எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 7

முனைவர் செ.இராஜேஸ்வரி

எம் ஜி ஆரின் வறுமையும் கண்டிப்பும்

ரு முறை எம் ஜி ஆர் வசன கர்த்தா ஆறுர் தாசிடம் பேசிக்கொண்டிருக்கும் பொது என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளை கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழ்நதை கொடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார். அப்போது அவர் எனக்கு மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்போது பெரிய பிள்ளகுட்டிக்காரனாகப் பிறக்க வேண்டும் நல்ல கல்விமானாகப் போற்றப்பட வேண்டும் என்றார். இப்போது எனக்கு தெரிந்த நூலறிவு பொது அறிவு ஆகியவற்றை கொண்டு நான் மேடையில் பேசுகிறேன். இருந்தாலும் கற்ற அறிந்தவர்களைக் காணும் பொது எனக்குள் நாமும் இப்படி படிக்க வசதி இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கமும் கவலையும் வருகிறது என்று தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறார். எம் ஜி ஆரின் மனதில் அவர் குழந்தைக்காகவும் கல்விக்காகவும் ஏங்கி தவித்ததால் தன வாழ்நாளில் அந்த இரண்டிலும் அவர் அதிக அக்கறை காட்டினார்.

தமிழகத்தில் குழந்தைகள் உணவின்றி தவறான வழிகளில் போய்விடக் கூடாது பள்ளிகளுக்கு போகாமல் கல்வி பெறாமல் இருந்துவிடக் கூடாது என்று அக்கறையில் தான் சத்துணவை கொண்டு வந்தார். தனக்கு சோறு போட வழியிருந்திருந்தால் தன அம்மா தன்னை பள்ளிக்கு அனுப்பாமல் நாடகக் கம்பெனிக்கு அனுப்பி இருப்பார்களா என்று எண்ணி ஏங்கினார். அந்த நிலை தனது ஆட்சியின் கீழ் இருக்கும் எந்த குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது என்று முடிவு செய்து பல ஏளனங்களுக்கு இடையில் அந்த திட்டத்தைத் தொடக்கினார். உணவும் கல்வியும் ஒரு பிள்ளைக்கு பதினேழு வயது வரை கிடைத்துவிட்டால் பின்பு அது தன்மானத்துடன் உழைத்து வாழும் என்று உறுதியாக நம்பினார்.

இறையருளால் உலகில் ஒரு பெரிய பொருளாதாரக் கொள்கை மாற்றம் எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் அறிமுகமானது. தனியார்மயமாக்கம் என்ற பொருளாதாரக் கொள்கை அறிமுகமானதும் எம் ஜி ஆர் அதை நன்கு பயன்படுத்தி கொண்டார். தனது ஆட்சியில் பல தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் , கலை அறிவியல் கல்லூரிகளும் தொடங்க தனியாருக்கு அனுமதி கொடுத்தார். அவற்றில் 25% பேர் இலவசமாக கல்வி பெற வழி வகை செய்தார். தனக்கு தெரிந்தவர்களையும் [போரூர் ராமச்சந்திரா] தனது நண்பர்களையும் கட்சிக்காரர்களையும் [வி ஐ டி விஸ்வநாதன்] கல்லூரிகள் பள்ளிகள் திறக்கும்படி ஊக்குவித்தார். இன்று இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியில் முதலில் இருப்பதற்கு எம் ஜி ஆரின் கல்வி ஆர்வமூம் அவர் தனியாரை ஊக்குவித்ததும் முக்கிய காரணங்கள் ஆகும்.

எம் ஜி ஆர் திரைப்படத்திலும் தனது வாழ்விலும் சிறு குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டி வந்தார். அவர் ஏழு வயதில் தன தாயை பிரிந்து போய் நாடகக் கம்பெனியில் சேர்ந்து வயிற்று பசிக்காக வாழ்க்கையை ஒட்டிய போது அவருக்கு பசிக்கு உணவும் நெஞ்சுக்கு நேசமும் தீரா ஏக்கமாக இருந்தது.

