அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்

அகில் சாம்பசிவம்


1960 களில் தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்புலகில் தன்னை முழுமையாகச் செயற்படுத்தி வருகின்ற ஈழத்தின் மிகப்பெரும் ஆழுமை அ.முத்துலிங்கம். இவர் இதுவரை 250க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. அவையெல்லாவற்றையும் தொகுத்து இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் வாழ்ந்துள்ளார். இது இவருக்குக் கிடைத்த வரம் என்றே கூறத்தோன்றுகிறது. அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்;. பரந்துபட்ட வாசிப்பும், பல்வேறு நாடுகளில் கிடைத்த அனுபவங்களும் இவரது நினைவுப் பெட்டகத்தை நிறைத்துள்ளன. அவ்வப்போது அவற்றில் கொஞ்சத்தை அள்ளியெடுத்து சிறுகதைகளாகத் தெளித்துவிடுகிறார். 60 வருடங்களாக விடாப்பிடியாக எழுதிவரும் எழுத்தாளர் என்பதோடு மட்டுமல்லாது எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவருடைய படைப்புக்களைத் தேடிப் படிக்கின்ற தீவிர ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அப்படி இவருடைய எழுத்துக்களில் என்னதான் இருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டியதே.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை அவை வெளிவந்த காலங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரது சிறுகதைகளின் வளர்ச்சிப் பாதையை இக்கட்டுரையில் நோக்க விழைகிறேன்.

அந்த வகையில் இவரது சிறுகதைகளை முக்கியமான மூன்று காலகட்டங்களாக வகுத்து நோக்கலாம்.

1. 1960 களில் வெளிவந்த சிறுகதைகள்:
2. 1990களின் பிற்பகுதியில் வெளிவந்த சிறுகதைகள்:
3. 2000 க்குப் பின் - இன்றுவரையான காலப்பகுதியில் வெளிவந்த சிறுகதைகள்:

1. 1960 களில் வெளிவந்த சிறுகதைகள்:

அ.முத்துலிங்கம் அவர்களது எழுத்து முயற்சி 1960 களில் ஈழத்தில் இருந்து ஆரம்பமாகிறது. சுதந்திரன், தினகரன் போன்ற பத்திரிகைகளில் அவரது பதின்ம வயதுகளிலேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். தனது 16 ஆவது வயதில் ஆங்கிலத்தில் ஒரு சிறுகதை எழுதி முதல் பரிசு பெற்றுள்ளதாக எழுத்தாளர் nஐயமேகனுக்கு அளித்த பேட்டியொன்றில் இவர் குறிப்பிட்டுள்ளார். தனது கல்லூரிக் காலங்களில் அவ்வப்போது சிறுகதைகள் எழுதி பரிசும் பெற்றிருக்கிறார். அப்போது எழுதிய கதைகளைத் தொகுத்து 'அக்கா' என்ற சிறுகதைத் தொகுப்பாக 1964 இல் வெளியிட்டார். இதுவே இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு. அக்கா, கோடைமழை, ஒரு சிறுவனின் கதை, கடைசி கைங்கரியம், ஊர்வலம், அழைப்பு, சங்கல்ப நிராகரணம், இருப்பிடம், பக்குவம், அனுலா முதலான பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. பேராசிரியர் கைலாசபதியினால் புடம்போடப்பட்ட ஒரு எழுத்தாளனாக மண்வாசனை மிகுந்த சிறுகதைகளை 'அக்கா' சிறுகதைத் தொகுப்பில் நாம் காணலாம். சமகால ஈழத்துச் சிறுகதைகளின் தன்மைகளோடு ஒத்ததாய் இக்கதைகள் நகர்கின்றன. கதைக்களம், கதைமாந்தர், கரு என்பன ஈழத்து மண்வாசனை மிக்கதாக அமைந்தவை. அதன் பின்னர் எழுதுவதை நிறுத்திவிட்டு படிப்பிலும், பின்னர் வேலையிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

அ.முத்துலிங்கத்தை ஒரு சிறந்த ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் என்று குறிப்பிடத்தக்க வகையில் அந்த மண்ணையும், மனித உறவுகளையும் 'அக்கா' சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் படைத்துக்காட்டியிருக்கிறார். எந்தக் கதையையுமே குறைத்து மதிப்பிட முடியாத வண்ணம் அத்தனையும் முத்துமுத்தான கதைகள். ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்வானுபவம். அந்தச் சிறுவயதில் சகமனிதன் மீதான அவரது பார்வை பிரமிப்பை ஊட்டுகிறது. மறுபுறத்தில், ஒரு சிறுவனாக அவர் பதிவு செய்யும் நினைவுகள் அபரிவிதமானவை. ஆச்சரியமூட்டுபவை.

