அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்
(ALIENS & UFO)
கனி விமலநாதன்
அறிவியற் தொடர் -
10
சுமேரியர்களின் புதிர் (தொடர்ச்சி.............)
(படம்
இருநதியிடையில் சுமேரியா இருந்த இடத்தைக் காட்டுகிறது.)
சுமேரியர்கள்; அவ்விடத்திற்கு வந்து குடியேறியவர்கள் அல்லவா. ஆரம்ப
நாட்களில் இவர்களை வியப்பாகப் பார்த்த அவ்விடத்தின் குடிகளுக்கு,
நாட்கள் செல்லச் செல்ல சுமேரியர்கள் மேல் மெதுமெதுவாகப் பொறாமை
ஏற்படுகிறது. இருப்பினும் சிலர் சுமேரியர்களுடன்; கலந்தும்
கொள்கிறார்கள். சுமேரியர்களிற் சிலரும் மற்றவர்களுடன் கலந்து புது
இனங்களை ஆக்கிக் கொள்ளுகிறார்கள். அப்படியாக அங்கு வளம்பெற்ற
இனங்கள்தான் பாபிலோனியர், எபிரேயர், அசீரியர், பினிசீயர் போன்றவர்கள்.
(பினிசீயரும் கூட இங்கே குடிபெயர்ந்துதான் வந்தார்கள் எனவும்
கூறுகின்றார்கள், சில ஆய்வாளர்கள்.) இப்பகுதியில் இருந்த மக்களின் 'அக்காடியன்'
(Akkadian)
மொழி வழக்குகளில் சுமேரியம்
கலந்து, ஈற்றில் சுமேரியமே இப்பிரதேசத்து மொழியாகி விட்டது. எழுத்து
வடிவங்களும் கடத்தப்பட்டு விட்டன. அவர்கள், தங்கள் தங்களுக்கென புது
மொழியினையும், சுமேரியத்துடன் கலந்து ஆக்கிக் கொண்டார்கள்.
இவ்வண்ணமாய்த் தோன்றிய மொழிகள்தான் பாபிலோனியம், எபிரேயம், அரமைக் (அரபிக்
அல்ல) பினீசியம் போன்றவை. இதில்; அரமைக்தான் பெரும்பாலானவர்களிடம்
செல்வாக்குப் பெற்ற, வழக்கு மொழியாக இருந்தது. இன்றும், இயேசுக்
கிறிஸ்து பேசியது எங்களின் அரமைக் மொழிதான் என அரமைக் மொழியின்
சொந்தக்காரர்கள் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். அவர்களது
எழுத்துக்களும் சுமேரியரின் சித்திர எழுத்து
(cuneiform)
வடிவிலேயே இருந்தன. தங்களது
பதிவுகளையும் சுமேரியர்கள் போன்றே களிமண் தகடுகளில் எழுதிப்
பாதுகாத்துக் கொண்டார்கள். சுமேரியர்களின் சித்திர எழுத்துகளை 'ஆப்பெழுத்து'கள்
எனவும் கூறுவார்கள். ஏனெனில் களிமண்; தகடுகளில் உள்ள அவர்களின் சித்திர
எழுத்துகள், ஆப்பு
(wedge)
வடிவில் இருப்பதுவே
காரணமாகும்.
சுமேரியத்தால் வளம் பெற்ற இனங்கள், அப்பகுதியில் காலத்திற்குக் காலம்
சுமேரியரை மேவித் தலையெடுக்கத் தொடங்கினர். பாபிலோனியர், அசீரியர்,
பினிசீயர், எபிரேயர் (யூதர்) போன்றவர்கள் காலத்திற்குக் காலம் மாறிமாறி
அப்பகுதிகளில் பெரும் பலத்துடன் எழுந்தார்கள். தத்தமது
இராச்சியங்களுக்காக நடந்த சண்டைகளில் அழிந்தவை போக எஞ்சிய சுமேரிய
அறிவியற் செல்வங்களிற் தமக்குப் பொருத்தமானவற்றைப் பாதுகாத்தும்
கொண்டார்கள். இவ்வினத்தவர்கள் சுமேரியரிடம் பெற்ற அறிவுடன் தத்தமது
காலங்களில் பெரும்பெரும் கோட்டை, கொத்தளங்கள் அமைத்து வலிமையான
நகர்களையும் நிர்மானித்து வாழ்ந்தார்கள். 7 உலக அதிசயங்களில் ஒன்றான
பாபிலோனியரின் 'தொங்கு தோட்டம்' என்பதும் சுமேரியரின் அறிவியலின்
தொடர்ச்சி என்றே கூறுகின்றார்கள்.
இவ்விபரங்களிற் சிலவற்றை கிறிஸ்தவர்களின் விவிலியத்தின் பழைய
ஏற்பாட்டிலும், சிலவற்றை பழைய கிரேக்கக் குறிப்புகளிலும் காணலாம்.
