எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 8

முனைவர் செ.இராஜேஸ்வரி


எம் ஜி ஆரின் திரையிலும் வாழ்விலும் தமிழ்ப் பற்று

எம் ஜி ஆரை பார்க்காத சிறுவர்களும் எம் ஜி ஆர் இறந்த பின்பு பிறந்தவர்களும் கூட இன்று எம் ஜி ஆர் ரசிகர் மன்றங்களில் உறுப்பினராக இருக்கின்றனர். 12, 13 வயது சிறுவர்கள் இன்று எம் ஜி ஆர் ரசிகர்களாக இருப்பதை காணும்போது வியப்பாக இருக்கிறது. எம் ஜி ஆர் ரசிகர்கள் பாட்டி அம்மா அப்பா அண்ணன் என்று பரம்பரை பரம்பரையாக வருகின்றனர். எம் ஜி ஆரை தங்கள் தெய்வம் போல, குல சாமி போல கருதும் பலர் தங்கள பிள்ளைகளை எம் ஜி ஆர் ரசிகர்களாக உருவாக்கியுள்ளனர். எம் ஜி ஆரும் தன பங்குக்கு இவர்கள் மனதில் தாயையும் தமிழையும் போற்ற வேண்டும் என்ற கருத்தை ஊட்டி வளர்த்திருக்கிறார். நாடோடி மன்னன் படம் எடுத்ததன் நோக்கம் என்ன என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்ட போது ‘’என் விருப்பத்துக்கு படம் எடுக்க வேண்டும் என்றால் அது சொந்தப் படமாக இருந்தால் தான் முடியும். மற்றவர் படங்களில் என் கருத்தை அதிகம் எடுத்துரைக்க முடியவில்லை’’ என்றார். அவர் தன சொந்தப் படத்தில் செய்திருந்த முதல் புதுமை, திமுக கட்சியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் இலச்சினையில் இணைத்தது அடுத்தது

செந்தமிழே வணக்கம் திராவிட வாழ்வினை
சீரோடு விளக்கும் செந்தமிழே வாணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே
உயர் தமிழுக்கு நீ தந்ததாலே
செந்தமிழே வணக்கம்


என்ற பாடலில் திராவிட மொழிகள் அனைத்திலும் இருந்து ஒரு சரணம் இடம் பெறும். இப்பாடல் இன்று எம் ஜி ஆரை தொடர்ந்து எதிர்த்து வந்த வைகோவின் மறுமலர்ச்சி தி மு க கட்சியில் இறைவணக்கப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கலைஞரின் ‘எங்கள் தங்கம்’ படத்தில் எம் ஜி ஆர் ‘’என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்று ஒரு வசனம் பேசுவார் அது உண்மையில் அவரது உள்ளக் கிடக்கையை உணர்த்திய வசனம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வசனத்தை கருணாநிதி அவருக்காக எழுதியிருப்பார். ஓடும் ரயிலை இடைமறித்து தமிழுக்காகக் கருணாநிதி போராடிய போராட்டத்தை ஒரு பாடலில் சேர்க்க வேண்டும் என்று வாலியிடம் எம் ஜி ஆர் சொன்னதால் கலைஞரின் தமிழ்ப்பற்று அந்தப் பாடல் வரிகளில் இன்றும் மிளிர்கிறது. தமிழோடு தன்னை இரண்டற இணைத்துக்கொள்ளும் வேகமும் ஆர்வமும் எம் ஜி ஆருக்கு என்றும் இருந்துவந்தது

