந்த விளையாட்டுகளில் அவர் பங்கு பெறுவதை படத்தில்
காட்டுவார்கள்.
உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்
உடற்பயிற்சியின் அவசியம் எம் ஜி ஆர் ஏழை நடிகராக இருந்த போது அவருக்கு
உடற்பயிற்சி செய்ய தேவையான கருவிகள் இல்லை அப்போது அவர் மரத்தை பிடித்து
நின்று ஐசொடோப் பயிற்சியை செய்து உடம்புக்கு உரமேற்றினார். பின்பு யானை
கவுனியில் வசிக்கும்போது அங்குள்ள உடற்பயிற்சி சாலைக்கு அடிக்கடி வந்து
அங்கு நடக்கும் குஸ்தி மல்யுத்தம் சிலம்பாட்டம் செடிக்குச்சி ஆகியவற்றை
பார்வையிடுவதுண்டு அவற்றில் கலந்துகொள்வதுமுண்டு. அந்த வகையில் தான்
அவர் ஸ்டன்ட் பார்ட்டி ஆட்களைத் தெரிவு செய்தார். பின்னர் வடபழனி அருகே
ஒரு இடம் வாங்கி அங்கு வந்து தினமும் உடற்பயிற்சி செய்யுமாறு அவர்களிடம்
தெரிவித்தார். அவர்களும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு வந்து
பயிற்சி செய்து பழகுவர். அவர் முதல்வர் ஆனதும் திருமங்கலத்தில்
அவர்களுக்கு 48 வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்தார் ஆனால் அவர்கள் அந்த
பகுதி மிகவும் தூரம் என சொல்லி மறுத்துவிட்டனர். இப்போது நினைத்து
வருத்தப்படுகின்றனர்.
உடற்பயிற்சிக்கான அறிவுரை
சாண்டோ சின்னப்பா தேவர் கோவையில் மாருதி தேகப்பயிற்சி சாலை என்ற
உடற்பயிற்சி நிலையம் ஒன்று வைத்திருந்தார் அங்கு படங்கள் எடுக்கப்பட்டு
வந்த காலத்தில் தேவர் , எம் ஜி ஆர் , நம்பியார் ஆகியோர் பல்வேறு
வீரவிளையாட்டுக்களைப் பழகுவர். பளு தூக்கியும் பயிற்சி பெறுவார் அப்போது
எம் ஜி ஆர் அதிக பளு தூக்குவார். அந்த பயிற்சியின் உதவியால் பின்னர்
காஞ்சி தலைவன், அன்பே வா போன்ற படங்களில் எடை மிகுந்த வீரர்களை அப்படியே
தலை மேலே தூக்கி சில நிமிடங்கள் வைத்திருந்து கீழே எறிந்தார். தான்
செய்து பலனடைந்த உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களை அவர் மற்றவருக்கும்
அறிவுரையாக சொல்வார். கமல்ஹாசன், சிவகுமார், ரஜினிகாந்த், ஜெய்சங்கர்
போன்ற அவர் காலத்திய இளம் நடிகர்களுக்கு உடல்பயிற்சியின் அவசியத்தையும்
அறிவுரைகளையும் எடுத்துக்கூறியதாக அவர்கள் தம் பேட்டியில்
குறிப்பிட்டுள்ளனர்.
இறுதி வரை இளைஞர்
மனிதனாகப் பிறந்தவருக்கு உடல் ஒரு யோக சாதனம். அதனை கோயில் போல
பாதுகாக்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அவர் காலத்து நடிகர்கள் தொப்பை விழுந்து பல் விழுந்து தோற்றமளித்த போது
அவர் தன் உடம்பை உடற்பயிற்சியால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் அதனால்
படங்களில் அவர் தன்னை இளைஞனாகக் காட்டிக்கொள்ள முடிந்தது. இடையில் அவர்
கால் ஒடிந்த பிறகும் கூட அவர் தனது வீட்டிலேயே நீச்சல் குளம் கட்டி
நீச்சல் பயிற்சியின் மூலமாக தன கால்களுக்கு வலுவேற்றினார். அவரது கடைசி
படம் வரை அவரது உடல் துள்ளி குதிக்கும் சக்தி பெற்றிருந்தது. அவரது
கழுத்தில் தான் வயோதிகம் தெரிந்தது. அவரது நடிப்பில் தெரியவில்லை.
