அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்
(ALIENS & UFO)
கனி விமலநாதன்
அறிவியற் தொடர் -
9
சுமேரியர்களின் புதிர் (தொடர்ச்சி.............)
சுமேரியர்களின்
வரலாறு சரியாக அறியப்பட முடியாமல் இருப்பது மனிதர்களின் வரலாற்று
வரைவில் பெரும் குறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்,
ஆபிரிக்காவில் இருந்து மெசப்பத்தேமியாவிற்கு புலம்பெயர்ந்து வந்து, கால
ஓட்டத்தில் மெதுமெதுவாகத் தங்களை எல்லா விதங்களிலும் வளமாக்கி உயர்வான
நிலைக்கு வந்தார்கள் என்பவர்கள்; சிலர் உள்ளனர். இன்னும் சிலரோ, இவர்கள்
ஆபிரிக்காவில் இருந்து வளமான இருநதிப் பள்ளத்தாக்கிற்கு வருகையிலேயே
கணிதம், வானவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கட்டடிக்கலை என்பவற்றில்
மிகப் பெரிய அளவிலான அறிவுடனேயே வந்தார்கள் என்கிறார்கள். எப்படி
ஆபிரிக்காவில் சுமேரியர்கள் அத்தகைய அறிவினைப் பெற்றார்கள் என்று அந்த
ஆய்வாளர்கள் கூறுவதைப் பின்னர் கூறுகிறேன்.
இந்நாட்களில், உலகம் இவ்வளவு தூரம் அறிவியலில் முன்னேறியதற்கு முக்கிய
காரணமாக, உலகினர் கொண்டுள்ள பூச்சியம் பற்றிய தெளிவினையும் அதனைச்
சரியான முறைகளிற் பாவிப்பதையும் கூறுகின்றார்கள். தற்கால ஆய்வுகளின்படி,
சுமேரியர்கள் சுழியத்தை (பூச்சியம் அல்லது 0) அறிந்திருக்கிறார்கள்
என்றும் அதனாலேயே அவர்களது அறிவியல்நிலை மிகவும் உயர்ந்ததாக
இருந்ததென்றும் கூறுகின்றார்கள். இந்தச் சுழியம் இவர்களிடம் இருந்து,
பாபிலோனியருக்கும் சென்றிருக்கிறது. பாபிலோனியர்கள் சுழியத்தைத்
தங்களின் கணிப்புகளிற் பாவித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டு
பிடித்துள்ளார்கள். ஆச்சரியமாக உள்ளதா! ஆனால், இது உண்மையான விபரம்தான்.
பலர் இன்னமும் இதை அறியவில்லை. அறிந்தவர்கள், ஏதோ காரணத்தால் அதிகம்
அலட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் சுழியத்தின் கதை திருப்பிப்
பார்க்கப்பட வேண்டிய ஒன்று. பாபிலோனியர்களிடம் இருந்து பல அறிவியற்
செல்வங்களைப்; பெற்றுக் கொண்ட கிரேக்கர்கள், தங்களது எண் திட்டத்தில்
சுழியம் இல்லாதிருந்ததாலோ, அல்லது தங்களின் தனித்துவத்தில் பெருமை
கொண்டவர்களாகவும், அதனைப் பேணுபவர்களாகவும் இருந்ததாலோ என்னவோ,
சுழியத்தைக் கண்டு கொள்ளவில்லை. இவர்களின் பின்னால், கிரேக்கர்களுக்குப்
போட்டியாக வந்த உரோமர்களும் அவ்வண்ணமே சுழியம் விடயத்தில் இருந்து
விட்டார்கள். சுமேரியர், பாபிலோனியர் போன்றவர்களின் காலத்தின் பின்னர்
சுழியம் இல்லாமற் போய், அல்லது மறைந்து போய், பின்னர் 19ம்
நூற்றாண்டளவில்தான் மீண்டும் பெரிதாக வெளிவருகின்றது. சிந்துவெளியினர்
சுழியத்தைப் பாவித்திருக்கிறார்கள் எனக் கூறும் ஆய்வாளர்கள் உள்ளனர்.