தினமும் பத்து குறள் ஒப்பிக்க வேண்டும்

எம் ஜி ஆர் தனது வீட்டில் இருப்பவர் தமிழில் மட்டுமே பேச வேண்டும்; குட் மார்ணிங் என்று சொல்ல கூடாது காலை வணக்கம் என அழகாகச் சொல்ல வேண்டும்; வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் குழந்தைகள் வந்து ‘’வாங்க வணக்கம்’’ என்று சொல்லி வணங்கி வரவேற்ற பின்பு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும். பெரியவர்கள் பேசும்போது அருகிலிருக்க கூடாது. அவர்கள் கிளம்பும்போது வந்து ‘போய் வாருங்கள் வணக்கம்’ என்று சொல்ல வேண்டும் என பலபல நல்ல நடத்தைகளை கற்று தந்திருந்த எம் ஜி ஆர் தமிழ்ப்பப்ற்றை ஊட்டி வளர்ப்பதிலும் அதே கண்டிப்புடன் திகழ்ந்தார். எம் ஜி ஆர் அப்பு ராதா என்று இரு மக்களை தத்து எடுத்து வளர்த்து வந்தார் என்பது பெரும்பாலோர் அறிந்த தெரியும் ஆனால் பலரும் அறிந்திராத விஷயம் அவர் தினமும் ராதா தன பள்ளிப்பாடங்களை படித்து முடித்த பிறகு தூங்கப்போகும் முன்பு பத்து திருக்குறளை படித்து எம் ஜி ஆரிடம் ஒப்பிக்க வேண்டும் என்று தன மகளுக்கு இட்டிருந்த அன்பு கட்டளை. அது போல அவர் ஜானகி அம்மையாரின் மகனான சுரேந்திரனையும் தினமும் ஒரு இறைவணக்க பாடலை சொல்லும்படி சொல்வார். சுரேந்திரனின் பிள்ளைகளுக்கு செங்குட்டுவன், இளங்கோ, கவிதா என்று நல்ல தமிழ் பெயர்களையே சூட்டி மகிழ்ந்தார். ராதாவின் பிள்ளைகளுக்கு சத்யா என்றும் முத்து என்றும் பெயர் சூட்டினார். இந்த பிள்ளைகள் இன்று அமெரிக்காவில் வசித்தாலும் எம் ஜிஆரின் தமிழ்ப் பற்றை அவர்களின் பெயர்கள் முழங்கிக்கொண்டிருக்கின்றன என்பதில் வியப்பொன்றும் இல்லை. அவர் ஊரார் பிள்ளைகளுக்கு வெற்றிமாறன், செந்தமிழ்க்குமரன், தங்கமாங்கனி என்று பெயர் சூட்டியது மட்டுமல்ல தன வீட்டு பிள்ளைகளுக்கும் நல்ல தமிழ் பெயர்களையே சூட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் ராதாம்மா கீதாம்மா ஆகியோர் பேசும் தமிழ் சென்னைத் தமிழ் சாயல் இல்லாமல் ஆங்கிலக் கலப்பில்லாமல் நல்ல தூயதமிழாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எம் ஜி ஆரின் தமிழார்வம்

எம் ஜி ஆர் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் அவர் விவரம் தெரிந்த பருவத்தில் இருந்து தமிழ்நாட்டிலேயே வாழ்ந்ததாலும் தமிழ் பற்று கொண்ட மக்களுடன் பழகி வந்ததாலும் தமிழ் ரசிகர்கள் அவர் மீது உயிரையே வைத்திருந்ததாலும் அவருக்கு இயற்கையாகவே தமிழ் மீது பற்றும் பாசமும் உண்டாகிவிட்டது. திராவிட இயக்க சிந்தனையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த எம் ஜி ஆருக்கு தமிழில் தனக்கு நல்ல படிப்பறிவும் பேச்சாற்றலும் இல்லையே என்ற ஏக்கமும் இருந்து வந்தது. அவர் சிறுவனாக நாடகக் கம்பெனியில் நடித்த போது அங்கு நாடக ஆசிரியர்களும் பாடலாசிரியர்களும் இலக்கியம் காவியம் குறித்து விவாதிப்பதை கேட்டு அவருக்கு தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீராக் காதல் உண்டயிற்று. அப்போது ராமாயணம் மகாபாரதம் குறித்த பாடல்களும் அவருக்கு மனப்பாடம் ஆயிற்று. பின்னர் அவர் தொல்காப்பியம் முதலான நுல்களை கேட்டு படித்து தெரிந்துகொண்டார். ஒரு முறை தொல்காப்பியத்தில் எட்டு மெய்ப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன என்று தமிழ் சான்றோர் ஒருவர் பேசிய போது ‘’இல்லை அதில் ஒன்பதாக சமநிலையும் குறிப்பிடப்பட்டுள்ளதே’’ என்றார் எம் ஜி ஆர்.