பிற்காலங்களில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் அதன், கரு, கதையமைப்பு, எழுத்துவடிவம் என அமைத்திலும் ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். எனவே 'அக்கா' தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளைத் தனியே வைத்து நோக்குவது அவசியமாகிறது.

2. 1990களின் பிற்பகுதியில் வெளிவந்த சிறுகதைகள்:


பள்ளிப் பருவத்தில் எழுத ஆரம்பித்த அ.முத்துலிங்கம் பின்னர் படிப்பின் சுமை, நாட்டுச் சூழல், வேலைப்பளு முதலிய காரணங்களால் சில தசாப்தங்கள் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்;. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால இடைவெளியின் பின் மீண்டும் 1990களின் பிற்பகுதியில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இலங்கையில் கொழும்பு, காலி போன்ற இடங்களிலும் பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளிலும், பல்வேறு ஆபிரிக்க நாடுகளிலும்; பணிபுரிந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் திகடசக்கரம் - 1995, வம்சவிருத்தி – 1996, வடக்குவீதி – 1998 என்ற தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.

இத்தொகுப்புக்களில் குறிப்பிடத்தக்க சில கதைகள் மட்டும் ஈழத்துக் கதைகளாக உள்ளன. குறிப்பாகக் கதைசொல்லியின் இளமைக்காலத்து நினைவுகளின் இரைமீட்டலாக அவற்றைப் பார்க்கலாம். செல்லரம்மான், வையன்னா கானா, மாற்றமா? தடுமாற்றமா? போன்ற கதைகளை அந்தவகையில் குறிப்பிடலாம். எனினும் பெரும்பாலான கதைகளில் கதைக்களம், கதாபாத்திரங்கள், கதை சொல்லும் உத்தி, கதைக்கரு, அதன் வடிவம் என அனைத்திலும்; புதிய மாறுதல் ஏற்பட்டிருப்பதனை உணரக்கூடியதாக இருக்கிறது. நாங்கள் அறிந்திராத புதிய விடயங்களை அறிமுகம் செய்கிறார். புதியன படைக்கும் ஒருவராக காட்சியளிக்கிறார். ஆசிய மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் தான் பெற்ற வாழ்வனுபவங்களையும், சந்தித்த மாந்தரையும் வைத்து கதைகள் எழுதத் தொடங்கினார். இத்தகைய புதியபோக்கு மற்றைய தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிடம் இருந்து அ.முத்துலிங்கத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. கதையின் அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களின் தொடுப்பாக அமைந்திருக்கும் அல்லது உரையாடல்களின் கோர்வையாக அமைந்திருக்கும். ஒரு மலர் மாலையைத் தொடுப்பதைப் போல சம்பவங்களைத் தொடுக்கும் நாராக அதன் கரு அமைந்திருக்கும்.

மனித வாழ்வின் மேன்மையையும், அதன் அடிநாதமாக ஒலிக்கும் நேசிப்பினையும், மனித உணர்வின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசத்தொடங்கியது இக்காலகட்டத்தில்தான். மனிதர்கள் மீதும், இயற்கையின் மீதும்; இவருக்கு இருந்த அதீத ஈடுபாட்டை கதைகளில் காணமுடிகிறது. பறவைகளிடமும், சிறுபிராணிகளிடமும் இவர் கொள்ளும் பரிவு அதீதமானது. திகட சக்கரம், வம்சவிருத்தி, வடக்குவீதி ஆகிய மூன்று தொகுப்புகளிலும் உள்ள சிறுகதைகளை ஈழத்து படைப்புலகிலிருந்து ஒரு சர்வதேச எழுத்தாளராக அ.முத்துலிங்கம் பரிணாமம் பெறுவதற்கான புதிய மாற்றத்தின் ஆரம்பப் படிகளாகவே கொள்ளவேண்டும்.