(சுமேரியர்களினது
கதிரவத் தொகுதி பற்றிய படம், 5000 ஆண்டு முந்தியது.)
சுழியம் பற்றிய ஆச்சரியமான பல விபரங்கள் உண்டு. இன்று அரேபிய - இந்தியக்
கண்டு பிடிப்பெனக் கூறப்படும் அல்லது கருதப்படும் சுழியம் உண்மையில்
தமிழர்களின் சொந்தப் பொருள் என்பது ஒருசிலருக்கே தெரிந்திருக்கின்றது.
அப்படித் தெரிந்தவர்களிலும் மேல்நாட்டின் கணிதவியலாளர்களே அதிகம்
என்பதும் வருத்தத்திற்கு உரியதாகும். ஏனெனில் 'உன்னையே நீ அறிவாய்;'
என்பதில் இருந்து நாங்கள் வழுவிப் பல காலமாகிவிட்டதல்லவா. காலம்
கனிக்குக் கனிந்தால் சுழியம் பற்றி சுழிப்புகளையும் உங்களுடன் பகிரும்
காலமொன்றும் வரும். அதற்கும் காத்திருக்கிறேன். இனிச் சுமேரியர்களிடம்
வருகிறேன்.
வானியலில் சுமேரியர்கள் கொண்டிருந்த அறிவினை இன்றும் வானவியலாளர்கள்
விதந்துரைக்கின்றார்கள். புவி தட்டையானது என்ற கருத்து மாறி, புவிமையக்
கொள்கை கருத்தற்றுப் போய் கதிரவ மையத் கொள்கையை கொப்பநிக்கஸ் கொண்டு
வந்தாலும் கலிலியோ கலிலியின் காலத்தின் பின்னரே, அதாவது இற்றைக்கு 500
ஆண்டு முன்னரே உறுதிப்படுத்தப்;பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 6000 ஆண்டு
முன்னரான, சுமேரியர்களின் விண்வெளியில், கதிரவனைச் சுற்றும் 10
கோள்களினாலான கதிரவத் தொகுதி இருந்திருக்கிறது. அதில் 3வது கோளாக எமது
புவியும், அதனைச் சுற்றி சந்திரன் வருவதும் தெளிவாக உள்ளன. பத்தாவது
கோள் மிகவும் பெரியதான ஒன்றாக இருக்கிறது. இந்த விபரங்கள்
கண்டெடுக்கப்பட்ட சுமேரியர்களின் களிமண் தகடுகளில் படங்களாகவும் உள்ளன,
அவர்களின் சித்திர எழுத்துக்களிலும் உள்ளன. இந்த வரைபடம் பற்றிய அலசல்
ஒன்றினைப் பின்னராக, மிகப் பொருத்தமான இடத்திற் கூறுகின்றேன். அவை
அவ்வண்ணமே நிற்க,
(அருகில்
உள்ள படம் சுமேரியர்களின் சித்திர எழுத்துக்களுடனான களிமண்தகடு
ஒன்றினைக் காட்டுகிறது)
சுமேரியர்கள் பற்றிய இரண்டு வகையான ஊகங்கள் அறிஞர்களிடையே உண்டு.
அதிலொன்றில் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம்; கொண்டு வரப்படுகிறது. மூன்று
சங்கங்கள் அமைத்துத் தமிழர் தங்களை வளர்த்துக் கொண்டதை நாங்கள்; அறிவோம்.
சிவனைத் தலைமையாகக் கொண்ட முதற்சங்க காலத்திலேயே குமரிக் கண்டத்தில்
அறிவியல் நிலை வளர்ந்திருக்கிறது. முக்கியமாக அக்காலத்தில்தான்
எழுத்துக்கள் மக்களிடையே பழக்கத்திற்கு வரத் தொடங்குகிறது. அவ்வெழுத்து
வடிவம், சித்திரம் போன்றது. அதனால் அவற்றைப் படவெழுத்துகள்,
சித்திரவெழுத்துகள் எனக் கூறுகிறார்கள். இந்நிலையில், குமரிக்
கண்டத்தின் பெரும்பகுதி கடலில் மூழ்க, முதற் சங்க காலம் முடிவடைகிறது.