எம் ஜி ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த போது தமிழே திராவிட மொழிகளுக்கு தாய் என்று பொது மேடைகளில் பேச்சாளர்கள் முழங்கிய போது அவருக்கு தமிழ் மீது மாறாத பற்றும் பாசமும் உண்டாயிற்று. பின்னர் அவர் புது கட்சி தொடங்கி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் ஆன போது கலைஞர் கருணாநிதி எம் ஜி ஆரை மலையாளத்தான் என்று ஏசினார். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர ஜெயலலிதா. அவரது தாத்தா கர்நாடகத்தில் மைசூர் மகாராஜாவிடம் அரண்மனை வைத்தியராக இருந்ததால் சந்தியா அங்கேயே வாழ்க்கைப்பட்டு அங்கு குடியிருந்தார். எனவே ஜெயலலிதாவும் அங்கு பிறந்தார். இந்த தகவல் உலகத்துக்கே தெரிந்திருந்தும் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதாவை ‘’கன்னடத்துக்காரி’’ என்று ஏசினார். இருவருமே தமிழ்ப் பற்று மிக்கவர்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உண்டு. [நடிகையாக இருக்கும்போது கங்கா கவுரி படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் கன்னட வெறியர்கள் வந்து ஜெயலலிதாவிடம் ‘’கன்னடம் வாழ்க தமிழ் ஒழிக’’ என்று சொல்லுங்கள் என மிரட்டி வலியுறுத்திய போது ‘’தமிழ் ஒழிக’’ என சொல்லவே மாட்டேன் என மறுத்துவிட்டார். அவர்கள் கொலை வெறி பிடித்தவர்கள் எனப் படப்பிடிப்பு நடத்தியவர்கள் எச்சரித்த போதும் ஜெயலலிதா அதற்கு அஞ்சவில்லை சொல்ல மறுத்துவிட்டார். தமிழ் மீது பற்று உடைய ஜெயலிதா நடிக்கும் காலத்திலேயே மன உறுதி கொண்ட இரும்பு பெண்மணியாக இருந்தார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை].

செந்தமிழ் குல வேளிர் எம் ஜி ஆர்

எம் ஜி ஆருக்கு தன்னை மலயாளத்தான் என்று ஏசியது மனதுக்குள் உறுத்தலாகவே இருந்தது . தன்னையும் தன் ரசிகர்களையும் பிரிக்கும் செயலாகவே இந்த ஏச்சு அவருக்கு தென்பட்டது. மேலும் அவர் தன மனத்தால் செயலால் சிந்தனையால் தமிழனாக வாழத் தொடங்கி பல வருடங்கள் கழிந்த பிறகும் தன்னை மலையாளத்தான் என்று கூறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை அப்போது அவரிடம் பேசிய ஒரு தமிழ்ப் பேரறிஞர் ‘’நீங்கள் மலையாளத்தை சேர்ந்தவர் இல்லை. ஏன் வருந்துகிறீர்கள்? உங்கள் வமிசத்தினர் ஒரு காலத்தில் மலயாளத்திற்கு பிழைக்க போனவர்கள். நீங்கள் மன்றாடியார் வகுப்பை சேந்தவர்’’ என்றார் எம் ஜி ஆருக்கு இத்தகவல் காதில் தேனாக இனித்தது. இதை உங்களால் நிரூபிக்க முடியுமா என்றார். உடனே இதற்கான பணிகள் தொடங்கின செந்தமிழ் குல வெளிர் எம் ஜி ஆர் என்ற நூல் வெளிவந்தது அதில் எம் ஜி ஆரின் முப்பாட்டனார்கள் வரலாறு ஒன்பது தலைமுறை வரை ஆராய்ந்து எடுக்கப்பட்டு தரப்பட்டிருந்தது. எம் ஜி ஆருக்கு இது பெரும் ஆறுதலையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதே சமயத்தில் அவர் கருணாநிதி தெலுங்குக்காரர் என்பதை சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை. மறுக்க முடியுமா என்று சவால் விட்டார் கருணாநிதி அமைதி ஆனார்.

