முதியோர் நலம் பேணி காப்போம்
திருமதி செல்லையா யோகரத்தினம்
M.A
அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர்
தினம்.
கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் சூன் முதியோர் மாதம்.
'இன்றைய இளைஞர் நாளைய முதியோர்'
முதுமையும்
இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிலைகளாகும். 60 வயதுக்கு
மேற்பட்டோரை முதியோர் எனலாம் என்ற வரையறை உண்டு. முதியோருக்குச்
சுதந்திரம் கொடுப்பது, முக்கியத்துவம் கொடுப்பது, அவர்களின்
பங்களிப்பைப் பெறுவது, அவர்களை மதிப்பது ஆகியன சர்வதேச முதியோர்
தினத்தின் முக்கிய அம்சங்களாகும். மனிதர்களுக்கு வயது கூடக்கூட
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவசியமாகிறது. குறிப்பாக
அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு போன்றவற்றிற்கு உத்தரவாதம் அளித்தல்,
சமூக, கலாச்சார, அரசியல் போன்றவற்றில் அவர்களது பங்களிப்பை உறுதி
செய்தல் அவசியம். வயதாகி விட்டது என்று ஓய்ந்து, சோர்ந்து போய் மூலையில்
முடங்கிக் கிடக்காது இந்த உலகில் வாழும் காலம்வரை நல்ல உடல் நலத்துடனும்
பாதுகாப்புடனும் அவர்கள் வாழவேண்டும் என அவர்களை வாழ்த்தி வணங்குவது நம்
கடமையாகும். கட்டடத்துக்கு நல்ல அத்திவாரம் போல, கப்பலுக்கு கலங்கரை
விளக்கம் போல, வண்டிக்கு அச்சாணி போல, மனிதனுக்கு நிம்மதியும்
மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் உதவுவது உடல் நலமே. நலம் என்பது நோய்
இன்மையும், நலிவற்ற நிலை மட்டுமன்றி உடல், உள, சமூக நன்னிலை ஆகும். இவை
முழுமையாக இருத்தல் வேண்டும். நலம் அன்றாட வாழ்க்கைக்கான ஒரு மூல
வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல. நலம் சமூகத்தின் பல்வேறு
கூறுகளால்த் தீர்மானிக்கப் படுகிறது. உரிய சூழலில் வாழ்வியல், சமூக,
அரச, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின், அவர் சார்ந்த சமூகத்தின் நலத்தை
நிர்ணயம் செய்கிறது. உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத்
தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவச் சேவை, பண்பாடு, பழக்க
வழக்கங்கள், எனப் பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தைத் தீர்மானிக்கிறது.
அதனால் நலம் என்பதை நோய், நோயைக் குணப்படுத்துதல் என்ற குறுகிய
வரையறைக்குள் அடக்க முடியாது. மனிதரைத் தவிர அனைத்து உயிரினங்களும் தமது
இறுதிக்காலத்தை பிறிதொருவரின் உதவியின்றியே கழிக்கின்றன. மனிதர்கள்
மாத்திரம் வயோதிப காலத்தில் இன்னொருவரின் உதவியைத் தேடி நிற்பவர்கள்.
முதியோர்நலன் பற்றி உலகுக்கு அறிவுறுத்தவந்த ஐக்கிய நாடுகள் சபை
முதியோர்கள் நலன் கருதி சில விதி முறைகளை வரையறை செய்துள்ளது.
1) அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, உறையுள் மற்றும் அடிப்படைச்
சுகாதார வசதிகள் பெறப்பட வேண்டும்.
2) வாழ்வதற்கான நல்ல சூழல் அமைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
3) அவர்களைப் பாதிக்கக் கூடிய எந்தக் கொள்கை முடிவுகளுக்கும்
அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
4) சமூக சேவை புரிய விரும்பும் முதியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட
வேண்டும்.
5) முதியோருக்குச் சமூக மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்பட
வேண்டும்.
6) முதியோர் மனித உரிமை மற்றும் அடிப்படைச்சுதந்திரம் அனுபவிக்க வழிவகை
செய்ய வேண்டும்.
ஆகிய இந்தக் குறிக்கோள்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஐக்கிய
நாடுகள் சபை செய்த நெறிமுறைகளாகும்.