3. 2000 க்குப் பின் - இன்றுவரையான காலப்பகுதியில் வெளிவந்த சிறுகதைகள்:


முதிர்ச்சியான எழுத்துக்கள், செம்மையான கதைவடிவம் என்று தன்னையும் தன் எழுத்துக்களையும் சர்வதேசம் வரை தரம் உயர்த்திக் கொண்ட படைப்புக்கள் வெளிவந்த காலமாக இக்காலகட்டத்தைக் கூறலாம். இடைவிடாத எழுத்தின் காலம் என்றும் இக்காலப்பகுதியைக் குறிப்பிடலாம். மகாராஐhவின் ரயில்வண்டி(2001), அமெரிக்கக்காரி(2009), குதிரைக்காரன்(2012), கொழுத்தாடு பிடிப்பேன்(2013), பிள்ளைக்கடத்தல்காரன்(2015), ஆட்டுப்பால் புட்டு(2016) முதலான தொகுப்புக்களை அந்தவகையில் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் இவரது தொகுப்புக்கள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. புதிய முயற்சியாக இறுவெட்டு வடிவிலும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஒலிப்பேழையாக வெளியிட்டார். கட்டுரை, நாவல், நேர்காணல்கள் என்று தனது படைப்பாக்கத் திறனை விரிவுபடுத்தினார்.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளின் சிறப்பம்சங்களாக நிறைய விடயங்களைக் குறிப்பிடலாம். இவரது கதைகள் மிகுந்த கவனத்தோடு; பின்னப்பட்டிருக்கும். தேர்ந்தெடுத்த சொற்களை அழகாக அடுக்கி கதையை சொல்லிக்கொண்டு போவார். எளிய நடையில் சின்னச் சின்ன வசனங்களால் கதை அமைந்திருக்கும். எழுத்தாளர் நம் எதிரே அமர்ந்து கதை சொல்வதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். முத்துலிங்கம் ஒரு சுவாரசியமான கதை சொல்லி. நல்ல நல்ல சொற்களாக தேடித் தேடி எழுதுபவராகவே இருக்கிறார். ஒரு சிலையைச் செதுக்குவது போல கதைகளைச் செதுக்கியிருக்கிறார். இடத்திற்குத் தகுந்தாற்போல சாதாரண சொற்களும் கனதிபெறுகின்றன. சொற்களின் உள்ளீடாக அமையும் உணர்வும், உண்மையும் ஆழ்ந்தகன்ற தன்மையன.

கதையோட்டத்தோடு நகைச்சுவை – சிலசமயம் - ஒரு எள்ளல் என அமைந்து கதைக்கு மேலும் சுவை சேர்க்கும். அந்த எள்ளலுக்குள் ஆழமான பொருள் பொதிந்துகிடக்கும். கதைகளில் இருந்து நகைச்சுவையைப் பிரிக்கமுடியாமல் கதையோட்டத்தோடு நகைச்சுவை கலந்திருக்கும். யார் மனதையும் புண்படுத்தாமல் சில விடயங்களைப் பேச நகைச்சுவை ஒரு இலகுவான ஆயுதம் என்றே நினைக்கிறேன். அதை அ.முத்துலிங்கம் வெகு இயல்பாகக் கையாள்கிறார்.