நேரிலும் அவர் மக்கள் முன் வரும்போது படிகளில் ஏறினாலும் உயரத்தில்
இருக்கும் சிலைக்கு மாலை போட்டாலும் வேகமும் துடிப்பும் உடையவராக
இருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் அமேரிக்கா சென்று
வந்த பிறகும் 25 கிலோ எடை மிகுந்த பளிங்கு கல்லை ஒரு முறை மேடையில்
வைத்து தலைக்கு மேலே தூக்கி கூட்டத்தாருக்கு காட்டினார். அப்போதும் அவர்
உடல் வலிமை உடையவராகவே இருந்தார்.
உடல் உறுதியின் பலன்கள்
உடல் உறுதியாக இருந்தால் மனம் துணிவுடையதாக இருக்கும். உளவியலார்
குழந்தை உளவியலை மூன்றாக பகுப்பர் அதில் முதலாவது உடல் வளர்ச்சி
[Physical development] . இந்த உடல் வளர்ச்சியை சத்துணவாலும்
விளையாட்டாலும் நல்ல பழக்க வழக்கங்களினாலும் பெற முடியும். எனவே எம் ஜி
ஆர் சிறுவர்களுடன் பேசும் காட்சிகளில் பெற்றோரை மதிக்க வேண்டும்; மொழியை
பாதுகாக்க வேண்டும்; பகுத்தறிவை போற்ற வேண்டும், உடலை உறுதி செய்ய
வேண்டும் என்ற கருத்துக்களை திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார்.
படங்களில் இளைஞர்களைக் கவரவும் சிறுவர்களைக் கவரவும் விளையாட்டு
காட்சிகளை அமைக்கிறார். சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
விளையாட்டால் வளரும் இடது பக்க மூளை
பகுத்தறிவு பாசறையை சேர்ந்த எம்.ஜி.ஆர் தன் இயக்க சிந்தனைகளை தன
படங்களில் புகுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அவர் படங்களில்
வலியுறுத்தும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டினை பின்பற்றினால்
சிறுவருக்கு இடது பக்க மூளை வளரும். இந்த இடது பக்க மூளை வளர்ந்தால்
தான் ஒரு விஷயத்தை கேட்கும்போது அதில் காரண காரிய தொடர்பு இருக்கிறதா
என்றறிய முடியும்..அதுவே பகுத்தறிவுக் கொள்கை ஆகும். புராண இதிகாசம்
போன்ற கற்பனைகளில் மனம் செல்லாது. கணிதம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு
அதிகரிக்கும் அவற்றில் நல்ல தேர்ச்சி பெற முடியும். புதிய தகவல்களை
நினைவில் இருத்த முடியும். யதார்த்தமான வாழ்க்கை வாழ முடியும். கனவு
கற்பனைகளில் மிதந்து ரிஸ்க் எடுப்பதில் வாழ்க்கையை வீணாக்காமல் இருக்க
இடது பக்க மூளை நமக்கு உதவுகிறது இதன் வளர்ச்சிக்கு எம் ஜி ஆர் தனது
சிறுவர் பாடல்களில் வலியுறுத்திய விளையாட்டும் உடற்பயிற்சியும் அவசியம்
தானே.
வீர விளையாட்டுக்கள்
பழந்தமிழரின் பாரம்பரியப் பெருமை பேசி வந்த கட்சியான திமுகவில் இருந்த
எம் ஜி ஆர் தமிழரின் வீர விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டினார். சிலம்பம்,
செடிக்குச்சி [சின்ன சிலம்ப குச்சி], மான் கொம்பு விளையாட்டு,
மல்யுத்தம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். சிறுவர் பாடல்களிலும்
அதை வலியுறுத்தினார்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
என்ற பாட்டு வரிகளும் அது காட்சிப்படுத்தியிருந்த விதமும் சிறுவர்களை
பெரிதும் கவர்ந்தது.
வீரப்பண்பை சிறுவர்களிடம் இளம்பருவத்திலேயே வளர்க்க வேண்டும் அவர்களை
பேய் பிசாசு என்று பயந்தாங்கொள்ளிகளாக வளர்த்துவிட்டால் பின்னர்
அவர்களால் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் ஒன்றும் இருக்காது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்வரிகளில்
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!