அறுபது வயதைத் தாண்டிய முதியோர்கள் உலகம் முழுவதும் 85 கோடியைத்
தாண்டும். 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முந்நூறு கோடி
முதியவர்களைக் கொண்டதாக அமையலாம். மருத்துவ உலகில் வேகமான வளர்ச்சி
ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று வருவதாலும் சராசரி வயது
கூடிக்கொண்டே போகிறது. எனவே அறுபது வயதைக் கடந்தவர்கள் மட்டுமல்ல எழுபது,
எண்பது ஏன் தொண்ணூறைக் கடந்தவர்கள் விகிதமும் அதிகரித்துக்கொண்டே
போகிறது.
கூட்டுக்குடும்பம் தான் முதியோருக்கு உரிய பாதுகாப்பும் கவுரவமும்
என்பது கேட்க நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறைச் சாத்தியமானதா?
பெற்றோர்களின் உணர்வைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதும், கடமையை உணர்ந்து
செயற்படுவதும் மிக அவசியமாகிறது. அதே போல மாறியுள்ள சூழலைப் புரிந்து
கொண்டு பிடிவாதங்களைத் தளர்த்திப் பிள்ளைகளோடு இணைந்துவாழப்
பெற்றோர்களும் முயல வேண்டும். இது ஒரு இருவழிப்பாதை. இங்கே இன்னும் ஒரு
கருத்து சிந்திக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இளம் குடும்பங்களில்
குழந்தை பராபரிப்பதற்குப் பெற்றோரின் உதவி தேவை. இங்கே இரண்டு பகுதியும்
விரும்பி செயலாற்றுவார்கள். இந்தமாதிரி உணர்ச்சிபூர்வமான செயற்பாடுகள்
நிறையவே உண்டு. மேலும் மகனுடன் வாழ்வது, மகளுடன் வாழ்வது, மாமியார்
மருமகள்ப் பிரச்சனை என்று பல பிரச்சனைகளும் உண்டு. இந்தப் பிரச்சனைகளால்
முதியோர் சிலர் கூட்டுக் குடும்பத்தை விரும்புவதில்லை. தாங்கள் முதியோர்
என்பதையும் மறந்துவிடுகின்றனர். நடமாடித் திரியக்கூடிய வாய்ப்புக்கள்
இருக்கும்வரை எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால்
காலம் செல்லச்செல்ல இயலாமை வரப் பாதுகாப்பு அவசியம் வேண்டும். அப்பொழுது
மாற்றுக் கருத்துக்களை விட்டெறிந்து கூட்டுக்குடும்ப சிந்தனையை
வளர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. வரவேற்கத்தக்கதும் கூட.
அப்படியானால் முதியோர் பிரச்சனை ஒருபாதி தீர்ந்தமாதிரித்தான். மேலும்
மனித மனம் ஒரு குரங்கு. சிலசமயம் எப்படித்தான் பிள்ளைகள் பார்த்தாலும்
திருப்தி யடையாத பெற்றோரும் இருப்பர். இதற்கு யாராலும் ஒன்றும்
பண்ணிவிட முடியாது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இருந்தாலும்,
நடமாடித்திரியும் வரை பிள்ளைகளுக்குப் பெற்றோர் பிரச்சனையேயில்லை,
ஏதாவது கடுமையான நோய்வாய்பட்டுவிட்டால் விசேட கவனிப்புத் தேவைப்பட்டால்
அவர்களும் பிற உதவியை நாடவேண்டிவரும். அந்தமாதிரி நிலையில் அவர்களும்
ஏதாவது முதியோர் காப்பகம் அல்லது தனிப்பட்ட ஒருவரை சம்பளத்திற்குப்
ஏற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கும். இவற்றிற்கெல்லாம் வாய்ப்பும்
வசதியும் தேவை. இங்கே பிள்ளைகளைக் குறை கூறிட முடியாது. முன்னைய
காலங்களில் கிராமங்களில் அண்டை அயலவர் என்று முதியோரைப் பராமரிக்கப்
பலர் இருந்தனர். முதியோரைப் பராமரித்தல் தனி ஒருவரின் பொறுப்பாகப்
பார்க்காத நிலை இருந்தது. இப்போ அந்த நிலை இல்லையே. காலம் மாறிவிட்டது.