ஒரு படைப்பிலக்கியத்தில் அதன் கரு அதாவது அதன் பேசுபொருள் முக்கிய இடம்பெறுகிறது. மற்றைய தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து முத்துலிங்கத்தின் படைப்புக்கள் வேறுபட இதுவும் ஒரு காரணம். சில எழுத்தாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். வர்க்கப் பிரச்சினைகளை எழுதுவார்கள். சாதிப்பிரச்சினைகளை எழுதுவார்கள். இனப்பிரச்சினைகளை எழுதுவார்கள். கதைகளில் இரத்தம் சொட்டும். இனவெறி தலைவிரித்தாடும். துப்பாக்கிகள் முழங்கும். வன்முறை, கோபம், வீரம், துரோகம், கண்ணீர் என்று எல்லா உணர்வுகளும் ஒன்றோடொன்று போட்டியிடும். சிலரது கதைகளில் பெண்ணியம், பெண்விடுதலை, பாலியல் என்று பட்டியல் நீளும். என்போன்ற புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் புதிய வாழ்விடப் பிரச்சினைகள், அவைசார் மனவுளைச்சல்கள், அகதி வாழ்வின் அவலங்கள் என்று கதைகள் விரியும். ஏக்கம், கண்ணீர், சோகம், போராட்டம் என்ற உணர்வுகள் தான் பெரும்பாலான கதைகளின் உயிரோட்டமாக அமையும். சிலர் கதைகளில் புத்திமதிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்கள்.

ஆனால் முத்துலிங்கத்தின் கதைகள் இவற்றில் இருந்து மாறுபட்டவை. இதையெல்லாம் வைத்துக்கூட கதை எழுதலாமா? என வியப்பில் ஆழ்த்துபவை. பிரமிப்பை ஊட்டுபவை. வண்ணத்துப்பூச்சியை வைத்து கதை எழுதுவார். பீனிக்ஸ் பறவையை வைத்து ஒரு கதை எழுதுவார். 49ஆவது அகலக்கோட்டை வைத்து ஒரு கதை. வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையில் சனிக்கிழமை என்றொரு நாள் காணாமல்போனது குறித்து ஒரு கதை எழுதுவார். அமெரிக்காக்காரி என்ற தொகுப்பில் 'தாழ்ப்பாள்களின் அவசியம்' என்று ஒரு கதை. கதவுத்தாழ்ப்பாளை வைத்து என்னத்தை எழுதுவது? இவர் சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

கனடாவில் வசிக்கும் மகனைப் பார்ப்பதற்காக தாய் இலங்கையில் இருந்து கனடாவிற்கு வருகிறார். கனடாவிற்கு வந்தவர் பார்த்து வியந்த விடயங்களில் ஒன்று – கனடாவில் உள்ள வீடுகளில் தாழ்ப்பாளில்லை. இதை வைத்து ஒரு கதை எழுதுவதென்றால் அது முத்துலிங்கத்தால் மட்டும்தான் முடியும்.

அதற்காக முத்துலிங்கம் கதைகளில் பெண்ணியம் இல்லையா? தமிழர் பிரச்சினைகள், வாழ்வியல் சமூகப் பிரச்சினைகள் இல்லையா? முதியோர் பிரச்சினைகள், போராட்டம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு இல்லையா? என்றால் அவையெல்லாம் இருக்கிறது. ஆனால் அவற்றை அவர் சொல்லும் பாணியில் தான் மாறுபடுகிறார். அறிவியல், விஞ்ஞானம், ஆன்மீகம், சமூகவியல், விலங்கியல், பௌதீகவியல், மொழிப்பற்று, தேசப்பற்று எல்லாமே வரும். அவை கதையோடும் கதை மாந்தரோடும் பிணைந்திருக்கும். இவருடைய கதைகள் சமூகத்திற்கு பிரசாரம் செய்ய எழுந்தவையல்ல. வாசகனின் மனதோடு பேசுபவை. சிலோடையாகவும், எள்ளலாகவும் சில உண்மைகளை ஓசைபடாமல் சொல்பவை. வாசிப்பின் இடைவெளியில் நெருடல்களை ஏற்படுத்துபவை.

பிள்ளைகடத்தல்காரன் தொகுப்பில் வருகின்ற லூக்கா 22:34, சின்னச்சம்பவம் ஆகிய சிறுகதைகள் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். சூனியக்காரியின் தங்கச்சி, நிலம் எனும் நல்லாள், மண்ணெண்ணெய் கார்காரன், ரயில் பெண் ஆகிய கதைகளில் தாயக போர், இடம்பெயர்வு, புலம்பெயர்வு என்பன பேசப்படுகிறன.