செழிப்பும் வறுமையும்


செழிப்பான குடும்பத்தில் பிறந்து வறுமையில் தள்ளப்பட்டு கும்பகோணத்திற்கு வந்து தன தாயுடன் இருந்த போது இவருக்கு ஏற்பட்ட வறுமையும் அவரது தாயாரின் தன்மானப் போராட்டமும் கொடுமையானது. அதற்கு ஒரு உதாரணம் காட்டலாம். வீட்டில் மணி அரிசி இல்லை. கஞ்சி கூடக் காய்ச்சி தர இயலாது. அடுத்த வீட்டம்மா சில நாட்களாக சிறுவர்களுடன் சத்தியாம்மா பசியுடன் இருப்பதை பார்க்கப் பொறுக்காமல் ஆழாக்கு அரிசி கடன் தர முன் வந்தார். ஆனால் சத்தியாம்மாவுக்கு அதை வாங்க மனம் ஒப்பவில்லை. வேண்டாம் என்று அன்புடன் மறுத்துவிட்டார். ஆனால் பட்டினி கிடந்து வயிறு ஒட்டி முகம் வாடி தன் முகம் பார்க்கும் குழந்தைகளை என்ன செய்வது என்று நினைத்து கலங்கினார். வீட்டில் எறும்பு புற்றை குடைந்தார் அதில் கொஞ்சம் அரிசி சேகரித்தார். அந்த அரிசியை காஞ்சி காய்ச்சி தன மக்களுக்கு கொடுத்தார். இதை கதாசிரியர் ரவீந்தரிடம் எடுத்து சொன்ன எம் ஜி ஆர் என் வீட்டில் அரிசி போட்டு வைக்கும் பெரிய குதிர்கள் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அந்த நிலை மாறி எறும்பு புற்றில் இருந்து அதன் சேகரிப்பை எடுத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் நிலையையும் அனுபவித்திருக்கிறேன் என்றார்.

இந்த உரையாடல் ஏன் வந்தது என்றால், நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவின் பொது எம் ஜி ஆருக்கு ஐம்பது கிலோ எடையில் ஒரு வெள்ளி கோப்பையை அதில் நடித்த நடிகர்கள் சேர்ந்து பரிசாக அளித்தனர். அது இன்றும் எம் ஜி ஆர் நினைவில்லத்தில் இருக்கிறது. நடிகர்கள் அதில் சீனி போட்டு நிரப்பி கொடுத்தனர். எம் ஜி ஆர் அந்த சர்க்கரையை எடுத்துவிட்டு அதில் நெல்மணிகளை நிரப்பி வைத்தார். தனது வீட்டில் இருந்த பழைய நெல் குதிர்களின் நினைவாக அவர் அப்படி செய்தார். அது குறித்து ரவீந்திரன் கேட்டபோது எம் ஜி ஆர் புற்றரிசி சாப்பிட்ட கதையை எடுத்துக் கூறினார். எம் ஜி ஆரின் தாயார் தான் பசி பொறுத்தாலும் பிள்ளைகள் பசியால் தவிக்க கூடாது. அவர்களுக்கு மூன்று வேளை சோறாவது கிடைக்க வேண்டும் எனக் கருதி அதே வேளையில் அவர்கள் அந்த உணவை தர்மமாகவும் பெறக் கூடாது என நினைத்து ஒரு நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். நாடகத்தில் நடித்து அந்த உழைப்பின் காரணமாக வர்களுக்கு உணவு கிடைக்கட்டும் என முடிவெடுத்தார். ஏற்கெனவே கொடும் நோய்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பலியாகக் கொடுத்த தாய்க்கு எஞ்சி இருக்கும் இந்த இரு மகன்களாவது உயிருடன் பிழைத்து இருக்கட்டுமே என்று கண் கலங்கி குழந்தைகளைப் பிரிய முன் வந்தார். நாடகக் கம்பெனியில் கட்டுப்பாடுகள் அதிகம் அதை எம் ஜி ஆர் நல்ல விதமாக புரிந்துகொண்டதால் பிற்காலத்தில் தன வீட்டில் வளர்ந்த பிள்ளைகளையும்ம் அதே கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்.

ராதா வாங்கிய அடிகள்


எம் ஜி ஆர் எழுதி வைத்த உயில்படி சட்டப்படி எம் ஜி ஆரின் வளர்ப்பு மகள் ராதா என்பவர் ஆவார். அவருடன் பேசிய போது பல விசித்திரமான சம்பவங்களை எடுத்துரைத்தார். ராதா ஆரம்பத்தில் பெரிய வீட்டில் [பெரியவர் சக்கரபாணியின் வீடு] அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவருடன் அவரது அண்ணன் அப்புவும் அங்கிருந்தார். அப்போது ஒரு நாள் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ராதா ஒரு குழந்தையின் மூக்கை குத்தி விட்டார் ரத்தம் வடியத் தொடங்கியது. அப்பா வந்ததும் சொல்லி கொடுத்துவிட்டார்கள். எம் ஜி ஆர் ஒரு அடி கொடுத்து கண்டித்தார். அடுத்தவரை அடிக்கும் அளவுக்கு உனக்கு கோபம் வரக் கூடாது. இனி எப்பவும் இந்த மாதிரி நீ நடந்துகொள்ளாதே என்று கண்டித்தார்.