ஒரு சிறுகுடும்பம் பிள்ளைகள் இறக்கை முளைத்து விட்ட குருவிகள் போல் தாம்
உண்டு தம்குடும்பம் உண்டு என்று போய்விட்டார்கள். கணவனும் மனைவியும்
அவர்களே முதியோர் ஆகிவிட்ட நிலை. கணவனின் தாயார் 90 வயதிருக்கும்
படுத்தபடுக்கை. உண்பது, உடுப்பது எதுவும் தெரியாது. ஏன் மகனையே அடையாளம்
தெரியாது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வந்து அந்த அம்மாவின் சேவைகளைச்
செய்து போக ஒருவரை ஒழுங்கு செய்திருந்தார்கள். தாங்கள் உயிருடன்
இருக்கும் போது அம்மா அனாதை மாதிரி முதியோர் காப்பகத்தில்
இருக்கக்கூடாது என்ற வைராக்கியம் தான் அவர்களை அந்த ஏற்பாட்டைச் செய்ய
வைத்தது. அந்தமாதிரிச் சிந்தனையுடைய பிள்ளைகள் இருந்துவிட்டால் முதியோர்
பிரச்சனை இருக்கவே இருக்காது. எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு
அமையும் என்று சொல்லமுடியாது.
இன்னொரு குடும்பம். தகப்பனாரை வீட்டிலே தனியாக விட்டுவிட்டு கணவனும்
மனைவியும் வேலைக்குப் போவார்கள். அப்பா தனிமையில் நல்லபடிதான் இருந்தார்.
திடீரென்று அவருக்கு இயலாமை வந்து விட்டது. அவர் பிள்ளைகள் வேலைக்குப்
போகத் தன்பாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி ஊர் சுற்றத் தொடங்கிவிட்டார்.
அந்த வேளையில் வீட்டிற்குப்பாதுகாப்பு இல்லை. அவருக்கும் பாதுகாப்பு
இல்லை. வீட்டைத்திறந்த நிலையிலேயே விட்டு விட்டுச் செல்லத் தலைப்பட்டார்.
எங்கு போகிறார்? என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அவருக்குத் தான் செய்வது சரியோ தப்போ எதுவும் தெரியவில்லை. பிள்ளைகள்
என்ன செய்வார்கள்? பலவிதமாகச் சிந்தித்து அவரை ஒரு காப்பகத்தில்
சேர்த்துவிட்டார்கள். இங்கே நாம் யாரை நோவது! விதியே என்று இருக்க
வேண்டியதுதான்.
பொதுவாக ஒரு தனி மனிதனுடை வாழ்க்கையில் அவனுடைய உடல் நிலையும்
வாழ்க்கைத்தரமும் மிக முக்கியமானவை. அவர்களின் வாழ்க்கை முறை. தனி மனித
செயற்பாடுகள், அவர்கள் சார்ந்துள்ள சமூகம், ஆகியவை முக்கிய காரணிகளாக
அமைந்துள்ளன. ஒருவருடைய நலனைப் பாதிக்கக் கூடிய, நலனில் ஆதிக்கம்
செலுத்தக்கூடிய காரணிகள் பல. சமூகநிலை, வருமானம், தகவல் தொடர்புகள்,
கல்வி, வேலை, சமூகச்சூழல், சுகாதாரப் பழக்க வழக்கங்கள், உயிரியல்,
மரபியல், சுகாதாரச் சேவை மற்றும் பாலினம் என்பவை. ஒரு தனி மனிதனுடைய
உடல் நலத்தில் மூன்று முக்கியத்துறை நோய்கள், மனநலம், மனஅழுத்தம்,
போசாக்கின்மை ஆகியன பங்கு கொள்கின்றன. பொதுவாக உடல் நலத்திற்கு எதிரான
காரணி;கள் புற்றுநோய், நீரிழிவு, மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய்
போன்றவை. தொற்றா நோய்களும், தொற்று நோய்களும் வைரஸ், பாக்டீரியா,
எய்ட்ஸ், காச நோய், மற்றும் மலேரியா போன்றவைகளுமாகும். மரணத்தை
ஏற்படுத்தக்கூடிய மற்றக் காரணிகளில் முக்கியமானதாகக் கருதத்தக்கது
ஊட்டச்சத்துக் குறைபாடாகும். பொருளாதாரக் காரணங்களால் போதுமான
போசாக்குள்ள உணவு இல்லாமலும் இருக்கலாம். உடல் காயங்களும் ஒரு பொதுவான
சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. தேய்மானத்தால் உடைந்த எலும்புகள்,
எலும்பு முறிவுகள், மற்றும் தீக்காயங்கள் ஆகியன உடல் நலத்தைப்
பாதிக்கின்றன.