‘’நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது; அதை நிறைவேற்றும் கடமையும் எனக்கு இருக்கிறது’’ என்று கூறும் எம் ஜி ஆர் ‘’லட்சக்கணக்கான் சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள் அவர்கள் மனதில் நஞ்சை நான் விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலம் அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது’’ என்று பொறுப்புடன் ஒரு பேட்டியில் பதில் அளித்த எம் ஜி ஆர் சிறுவர்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை தன படத்தின் மூலமாக கதாபாத்திரத்தின் மூலமாக பாடல்களின் மூலமாக விதைப்பதை தலையாயக் கடமையாக கொண்டிருந்தார். அதனால் தான்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த
நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு
சரித்திரம் இருக்குது தம்பி

எனப் பாடினர். பாடலாசிரியர் வேறு என்றாலும் கருத்து இவருடையதே.

திருக்குறள் முன்னேற்ற கழகம் [திமுக] என்று கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஒரு படத்தில் பாட்டு பாடும் அளவுக்கு திருக்குறள் திராவிட இயக்கங்களின் வேத நூலாக இருந்தது. குறள் வழி வாழ்ந்த எம் ஜி ஆர் திருக்குறளை தன படங்களில் இடம்பெற்ற சிறுவர் பாடல்களில் போற்றியிருக்கிறார். குழந்தைகளை வாழ்த்தும்போது

மலர் போல சிரித்து –
நீ குறள் போல வாழு
தன மகன்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் வழி பார்த்து சொல்வான்
எனப் பாடினர். மேலும் அவனை
முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து
எப்போதும் இனித்திருப்பாய்

என்ரு வாழ்த்தினார். .

முதல்வராக எம் ஜி ஆர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு

எம் ஜி ஆர் சினிமாவில் தன தமிழ்ப்பற்றை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்ததோடு அவர் தன கடமை முடிந்துவிட்டதாகக் கருதவில்லை அவர் முதலமைச்சரானதும் 1981இல் உலகத் தமிழ் மாநாட்டை தமிழுக்குச் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் நடத்தினார். சனவரி ஒன்று முதல் பத்து தேதிகள் வரை மதுரை ஒரே கொண்டாட்டக் களமாக இருந்தது அது அவர் வெற்றி பெற்றி மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதி [எங்கள் தொகுதி] என்பதால் பொதுமக்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் தனித்தனியாக தமிழ் இன்பத்தை அள்ளிப் பருக வசதி செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் சான்றோர்களின் ஆய்வரங்குகள் நடந்தன. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கண்காட்சி. குமரிக்கண்டம் திரைக்காட்சி, எம் எஸ் சுப்புலட்சுமி பாட்டரங்கம், ஜெயலலிதாவின் காவிரி தந்த கலைச்செல்வி நாட்டிய நாடகம் கவியரங்கம், பட்டி மன்றம் எனத் தமிழின் தலை சிறந்த பெருமக்கள் பேச்சாளர்கள் ஆடல்பாடல் கலைஞர்கள் மாநாட்டைச் சிறப்பித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தும் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு களித்தனர். பத்து நாட்களும் மதுரை விழா கோலம் பூண்டிருந்தது. நிறைவு நாளன்று திமுக அணியில் இருந்த பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி வந்து வாழ்த்தி பேசினார்.