அ.முத்துலிங்கம் சகமனிதர்களையும், சம்பவங்களையும் ஒரு பருந்தின் கூர்மையான பார்வையோடு நோக்குகிறார். மனிதர்களின் நடத்தைக் கோலங்களையும், மன அவசங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். மனிதன் மீது அவன் அறியாமலேயே படிந்திருக்கும் பிறழ்வுகளையும், முரண்;களையும், சில எதிர்மறைகளையும் வெளிக்கொண்டுவர முனையும் எழுத்தாளரின் பிரயத்தனம் தான் அவரது சிறுகதைகள். இனம், மதம், மொழிகளைக் கடந்த ஒரு சமூக நோக்கு இவர் கதைகளில் தென்படுகிறது. மொழிகள் மீதான தேடலையும், அதன் இருப்பு குறித்த ஏக்கத்தையும் காணமுடிகிறது. இந்த உசாவல்களுக்கு இவர் தனது தாய் மண்ணையும், அந்த மனிதர்களையும் பிரிந்து புதிய புதிய வாழிடங்களிற்கு தள்ளப்பட்டமையும் ஒரு காரணம் எனலாம்.

அமெரிக்காக்காரி தொகுப்பில் 'பத்துநாட்கள்' என்று ஒரு கதை. கதையிலே ஒரு பணக்காரர். அவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஐர். 20 வருடங்களாக அந்தப்பாதை வளைவில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் நவாஸ். வருடத்தின் 365 நாட்களும் தவறாமல் காலை 6 மணிக்கு கடையைத் திறந்து இரவு 8 மணிவரை வியாபாரம் செய்யும் உழைப்பாளி. மேஐரின் மகனின் திருமணத்திற்காக வியாபாரியின் கடை திடீரென்று காணாமல் போகிறது. பத்து நாட்களுக்கு தொடர்ந்து விருந்தும் கொண்டாட்டமும். ஏழை நவாசுக்கு என்ன நடந்ததோ என ஏங்குகிறார் கதைசொல்லி. பதினொராம் நாள் காலை பழையபடி அதே இடத்தில் பெட்டிக்கடையும், நவாசும் தென்படுகிறார்கள். முத்துலிங்கம் கதையை இவ்வாறு முடிக்கிறார்.

பத்தடி தூரத்திலேயே மேஐரைக் கண்ட நவாஸ், ஓர் எலும்பில்லாத பிராணிபோல மாற்றமடைந்தான். தவழ்வது போல அவரை நோக்கி ஓடினான். தையல்காரர் ஊசியை வாயிலே வைத்துக்கொண்டு பேசுவதுபோல பல்லினால் மேஐர் எதையோ சொல்ல, நவாஸ் வயிற்றை இரண்டாக மடித்து விழுந்து சிரித்தான். போப்பாண்டவர் கிரிகோரி, 1582 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பத்து நாட்களை உலக காலண்டரில் இருந்து கிழித்ததுபோல, இங்கேயும் யாரோ அந்த வருடம் பத்து நாட்களை அழித்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இவ்வாறு கதை முடிகிறது. இந்த ஒரு எடுத்துக்காட்டே போதும் என்று நினைக்கிறேன் அ.முத்துலிங்கம் அவர்களின் கதை சொல்லும் அனைத்து உத்திகளும் இந்தப் பந்தியில் ஒருசேர வருகிறது. வர்க்க முரண்பாட்டையும் அடிமை வாழ்வின் எச்சங்களையும் எவ்வளவு நளினமாக எங்கள் கண்முன் சித்திரமாக வடித்துக்காட்டுகிறார்.

அ.முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகள் உண்மைக் கதைகளாக இருக்கின்றன. அல்லது உண்மைக்கு மிக சமீபத்தில் இருக்கின்ற கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் வாசகர்களுக்குத் தங்களுடைய வாழ்வில் நடந்த கதைகளோடு சில சம்பவங்கள் ஒத்துப்போவதாய் அமைந்துவிடுகிறன. மண்ணெண்ணெய் கார்காரன் கதை இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இருந்து வன்கூவருக்கு கப்பலில் வந்தடைந்த ஈழத்து அகதியின் உண்மைக்கதை. அதை வாசிக்கின்றபோது எனக்கு நானும் அகதியாக இந்தியாவிற்கு வள்ளத்தில் சென்ற நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நெஞ்சுகனக்க வைத்தது.