கலாச்சாரம், பண்பாடு, சமயம் இவற்றால் பழக்கவழக்கங்கள் உருவாகின்றன.
அவற்றால் உடல்நலப் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிகமான உணவினை உட்கொள்ளுதல்,
அதி;கம் கட்டுப்பாடான உணவை உட்கொள்ளுதல், உண்ணும் உணவில் போதுமான
போசாக்கு இன்மை, வேளா வேளைக்கு உணவு உண்ணாமை, குடிப் பழக்கம்,
தூக்கமின்மை, குடிப்பழக்கத்தி;ற்கு அடிமையாக இருத்தல், மற்றும்
மரபுவழிக் காரணங்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. உடல் நலமின்மையால்
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான அளவு தீர்வுகள் இன்மையே
பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது.
நீண்ட ஆயுள் ஒருவகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கை அவர்
சுகதேகியாக இருந்தால் மட்டுமே பொருந்தும், இல்லையென்றால் சிக்கல் தான்.
ஆகையால் முதியோர் ஓரளவு நாவுக்கு உருசியைத் தேடாது உடலுக்குத் தேவையான
ஊட்டச் சத்துள்ள உணவைத் தேர்ந்து சாப்பிட முயல வேண்டும். இதனை அவர்களால்
தேர்ந்து சாப்பிட முடியாது. அவர்களுக்கு உதவி தேவை. இவற்றை முதியோரைப்
பராமரிப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் முதியோர் பெரிதாக
மாமிச உணவைத் தவிர்த்து சைவ உணவையே விரும்பி உண்ணப் பழகவேண்டும்,
அதிலும் கூடுதலாகக் காய்கறிகளையும் சிறு தானியங்களையும் தேர்ந்து
எடுக்க முயல வேண்டும். அதுவே நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும்
கொலஸ்றோல் போன்ற நோய்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். மேலும் மறதி நோய்,
மூட்டுவலி, மாரடைப்பு, பாரிசவாதம் போன்றவற்றையும் தடுக்கலாம். என்னதான்
ஆங்கில வைத்திய முறை எங்களுக்கு அவசர தேவைக்கு உதவினாலும் உணவைப்
பொறுத்த மட்டில் பாரம்பரிய முறையே பெரிதும் கைகொடுக்கும். சாவிறுதி
காலத்தில் நாவுக்கு ருசியாக நல்லது நறியது சாப்பிட நினைத்தால்
அவ்வளவுதான். ஏதாவது புதிய புதிய வருத்தங்களால் பாதிப்படைய வேண்டி
வந்துவிடும். எப்பொழுதும் பத்தியச் சாப்பாடு என்று மனதில் கொண்டு
வீட்டுச்சாப்பாட்டையே சாப்பிட முயற்சிக்க வேண்டும். அது மிகவும் சிரமம்,
அதுவும் இந்தக்காலத்தில்! காலையிலே ஒரு துண்டு பாண், மதியம் கடையில் ஒரு
சாப்பாட்டுப் பார்சல், இரவுக்கு கடையில் இடியப்பம் நாலு, ஊட்டில் 10
மணிக்கு ஒரு தேநீர், 4 மணிக்கு ஒரு தேநீர். சொல்ல எளிமையாகவும்
இனிமையாகவம் உள்ளது. வசதியும் கூட. ஆனால் இந்த முறை முதியோருக்குப்
பொருத்தமானது அல்ல. இதனை முதியோரைப் பராமரிப்பவர்கள்; தெரிந்து கொண்டு
தீர்மானிக்க வேண்டும். அன்பாக உதவியவர்களின் உதவியில் குற்றம்
காணக்கூடாது.