இன்னமும் உரோமர்களின் குறிப்புகளிலும் கூடச் சிலவற்றை வரலாற்று
ஆய்வாளர்கள் காண்கிறார்கள். மேலே குறிப்பிட்ட இனங்களின் பெயர்கள்
எங்களிற் சிலருக்குப் புதியன போலத் தோன்றினும், பல கிறிஸ்தவர்கள்
அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
இப்படியிருக்கையில், கி.மு.800களில் அசீரியர்கள் பெரும்பலம் பெற்று,
நிநிவே என்ற பட்டினத்தை கட்டியெழுப்பினார்கள். இந்த அசீரியர் என்பவர்கள்
சுமேரியர், பாபிலோனியர், எபிரேயர், இன்னமும் எகிப்தியர் போன்றவர்களின்
கலப்பினாலான இனமாக இருந்தார்கள். அசீரியர்களின் 'சென்னசெறிவ்' என்ற
மாமன்னர் நிநிவேயில் 72 அறைகள் கொண்ட பெரிய அரண்மனையைக் கட்டினார்.
அவ்வரண்மனையில் ஒருபகுதியை நூலகமாக ஆக்கியிருந்தார். உலகின் முதலாவது
நூலகம் எனக் குறிப்பிடப்படும் அந்நூலகத்தில் சுமேரியர்களினது உட்பட
22,000க்கும் அதிகமான, களிமண் தகடுகளில் எழுதிய நூல்களைப் பேணிப்
பாதுகாத்தார். கி.மு.600களில் அசீரியர்கள், பாபிலோனியர்களால்
ஒடுக்கப்படுகிறார்கள். இதனால் அசீரியர், அவ்விடத்தில் இருந்து வெளியேற,
நிநிவே பாழடைந்து போகிறது. மிகவும் செல்வாக்குடனும், பலத்துடனும்
இருந்த நிநிவே பட்டினம், போட்டதெல்லாம் அப்படியே இருக்க,
கைவிடப்பட்டிருந்தது.
(அசீரியர்களின்
கோட்டையின் மாதிரியை அருகில் உள்ள படத்திற் காண்க.) இதனை
விவிலியத்திலும் அவ்விடத்து மற்றைய இனத்தவர்களின் குறிப்புகளிலும்
காணலாம். தெருக்களிலும், வீடுகளிலும் மக்கள் இறந்து கிடந்தார்கள் என்று
கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவ்விடத்தை ஒருவரும் அண்டவில்லை எனக்
கூறுகின்றார்கள். 'சாம்பல் மேடு', 'இறந்தவர்களின் மேடு; எனக் கூறிக்
கொண்டு மொகஞ்தாரோவை மக்கள் கவனிக்காது அதனை அண்டாது போனது போலவே
நிநிவேயும் ஆகியிருந்தது. இவ்விதமாக, காலத்திற்குக் காலம்
அவ்விடத்தவர்கள் மாறி மாறி எழுச்சியுற்ற வேளைகளில் மற்ற இனங்கள்
பெருமையிழந்தும் சிலர் சுமேரியர், பாபிலோனியர் போன்று முற்றாகவே
அழிந்தும் போய்விட்டனர்.
இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் கிரேக்கர்களின் பின்னால்
உரோமானியர்கள் தங்களது பெரும் அரசினை அமைக்கையில் இப்பகுதி
பெருமையிழந்து காணாமலே போய்விடுகின்றது. பின்னராக, 13ம், 14ம்
நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் எழுச்சியுற்று, பாரசீகப் பகுதிகளில் தமது
செல்வாக்குகளைக் காட்ட, சுமேரியர்களின் களிமண் தகடுகள் பல
அப்;பகுதிகளில் எடுக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில்
பாதுகாக்கப்பட்டன. இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், கைவிடப்பட்ட,
ஒருவருமே அண்டாதிருந்த நிநிவே பட்டினமும் 19ம் நூற்றாண்டில் இனம்
காணப்படுகிறது. சென்னசெறிவ் மாளிகையின் நூலகமும் மீட்கப்பட்டு
அங்கிருந்த 22000க்கும் அதிகமான களிமண்தகட்டு நூல்களும் உலகின்
பார்வைக்கு வர, இவையெல்லாம் புதியதொரு சுவாரசியமான கதையினை உலகிற்குக்
கொடுக்கத் தொடங்கின.