சண்டை காட்சியில் எம் ஜி ஆர்

திரையில் அடிதடி காட்சிகளில் ஜொலிக்கும் எம் ஜி ஆர் தன சண்டை காட்சிகளில் சில தர்ம நியாயங்களை பின்பற்றுவார். அநியாயம் நடக்கும்போது கூட அவர் முதலில் கெட்டவனை அடிக்க மாட்டார் தன்னை எதிரி துன்புறுத்தினால் மட்டுமே பதிலுக்கு தற்காப்புக்காகவே அவரை தடுப்பார். எல்லை மீறிப்போகும் பொது வில்லனை அடித்து கயிற்றால் கட்டி வைப்பார் அல்லது வில்லனே தப்பித்து ஓடிவிடுவார். . வீட்டிலும் எம் ஜி ஆர் தனது பிள்ளைகள் அடிதடியில் இறங்குவதை விரும்பியதே இல்லை. ராதாவுக்கு அடுத்து கீதா ஜானு லதா ஆகியோர் அங்கு வளரும்போது அவர்களை ஒரு பார்வையிலேயே எம் ஜி ஆர் அடக்கிவிடுவார். கை நீட்டும் பழக்கம் கிடையாது அவர்களும் எம் ஜி ஆர் ஒரு சொல் சொல்லும்படி நடந்துகொன்டதே இல்லை.

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்


என்று நம் நாடு படத்தில் அவர் தன அண்ணன் பிள்ளைகளான குட்டி பத்மினி மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோரிடம் பாடியது திரைக்காக மட்டும் அல்ல நிஜத்திலும் அவர் குழந்தைகளுக்கு சொல்ல விரும்பிய கருத்து ஆகும். ‘’சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி’’ என்றார் வள்ளுவர். எனவே எம் ஜி ஆர் சிறுவர்களுக்கு சினம் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஒரு காட்சி . இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டு கொண்டிருப்பார்கள் நாகேஷ் அவர்களை பார்த்து ‘’நல்லா அடிச்சிக்கங்கடா, நல்லா அடிச்சிங்க, நீங்க சண்டையை போட்டு மண்டையை ஒடைச்சா எங்களுக்கு ஜாலியா இருக்கும்’’ என்று சொல்லி சண்டையை வளர்ப்பார். அப்போது எ ஜி ஆர் அங்கு ஒடி வந்து சண்டை போட்டவர்களை பிரித்து விட்டு சண்டை போடக் கூடாது என்று அறிவுறுத்தி

‘’சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே ‘’
 

 


என்ற பாட்டை பாடுவார் அந்த பாட்டில் நடித்த சிறுவர்கள் அனைவருக்கும் அவர் பொம்மைகள் வாங்கி பரிசளித்தார். சிறுவர்களுக்குள் பகை பொறாமை கோபம் ஆகியன இருக்கவே கூடாது அவர்களிடம் அன்பும் பண்பும் சிறக்க வேண்டும் என்பதை தன வாழ்விலும் திரையிலும் எம் ஜி ஆர் வலியுறுத்ததினார்.

வேறு எப்போது எம் ஜி ஆர் கண்டிப்பார்?