அவ்வேளையிற்றான் தென்மதுரை, குமரிமலை, பஃறுளியாறு, குமரியாறு என்பவை
உட்படத் தமிழரின் 49 நாடுகளிற் பல, கடலினுள் மூழ்கி இந்து மாகடலினுள்
அமுங்கிப் போயின. கடலினுட் போனவை போக, குமரியின் எஞ்சிய பகுதியில்,
எஞ்சிய வளங்களுடன் தமிழரின் இரண்டாம் சங்ககாலம் தொடங்குகின்றது. இப்போது,
இரண்டாம் சங்க காலமான இடைச்சங்க காலத்திலும் தமிழின் எழுத்துக்களின்
வடிவம் சித்திர எழுத்துகளில்தான் ஆரம்பமாகிறது. இந்தச் சித்திர
எழுத்துக்களிலேயே சங்கப் பாடல்கள் எல்லாம்; எழுதப்பட்டன. இதில்
முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இந்த சித்திர எழுத்து
வடிவங்கள், அறிஞர்களிடம் மட்டுமல்லாது, சாதாரண மக்களிடமும்
பழக்கத்திற்குச் சென்றிருக்கிறது என நம்ப இடமுண்டு. இந்நிலையில்,
தமிழரின் பகுதிகள் இரண்டாம் தடவையும்; கடலினுள் அமிழ்கிறது.
விடயங்கள் இப்படியாக இருக்கையில், முக்கியமாகக் குமரிக் கண்டத்தின்
முதலாவது கடல்கோளின் பின்னராக, அறிவுடைய சிலர், தொடரும் குமரியின்
அழிவுகளில் இருந்து தப்புவதற்காக, காலத்திற்குக் காலம், குமரிக்
கண்டத்தை விட்டு வெளியேறுகின்றார்கள். அப்படி வெளியேறியவர்கள் உலகின்
பலபாகங்களுக்கும் சென்று, வளமான நதிக்கரைகளை அண்டித் தங்கி உயர்ந்த
நாகரிகங்களைத் தோற்றுவிக்கிறார்கள். எகிப்தில் நைல்நதி,
மெசப்பத்தேமியாவின் இருநதிக்கரைகள், சிந்துநதி கரைகளின் ஓரம் என்பவை
அவர்கள் தங்கிய சில இடங்கள். அவர்கள் கொண்டு சென்ற அறிவியற் சொத்துகளில்
ஒன்றுதான் எழுத்துகள். அதனால்தான், பழைய நாகரிக தடங்களில் எல்லாம், ஏதோ
ஒருவகையில் ஒத்துப் போககக் கூடியதான சித்திர எழுத்துக்களின் வடிவங்கள்
கிடைக்கின்றன.
இந்த வகையில் பார்க்கக் கூடியதாகச் சுமேரியர்கள் சில விடயங்களில்
ஒத்துப் போகின்றனர். எடுத்துக் காட்டாக, இருள்நிற மேனியர்: கிழக்கில்
இருந்து வந்தவர்கள் என்ற அடைமொழிகள் பொருந்துகின்றன. மேலும்
சுமேரியர்கள் கொண்டிருந்த பெயர்களும் தமிழரின் பெயர்களை ஒத்திருந்தன,
அல்லது மருவி வந்தவை போன்றுள்ளன. அவர்களது இடமொன்றின் பெயர் ஊர்,
கதிரவனுக்கு (சூரியனுக்கு) அவர்கள் கொடுத்திருந்த பெயர், 'எல்'. இவைகள்
போன்ற பல ஒன்றிப்புகள்; மேலே கூறப்பட்ட கருதுகோளுக்கு வலுச்
சேர்க்கின்றன.
