திரை இசைக் கம்பர் கண்ணதாசன்
பேராசிரியர் இரா.மோகன்
கண்ணதாசன் பிறந்த நாள்: 24.06.2018
இருபதாம்
நூற்றாண்டுக் கவிதை உலகில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன்
இருவரையும் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசனுக்கு நிலையான ஓர் இடம் உண்டு.
“போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்!”
என முழங்கி, தமிழ்க் கவிதை உலகில் முப்பத்து மூன்று ஆண்டுக் காலம் உலா
வந்து, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிய கவிஞர்
கண்ணதாசன். உவமைக் கவிஞர் சுரதாவின் சொற்களிலே சொன்னால் அவர்,
‘திரையிசைக் கம்பர்!’.
திரைப் பாடலுக்கு இலக்கியத் தகுதியைத் தேடித் தந்ததில் கண்ணதாசனுக்குப்
பெரும்பங்கு உண்டு. முக்தா வீ. சீனிவாசன் குறிப்பிடுவது போல்,
“திரைப்படப் பாடல்களில் இலக்கிய நயத்தைக் கொண்டு வந்த முதல் கவிஞர்
கண்ணதாசன்… கன்னித் தமிழுக்குக் கவிதைப் பட்டாடை உடுத்தினவர் கண்ணதாசன்”.
காதல் பாடல் ஆனாலும் – தத்துவ பாடல் ஆனாலும் – தாலாட்டுப் பாடல் ஆனாலும்
– சமூகப் பாடல் ஆனாலும் – நகைச்சுவைப் பாடல் ஆனாலும், அதில் கண்ணதாசனின்
முத்திரை அழுத்தமாக – ஆழமாக – பதிந்திருக்கும். இனிக் கண்ணதாசனின்
பாடல்களில் புதைந்தும், பொதிந்தும் கிடக்கும் தத்துவ முத்துக்கள்
சிலவற்றைக் காண்போம்.
நிலையாமைத் தத்துவம்:
இந்த உலகம் ‘நில்லா உலகம்’; இதில்
நிலைத்து நிற்பது ‘நிலையாமைத் தத்துவம்’ ஒன்றுதான்! மணிமேகலைக்
காப்பியம்,
“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா;
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா”
என இந்நிலையாமைத் தத்துவத்தை வகைப்படுத்திக் கூறும். இளமை நிலையாமை,
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் இம் மூன்று நிலையாமைத்
தத்துவங்களைக் குறித்தும் கவிஞர் கண்ணதாசன் தம் திரையிசைப் பாடல்களில்
அழகுறப் பாடியுள்ளார்.
இளமை உடலில் கொலுவிருக்கும் பொழுது கட்டுக்கடங்காது காட்டாற்று வெள்ளம்
போல கரை புரண்டு ஓடும் மனித மனம், நரை திரை மூப்பு பிணி வந்த பின்
கூனிக் குறுகி ஆடி அடங்கிவிடும்! ‘திருவிளையாடல்’ என்னும் படத்திற்குப்
பாடிய பாடல் ஒன்றில், இந்நிலையை – இளமை நிலையாமையை – ஓசை நயத்தோடு படம்
பிடித்துக் காட்டுகிறார் கண்ணதாசன்:
“பாத்தா பசுமரம்
படுத்தவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா-
ஞானத்தங்கமே!...
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா – நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார்
வாட்டசாட்டமா – கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த
ஆட்டம் போடுமா?”
மனிதன் தன் கட்டழகு மேனியைப் பார்த்து, வாட்ட சாட்டமான, தேக்கு மரம்
போன்ற உடம்பைப் பார்த்துப் பூரிப்பும் பெருமிதமும் ஒருங்கே கொள்கிறான்;
தன் வலுவான உடம்பை வைத்து எல்லா இன்பங்களையும் அனுபவித்து விடலாம்
என்றும், உலகையே ஆட்டிப் படைத்து விடலாம் என்றும் தப்புக் கணக்குப்
போடுகிறான். ஆனால்,
“விட்டுவிடப் போகுது உயிர்,
விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகிறார் சுற்றத்தார்”
எனப் பட்டினத்தார் எடுத்துக்காட்டிய உண்மையை எண்ணிப் பார்க்க, அவன்
மறந்துவிடுகிறான். பட்டினத்தார் வழியிலேயே கவிஞர் கண்ணதாசனும், ‘பாத
காணிக்கை’ என்ற படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில்,
“விட்டுவிடும் ஆவி,
பட்டுவிடும் மேனி,
சுட்டுவிடும் நெருப்பு,
சூனியத்தில் நிலைப்பு!”
என்று பாடி, உடம்பின் நிலையாமைப் பண்பை உள்ளத்தைத் தொடும் வகையில்
எடுத்துக்காட்டுகின்றார்.
ஆசை மிகக் கொண்டு, அலைந்து திரிந்து, ஓடியாடிச் சேர்க்கின்ற பொருள்
யாவும் மனிதன் சாகின்ற பொழுது அவனுடன் வருவதில்லை. பட்டினத்தாரும்
பாம்பாட்டிச் சித்தரும் கட்டிக் காட்டியிருப்பதைப் போல், ‘காதற்ற
ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’, ‘மாட மாளிகைகள், வண்ண மண்டபம், மதில்
சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை கூட வாரா!’ இச் செல்வ நிலையாமையைக்
குறித்துக் கண்ணதாசனும் தம் திரைப்பாடல் ஒன்றில் நயமுறப் பாடியுள்ளார்.
