அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 8

சுமேரியர்களின் புதிர்

ன்றில் இருந்து சுமேரியர்கள் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். ஆனாலும் அதனை ஆரம்பிக்கும் முன்னராக, இன்னொரு சுவையான அந்நியர்கள் பற்றிய பதிவினைத் தெரிந்து கொள்வோம்.

யெனற் கான்' எனும் நாற்பத்தி இரண்டு வயதுடைய பெண்மணியும் அவரது கணவரும் (இப்பொழுது இருவரும் பிரிந்து வாழுகின்றார்கள்;) அமெரிக்காவின் வாசிங்ரனின் பீவர் எனும் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீடு ஒரு பின்தங்கிய இடத்தில் இருந்தது. சற்றுத் தொலைவில் சில இராணுவப் பகுதிகளும் இருந்தன. 'பாசைட்' சர்வதேச விமான நிலையம் இவர்களது வீட்டிற்குச் சற்றுத் தள்ளி இருந்;தது. மூன்று பக்கமும் காடு போன்று மரங்களால் சூழப்பட்டிருந்தது. வீட்டின் பின்புறமாக, விசாலமான பகுதியில் சுடுநீர்த் தொட்டி வைத்திருந்தார்கள். 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் ஒருநாள் இரவு, யெனற்ரும் அவரது கணவரும் அச்சுடுநீர்த் தொட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். நேரம் சுமாராகப் பதினொரு மணி இருக்கும். எதுவித நோக்கமுமில்லாது, இரவின் விண்மீன்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இருவருக்கும் தற்செயலாகத்தான் அப்பொருள் தென்பட்டது. யெனற் அது பற்றிக் கூறுவதைப் பாருங்கள்..

'முக்கோண வடிவிலான வானூர்தி ஒன்று எங்களுக்கு மேலாக மெதுவாகப் பறந்து சென்றது. அதன் மூன்று மூலைகளிலும் வெண்ணிற வெளிச்சங்கள் ஒன்று மாறி ஒன்றாக ஒளிர்ந்த வண்ணம் இருந்தன. முக்கோண வடிவின் மையத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சம், எல்லாத் திசைகளிலும் திரும்பக் கூடியதாகக் காணப்பட்டது. அமைதியான, தெளிவான ஆனால் நல்ல இருளான அந்த இரவில் நானும் எனது கணவரும் எங்களது வீட்டின் பின் புறத்திலுள்ள சுடுநீர்த் தொட்டியில் ஓய்வாக இருந்து கொண்டிருந்தோம். முதலில் ஏதோ ஒரு ஆகாய விமானமாக இருக்குமோ என்றுதான் எண்ணினோம். ஆனால் அது மிகவும் மெதுவாக, சத்தமின்றி நகர்வதை அவதானித்தோம். சத்தமெதுவும் இன்றி, வெளிச்சங்கள் மூலைகளில் மாறி மாறி ஒளிர அது நகர்வதைப் பார்த்தால் எதையோ அது தேடுவதுபோல இருந்தது.'

இதுபற்றியே பேசிக் கொண்டிருந்த அவர்கள் அப்பொருள் ஒரு சாதாரண விமானத்தின் ஒலியினை எப்போது எழுப்பும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது நிகழவில்லை. வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பொருளுக்கு அத்தூரத்தினைக் கடப்பதற்கு இருபது நிமிடங்கள் ஆயினும் எடுத்திருக்கும். முக்கோண வடிவில் அமைந்த அதன் மூன்று மூலைகளிலும் வெளிச்சம் மாறி மாறிச் சீராக ஆனால் ஒரு நேரத்தில் ஒன்று மாத்திரமே என்ற வண்ணம் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அவர்களுக்கு மேலாக அந்தப் பொருள் வந்தபோது அதன் நடுவில் இருந்த வெளிச்சம் அவர்கள்மேல் திரும்பியது. குறைந்தது பத்து செக்கன்கள் என்றாலும் அந்த வெளிச்சம் அவர்களின் மேல் நிலைத்திருந்தது. அப்பொருளில் இருந்தவர்கள் அல்லது இருந்தவைகள் அவர்களை ஆராய்வது போல் இருந்தது என்றார் யெனற்.

அந்தப் பத்து செக்கன்களும் அவர்களால் அசையவோ பேசவோ முடியவில்லை, அக்கலத்தில் வந்தவர்கள் அவர்கள்மேல் அந்த வெளிச்சத்தால் 'என்னவோ' செய்கையில் அவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதது போன்ற, ஒரு உறைந்து போனது போன்ற நிலையில் இருவருமே காணப்பட்டார்கள். அவர்களது அந்நேரத்துணர்வுகளை அவர்களால் விபரித்துக் கூறமுடியாதிருந்தது. பின்னர் அவர்களைக் கடந்து தெற்காகச் சென்ற அந்த விமானம், தெற்கே இருந்த ஒலிம்பிக் மலைத் தொடரை அண்மித்ததும் சடுதியில் வேகத்தினை அதிகரித்து வேகமாகச் சென்று மறைந்து விட்டது. கொஞ்ச நேரம் அப்படியே திகைப்புடன் இருந்த அவர்கள் அது ஒரு சாதாரண விமானம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இன்று வரை தாம் கண்டது ஒரு இனம் தெரியாத பறக்கும் பொருள்தான் என்பதில் உறுதியாக இருக்கும் யெனற் 'அன்று நாமிருவரும் கண்டது எங்களது உலகத்தினது விமானம் இல்லை' என்று கூறுகின்றார். இச்சம்பவத்தின் பின்னர் யெனற் கூறுவதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இவர் ஒரு யுஎவ்ஓலொயிஸ்ட்; இல்லை. ஆனாலும் இனந்தெரியாத பறக்கும் பொருள் பற்றிய ஆராய்ச்சியாளர்களது சாயலில் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.

