இல்லறம் சிறக்க! இனிக்க!
திருமதி செல்லையா யோகரத்தினம்
M.A
மே 15 சர்வதேச குடும்ப தினம்.
'இல்லறம்
அல்லது நல்லறம் அன்று' என்று ஒளவைக்கிழவி கூறியுள்ளார். ;அறம் செய்ய
விரும்பு' என்றும் கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் நாமே தானே செய்ய
வேண்டும். இல்லறம் என்பது மனைவி மக்களோடு வாழ்ந்து கொண்டு பிறருக்கு
உதவியாக இருப்பது. இதுவே நல்ல அறம். இது அல்லாதது துறவறம். உதவி வாழ்வது
இல்லறம். உதவி பெற்றுக்கொண்டு வாழ்வது துறவறம். இது நல்லறமாகாது.
இல்லறமும் துறவறமும் அறச்செயல்களே அயினும் இல்லறம் மட்டுமே நல்லறம்.
இதற்கு நல்ல குடும்பம் அமைய வேண்டும். நீயா? நானா? என்று வாழ்ந்தால்
என்றுமே பிரச்சனைதான். இதற்கு ஒரு குடும்பமும் விதி வலக்கல்ல. ஒத்துப்
போனவர்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு
புரிந்துணர்வோடு மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்,
வாழ்க்கையையே சிக்கலாக்கிக்கொண்டு 'இனி வாழ்வது அவசியமா?' என்ற கேள்விக்
குறியோடு போராடுபவர்களும் இருக்கிறார்கள். நன்றாக வாழும் தம்பதியர்
பற்றிக் கேள்விப் பட்டாலும் இல்லைப் தாங்களே பார்த்திருந்தாலும் கூடச்
சிரமப்படும் சிலர்தான் அதிகம் நினைவுக்கு வருவார்கள். மனிதகுலம்
தழைத்தோங்க ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்து அடுத்த தலைமுறையினரை உலகுக்கு
அளித்திட வேண்டும். இது தான் இயற்கை விதி. இந்த விதி உடல்த் தேவையையும்
உளத்தேவையையும் மையமாகக் கொண்டே அமைக்கப் பட்டுள்ளது. எனவே இது ஒன்றும்
புதுமையானதல்ல.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப்படும். (குறள் 1327) ஊடல் என்பது தலைவன் தலைவியின்
இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு இடையில் வராது விட்டால்
வாழ்க்கையே சுவைக்காது. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ஒருவர்
வெறுப்பர். யார் விட்டுக் கொடுப்பது என்று சண்டை வரும். சண்டைவராது
விட்டால் சுவையே இல்லையே! எப்ப ஒரு சண்டைவந்தாலும் ஒருவர் தானே வெற்றி
பெற முடியும்! விளையாட்டில் சில சமயம் ஒரே இடத்திற்கு இருவர்
தெரிவாகலாம். இங்கேயும் அப்படியும் நடக்கலாம். ஆனால் ஒருவர் வென்றால்
மற்றவர் தோற்றுத்தானே ஆகவேண்டும். எனினும் தோற்றவர் தான் வென்றவர் என்று
வள்ளுவர் கூறுகிறாரே! தோல்வியடைந்தவர் தோல்வியில் கொஞ்சம் துவண்டுதான்
இருப்பார். ஆனால் வெற்றி பெற்றவர் சிறிது சந்தோசமாக இருந்தாலும் தோல்வி
அடைந்தவரைக் கண்டு வருத்தமடைவார். என்னால்த்தானே எனது காதலுக்குப்
பாத்திரமானவர் சோர்ந்து போயுள்ளார் என்று தன்னையே வெறுப்பார். இந்த
நிலைமை சீராக இரவில் கூடுவர். இரவில் புணரும்போது தோல்வியடைந்தவரின்
அகம் உணரும் இந்தக் கோபம் வெறும் பொய் என்று, ஆதலால் இதுவெல்லாம்
தோல்வியேயல்ல, கூடலில் இன்பம் அடைவதால் அவர் இறுதியில் வெற்றி
யடைந்தவராகின்றார். இதுவே இயற்கையின் விதி. இதுவே காதலர்களிடையே நடப்பது.