‘Do not look at a gift horse in the mouth’
'அன்பளிப்பாகக் கிடைத்த
குதிரையின் பல்லைப் பார்க்கக் கூடர்து' என்பது பழமொழி. ஆனால் 'செய்வனை
திருந்தச் செய்' என்றும் சிந்திக்க வேண்டும். சிரமத்தைப் பார்க்கக்
கூடாது. ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும், செய்யத்தொடங்கி விட்டால்;
பழக்கப்பபட்டுவிடும். முதியோரைக் குழந்தைகளை எப்படி வளர்ப்போமோ அப்படிக்
கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டும். இது சாத்தியப் படுமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
எதற்கும் பழக்கம் வழக்கமாகி விட்டால் சிரமம் தெரியாது. 'நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்.' என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். இவற்றினை
உற்று நோக்குமிடத்து வயதானோரில் சிலர் திடகாத்திரமானவர்ளாக இருப்பார்கள்.
பெரும் பாலானோர் பாரிச வதம், புற்று நோய், உயர் இரத்த அழுத்தம்,
நீரிழிவு, உடல் இயக்கக் குறைவு, உடல் தொகுதிகளின் தேய்மானம், மூட்டு வலி
ஆகியவற்றின் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களால் அவத்தைப் படுவார்கள்.
பிள்ளைகள் முதியோராகிய தங்கள் பெற்றோரைக் கவனிக்க வேண்டியது கடமை என்பது
உண்மையே. ஆனால் அவ்வாறாகக்கவனிப்பதற்கு அவர்களுக்குச் சூழ்நிலையும் வசதி
வாய்ப்புக்களும் உள்ளனவா என்பது விவாதத்திற்குரியது. பிள்ளைகள் எனும்
போது அவர்களும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே இருப்பர். அவர்களினது
தொழிற்த்துறை, அவர்களின் குழந்தைகளின் கல்வி ஏனைய பொறுப்புக்களையும்,
கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவையும் தற்போதைய காலகட்டத்திலுள்ள
வாழ்க்கை முறையினால் தாங்களே உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், நீரிழிவு
போன்ற ஏனைய நோயினால் தாக்கமுற்று வைத்தியம் பார்க்க வேண்டியவர்களாயும்
இருப்பர். தாங்களே முதியோர் என்ற நிலையை அடைந்திருப்பர். இத்தகையோர்
எப்படித் தங்கள் பெற்றோராகிய முதியோரை பராமரித்து புனர்வாழ்வு கொடுக்க
முடியும்? இதுவே பழங்காலத்துக் கிராமமாக இருந்தால் வேறு கதை. பராமரிப்பு
என்ற கதைக்கே இடமில்லை. முழுக்கிராமமே பார்த்துக் கொள்ளும்.
தற்காலத்தில் 65 வயதிற்குள் இறப்பவர்களை நோக்கும் போது, அவர்கள் உயர்
இரத்த அழுத்தம், மாரடைப்பு, கொலஸ்ரோல் போன்ற நோய்களினால் தாக்குண்டு
இறப்பவர்களே அதிகமாக உள்ளனர். இத்தகைய கட்டத்தினைத் தாண்டி
உயிர்வாழ்பவர்கள் இத்தகைய நோய்களின் வேறு தாக்கங்களை எதிர்
நோக்குகின்றனர். பாரிசவாதம், புற்று நோய், நீரிழிவு, தொய்வு,
PARKINSON’S, DEMENTIA போன்ற
நீண்ட நாள் நோய்களாலும் தாக்கமுறுகின்றனர். இத்தகை யோர்க்கு சிகிச்சை
மட்டுமன்றி தகுந்த கவனிப்பும் புனர்வாழ்வும் அவசியமாகிறது.
நாட்டிற்காகவும் குடும்பத்திற்காகவும் ஓடாக உழைத்து நாராகத்தேய்ந்து
உடல் தளர்ந்து முதியோரானோர் தங்கள் முதுமைப் பருவத்தை சந்தோசமாக
வாழ்நாளின் இறுதிக்காலத்தை கழிக்கத்தக்கதான தகுந்த முறையில் நடவடிக்கை
மேற் கொள்ள வேண்டியது எல்லோருடையதும் தலையாய கடமையாகும். முதுமையும்
சாவும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத மிக மோசமான கொடுமையாகப்
பலராலும் பார்க்கப்படுகிறது. பலரும் தமது அந்திய காலம் எப்படியாகுமோ
என்று பலவிதமான ஏற்பாடுகளையும் செய்துவைப்பர். இதனைப் பார்க்கும் சில
இளவட்டுக்கள் பாசத்துடன் அவர்களை அச்சுறுத்தி வேலை வாங்குவதையும்,
வேடிக்கை பண்ணுவதையும் பார்க்கக்கூடிதாக உள்ளது. மேலும் ஒரு பழம் கதை,
தகப்பனுக்குச் சாப்பாடு கொடுத்த 'சிரட்டையை' பேரன் எடுத்துப் பத்திரப்
படுத்தியமை பின்னர் தான் தன் தந்தைக்குப் பாவிப்பதற்கு உபயோகமாக
இருக்கும் என்பதாகும். இதற்கு மேலாகத் தற்காலப் பிள்ளை ஒன்று தாயைப்
பார்த்து 'நீங்கள் இப்படிக் கத்துவது போல் நான் உங்களுக்குக் கத்தவா?