இக்கருத்தினைச் சிலர் கொண்டிருக்க, மறுதலையாகச் சுமேரியரியாவில் இருந்து
வெளிக்கிளம்பிய இனம்தான் தமிழர்களாகிய நாங்கள் எனக் கூறும் நம்மறிஞர்கள்
சிலரும் உள்ளனர். இவர்கள் கருத்துப்படி, ஒழுங்காகவே ஓடிய
யூப்பிரற்தீசும் ரைகிறிசும் ஒருகாலத்தில் இயற்கையின் விளைவாற் பெருகி,
இடம்யெர்ந்து ஓடி, சுமேரியரின் இடங்களை அழித்து, சுமேரியரின்
அழிவுக்குக் காலாகின்றது. அச்சமயம் சுமேரியாவில் இருந்து வெளியேறிய
சிலர், சிந்துவெளியிற்கு வந்து, பின்னர் தெற்கே இடம்பெயர்ந்து,
இந்தியாவின் தென்பகுதிகளுக்கு வந்து தரித்து விடுகிறார்கள். அவர்கள்தான்,
இன்று தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களில் இருக்கும் தமிழர்களும்
மற்றவர்களும் என்பது அவர்களின் மொழிவு. அது மாத்திரமல்ல,
சுமேரியாவில்தான் தமிழின் முதற்சங்கம் அமைந்திருக்க வேண்டும் என்றும்,
அந்த இருநதிகளினால் ஏற்பட்ட அழிவினைத்தான் கருத்துப் பிழையாகக் கடல்கோள்
என்கிறார்கள் என்பதும் அவ்வறிஞர்களின் கருத்து. சில மேற்கு நாட்டு
ஆய்வாளர்களின் வழியிலேயே இவர்களின் சிந்தனைகளும் ஓடுகின்றன என்பதும்
குறிப்பிடப்படக் கூடியது.
இந்த விடயங்களுடன், சுமேரியர்கள் பற்றி விலாவரியாக அலச வேண்டும் என்பது
விருப்பம்தான். ஆனால் அது இங்கு முடியவில்லை. ஏனெனில் எங்களது போக்கு
அந்நியர்களும் அறிந்திரா வானூர்திகளும் என்ற அழகிய அறிவியற் பகுதியாகும்.
அதிலே குறுக்கிட்டவர்கள்தான் சுமேரியர்களும், இன்னமும் வரப்போகும்
விடயங்களும். சுமேரியர்களின் பூர்வீகம் ஆபிரிக்காவா அல்லது குமரிக்
கண்டமா என்பது கூட, சுவாரசியமான அலசல்தான். அதனை இன்னொரு தடவையில்
தனியாகவே பார்ப்போம்.
சுமேரியர்கள் 5000, 6000 ஆண்டு முன்னராக சிறப்பாகத்தான் இருநதிக்
கரையோரங்களில் வாழ்ந்தார்கள் அதுவும் 1000, 2000 வருடங்களாக
அவ்விடங்களில் கோலோச்சிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும்
அவ்விடத்தில் இவர்களால் தொடர்ந்து வாழ முடியவில்லை. மெதுமெதுவாக
அவர்களது செல்வாக்கு அழியத் தொடங்கி ஒருகாலத்தில் முற்றாகவே அழிந்து
விடுகின்றது. அல்லாமலும் கால ஓட்டத்தில் முற்றாகவே மக்களிடமிருந்து
மறந்தும் போய் விடப்படுகிறார்கள். பெரிய அறிவியல் நிலையில் இருந்த
சுமேரியர்கள் எவ்விதம் அழிந்தார்கள் என நீங்கள் அதிசயப்படலாம். நதிகளின்
இடப்பெயர்வு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் இன்னொரு காரணத்தையும் கூற
முடிகிறது.
அடுத்த தடவை சந்திக்கையில் அதனைக் கூறுகிறேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|