அ.முத்துலிங்கத்தின் சமீபகால சிறுகதைத் தொகுப்புக்களை நோக்கும்போது, அவை மற்றவர்களுடைய அனுபவங்களையும், கதைகளையும் கேட்டு கதைகளைப்; புனைந்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மாற்றம்3; 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னான இவரது படைப்புக்களில் அதிகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக ஈழத்துப் போர்ச் சூழலை நேரடியாக அனுபவித்தவரல்ல இவர். எனினும் இவரது கதைகளில் அசாத்தியமாக ஈழத்துப் போர்க்களம், கப்பல்களில் அகதிப்பயணம், தமிழ் குழுக்களுக்கிடையிலான மோதல்கள், அவர்களது நடத்தைக் கோலங்கள் என்பன பேசப்படுகின்றன. சில நண்பர்கள் கூறுகின்ற தகவல்களையும், கதைகளையும் அடிப்படியாகக் கொண்டு அருமையான பல கதைகளைப் புனைந்திருக்கிறார்.

மண்ணெண்ணெய் கார்காரன் என்றொரு கதை. அதில் இலங்கை யுத்தகாலத்தில் இலங்கை அரசாங்கம் தமிழ் பகுதிகள் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. பெற்றோல், டீசல், மருந்துகள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது. அப்படியான ஒரு காலச் சூழலில் மண்ணெண்ணெய் விட்டு கார் ஓடும் ஒரு நபரைப் பற்றிய கதையை அழகாக எழுதியிருக்கிறார். அகதிகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கப்பலில் நாடொன்றைத்; தேடிப் புறப்படும் மக்களின் கதைகளை இன்னொரு கதையில் எழுதியிருக்கிறார். கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் நியூபவுண்டுலாண்டில் பனிப்புயலில் அகப்பட்டுக்கொண்ட கதையை ஆதிப்பண்பு என்ற கதையில் அற்புதமாகக் கூறியுள்ளார். அந்த வைத்தியர்; எனக்கும் கூட அந்தக் கதையைக் கூறியிருக்கிறார். அந்த தொகுப்பின் முகவுரையில் தனது பதிவுகள் பற்றி அ.முத்துலிங்கம் இப்படிக் கூறுகிறார்.

'ஒரு நிகழ்வை பார்க்iகும்போதோ அதைப்பற்றி படிக்கும்போதோ அல்லது கேள்விப்படும்போதோ எழுத்தாளருக்கு அதனுள்ளே புதைந்திருக்கும் கதை சட்டென்று புலப்பட்டுவிடுகிறது.'

என்கிறார். தொடர்ந்து,

'தத்ரூபமான சிலையைப் புகழ்ந்த ஒருவருக்கு சிற்பி இப்படிச் சொல்கிறார். நான் ஒன்றுமே செய்யவில்லை. உருவம் ஏற்கனவே கல்லுக்குள்ளே இருந்தது. நான் செய்ததெல்லாம் வேண்டாத கல்லை அகற்றியதுதான். எழுத்தாளர் செய்வதும் அதுதான். வேண்டாத தகவல்களை அகற்றியதும் உள்ளே இருக்கும் சிறுகதை வெளியே வந்துவிடுகிறது.'

என்கிறார்.

மேலும் இவர் தனது கதைகளுக்கு சில குறிப்புக்கள் தேவைப்படும்போது அது சார்ந்த அனுபவத்தை தேடிப் பெற்றுக்கொண்டு எழுதுகிறார். கதையை வாசிக்கும்போது வாசகனுக்கு அவர் தருகின்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துவதாக அமைகிறது. அவர் கதைகளில் அடிக்கடி வரும் வாசகம் போல அவர் வாசகர்களை ஆச்சரியப்படுத்துவார். சொந்த அனுபவத்தில் எழுத வேண்டும் என்பதற்காக 200 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவருந்தும் வசதிகொண்ட முதல்தர உணவகம் ஒன்றின் சமையலறையில் காலை 7 மணியிலிருந்து இரவு வரை தங்கியிருந்து குறிப்பெடுத்திருக்கிறார். தன்னுடைய கதைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தரவுகளை சேகரித்து அதனைப் பதிவு செய்வதன் மூலம் கதைகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை வழங்குகிறார்.