ஓ.கேவா?' எப்படி இருக்குது காலம்! மேலும் முதியோர் பணத்தைச் சேமித்துப்
பத்திரப்படுத்துவர். அதனைப் பக்குவமாக திருடுதலும் நடைபெறும். பாவம்
முதியோரால் என்ன சண்டையா போட முடியும்? கண்டும் காணாதது போல இருக்க
வேண்டியது தான். ஏன் வீண் சண்டை! காட்டிக் கொண்டால் கிடைக்கிற
சாப்பாட்டிலையும் மண் போடுவதாகி விட்டால் எங்கே போய் முட்டுவது!
வாக்குமாறி விட்டது போல் இருக்க வேண்டியது. 'விதைத்ததை வெட்டத்தான்
வேண்டும்.' ஆனால் இவர்கள் வெட்டுவதைப் பார்க்க அவர்கள் இருக்க
மாட்டார்களே!
ஒரு ஆச்சி, சந்தைக்கு வியாபாரம் செய்யப் போறவர். அவவுக்குப் பிள்ளைகள்
இல்லை. தனி வீட்டில் இருப்பவர். வாரத்தில் ஆறுநாளும் வேலை. ஞாயிறு
மட்டும் ஒய்வு. சந்தையால் வந்து அடுக்குப் பெட்டியை முன் வராந்தாவில்
வைத்து விட்டு காணியின் பின் வளவுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்து
விட்டு வருவது அவர் வழமை. அடுத்த வீடு சகோதரியினுடையது. அந்தச் சுகோதரி,
காத்துக் கொண்டு இருந்து இவர் பின்வளவுக்குப் போக ஓடி வந்து அடுக்குப்
பெட்டியை பிரித்து காசுக்குட்டானை எடுத்து, களவு தெரியாது
இருக்கத்தக்கதாக பணத்தைத் திருடிவிடுவார். மேலும் பெட்டகச் சாவியும்
அங்கே தான் இருக்கும். சாவியையும் எடுத்துப் பெட்டகத்தையும் மேய்ந்து
விடுவார். பின்பு அப்பதான் வருவது போலச் சென்று 'அக்கா வீட்டை வாவன்,
வந்து பிள்ளைகளிடம் சாப்பிட்டு இளைப்பாறலாம்'; என்று பாசமாக அழைப்பார்.
இதுவும் முதியோருக்கு எதிரான செயற்பாடுதான். இது ஒரு புது விதமான
திருட்டு. நாளுக்கு நாள் கணக்குத் தெரியாது ஆச்சியை தடுமாற வைப்பது.
மேலும் முதியோர்கள் சங்கம் அமைத்து தங்களுக்குள் சந்தோசமாகவும்
ஒற்றுமையாகவும் காலத்தைக் கடத்துவர். இங்கே இளம் முதியோர் வயதான
முதியோருக்கு உதவியாக இருப்பர். இங்கேயும் சில சமயம் முதியோர் தாம்
முதியோர் என்பதை மறந்து மனத்தளவில் வன்முறைகள் வெடிக்கும். பொதுப்
பணத்தில் கைவைத்தல், தலைமைக்குப் போட்டி, இளம் முதியோர் முதிர்ந்த
முதியோரைப் பழி வாங்குவது, மேலும் வியாபாரப் போக்கும் சுயநலமும், உள்
கட்சிப் போராட்டம், தலைமையை விரும்புவது. மேலம் ஒருவர் விரும்புவதை
மற்றவர் செய்ய முடியாது போகும், என்ன முதியோர் என்றால் உளநூல்
வல்லுனர்களா! முதியோருக்கு விருப்பு வெறுப்பு இல்லையா? இப்படிப் பல
பிரச்சனைகள் உருவாகும். யார் செய்தாலும், இவையெல்லாம் முதியோருக்கு
எதிரான வன்முறைகள்தான். இதனை யாராலும் தீர்க்க முடியாது. இதற்குப்
பரந்த மனப்பான்மையும், விட்டுக் கொடுக்கும் பழக்கமும், மறத்தல்,
மன்னித்தல். எல்லாவற்றிற்கும் மேலாகத் தாம் முதியோர் என்பதை
மறந்துவிடக்கூடாது.