“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் – அந்த
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான் – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்!”
வாழ்நாளில் எத்துணைப் பொன்னும் பொருளும் ஈட்டினாலும், முடிவில்
மனிதனுக்குச் சொந்தம் எட்டடி நிலம் தான் – அந்த எட்டடி நிலத்தில் தான்
அவன் வாழ்க்கை தஞ்சம் என முத்தாய்ப்பாக ‘முகராசி’ படத்திற்காகப் பாடிய
பாடலில் கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
வாழ்க்கைத் தத்துவம்:
இளமை நில்லாதது; யாக்கையும் நில்லாதது; செல்வமும் நில்லாதது. இவை மாறாத
உண்மைகள். ஆனால், மனிதன் இவற்றைப் பற்றியே எப்போதும் எண்ணிக்
கொண்டிருந்தால் வாழ்க்கை என்னாவது? ‘மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?’ எனத் தொடங்கி, ‘சுமை தாங்கி’ படத்திற்காகக்
கண்ணதாசன் பாடியிருக்கும் தத்துவப் பாடல், அவரது முத்திரைப் பாடல் ஆகும்,
வாழ்வில் நிம்மதியும் அமைதியும் நாடுவோர் உணர்ந்து தெளிய வேண்டிய –
தெளிந்து வாழ்வில் பின்பற்ற வேண்டிய – அற்புதமான பாடல் அது.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!”
நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதை விட – அவர்களது
நிலையை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுவதை விட, நமக்கும் கீழே
இருப்பவர்களைப் பார்த்து நிம்மதி அடைவது – அமைதி பெறுவது – மிகவும்
நல்லது; நம்மிடம் இல்லாத பொருளுக்காக ஏங்குவதை விட, நம்மிடம் இருக்கும்
சிறந்த பொருளை நினைத்து நிம்மதி அடைவது – அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு
நன்றி கூறுவது – மிகவும் நல்லது. ஏழை மனத்தை விழுமிய எண்ணங்களால்
மாளிகையாகும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது. இவ்வுண்மையினைக்
கண்ணதாசன் உணர்த்தியிருக்கும் பாங்கு படிப்பவர் நெஞ்சில் இன்பத் தேனைப்
பாய்ச்சுவதாகும்.
“ஏழை மனத்தை மாளிகை யாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
விரக்தியின் – வேதனையின் – விளிம்பிற்கே சென்று விட்ட நெஞ்சம் கூட,
இப்பாடலை ஒரு முறை பொருளுணர்ந்து படித்தால் நம்பிக்கையும்
நிம்மதியினையும் அடையும் என்பது உறுதியிலும் உறுதி.
நடைமுறைத் தத்துவம்:
‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை
பூமியில்?’ என்று கேட்டு நம்பிக்கை ஊட்டிய கவிஞர், தம் திரைப்
பாடல்களில் ஆங்காங்கே அன்றாட வாழ்வின் நடைமுறையை – இன்றைய உலகின் போக்கை
– எடுத்துக்காட்டவும் தவறவில்லை.
“குளத்திலே தண்ணியில்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ள சொந்தமில்லே!...
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா
சொந்தமில்லே பந்தமில்லே…!”
என்று ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காகப் பாடிய பாடலிலும்,
“ அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவரசமான உலகத்திலே!
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே…!
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா?
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா!”
என்று ‘பழநி’ திரைப்படத்திற்காகப் பாடிய பாடலிலும் இன்றைய நடைமுறை உலகம்
– அவசர உலகம், பொருளுக்குத் தரும் மதிப்பை – முதன்மையை – நன்கு
எடுத்துக்காட்டுகிறார் கண்ணதாசன். ஆனால், அதே நேரத்தில் வாழ்வில்
ஒவ்வொருவரும் உணர வேண்டிய அடிப்படையான உண்மையையும் அவர் உணர்த்தத்
தவறவில்லை. உதிரத்தால் உறவாக இல்லாவிட்டாலும், உள்ளத்தால் உரிமை கொண்டு,
பதைக்கும் நெஞ்சினை அணைத்து ஆறுதல் கூறி, அன்பு காட்ட யார்
முன்வருகிறாரோ, அவர் தான் ஒரு மனிதனுக்கு உண்மையான உறவினர் ஆவார்;
அண்ணன் தம்பி ஆவார்.
“வார்த்தைக்கு ருசி தந்த
வர கவியே!...
நீ
காதலைப் பாடினாய்!
அது
இளைமையின் தேசிய கீதமானது!
நீ சோகம் பாடினாய்!
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது!
நீ
தத்துவம் பாடினாய்!
வாழ்க்கை – தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது!”
எனக் கவியரசர் கண்ணதாசனைக் குறித்து, வைரமுத்து பாடியிருப்பது உண்மை;
வெறும் புகழ்ச்சி இல்லை.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|