'அப்பொருளானது இப்பூமியின் மனிதர்களினது விமானமாக இருக்கமுடியாது. அது போன்ற ஒரு விமானம் இருப்பின் எந்தவொரு அரசாங்கமும் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வளவுக்கு சக்தி வாய்ந்த விமானம் போலிருந்தது. அந்த விமானம்; உண்மையில் எம்மையெல்லாம் விட அறிவில் உயர்ந்த ஏதோவொரு வெளிக் கிரக மனிதர்களினது விமானமாகத்தான் இருக்கவேண்டும். அத்துடன் இப்பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் தனித்தவர்கள் இல்லை என்பதையும் இச் சம்பவம் கூறுகின்றது.

எனது கருத்துப்படி, பூமியின் மனித இனமானது சுமாராக 30,000 வருடங்களின் முன்னராகவே வேற்றுக் கிரக மனிதர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் எமது பரிணாம வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் இன்றுள்ள நிலையில் உள்ளது போல் இல்லை. எனவே இந்த வேற்றுக்கிரக மனிதர்கள் எமது பரிணாம வளர்ச்சிப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்திருக்கின்றார்கள். இதன் அடிப்படையில்தான் சமயம், சொர்க்கம் என்ற கருத்துக்களுடன் வௌ;வேறு மதங்களின் அடிப்படைகளும் தோன்றியிருக்க வேண்டும்' யெனற்றின் கருத்தில் இருந்த சாராம்சம் இதுதான்.

பார்த்தீர்களா! அனுபவங்களின் ஊடாக எத்தனை கருத்துக்கள், ஊகங்கள் பிறக்கின்றன. ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவரவரைப் பொறுத்த விடயம். ஆனாலும் இனம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்றுடன் எமக்கும் இதையொத்த அனுபவம் ஒன்று ஏற்படின் நாமும் கூட இது போன்ற முடிவினைத்தான் எடுத்திருந்திருப்போமோ, அல்லது..... சில விடயங்கள் எனக்குச் சிக்கலாகத்தான் இருக்கின்றது. 30,000 வருடங்கள் என்ற சமாச்சாரத்தினை எங்கிருந்து யெனற் பெற்றிருப்பார்? மனிதர்களது பரிணாம வளர்ச்சியில் வேற்றுக் கிரக மனிதர்களினது செல்வாக்கு ஏற்பட்டது என்ற சிந்தனை ஓட்டத்தினை எவ்வாறு பெற்றிருப்பார்? புத்தகங்களில் இருந்தோ அல்லது வேறும் ஊடகங்களில் இருந்தும் பெற்றாரோ அல்லது 'அந்த உறைந்து போன பத்து செக்கன்'களிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியோ தெரியவில்லை.

இச்சம்பவத்தினைப் பற்றிய எனது கருத்தினை இன்னமும் கொஞ்சம் விரிவுபடுத்திப் பார்க்கின்றேன். உறைந்து போன அந்தப் பத்துச் செக்கன்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று எனக்குத் தெரிகின்றது. பொதுவாகவே இப்படியான நிலைகளில், அந்த விமானமாகக் கருதப்பட்டது (உண்மையிலேயே) இனம் தெரியாத பறக்கும் பொருளாக இருந்திருப்பின், அதுவும் வேற்றுக்கிரக மனிதர்களின் விண்கலமாகவிருப்பின் இவர்களை வெறுமனே உறைந்து போகச் செய்துவிட்டுப் போயிருப்பார்கள் என்று எண்ணுகின்றீர்களா? ஒருவேளை அந்த உறைந்து போன பத்து செக்கன்கள் உண்மையில் ஒரு மணித்தியாலமோ அல்லது இரண்டு மணித்தியாலங்களாகவோ கூட இருக்கலாம். அந்த நேர இடைவெளியில் இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இவர்களுக்கு தெரிந்திருக்காது. இப்படியாகத் 'தொலைத்த மணித்தியால அநுபவங்களை' பலர் பெற்றிருக்கின்றார்கள்.