முதுமை ஏற்படும் போது உடலின் செயற்பாடு குன்றும். தோல் சுருங்கும்,
எடைகுறையும், புலன்களின் குறைபாடு ஏற்படும், நரம்பு மண்டலம் தளர்ச்சி
அடையும், இனப் பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புக்கள், பல்வேறு முறைகளில்
உடல் தொழிற்பாடும் நலமும் குன்றும். மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும்
உட்படும். இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, மூட்டுவலி, புற்று நோய்
போன்றவை பெரிதும் முதுமையின் காரணமாக ஏற்படுபவை. முதுமை தவிர்க்க
முடியாதது ஆனால் முதுமையில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் உபாதைகளைத்
தடுப்பதில் முன்னெச்சரிக்கை மிக அவசியம்.
தினமும் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது நல்லது. வீட்டிலேயே செய்யலாம்.
எலும்புகள் பலவீனமடையாது இருக்கப் பெரிதும் உதவும். மேலும் யோகாப்
பயிற்சியும் செய்யலாம். வழமையாக யோகா பயிற்சி செய்யும் மையத்திற்குப்
போக வேண்டிய அவசியம் இல்லை. சூரிய நமஸ்காரம், தோப்புக்கரணம், மூச்சுப்
பயிற்சியுடன் மூட்டுக்களுக்கான பயிற்சிகளையும் செய்தாலே போதுமானது.
விரும்பிய நேரம் விரும்பியவற்றைச் செய்து கொள்ளலாம். வயதானவர்கள்
தனிமையைத்தவிர்த்துக் குழுவாகச் செயற்பட முயலவேண்டும். ஒரு அம்மா,
முதியவர். 87 வயது. இப்பதான் முகநூலில் சேர்ந்திருக்கிறார். இன்னொரு
அம்மா 80 வயது. முது கலைமானிப் பட்டம் பெற்றுள்ளார். இன்னொரு பாட்டி.
90 வயது. தனது கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு கிராமத்தையே வாழ
வைத்துள்ளார். இவர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். மன அழுத்தம்;
இல்லாது வாழமுடியும் என்பது உறுதி. வாழ்க நீடூழி! முதியோர்கள் கூட்டாகச்
சேர்ந்தால் முதியோருக்கு முதியோர் என்ற வகையில் இளம் முதியோர் வயதான
முதியோருக்கு உதவலாம். வயது முதிர்ந்த சகோதரங்கள் ஒற்றுமையாக ஒருவருக்கு
ஒருவர் உதவி என்று வாழ்வது போல வாழலாம். இதற்குப் அன்பு. பாசம், நேசம்,
பரந்த மனப்பான்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, சேவை செய்யும் மனமும்
அவசியம். வியாபார நோக்கு ஆபத்தில் கொண்டு போய்விடும். கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை என்பது புரிந்து கொள்ள வேண்டியது.
வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைவதையே பண்டைத்தமிழர் மிகச் சிறந்த
பண்பாட்டுக் கூறாகக் கருதினர். அதனையே மேற்கோளாகக் கொண்டு நாமும்
உயர்ந்ததை எண்ணுவோம். செயற்படுவோம். வெற்றி கிடைக்கும் என நம்புவோம்.
முதியோரை வாழ வைப்போம்.
'யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே.' - (புறம் 214)
குறும்பூழ் - சிறுபறவை, வறுங்கை - வெறும்கை
யானையை வேட்டையாடவேண்டும் என்று போகின்றவன் யானையை எளிதாகப் பெற்று
விடக்கூடும். ஒரு சிறிய பறவையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் அது
கிடைக்காமலும் திரும்பக்கூடும்.
'கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் இனிது.' (குறள் - 772).