இந்தச் சண்டை ஒரு இரவு தாங்காது.
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண
நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூல். இதை எழுதியவர்
தொல்காப்பியர். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும் இதுவே இன்றுவரை
தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையாக உள்ளது. ஒரு இனத்தின்
தொன்மையையும், பெருமையையும் அதன் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்து
கொள்ள அந்த மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை
கலாச்சார பண்பாட்டுக் கூறுகள் வழியாகவே அறிந்து கொள்ள முடியும். சங்க
இலக்கியம், தமிழில் கிடைத்துள்ள செவ்வியல் இலக்கியங்கள். இவை அக்கால
கட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டுக்
கூறுகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் பண்பாடு,
காதல், வீரம், போர், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற இன்னோரன்ன செய்திகளை
சங்கப் பாடல்கள் அறியத்தருகின்றன.
சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழம் தமிழர்
பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்கப் பாடல்கள். சங்க கால மகளிரின்
அரும் பெரும் பண்பு நலன்கள், ஆணும் பெண்ணும் இணைந்து நடத்தும் இல்லற
வாழ்க்கை ஆகியவை தெளிவாகச் சொல்லப்படுகின்றன. அக்காலத்தில் ஆணும்
பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு எனக்
கொள்ளப்பட்டது. சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வை அகம் புறம் என
அமைத்தனர். இல்வாழ்க்கை நெறி அகமெனப்பட்டது. அகத்திற்குப் புறத்தே
நடைபெறுவது புறவாழ்க்கை நெறி, புறமெனப்பட்டது. அகத்திணைப் பாடல்களில்
சங்க மகளிர் பற்றிய செய்திகள் அதிகமாகக் கிடைக்கின்றன. அது போலவே
அகத்திணைப் பாடல்கள் மக்களைப் பொதுநிலையிற் கருதிப் பாடப்பட்டவையே
தவிரச் சுட்டி ஒருவரது இயற் பெயரைக் குறிப்பிடவில்லை என்று தொலகாப்பியரே
குறிப்பிடுகின்றார். மகளிருக்குப் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன எனத்
தொல்காப்பியர் எடுத்துரைக்கிறார்.
'உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச்
சிறந்தன்று......'(தொல், களவியல்: 23) 'உயிரினும் நாண் சிறந்தது
அதனினும் குற்றம் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது.' என
முன்னோர் கூற்றை மனதிற் கொண்டு தலைவனுள்ள இடத்துச் செல்வதும்,
வருத்தமில்லாச் சொல்லை தலைவி சொல்லுதலுமாகிய பிறவுமாம்.
'அச்சமும் நாணும் மடனுமுந் துறுதல்நிச்சமும் பெண்பாற்கு உரிய என்பர்...'
(தொல், களவியல்: 8)
இதன்வழி ஆண்களுக்குப் 'பெருமையும் வீரமும்'; வேண்டப் படுவன போலப்
பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது எனக் குறிப்பிடுகிறார். மகளிர்
மென்மையான உடலமைப்பிற்கு உரியவர். புற உலகின் பொய்மையும் சூதும்
அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும், விலங்கு முதலியவற்றால்
நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் 'திண்மையால்'
தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஓம்பும் ஆற்றல்
உடையவர்கள், அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பால் காணத்தகும்
மென்னீர்மையினைச் 'சாயல்'; என்ற சொல்லால் நம் தமிழர் வழங்கினர்.
'நீரோ
ரன்ன சாயல்
'தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.' (குறுந். 226 1-3) என்ற குறுந்தொகைப்
பாடல் அடிகள் இக் கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.
பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர் 'பூவொடு
புரையுங் கண்ணும் பேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக்
குறூஉ நுதலும் (குறுந். 95 4-5) என வருணித்துள்ளார்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. ( குறள் 45)
ஒருவன் இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமேயானால் அந்த
வாழ்க்கையின் பண்பும் பயனும் அது. மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும்,
தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அறமும் இருந்தால்
இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே என்கிறார் வள்ளுவர். கண்ணம்மா
கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு
நிறைந்த பாரதி. காதலன் காதலியையும் நம் முன்னே வைக்கிறார்.