அ.முத்துலிங்கம் தனியே கதைசொல்வதோடு நின்றுவிடுவதில்லை. உரிய இடங்களில் தான் வாசித்த பிற நூல்களையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்வார். அவர்களைப் பற்றிய முக்கியமான கருத்துக்களை பதிவுசெய்வார். அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டால் நல்ல இலக்கியத்தேடல்களில் ஈடுபடுபவர்களுக்கு பயனுள்;ளதாக அமையும். வெள்ளிக்கரண்டி கதையில் 'மோபி டிக்' என்ற நாவல் பற்றி குறிப்பிடுகிறார். ஆதிகாவியமான கில்காமிஷ; இலக்கியம் பிறந்த நாடு என்று ஈராக்கை குறிப்பிட்டு அது பற்றி சுவருடன் பேசும் மனிதன் கதையில் கிலாகிக்கிறார். யசுநாரி கவபாட்டா எழுதிய 'தூங்கும் அழகிகள் இல்லம்' பற்றியும், ஆன் பாட்லெட் எழுதிய 'அவுஸ்திரேலிய ஆதிவாசிகள்' பற்றிய புத்தகம் பற்றியும் பத்தாவது கட்டளை என்றொரு சிறுகதையில் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பின் அட்டைப் படத்திற்கு பல சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படக் கலைஞர் எமி விட்டல் என்பவரது புகைப்படம் ஒன்றைப் பயன்படுத்தி இருக்கிறார். ஆபிரிக்க மக்கள் எதிர்நோக்கும் தண்ணீர் பிரச்சினை, அந்த தண்ணீருக்காக குடங்களை சுமந்துகொண்டு பெண்கள் பல மைல்கள் நடந்து செல்லும் துன்பியல் வாழ்வு என்பவற்றை தனது பல கதைகளில் கரிசனையோடு பதிவு செய்துள்ள எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தை அந்தப் புகைப்படம் கவர்ந்ததில் வியப்பில்லை.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் முன்னெப்பொழுதும் வாசித்தறியாத புதிய விடயங்களைப் பேசுவதாக அமைந்துள்ளன. எழுத்தாளர் கதையோட்டத்தின் இடையே தனக்குத் தெரிந்த வரலாற்று உண்மைகளையும், தான் அறிந்த, வாசித்த விடயங்களையும் கலந்து தருவார். தொடர்ந்த வாசிப்பிற்கு ஊக்கம் தரும் சுவாரசியங்கள் இவை.

அமெரிக்க – கனடிய எல்லைகள் வரையப்பட்ட வரலாறு பற்றி 49 வது அகலக்கோடு கதையில் குறிப்பிடுகிறார். பசுபிக் சமுத்திரத்தில் பக்கத்து பக்கத்தில் இருக்கும் சமோவா, ரொங்கோ நாடுகள் பற்றியும், அவற்றை பிரிக்கும் சர்வதேச தேதிக்கோடு பற்றியும்; ஒரு கதையில் குறிப்பிடுகிறார். இவரது கதைகளைப் படிக்கின்றபோது 40 இலட்;சம் மக்கள் வாழ்கின்ற மால்ட்டா என்றொரு நாடு பற்றி அறியமுடியும். அந்த மக்கள் பேசுகின்ற மொழ்p மால்ட்டீஷ; என்பதும் தெரியவரும். மாலைதீவின் சனத்தொகை 3 ½ இலட்சம் அவர்களுடைய மொழி திவேஹி என்பதும் தெரியும். 3 லட்சம் மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட் அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக் என்பது தெரியும். பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியை பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லையென்றால் அந்த மொழி அழிந்துவிடும் என்பது உறைக்கும். புரிந்து கொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயமும் வலிக்கும். கனக்கும்.

அடுத்து கதைகளுக்குள் இவர் கையாண்டிருக்கும் உவமைகள் அற்புதமானவை. இரசனை மிகுந்தவை. சுவையானவை.

• ஒரு குழந்தையின் வாயை வர்ணிக்க அவர் வெட்டிய தக்காளி போன்ற சின்ன வாய் என்கிறார்.

• பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனைவி விடும் மூச்சு நல்ல இசைக்குப் பின்னால் சுருதி இசைப்பது போல என்கிறார்.

• கொடிக்கயிற்றில் மறந்துபோய் விட்ட கடைசி உடுப்புப் போல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது.

• கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோல பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள்.

• ஒரு பாம்பைப் பார்ப்பது போல அவள் எட்ட நின்று பார்த்தாள்.
என்கிறார்.

பாத்திரங்களின் வர்ணனை கூட வித்தியாசமானதாக, இரசிக்கத் தக்கதாக இருக்கும். ஒரு பெண்ணை இப்படி வர்ணிக்கிறார்.

• அவள் முகம் சிரிப்பது போலவே இருக்கும். பாண்டிய வம்சாவளியில் வந்தவளாகையால் அவருடைய சருமம் நல்லாய் தேய்ந்த காசுபோல வழுவழுவென்று மினுங்கியது.
இன்னொரு இளம்பெண்ணை இப்படி வர்ணிக்கிறார்.

• அந்த இளம்பெண் தன்னுடைய பெயரைச் சொன்னாள். அவளுடைய பாதணிகள் ஒரு முதலையினுடைய தலைபோல முன்னுக்கு ஒடுங்கிப்போய் இருந்தது. நான் கேட்காமலேயே தனக்கு 14 வயது நடக்கிறது என்றாள். நான் பார்த்ததிலேயே ஆக வயதுகூடிய 14 வயதுப்பெண் அவள்தான்.

இவருடைய கதைகளில் நிறைய ஆங்கிலச் சொற்களுக்கான புதிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். மின்கதவு, சுழல்கதிரை, ஓட்டுவளையம்(கார் ஸ்டியரிங்), உருண்டை ரொட்டி (பனிஸ்), மின்தூக்கி போன்ற சொற்களைக் கூறலாம். அதுமட்டுமல்லாது ஈழத்து பேச்சுவழக்குச் சொற்களையும் அண்மைக்கால தொகுப்புக்களில் சரளமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பொம்பிளை, மத்தியானம், வழிநெடுகிலும், கோப்பி, நல்லாக, சோறு, நெடுப்பாக போன்ற சொற்பதங்களைக் குறிப்பிடலாம்.

நிறைவாக:

ஒரு சமுத்திரத்தை எப்படி சிறுபாத்திரத்துக்குள் அடக்கமுடியாதோ! அப்படித்தான், அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு செய்வது என்பதும். அ.முத்துலிங்கம் அவர்கள் வையன்னா கானா என்ற சிறுகதையில் இப்படி குறிப்பிட்டிருப்பார்.

'நுண்ணிய ரஸிகத் தன்மையென்பது இலக்கியத்துக்கும், கவிதைக்கும், சமையல் கலைக்கும் மட்டும்தான் என்றில்லை. அந்த சுவையுணர்வு நுட்பமானதாக இருப்பின் அது எங்கேயிருந்தாலும் வணக்கத்துக்கு உரியதுதான்.'

என்கிறார்.

அவ்வாறே அ.முத்துலிங்கமும் நுட்பமான ரசனை உணர்வு மிக்கவர். சகமனிதர்கள் மற்றும் அவர்களின்; நடத்தைக் கோலங்கள் மீதான அ.முத்துலிங்கத்தின் ரசனையும் நுன்மையானது. அதனை அவர் வெளிப்படுத்தும் தன்மையும் நுட்பமானது. ரசனைக்குரியது. முத்துலிங்கத்தின் எழுத்துக்களும், எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் அரிய பொக்கிசங்கள். வரையரைகளுக்கு அப்பாற்பட்டவர். ஈழத்து எழுத்தாளர் என்றோ புலம்பெயர் எழுத்தாளர் என்றோ ஒரு வரையரைக்குள் வைத்து பேசப்பட இயலாதவர். ஈழத்து தமிழ் சிறுகதை வரலாற்றில் மட்டுமன்றி, கனடிய தமிழ் இலக்கிய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் அ.முத்துலிங்கத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
 


அகில் சாம்பசிவம்

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்