பாரசீகத்தின் கதை உலக வரலாற்றில் முக்கியமானதாக உள்ளது. இதில்
இருந்துதான் மனித வரலாற்றின் தொடர்ச்சித் தன்மையை அறிஞர்கள்
ஓரளவுக்கேனும் காண்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே ஆய்வாளர்கள் முந்நாள்
உலகினை இனம் காண முயல்கிறார்கள். அந்த வகையில் சுமேரியர்களின் களிமண்
தகடுகளில் உள்ளவற்றை வாசித்து அறிந்து கொள்ள வல்லுனர்கள் முயற்சிகள்
எடுக்க, புதுப்புதுத் தெளிவுகள் வரத் தொடங்கின. அதிலொன்றுதான் மனித
இனத்தின் தோற்றத்திற்கான, அல்லது பரிணாம மாற்றத்திற்கான கதை. மிகவும்
சுவையான அக்கதையினை இனிப் பார்க்கப் போகின்றோம். இதிலேதான் 'அந்நாள்
அந்நியர்'களின் செல்வாக்குப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்படுகின்றன.
அக்கதையைக் கூறுமுன், இப்பதிவினைத் தருகிறேன்.
நவம்பர் 07, 2006. நேரம் மாலை 4:15 ஆகிறது. சிக்காக்கோவின் ஓகெயர்
(O’HARE)
சர்வதேச விமான நிலையத்தில்
நின்றும் வட கெறலைனாவுக்கு, யுனைற்ரட் எயர்லைன்ஸ் விமான சேவையினரின்
446ம் இலக்க விமானம் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டு இருக்கின்றது.
விமானத்தை இயக்குவதற்கான தொடக்க நடவடிக்கைகள் மும்மரமாக நடந்து
கொண்டிருக்கையில், தமது கடமைகளைச் செய்து கொண்டிருந்த 12 பேர், தமது
கடமையின் நடுவிலே எப்படியோ, வானிலே ஒரு 'அறிந்திரா வானூர்தி'யைக் (யூஎவ்ஓ)
காண்கிறார்கள். இவர்களையும் விட, இன்னமும் சில பொதுமக்களும் அதனைக்
காண்கிறார்கள். விமான நிலையத்தின், சீ17 பறப்புப் பாதை வாசலின் மேலாக,
சாம்பல் நிறமான, உலோகத்தன்மையினதான அந்த அறிந்திரா வானூர்தி
வட்டமிட்டுக் கொண்டிருந்தது. வானிலே, மேகக் கூட்டம் ஒன்றின் கீழாகக்
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அப்படிப் பறந்து கொண்டிருந்த
அந்த யூஎவ்ஓ, பின்னர் மேலே பறந்து சென்று விட்டது. ஒரு தேனீர்த் தட்டின்
(Saucer)
அமைப்பில் இருந்த அவ்வானூர்தி,
மேலே செல்கையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அந்த யூஎவ்ஓ மேலே பறந்து செல்கையில் மேகக் கூட்டத்தில் ஒரு துவாரம் (ஓட்டை)
ஏற்பட்டது. அத்துவாரத்தின் ஊடாக மேலே பறந்து, அவ்வானூர்தி மறைந்து
விட்டது. அவ்வானூர்தி முகிற் கூட்டத்தில் ஏற்படுத்திய துவாரத்தினூடாக
நீலவானத்தை, அங்கு நின்ற விமானிகளும் பொறியியலாளர்களும் மற்றவர்களும்
பார்க்கக் கூடியதாக இருந்தது.
இச்செய்தியானது சிக்காக்கோ ரைபியுன்
(Chicaco
Tribune)
என்ற ஊடகத்தின் வலையத்தில்
அந்நாட்களில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட செய்தியென பதிவாகியுள்ளது
அத்துடன், உலக நாடுகளில் யூஎவ்ஓ பற்றிய முக்கிய செய்தியாகவும் வலம்
வந்தது. உங்களிற் சிலர் கூட அதனை வாசித்திருந்திருக்கலாம்.
இவை எப்படியிருப்பினும் விமான நிலையத்தின் றேடாரில்
(radar)
இந்த அறிந்திரா வானூர்தி
தென்படாததால் இதனை காலநிலைக் காரணி
(Weather Phenomenon)
எனக் கூறி, அரச அதிகாரிகள்
இவ்விடயம் பற்றிப் பெரிதுபடுத்தாதவர்கள் போல இருந்து விட்டார்கள். ஆனால்
உண்மையில் அப்படி அவர்கள் இருக்கவில்லை. ஆர்னோல்டின் சம்பவத்தின்
பின்னர், 1940களில் யூஎவ்ஓ பற்றி ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவினை
அமைத்தது போல, 2007இலும் ஒரு இரகசியக் குழுவினரை யூஎவ்ஓ பற்றிய
ஆய்வுக்காக மீண்டும் அமெரிக்கா நியமித்தது. 22 மில்லியன் டொலர் செலவில்
அமைந்த நடவடிக்கையானது, 2012ம் ஆண்டு வரையில் செயற்பட்டது என்றும்
யூஎவ்ஓ பற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அடுத்த தடவை சந்திக்கையில் மனிதப் பரிணாமம் பற்றிய, 'அந்நாள் அந்நியர்'
ஆய்வாளர்களது கருத்தினைக் கூறுகிறேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|