'காற்று வெளியிடைக் கண்ணம்மா கண்ணம்மா
காற்று வெளியிடைக் கண்ணம்மா கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக்
களிக்கின்றேன்...............'
'அமுதூற்றினை ஒத்த இதழ்களும்....' எனப் பாரதி தொடங்கி.... எத்தனையோ பேர்
காதல் களிப்பில் கிறங்கிக் கிடந்த அற்பதமான காலம் ஒன்று இருந்தது.
தாம்பத்தியம் ஆண்பெண் இருபாலாருக்குமே எற்படும் பொதுவான வேட்கை.
தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு
எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்திற்கும் முக்கிய இடம்
உண்டு. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பது
தாம்பத்திய உறவு வேட்கையே. இல்லறம் இனிக்க, சிறக்க, தாம்பத்திய வாழ்க்கை
முழுமை பெற, இறுதிவரை தம்பதிகள் சேர்ந்து வாழப் புரிதல், உடல்நலம்,
மனநலம் ஆகியவை கைகொடுக்கும். புதிதாகத் திருமணமான இளைஞனைப்பார்த்து
அந்தக் காலப் பெரிசுகள், 'வாரத்துக்கு மூன்று தரமாச்சும் நாட்டுக்கோழிக்
குழம்பு சாப்பிடப்பா!' என்பார்கள். அசைவம் சாப்பிடாதவர்களுக்கும் மாற்று
உணவு உண்டு. சிறிது பச்சை வெங்காயம், கைப்பிடி வேர்க்கடலை. இவையெல்லாம்
உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் என்று அவர்கள் தெரிந்து
வைத்திருக்கிறார்கள். உளுந்து சேர்த்துச் சமைத்த சாதம் பண்டைய
தமிழர்களின் திருமண நிகழ்வுகளில் இடம்; பெற்றிருப்பதை அகநானூறு
சுட்டுகிறது. 'உளுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை....' (அக 86) மேலும்
'உளுத்தம் களி, உளுத்தம் கஞ்சி சாப்பிட்டு வந்தால் இளைத்த உடலெல்லாம்
பயில்வான் மாதிரி ஆயிடலாம் அத்துடன் பெண்களுக்கு இடுப்பு வலிமை பெறும்'
என்பது பாட்டிமார்களின் வசனம். எதற்கும் இல்லற வாழ்க்கை சிறக்க,
ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வாழ்க்கைத் துணையிடம்
அன்பு குறையாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமணப் பேச்சு ஒரு வீட்டில் ஆரம்பித்துவிட்டால் முதலில் பார்ப்பது
சாதகத்தைத்தான். பத்துப் பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் உள்ளது என்று
பார்ப்பார்கள். சோதிடர் இருவரது சாதகத்தையும் கணித்து உத்தமம் என்று
சொன்ன பிற்பாடுதான் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடக்கும். இதில் பிசகு
என்றால், அவ்வளவுதான், அடுத்த சாதகம் தான். வேறு பேச்சுக்கே இடமில்லை.
எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை
நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கப்படுகிறது. யாரை வைத்துப்
பார்க்கவேண்டுமோ அதைக் கருத்தில் கொள்ளாது செயற்படுகிறார்கள். அந்த ஆண்
பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள்
சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ, அவர்கள் ஒன்றாக
வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை,
ஒருவரை ஒருவர் மதித்தல், மற்றும் சொந்த பந்தங்களை மதிக்கும் இயல்பு
போன்றவற்றைப் பொதுவாகப் பார்ப்பதில்லை. பண்டைய சங்க காலத்தில்
இப்படியாகப் பொருத்தங்கள் பார்த்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. இப்படி
ஆண், பெண் ஒன்று சேர்வதைத் திருமணம் என்கிறது தமிழ். ஆனால் இப்படி ஒன்று
நடைமுறையில் இருந்துள்ளது.