தமிழ்ப் பல்கலைக் கழகம்


மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்திய எம் ஜி ஆர் தஞ்சையில் தமிழுக்கு எனத் தனிப் பல்கலைக் கழகம் அமைத்தார் அதற்கென்று ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தினார் வருமானம் ஈட்டாத பல்கலைக் கழகமாக ஆராய்ச்சி கழகமாக இருக்க வேண்டும் என்று விரும்பி முதுகலை படிப்புகள் கூ’ட வைக்காமல் ஆராய்ச்சிக்கு மட்டும் எனத் தொடங்கினார் ஆனால் அதற்கு பின் வந்தவர்கள் அதன் நோக்கத்தை குலைத்துவிட்டனர். முழுக்க முழுக்க அரசின் நிதியிலேயே அந்த பல்கலைக்கழகம் நடத்த திட்டமிடப்பட்டு அதிக தொகை அதற்கு ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர் ஆட்சியில் சம்பளம் கொடுக்க முடியாமல் நூலகத் தொகையை எடுத்து சம்பளம் போட்டதாகக் கேள்விப்பட்டதுண்டு

தமிழாசிரியர் பெருமை


எம் ஜி ஆர் ஆட்சியில் தமிழ் ஆசிரியர்கள் துணை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மட்டும் மேற்கொண்டால் மட்டும் போதும்; நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது கட்டாயப்படுத்தப்பட்டு செய்தது போல இனி கருத்தடைக்கு ஆள் பிடிக்க தேவையில்லை என்ற மாற்றமும் எம் ஜி ஆரால் கொண்டு வரப்பட்டது. கணவருக்கு மனைவி வேலை பார்க்கும் ஊருக்கு மாற்றல் வழங்கவும் முன்னுரிமை தரப்பட்டது. கணவன் மனைவி அருகருகே வேலை பார்க்கும் வகையில் குடும்பம் பிரியா வண்ணம் இருக்கவும் மாற்றல் வழங்கப்பட்டது.

எழுத்துச் சீர்திருத்தம்

தமிழின் எழுத்துருவங்கள் பல் நூற்றாண்டுகளாக மாற்றம் பெற்று வந்துள்ளன. வீரமாமுனிவர் காலத்தில் அவர் தான் எகர ஒகரங்களுக்கு குறில் நெடில் வேற்றுமையை கொண்டுவந்தார். இவ்வாறிருக்க மொழியியல் அறிஞர்கள் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவர முனைந்த போது அதற்கு தமிழ்ப் பெருமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் எம் ஜி ஆர் பெரியார் தம் ‘விடுதலை’ நாளிதழில் பின்பற்றிய எழுத்து சீர்திருத்தங்களை துணிந்து அரசு பதிவுகளிலும் தமிழில் எழுதப்பட்ட பாட நூல்களிலும் அறிமுகப்படுத்தினார். லை னை ணா னா ஆகியன அன்று முதல் மாற்றம் பெற்றன. தி மூ க தலைவர்கள் அண்ணாத்துரை கருணாநிதி ஆகியோரின் கையெழுத்தைப் பார்த்தால் முன்பு ணா எவ்வாறு எழுதப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் அறிஞர் பிள்ளைகளுக்குச் சலுகை

தமிழ் சான்றோர் பலர் ஆரம்ப கட்டத்தில் சுய மரியாதையை வலியுறுத்துதல், பகுத்தறிவு பிரச்சாரம் செய்தல், பின்னர் இந்தி எதிர்ப்பு போராட்டம் என தீவிரமாக பொது தொண்டில் ஆழ்ந்துவிட்டதால் குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடிமாமல் இருந்துவிட்டனர். இவர்களை போல இவர்களின் பிள்ளைகள் அறிவாளிகளாக இருந்தும் ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’ என்ற கடமையை தவிர்த்து இப்பெரு மக்கள் சமுதாய விழிப்புணர்வு பணியில் முழுமூச்சாக இறங்கி விட்டதால் இந்த பிள்ளைகள் ஒரிரு சத வீதத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கலவி படிப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்ட போதும் எம் ஜி ஆர் தமிழ் பெருமக்களின் பிள்ளிகளுக்கு என இரண்டு சதவீதம் ஒதுக்கீடு அளித்து சிறப்பித்தார். இதனால் திமுகவை சேர்ந்த எம் ஜி ஆரை அதுகாறும் திட்டி தீர்த்த பெருமக்களின் பிள்ளைகளும் பலனடைந்தனர்.