என்பவை எம் ஜி ஆரின் உள்ளக் கருத்தை சரியாக வெளிப்படுத்தின. அதனால் தான்
அவர் முதல்வரானதும் ‘’எனது முதல்வர் நாற்காலியின் நான்கு கால்களில்
ஒன்று பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்’’ என்று பாராட்டினார்.
தாலாட்டில் வீரம் .
குழந்தை பருவத்தில் தாய்மார் பரம்பரை வீரத்தை பாலோடு ஊட்டியதாக அக்காலத்
தாலாட்டு பாடல்களைச் சொல்வதுண்டு. அந்த கருத்தில் எம் ஜி ஆர் தான்
வளர்க்கும் தனது செல்ல மகனுக்கு பாடும் தாலாட்டில்
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
என்பார். ஆண்குழந்தை என்றால் பகைவரை வென்று நாட்டை காக்க வேண்டும் அது
அவனது முதற்கடமை ஆகும். இன்று பெண்களும் இராணுவத்தில் சேர்ந்து தன
நாட்டுப் பற்றையும் வீரத்தையும் காட்டுகின்றனர். இது வளர்ச்சி.
பாரதியும் எம் ஜி ஆரும்
பாரதியார் உடலை உரமேற்றுவதை வலியுறுத்தினார்
விசையுறு பந்தினை போல்
உள்ளம் விரும்பியபடி செல்லும்
உடல் கேட்டேன்
என்றார். வேகமாக வீசிய பந்தினை போல உடல் வேகமாக செயல்பட வேண்டும் என்பது
பாரதியின் இறை வேண்டலாகும். எம் ஜி ஆர் பட்டிக்காட்டு பொன்னையா படத்தில்
பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து காட்டி அவரது உடம்பின் வேகமான
செயல்பாட்டை நமக்கு உணர்த்துவார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
எக்ஸ்போ 70 எனப்படும் உலக பொருட்காட்சியில் பாடுகின்ற ‘’உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்’’ எனத் தொடங்கும் பாடலில்
உள்ள மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும், - அது
சொல்லும் வண்ணம் துள்ளி செல்லும் உடல் வேண்டும்
என்ற வரிகளில் மனம் சொல்லும்படி இயங்கும் உடல் ஒரு வரம் என்ற கருத்து
காணப்படுகிறது. இந்த வரிகள் இன்றும் தன் உடலைக் கட்டுகோப்பாகவும்
ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் சத்யராஜுக்கு பிடித்த வரிகள் ஆகும்.
உடற்பயிற்சி கருவி அன்பளிப்பு
ஒரு முறை சத்யராஜ் எம் ஜி ஆரின் வீட்டுக்குப் போயிருந்த போது எம் ஜி ஆர்
‘’உனக்கு ஏதாவது நான் செய்ய விரும்புகிறேன் கேள்’’ என்றார் அதற்கு
சத்யராஜ் ‘’எனக்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யும் கருவிகளில் ஒன்றை
கொடுங்கள்’’ என்றார். உடனே தன் கர்லா கட்டைகளில் ஒன்றைக் கொண்டு வரச
சொல்லி ‘’இதை கவனமாக தூக்க வேண்டும் இல்லையென்றால் கைக்குள் பிடித்து
கொள்ளும்’’ என்று அறிவுறுத்தி அதை இருபது முறை சுழற்றி காட்டினாராம்.
அப்போது ஜானகி அம்மையார் ‘’முன்பு நூறு முறை சுற்றுவார்; இப்போது
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு போய் வந்த பிறகு இருபது முறை தான்
சுற்றுகிறார்.’’ என்றாராம். எழுபது வயதிலும் அவரால் தினமும் இருபது முறை
அந்த கர்லா கட்டையை சுற்ற முடிந்ததென்றால் அவர் உணர்ந்து பின்பற்றிய
உடல் உரத்தின் முக்கியத்துவம் பற்றி இனியும் நாம் விளக்க வேண்டியதில்லை.
தான் பின்பற்றி நன்மை அடைந்ததையே அவர் தனது பாடல்களில் சிறுவர்களுக்கு
அறிவுரையாகக் கூறிச் சென்றார்.. இவற்றால் அவர் திரையிசை பாடல்களில்
பாடியதை தன் வாழ்க்கையிலும் பின்பற்றி வந்தார் என்பது தெளிவாகிறது.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்