வெற்றிலைக்கொடி படர அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை சாப்பிட ஆடு
வளர்த்தோம்,
ஆடு போட்ட புழுக்கையை அள்ளிப் போட்டுக் காடு வளர்த்தோம்,
காட்டுக்குள்ளே புழுப் பொறுக்கக் கோழியை விட்டோம்,
வளர்த்ததெல்லாம்
விற்காமல் அய்யனார் கோவிலுக்கு நேர்த்தி வைச்சோம்,
நேர்த்தி
வைத்ததெல்லாம் வெட்டித் திருவிழா வைத்தோம்,
திருவிழா பேரைச்சோல்லி உறவை
அழைத்தோம்,
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடித்தோம்.
பேசி முடித்ததற்கு ஆதாரமாகத் தோட்டத்து வெற்றிலையுடன் பாக்கையும்
வைத்தோம்,
இப்படி வஞ்சகம் சூது இல்லாமல் சுழன்றது எங்கள் வாழ்க்கை முறை.
இப்போ நஞ்சும் சூதுமாக நடக்கிறது, எங்கள் பாரம்பரியத்தைத் தொலைத்து
விட்டோம். குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன. நாளும் பொழுதும் விவாகப்
பிரிவும், தாபரிப்பும் தான் எச்சம்.
தொல்காப்பியம் மன்றல் என்பதோட கடி, வரைவு, வதுவை, என்றெல்லாம்
திருமணத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
தொல்காப்பியர், திருமணத்திற்குப் பத்துப் பொருத்தங்களைக்
குறிப்பிடுகிறார். அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை.
'பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்தம், காம வாயில்,
நிறையே,
அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே.' (தொல்.பொருள்
273)
ஒத்த பிறப்பு, ஒத்த குடியில் பிறத்தல், ஒத்த குடி ஒழுக்கம், ஒத்த
ஆண்மை, ஆண்மை என்பது ஆளும் தன்மை – குடி யாண்மை, பெண்களுக்கும் உரிய
பண்பு, ஒத்த வயது, வயது ஒற்றுமை, ஒத்த உருவம், உருவழகு, ஒத்த அன்பு,
இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக
இருத்தல் வேண்டும். ஒத்த நிறை, கட்டுப்பாடு, ஒத்த அருள், ஒத்த அறிவு,
ஒத்த செல்வம், ஆகிய பத்துப்பண்புகளிலும் ஒத்தவர்களாக இருத்தல் வேண்டும்
என்பதாகும். அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும்
தொல்காப்பியம் கூறுகிறது.
'நிம்பிரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல்
பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை
இன்மை என்மனார் பலவர்.'
தற்பெருமை, கொடுமை, (தன்னை) வியத்தல், புறங்கூறாமை, வன்சொல்,
உறுதியினின்றும் பின்வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப்பேசுதல், வறுமை
குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தல்
பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக்கூடாதவை என்கிறது.
திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர்
கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப்
பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்காகும். அதற்குச் சாட்சியாக எல்லாத்
திசையிலும் அவர்களைச் சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும்
நண்பர்களுமே. அதுதான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்
ஆயுதமாகும். இங்கே தொல்காப்பியரின் ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர்
நோக்கு ஆகியவை காணப்படும். அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும்.
அதுவே ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பாக இருந்து விட்டால்ச் சிறப்பாக
இருக்கும். வாழ்வின் முக்கிய அங்கமாகிய தர்மத்தின் வழி நின்று பொருள்
தேடி, முறையாக இன்பம் துய்த்து வாழ்தலே பெருமை. வீடு பேறு அடைதல் என்று
கூறிவிடலாம் ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. அது போலவே திருமணத்தை
ஐம்பெரும் பூதங்களைச் சாட்சிக்கு அழைப்பதும். மேலும் திருமணத்திற்கான
சாட்சியாக மூன்று முடிச்சோ, மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில்
தேவைப்படுவது இரு மனங்களும் ஒன்று சேர்வதே. 'அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்.' எல்லை கடந்த அன்பின்
ஆழத்தில்த் தானே காதல் இன்பம் இருக்கின்றது. 'செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' எனும் குறுந்தொகை வரிகள் சாட்சிக்கு
நிற்கின்றன. மேலும் குறுந்தொகை பாடல்கள் அனைத்துமே வழிகாட்டிகளாக
அமைகின்றன.
இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல ஏதாவது
இருக்க முடியுமா! இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும் கள்ள
உறவிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. தனிச்சிறப்புக் கொண்ட தமிழர்கள்
நிலை பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவுகளால் திசை மாறிவிட்டமை
வருத்தத்துக்குரியது. ஆரம்பத்தில் இனிக்கும் உறவுகள் போகப் போகக்
கசப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரம், ஆடம்பரம்,
குணாதிசயங்கள் வேறுபாடு, தாம்பத்தியம், குழந்தை வளர்ப்பு, அழகு எனப்
பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் பிரச்சனை எழ வாய்ப்புக்கள் உண்டு.
எப்படிப் பல்வேறு விதமான உடல்ப் பிரச்சனைகளுக்கு இஞ்சி. பூண்டு, தேன்
நல்ல தீர்வளிக்க வல்லதோ, அதே போலத்தான் இல்லறத்தில் எழும் பல்வேறு உளப்
பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வழிகள் இருக்கின்றன.
உங்கள் துணைக்கு
உங்கள் மீதான ஒரு செல்வாக்கும், சொல்வாக்கும் இருக்க வேண்டும். நீ
சொல்வதை என்ன நான் கேட்பது? என்ன நீ பெரிய அறிவாளியா? என்பது போல நடந்து
கொள்வுது நல்லதல்ல. இதனைச் சரியாகப் பின்பற்றினாலே வீண் சண்டை, உறவில்
விரிசல் ஏற்படாமல்த் தடுக்க முடியும். உங்கள் துணை உங்கள்
சுதந்திரத்தைப் பறித்தால்த்தான் தப்பு, ஆனால் உங்கள்
பாதுகாப்பிற்காகவும், உங்கள் நல்வாழ்வும் கருதிக்; கூறும் அலோசனைகளையும்,
அறிவுரைகளையும் ஏற்பதில் எதுவிதத் தவறும் இல்லை. எனவே உங்கள் மீது
உங்கள் துணை அக்கறை எடுத்துக் கொள்ளத் தடை விதிப்பது தவறு. அக்கறை
என்பது கொஞ்சுவது, பாராட்டுவது மட்டுமல்ல, மிஞ்சுவதும், திட்டுவதும்
கூட ஒருவகையில் அக்கறைதான். இதனை இருவரும் நன்கு புரிந்து கொள்ள
வேண்டும்.
கோபம் இருக்கும் இடத்தில்த்தான் பாசமும் இருக்கும். அதற்காகக்
கோபத்தை மட்டுமே காண்பித்து பாசத்தை ஒளிப்பதா? பாசத்தையும் அவ்வப்போது
காட்டவேண்டும். அப்பதான் ஒருவழிப்பாதை இருவழிப்பாதையாகும்.
எல்லா
உறவிலும் ஒரு பற்று, ஒரு அரவணைப்பு இருக்க வேண்டும். அவ்வப்போது ஒரு
பாராட்டு, ஒரு பரிந்துரை ஏன் போலியாகவேனும் பாராட்டுவதில் தப்பேயில்லை.
பாராட்டுக்கள் நல்ல பலனைத்தரும். பாசத்தையும் அன்னியோன்யத்தையும்
கூட்டும். நம்மிடம் ஒரு பொருள் இருக்கும்வரை அதன் மதிப்புத் தெரியாது.
அதுபற்றி பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ளவும் மாட்டோம். அதனைவிட்டுப்
பிரிந்தால் மிகவும் வருத்தப்படுவோம். அதேமாதிரித்தான் உடன் இருப்பவரும்.
சிறிது அக்கறை வேண்டும். சம்பிரதாயத்திற்காகவாவது எப்படி இருக்கிறாய்?
இன்று எப்படிப் பொழுது போச்சு? என்ன உதவி செய்யட்டும்? என்று எதையாவது
கதைத்து வைக்க வேண்டியதுதானே!
'உலக உயிர்கள் அனைத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாய் அமையும்
காரணிகள் இரண்டு. ஒன்று பசி, மற்றொன்று காதல் உணர்வு.' என்கிறார்
உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட். 'உணர்ச்சிகள் ஆரம்பித்து வைக்க
அறிவு, வந்து முடித்து வைப்பது தான் காதல். உள்ளங்களால்
முன்மொழியப்பட்டு உடல்களால் வழிமொழியப்பட வேண்டும்.' எனக் காதலுக்கு
இலக்கணம் வகுக்கிறார் இக்காலக் கவிஞர் வைரமுத்து.