உலகத் தமிழ்ச் சங்கம்

மதுரையில் உலகத் தமிழ் சங்கம் கொண்டு வர வேண்டும் என்று அவாவிய எம்ஜி ஆரின் உள்ளம் அவர் அமேரிக்கா சென்று சிகிச்சை பெற்று மறு பிறவி எடுத்து திரும்பிய பிறகு அதை செயல்படுத்தியது. எம் ஜி ஆர் இந்த உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு எட்டு கோடி ருபாய் நிதி அளித்தார். தாமரையின் மீது ஏடுகளும் உலக உருண்டையும் இருப்பது போன்ற சின்னம் வடிவமைக்கப்பட்டது; தொடக்க விழா நடந்தது. பேச்சு பயிற்சி எடுத்து வந்த எம் ஜி ஆர் இந்த விழாவில் மிகுந்த பயிற்சி எடுத்து தெளிவான உச்சரிப்புடன் பேசினார். ‘உலகமெலாம் தமிழ் பரவும் வகை செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் உலகத்தமிழ் சங்கத்தை ஆரம்பித்தார். அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த திட்டம் எம் ஜி ஆரால் தொடங்கப்பட்டது என்பதால் கருணாநிதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஜெயலலிதா கடைசியாக பதவிக்கு வந்தபோது போனால் போகிறது என்று தொடங்கி வைத்தார். இச்சங்கம் இப்போது பெயரளவில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் தீவிரமான செயல்பாடுகளில் இறங்கவில்லை. நூலகம் கண்காட்சி போன்ற வேலைகள் ஓரளவு முடிந்துள்ளன. அவ்வப்போது கருத்தரங்குகள் நூலாய்வு போன்றன. நடக்கின்றன. எம் ஜி ஆர் தொல்பொருள் ஆய்வு, கல்வெட்டாராய்ச்சி போன்றவை சிறப்பாக நடைபெற வேண்டும் தமிழின் தொன்மை உலக அரங்கில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பினார் அதற்கான சில திட்டங்களை வைத்திருந்தார் ஆனால் அவை நடைபெறவில்லை என்று அவருடன் பணியாற்றிய ஐ ஏ எஸ் அதிகாரி நாளிதழ் ஒன்றில் சொல்லியிருந்தார்

நிறைவு:

எம் ஜி ஆர் தமிழை நேசித்தார். தன்னை போல் அடுத்த தலைமுறையும் நேசிக்க வேண்டும் என தீர்மானித்தார். தன படங்களில் பாட்டுக்களில் தமிழின் சிறப்பை பிள்ளைகளுக்கு எளிமையாக ஊட்டினார். அது மட்டுமல்ல தன அன்றாட வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஆட்சியிலும் தமிழைப் போற்றினார். ‘’நாடோடியாக தமிழ் நாட்டுக்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ் மொழியை கற்றேன். வாழ வழியின்றித் தவித்த எனக்கு தமிழ்நாடும் தமிழ் மொழியும் வாழ்வளித்தன. இந்த தமிழ் நாட்டை என்றும் மறக்க மாட்டேன் என்னை வாழ வைத்த தமிழ் மொழி வாழவேண்டும் அந்த மொழி வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய தயங்க மாட்டேன்’’ என்ற அவரது பேச்சு அவரது தமிழ்ப்பற்றை உறுதிப்படுத்துகிறது..



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்