வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய நம்பி நெடுஞ்செழியன்!

பேராசிரியர் இரா.மோகன்

“முடியுடைய வேந்தராகிய பாண்டியர்க்கு வினை வேண்டிய விடத்து அறிவும், படை வேண்டுமிடத்து வெல் படையும் தந்து புகழ் மேம்படுவித்த குறுநிலத் தலைவர் பலருண்டு. அவருள் வினை வகையில் வீறு எய்தியோர்க்குப் பாண்டி வேந்தர் தம்முடைய பெயர்களையே பட்டமாக வழங்குவர். இவ் வழக்கு ஏனைச் சோழர்பாலும் சேரர்பாலும் காணப்படும்” (புறநானூறு மூலமும் உரையும்: பகுதி II,ப.85) என மொழிவர் உரைவேந்தர் ஔவை துரைசாமி. இவ் வகையில் நம்பி என்னும் பாண்டி நாட்டுக் குறுநிலத் தலைவன் அரிய வினையைச் செய்து முடிவேந்தனாகிய பாண்டியயன் நெடுஞ்செழியன் பெயரைத் தனக்குப் பட்டமாகப் பெற்றான்; ‘நம்பி நெடுஞ்செழியன்’ என அழைக்கப் பெற்றான்.

நம்பி நெடுஞ்செழியன்பால் பேரெயில் என்னும் ஊரினைச் சார்ந்த முறுவலார் என்ற சான்றோர் பேரன்பு கொண்டு ஒழுகினார்; அவனுடைய நற்பண்புகள் அனைத்தையும் அவர் பன்முறையும் கண்டு அவனுடன் கெழுதகை நட்பு பாராட்டி வந்தார். இந் நிலையில், நம்பி நெடுஞ்செழியன் எதிர்பாரா வகையில் உயிர் துறந்தான். அவன் வேல், வாள் முதலிய படைக் கருவியால் போர்க் களத்தில் விழுப்புண் பட்டு இறவாததால், செய்யத் தகுவது அறிய வேண்டி அவ் வேளையில் அங்கே கூடி இருந்த சான்றோர், பேரெயில் முறுவலாரின் கருத்தினை அறிய விரும்பிக் கேட்டனர். அவர், “நம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கனவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆதலால், அவன் உடலைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி, எது செய்யினும் தகுவதே ஆகும்” என்ற கருத்தமைந்த கையறுநிலைப் பாடல் ஒன்றினைப் பாடினார். அப் பாடல் வருமாறு:

“தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவில் பூச்சூடினன்;
தண்கமழும் சாந்துநீவினன்;
செற்றோரை வழிதபுத்தனன்;
நட்டோரை உயர்புகூறினன்;
வலியர்என, வழிமொழியலன்;
மெலியர்என, மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்புஅறியலன்;
இரந்தோர்க்கு மறுப்புஅறியலன்;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன்;
பெயர்படை புறங்கண்டனன்;
கடும்பரிய மாக்கடவினன்;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன்;
ஓங்கு இயல களிறுஊர்ந்தனன்;
தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!”
(239)

“நம்பி நெடுஞ்செழியன் வளையல்கள் அணிந்த இளைய மகளிரின் தோளைத் தழுவினான்; காவல் உடைய சோலைகளின் மரங்களில் உள்ள மலர்களைச் சூடினான்; குளிர்ந்த மணமுடைய சந்தனத்தைப் பூசினான்; தன்னைப் பகைத்தவரைக் குடியோடு அழித்தான்; நண்பர்களின் பெருமையைப் பாராட்டினான்; ‘இவர் நம்மில் வலிமையானவர்’ என்று கருதி ஒருவரிடம் பணிந்து நிற்க மாட்டான்; மெலியவர்களிடம் தன் பெருமையைப் புகழ்ந்து பேச மாட்டான். பிறரிடம் தான் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்; தன்னிடம் இரந்து நிற்பவர்களுக்கு இல்லை என்று சொல்லி மறுப்பதை அறியாதவன்; முடிவேந்தர்களின் அவைக் களத்தில் தனது உயர்ந்த புகழ் வெளிப்படுமாறு செய்தான். தன்னை எதிர்த்து வரும் படையை எதிர்நின்று தடுத்தான்; புறமுதுகு காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து அதன் பின் செல்லாமல் நின்றான். விரைந்து செல்லும் குதிரையைத் தன் மனத்தினும் விரைவாகச் செலுத்தினான்; நீண்ட தெருக்களில் தேரில் சென்றான்; உயர்ந்த இயல்புடைய யானையின் மேல் ஏறிச் சென்றான்; இனிமையான மதுவினைக் குடம் குடமாகப் பலர்க்கும் வழங்கினான்; பாணர்கள் மகிழுமாறு அவர்களது பசியினைத் தீர்த்தான்; பிறரை மயக்கும் பசப்புச் சொற்களை ஒருபோதும் கூறி அறியான். இங்ஙனம் அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆதலால், இப் புகழை விரும்புவோனின் தலையை வாளால் அறுத்துப் புதைத்தாலும் சரி, அல்லது சுட்டு எரித்தாலும் சரி, எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி ஆகட்டும்” என்பது இப்பாடலின் தெளிவுரை.

“நம்பி நெடுஞ்செழியன் வாழ்வாங்கு வாழ்ந்தவன்; தன் வாழ்நாளில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து முடித்தவன்; ஒரு குறையுமின்றித் திகழ்ந்தவன்; தனக்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் அனைத்தையும், மன நிறைவோடு வாழ்ந்து முடித்தவன். ஆதலால், தன் புகழை நிறுத்தி விட்டுச் சென்ற அவனது உடலைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்! அவன் மண்ணில் நல்ல வண்ணம் நிறைவாழ்வு வாழ்ந்தவன்! அது போதும்!” என்று கூறுகிறார் பேரெயில் முறுவலார்.

“சங்கக் கவிதைகள் நிகரற்றவை; முதிர்ந்தவை; தோண்டக் கிடைக்கும் பொற்சுரங்கம் போன்றவை. இன்றைய புதுக்கவிஞர்கள் சங்கப் பாடல்களைப் படிக்க வேண்டும்; இன்றைய படைப்பாளிகளுக்கு இவற்றின் அறிமுகமும் ஆழ்ந்த பயிற்சியும் வேண்டும். இருந்தால், இவர்கள் படைப்புலகின் உச்சிக்குச் செல்வார்கள் (புறநானூற்றுக் குறும்படங்கள், பக்.47-48) என்னும் மூதறிஞர் தமிழண்ணலின் கூற்று இன்றைய படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

 

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்