இறுதியாகக் கலித்தொகைப் பாடல் வரிகள் சாட்சிக்கு வருகிறது.
'ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை,
அரிதரோ!
இல்வாழ்க்கையில் உள்ள இன்பம் பொருளில் இல்லை. அது பிரிவு அறியா வாழ்க்கை
உடையவர்க்கே உண்டு. வாழ்நாள் எல்லாம் தம் உடலின் ஒருபாதியை ஒருகையால்
மறைத்து, மறுபாதியை ஒரு கையால்ப் பற்றிய சிற்றாடையால் மறைத்து வாழும்
வறுமை வாழ்வினராயினும் பிரிவறியா வாழ்வினைப் பெற்றவர் வாழ்க்கையே
பேரின்ப வாழ்க்கையாகும். அந்தோ அவ்விளமை அழிந்துவிட்டால் கழிந்த
அவ்விளமையை மீட்டுப் பெறுவது அரிதினும் அரிதாகும்.
சங்ககாலத்துக் கதையை
இப்ப சொல்லி ஏமாற்ற முடியாது என்பாரும் உண்டு. ஆனால் தற்காலத்திலும்
அப்படி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு குடும்பம். வசதி
வாய்ப்புக்கள் இல்லை. நாட்கூலிக்கு வேலைக்குப் போகும் கணவன். வேலையால்
வரும் போது வாங்கிய பாதிப் பணத்தில் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு
வருவான். ஆனால் வீட்டிலோ சண்டை சச்சரவு கிடையாது. வீட்டுக் கூரையைப்
பார்த்தால் கிடுகு அத்தனையும் உக்கி வெறும் ஈக்கில்தான் தெரிகிறது. மழை
பெய்தால் வெளியில்ப் பார்க்க உள்ளேதான் அதிக மழை. வெயில் என்றால் உள்ளே
பித்தல் உள்ள இடமெல்லாம் சூரியன் தெரியும் ஓராயிரம் சூரியன்'கள்';.
ஆனால் அந்த வீட்டுத்தலைவியின் முகத்தில் எந்த ஒரு வாட்டத்தையோ, கவலையையோ,
சலனத்தையோ பார்க்க முடியாது. இது சங்க காலமா? இல்லை இருபத்தோராம்
நூற்றாண்டா? அங்கே ஒரு பிரச்சசாரப் பீரங்கிகளும் போவதில்லையா? பெண்ணியம்
பேசுபவர்கள் எங்கே? ஆனால் அங்கு அன்பு வாழ்க்கை உள்ளது. அடிமைத்தனம்
இல்லை. போராட்டம் இல்லை. செல்வம் வரும், போகும், ஆனால் அவர்களுடைய
வாழ்க்கை காத்து நிக்காதே! இப்போ கிட்டாத இன்பம் முதுமை வந்த பின்பா
கிட்டப்போகிறது! வாழ்க்கைத் துணையை நேசிக்கக் காரணங்களும் நிபந்தனைகளும்
தேவையில்லை. தாம்பத்தியத்தின் நோக்கத்தையும் அதனால் எற்படப் போகும்
அனுகூலங்களையும் புரிந்தும் உணர்ந்தும் இருந்தால் இல்லறம் கண்டிப்பாகச்
சிறக்கும், இனிக்கும்.
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் சொத்து இல்லாதவன் செத்தால் இறுதிச் சடங்கு
செய்ய காக்கை குருவி மட்டுமல்ல, கொசுக் கூடக் கிட்டவராது என்று சொல்லும்
அளவுக்கு பணம் மக்களை ஆட்டிப் படைக்கிறது, அந்த அளவுக்கு ஆட்சி
செய்கிறது. நிலைமை இவ்வாறாக இருக்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
கதைகளைச் சொல்லி மற்றவர்களை இழிச்சவாயர்களாக ஆக்குவதா என்ற கேள்வி
எளலாம். எங்களுக்குப் பகுத்தறிவு உண்டு. சிந்திக்கும் ஆற்றல் உண்டு.