இவர்கள் இருவருமே ஆழ்உறக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. பொதுவாகவே உறைந்த செக்கன்கள் போன்ற நிலைகளில் வேற்றுக்கிரக மனிதர்கள் நம்மவர்களைக் கடத்திக் கொண்டுபோய் சில ஆய்வுகளைச் செய்வார்கள், சில செய்திகளைக் கூறுவார்கள் என்று நம்பப்படுகின்றது. அப்படியாகக் கடத்தி ஆய்வு செய்தவர்களை அவர்கள் வலிமையான மனோவசியச் சிகிச்சைக்குட்படுத்திச் சம்பவங்களை முற்றாகவே மறந்து போகப் பண்ணுவார்கள். இப்படியான பல சம்பவங்களை ஆய்வாளர்கள் வெளிக் கொண்டு வந்தார்கள் என்பது உண்மை. எனவேதான் யெனற்றின் உறைந்து போன பத்து செக்கன்கள் என்பது கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. இருவருமே மனோவசியச் சிகிட்சைக்குட்படுத்தப்பட்டிருந்தால், ஒருவேளை இன்னமும் சில தகவல்களை மேலதிகமாகப் பெற்றிருக்கலாம். அது மாத்திரமல்லாமலும் சம்பவத்தின் உண்மைத் தன்மையையும் கூட அறிந்திருக்கலாம்.

சரி, இனி எங்களது அந்நியர்களும் அறிந்திரா வானூர்திகளும் விடயத்துக்கு வருவோம். இந்த மரபணுப் பொறியியல் மாற்றக் கருத்தினை ஏற்றுக் கொள்ளும் வகையிலான சில விபரங்களை 'ஏஞ்சியன் ஏலியன்' என்கிற 'அந்நாள் அந்நியர்கள்' பற்றி ஆய்பவர்கள் தருகிறார்கள். அவர்களின் விளக்கங்களை அறிந்து கொள்வதற்காக கால ஓட்டத்தில் பிந்நோக்கிக் கொஞ்சம் செல்வோம்.

வரலாற்றுக் குறிப்புகளின்படி, கி.மு. 4000 ஆண்டுக் காலப்பகுதியில் மெசப்பத்தேமியாவின் யூபிரத்தீஸ், ரைக்கிறிஸ் நதிகளுக்கிடையே, இன்றைய ஈராக், ஈரான் இருக்கும் பகுதிகளில், செழிப்பான நாகரிகமொன்று இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக்கு மேலாக, அப்பகுதியில் சிறப்புடன் இருந்த அந்நாகரிகத்திற்குச் சொந்தக்காரர் உண்மையில் அந்நிலத்தின் சொந்தக்காரர் இல்லை என்கின்றன குறிப்புகள். இவ்விடத்திற் காலங்காலமாக வாழ்ந்து வந்தவர்களைவிட உருவ அமைப்பில், மேனியின் நிறத்தில் வேறுபட்டவர்களாக இருந்த அவர்கள், 'இருள்நிற மேனியர்' எனும் அர்த்தம் கொள்ளும் 'சுமேரியர்' என்ற பெயரில் அவ்விட மக்களால் அழைக்கப்பட்டார்கள். கிழக்கிலே இருந்து வந்தவர்கள் என்றும் அவர்களைக் கூறுவார்கள். அப்பகுதியின் அந்நியர்கள் எனக் கருதப்பட்ட இவர்களில் ஒருவன்தான் விவிலியத்தில், யேசுநாதர் குறிப்பிடும் பிரபலமான எடுத்துக்காட்டான 'நல்ல சமாரியன்' ஆவானோ என எண்ணவும் இடமுண்டு.

சுமேரியர்கள்:

இந்நாளின் உலக நாகரிகங்களுக்கெல்லாம் ஆரம்பப்புள்ளி, இந்த சுமேரியாவும், சுமேரியர்களும்தான் என மேற்கின் பல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். சுமேரியர், கணிதம், மருத்துவம், வானவியல், தொழில்நுட்பம், போன்ற அறிவியற்துறைகளில் அதீத வளர்ச்சி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். முதன்முதலில் உருளக் கூடிய சக்கரங்களை வடிவமைத்துப் பாவிக்கத் தொடங்கியவர்களும் இவர்களே. இவர்களின் மேம்பட்ட நீர்ப்பாசன அறிவால், இருநதிகளின் நீரையும் நன்கு பாவித்தும் இருக்கிறார்கள். மிகப் பெரிய கட்டிடங்களையும் கட்டிச் செல்வச் செழிப்புடனும் வாழ்ந்திருக்கிறார்கள்.

எழுதத் தெரிந்தவர்களான இவர்கள், குறிப்புகளை களிமண் தகடுகளில் எழுதிப் பாதுகாக்கும் வழக்கத்தினையும் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசிய, எழுதிய மொழியினை சுமேரியமொழி அல்லது சுமேரியம் என்கிறார்கள். சித்திர எழுத்து வடிவில் இருக்கும் இவர்களது குறிப்புகள் இன்றும் முழுமையாக வாசிக்கப்பட முடியாமல் மேற்கு நாடுகளின் பல அருங்காட்சியகங்களில் தொல்பொருட்களாக உள்ளன.

இந்தச் சுமேரியர்கள் பற்றிச் சுவையான பல கருத்துக்கள் உள்ளன. அவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகத்; தெரிந்து கொள்வோம், அடுத்த தடவையில்....

 





 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்