முயலுக்கு அம்பு எய்தலிலும் யானைக்கு அம்பு எய்து தவறினாலும் அது
பெரியது.
'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்' (புறம் 195)
நல்லவைகளைச் செய்ய இயலாவிட்டாலும் தீயவைகளைக் செய்யவே கூடாது.
எனவே உயர்ந்த குறிக்கொளுடன் இருக்கவேண்டும். பெரிதாக எண்ணுவோம். எண்ணம்
பெரிதாக இருந்தால்ச் செயலும் பெரிதாகும், செயல் பெரிதானால் இலட்சியம்
நிறைவேறும். வெற்றி நமதே! மேலும் பண்டைத் தமிழ்மக்கள் அறம், பொருள்,
இன்பம் மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அறத்திலிருந்து
தவறுதல் கூடாது என்று வாழ்ந்தனர். தவறினால் பழிவரும் என்று நம்பினர்.
அப்பழியைத் தாங்க முடியாது என்றும் எண்ணினர். எனவே அறம் செய்வதைப்
பண்பாட்டின் ஒரு கூறாகக் கருதிச் செயல்ப்பட்டனர். அதனையே நாமும் சிரம்
மேற்கொண்டு செயற்படுவோம். முதியோரைப் பேணிக் காப்பது ஒரு சிறந்த அறம்
என்று செயற்படுவோம். வெற்றியும் காண்போம்.
கனடாவின் ஒனராறியோ மாகாணத்தில் சூன் மாதம் முதியோர் மாதமாகக்
சிறப்பித்துக் கொண்டாடப் படுகிறது. பல அரச நிறுவனங்கள் பலவிதமாக
முதியோரைக் கௌரவிக்கின்றன. மேலும் அரச ரீதியாகவும் கௌரவம் சிறப்புக்கள்
எல்லாம் நடைபெறுகின்றன. முதியோர் தங்கள் வாழ்க்கையில் அடையும் மைல்
கற்களான பிறந்தநாட்களைக் கொண்டாடி கௌரவிக்கப்டுகிறார்கள். மேலும்
தன்னார்வலர் சேவை, குறிப்பிடக்கூடிய சாதனைகள், நாட்டிற்கு முன்னோடியாகச்
சாதனை என்று பலதிற்கும் கௌரவம் கிடைக்கிறது. பொலீஸ் பிரிவினர் முதியோரை
அழைத்து இலவச உணவும் கொடுத்து வேறும் பல தகவல்கள் பரிமாற்றம் செய்து
கொண்டாடுகின்றனர். மேலும் கடைகளில் சாமன் கொள்வனவு செய்யும் போதும்
சலுகைகள் உண்டு. முதியோர் தொடர்ந்து கல்வி கற்பதற்கும் வசதி
வாய்ப்புக்கள் உண்டு.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பது அவ்வையின் அமுதமொழி.
சமையல் சரியில்லை என்றால் ஒருநாள் துன்பம், அறுவடை சரியில்லை என்றால்
நான்கு மாதம் துன்பம், படிப்பு சரியில்லை என்றால் ஒருவருடம் துன்பம்,
உடம்பு சரியில்லை என்றால் ஆயுட்காலம் முற்றாகத் துன்பம். எனவே
ஒவ்வொருத்தரும் தமக்குக் கிடைத்த இந்த இனிய வாழ்க்கையைப் பேணிக் காக்க
வேண்டும். 'மூத்த குடிமக்கள்' என்று பெருமையாகப் பேசப்படும் முதியோரை
அன்பு பாசம் நேசத்துடன் கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற
நல்நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை முதியோரைக் கவுரவிக்கும் நோக்கில
அக்டோபர் முதல் தேதியை சர்வதேச முதியோர் தினமாகப்
பிரகடனப்படுத்தியுள்ளது, அதன் பிரகாரம் உலகெங்கணும் இத்தினம்
அனுசரித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டி தொட்டி எல்லாம்
கொண்டாடப்படுகிறதோ இல்லையோ, வசதி வாய்ப்புக்கள் உண்டோ இல்லையோ
அங்கெல்லாம் அன்பு. பாசம், நேசம், காதல் போன்றவை இன்னும் சாகவில்லை.
வாழ்க வளமுடன்.
‘Blessed are the poor for
theirs is the kingdom of Love.’
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|