மேலும் எங்களுக்குப் பணியாரம் தான் தேவையே அன்றிச் சிலு சிலுப்பு அல்ல.
எங்கள் வாழ்வு சிறக்க வேண்டும். இனிக்க வேண்டும். நாம் சந்தோசமாக
வாழவேண்டும். இந்த உலகினில் எங்களுக்கு குடும்ப வாழ்க்கையை விட மிக
முக்கியமாக நாம் எதைக் கருத முடியும்?! 'கடிக்கிறதை விட்டுவிட்டு
ஊருவதைத் துடைப்பது.' என்று ஒரு உவமை உண்டு. குடும்பம் சிறப்பாக
இருந்தால் மிகுதி எல்லாம் தானாகவே சிறப்பாக நடக்கும். இந்த உண்மையை நாம்
தெளிவாகத் தெரிந்த கொள்ள வேண்டும். தனிமனிதர்கள் இணைந்து வாழ்வதே
குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததே ஒரு சமூகம், பல சமூககங்கள்
சேர்ந்துதே ஒரு கிராமம். பல கிராமங்கள் சேர்ந்ததே ஒரு ஊர். பல ஊர்கள்
சேர்ந்ததே ஒரு நாடு. எனவே ஒரு குடும்பம் சிறப்பாக இருந்துவிட்டால்
கண்டிப்பாக நாடுநல்லதாக இருக்கும். நாடுகள் நல்லதாக அமைந்து விட்டால்
உலகம் அமைதியாக இருக்கும். ஆகவே குடும்பங்களைப் பேணி உலகை இனிதாக்க
வேண்டும். குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர
வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு தொடக்கம் மே 15 சர்வதேச
குடும்ப தினமாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடும்ப ஒற்றுமையை உலகிற்கு முதல் முதலில் சொன்னவன் தமிழன். கூடி
வாழ்ந்தால்க் கோடி நன்மை என்பது முதியோர் வாக்கு. 'யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று புறநாநூற்றுப் பாடல் மூலம் கணியன் பூங்குன்றனார் கூறினார்.
ஒரு கூட்டுக் கிளிகளாக, ஒரு தோப்புக் குயில்களாக நமக்குள் சந்தோசங்கள்,
சிறு சிறு சண்டைகள், சச்சரவுகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த
அற்புத அமைப்புக் குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமிக்கும் மகா
சமுத்திரம். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் வரை மனிதனுக்கு
வாழ்க்கையில் கவலை இல்லை. அன்பு, பாசம், நேசம் இருந்துவிட்டால்
வாழ்க்கையில்க் கவலை இல்லை. ஒரே குடும்பத்தில் பெரிசு சிறிசு என்ற
பேச்சுக்கே இடமில்லை. குடும்ப தத்துவம் தெரியாதவர்கள், புரியாதவர்கள்
ஏதேதோ கருத்துக்களைக் கூறுவார்கள். குளப்புவார்கள். நாம் என்ன போராடி
நாட்டைப் பிடிக்கப் போறோமா? இல்லை உரிமையைக் காப்பாற்றப் போகிறோமா?
இல்லை மறுக்கப்பட்ட உரிமையைப் பெறப் போகிறோமா? ஒன்றுமே இல்லை.
அவையெல்லாம் வெளியுலகில். இது எங்கள் குடும்பம். ஏற்றத் தாழ்வு இல்லை.
நாங்கள் வாழ்கிறோம். வாழ்வோம். வாழ்ந்து காட்டுவோம். எங்கள் இல்லறம்
சிறக்கும், இனிக்கும். எல்லாம் நம் கைகளில் உள்ளன.
'காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே' ---- பாரதியார்.
அன்பின் எல்லையாய் விளங்கும் காதலை, காலத்தை வென்று
வாழக்கூடியது என்கிறார் கவிஞர் கார் முகிலோன்.
'காலம் வென்று வாழ்வது காதல்
காதல் ஒன்றே உலகின் தேவை
காதலர் வாழ்வில் காண்பது எல்லாம்
இனிமையைத் தவிர வேறில்லை
அதுதான் நமக்கு அன்பின் எல்லை.'
இன்று வாழும் வாழ்க்கைதான் உண்மை! நிஜம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|