ராதாவிடம் எம் ஜி ஆருக்கு இன்னும் சில சமயங்களில் கோபம் வந்ததுண்டு ஒரு முறை ராதா தனது வீட்டு சுவரில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தார். இந்த பிள்ளை இப்படி பொறுப்பிலாமல் நடந்துகொள்கிறதே என்று எம் ஜி ஆருக்கு கோபம் வந்து ஒரு அடி கொடுத்தார். பிரம்பை பகைக்கிறவன் பிள்ளையை பகைக்கிறான் என்ற பைபிள் வசனம் நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் தவறு செய்யும்போது முதல் முறையிலேயே கண்டிக்க வேண்டும் விட்டுவிட்டால் பிறகு அது கீழ்ப்படியாமை என்ற கெட்ட பழக்கமாக உருவெடுத்துவிடும். அதன்பிறகு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஒரு அடி கொடுப்பது சரி தான். கண்டிக்கிறேன் என்று கருதிக்கொண்டு அடித்து உதைத்து அழ அழ விடக் கூடாது. எம் ஜி ஆரின் தாயார் கண்டிப்பாக தன பிள்ளைகளை வளர்த்திருந்தார் அவர்களை பாய்ஸ் நாடக கம்பெனியும் கண்டிப்புடன் வளர்த்திருந்தது. எனவே எம் ஜி ஆறும் தவறை கண்டுபிடித்த போது அடி கொடுக்க தயங்கியதே இல்லை. மீண்டும் அந்த தவறு நிகழக் கூடாது என்ற நோக்கத்தில் தான் அவர் கண்டித்தார். நடிகைகளிடம் கை வரிசை காட்டுவோரை எம்ஜி ஆர் அடித்து கண்டித்திருக்கிறார். ‘’நடிகை தானே யார் கேட்க போகிறார்கள்’’ என்று சிலர் நினைத்து தவறான செய்கைகில் இறங்குவதுண்டு. அப்போது எம்ஜி ஆர் பட்டென்று அடித்துவிடுவார். அவர் இருந்த வரை திரை உலகுக்கு அவர் ஒரு god father ஆக இருந்தார்.

பிள்ளைகளிடம் செல்லமும் கண்டிப்பும்

ஒரு முறை எம் எஸ்விஸ்வநாதன் தன பிள்ளைகளை ஊட்டி காண்வென்டில் படிக்க சேர்த்தார். அப்போது அவர்கள் அங்கு உணவு சரியில்லை என முறையிட்டனர். உடனே அங்கு ஒரு சொந்த வீட்டை வாங்கி அதில் தனது அம்மாவை வைத்து அங்கு சில பணியாட்களை அம்மாவுக்கு துணைக்கு அமர்த்தி பிள்ளைகளைப் பாட்டியுடன் தங்கி படிக்க வைத்தார். இந்த தகவலை ஒரு முறை ஏதோ பேச்சில் எம் ஜி ஆரிடம் கூறிய போது எம் ஜி ஆர் அதை கண்டித்தார். ‘’ஹாஸ்டலில் இருந்து படித்தால் கண்டிப்புடன் வளர்வார்கள் பாட்டியுடன் தங்கினால் படிக்க மாட்டார்கள் செல்லம் கொஞ்சி கெட்டு போவார்கள்’’ என்றார் எம் ஜி ஆர். ஆனால் பிள்ளைப்பாசம் எம் எஸ் விஸ்வநாதனை விடவில்லை. பிள்ளைகள் அவர் எதிர்பார்த்த மாதிரி சிறப்பாகப் படிக்கவில்லை. ஒரு பேட்டியில் இந்த சம்பவத்தை சொல்லிவிட்டு எம் ஜி ஆர் பேச்சை கேட்காமல் போனது பற்றி வருத்தப்பட்டார்.

பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து வளர்க்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நான் ஏன் பிறந்தேன் படத்தில் ஒரு காட்சி ஒரு தாய் [புலியுர் சரோஜா] தன மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவாள்; அவன் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பான்; அவள் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போகப் பார்ப்பாள்; அவன் கிழே விழுந்து முரண்டு பிடிப்பான். அப்போது எம் ஜி ஆர் அங்கு வந்து சில அருமையான வரிகளை பாட்டாக பாடுவார் அத கடைசி வரி பொன் வரியாக அவரது வாழ்க்கையில் உண்மை ஆயிற்று.

தாயின் சிறப்பையும் தனயனின் பொறுப்பையும் குறிக்கும் வரிகள் அவை

உன்னை பெற்றதனாலே மற்றவராலே போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காகத் தனி இடமும் பெற வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்
 

 


தாயின் சொல்லை கேள்; அவள் சொல்படி போய் படி; கற்றவர் சபையில் தனி இடம் பெறு என்று அறிவுறுத்தும் வரிகள்.

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் – ஒரு
மாற்று குறையாத மன்னவர் நீயென
போற்றி புகழ வேண்டும்

என்று வேட்டைக்காரன் படத்தில் எம் ஜி ஆர் பாடிய பாடல் வரிகளும் குழந்தைகள் பொறுப்புடன் வளர்ந்து நல்ல நிலையை அடைந்து தனது பெற்றோருக்கு பெருமை தேடி தர வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியது தான்.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்