அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 11

மெசப்பத்தேமியப் பகுதிகளில் அன்று வாழ்ந்தவர்களைப் பற்றி அறிந்து கொண்டு செல்லும் எங்களுக்கு, போகும் பாதையில் வருகின்ற அறிவியல் விடயங்கள் சிலவற்றையும் மெதுமையாகப் பார்த்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவ்வண்ணமாகப் போனாற்றான் எங்களின் பயணத்தின் தொடர்ச்சித் தன்மை கெடாமல் இருக்கும் என்பதோடு, பல விடயங்களைப் பகுத்தாயும் இயல்பும் அதிகரிக்கும் அந்த வகையில் 'அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்' பற்றிப் பார்க்கையில், 'அந்நாள் அந்நியர்' என்ற பகுதியில் எழுத்துக்கள் பற்றிய வரலாறும் குறுக்கிடுகின்றது. எனவே அதனையும் தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

எழுத்துகளின் வரலாறு

ஆடைகளின்றிக் காடுகளில் உணவுத் தேடல் ஒன்றினைத் தவிர, உறைவிடச் சிந்தனையும் கூட இல்லாது, அலைந்து திரிந்த மனிதர், இன்று இலக்கு வைத்துச் செவ்வாய் கிரகத்திற்கும் செல்லும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இவ்விதமான அறிவியல் உயர்வுக்கான மனிதரின் முக்கியமான கண்டுபிடிப்பு எதுவெனில், அது "புத்தகங்கள்" என இந்திய ஊடகவியலாளரான சு. வெங்கடேசன் அவர்கள் கூறுகின்றார். புத்தகங்களினால்தான் ஒருவரது கருத்து இன்னொருவருக்குக் கால வேறுபாடுகளையும் தாண்டிச் சென்று, மனிதர்களின் அறிவுநிலை மேம்பட்டது என்ற கருத்து வருகின்றது. இந்த நூல்களின் ஆக்கங்களில் முக்கிய பொருளாக இருப்பது எழுத்துகள். அதன்படி பார்த்தால் எழுத்துக்களின் கண்டுபிடிப்புத்தான் மனிதரின் வளர்ச்சியின் குறிப்பிடத்தக்கதான ஆரம்பம் எனலாம். எனவே எழுத்துக்களின் வரலாற்றையும் எங்கள் பாதைக்கு ஏற்றவகையிற் பார்ப்போம்.

எழுத்துக்களின் வரலாறும் மேலைநாட்டு அறிஞர்களைப் பொறுத்த வரையில் சுமேரிய எழுத்துக்களுடன்தான் ஆரம்பமாகிறது. ஆரம்ப நாட்களில் சித்திர எழுத்துகளில், மெசப்பத்தேமியப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடுக்கப்பட்டு, அங்கே இங்கேயென ஐரோப்பாவின் நாடுகளின் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமேரியரின் களிமண் தகடுகளில் இருந்த விபரங்களை வாசித்து அறிந்து கொள்வோர் இன்மையால் பொதுவாகவே எந்தவொரு சங்கதியும் வெளியில் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல சிற்சில விடயங்கள் துண்டு துண்டுகளாக அவற்றில் இருந்து வெளிவர, அவை தொகுக்கப்பட, பாரசீகப்பகுதியின் பழமை ஒரு மங்கலான படமாக வெளிவரத் தொடங்கியது. இந்நிலையில் அசீரிய மன்னர் சென்னசெறிவ்வின் அரண்மனையும் வெளிப்பட, அசீரியர்கள் சேமித்து வைத்திருந்தவையும் பல விடயங்களைக் கூறத் தொடங்கின. அவற்றினை அறிந்து கொள்வதற்காக, அசீரியர்களைப் பற்றி இன்னமும் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

இரும்பினாலான ஆயுதங்களான ஈட்டிகள், வாட்கள், அம்புகள், உடற் கவசங்கள் போன்றவற்றை உலகினருக்கு அறிமுகப்படுத்திய அசீரியர்கள்தான் அகர
(Alphabets) எழுத்துகளையும் முதன்முதலில் உலகிற்கு, கி.மு. 800களில் அறிமுகப்படுத்தியவர்களென மேலைநாட்டு அறிஞர்கள் ஆய்ந்து கூறுகின்றார்கள். இந்த அகரங்கள் எவ்விதம் ஆகியிருக்கலாம் என்ற அவர்களின் கருத்தினைப் பார்ப்போம். ஆரம்பம் சுமேரியர்களின் சித்திர எழுத்துகள்தான். சுமேரியர்களின் சித்திர எழுத்துக்களின் அடுத்த பரிணாமமாக எகிப்தியரின் பட எழுத்துக்களைக் கூறுகின்றார்கள். எகிப்தியரின் பட எழுத்துக்களில் சிற்சில அசைவுகள் ஏற்பட்டிருந்தன. (சிந்துவெளி எழுத்துக்களை சுமேரிய சித்திர எழுத்துக்களுக்கு ஒப்பாக, ஆனால் அதனிலும் பழமையானதாகப் பார்ப்பவர்கள் பலர் உள்ளனர்.) அசீரியர்கள், எகிப்தியரையும் வென்று தமது வல்லமையைக் காட்டுகையில் எகிப்திய எழுத்துக்களின் செல்வாக்கும் அசீரியர்களிடம் வந்து விடுகின்றது. இதேநேரம் பினிசீயரும் (இவர்களைப் பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளேன்) அசீரியர்களுடன் கலந்திருந்தார்கள். இதன் வழியில், பினிசீயரினதும், எகிப்தியரினதும் எழுத்துக்கள் சேர, அசீரியர்களிடம் புதுவகையான, அகர வடிவ எழுத்துக்கள் வரத் தொடங்கின. இதனைத்தான் அகர எழுத்துக்களின் பிறப்பாக மேலை நாட்டவர்கள் கூறுகின்றார்கள். இதற்கு ஆதாரமாக, அசீரியர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட, கி.மு. 1500 ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட களிமண் தகடுகளில் உள்ள எழுத்துக்களைக் காட்டுகின்றார்கள்.

இங்கு மொழிகள் பற்றிய ஆய்வுகளின் இன்னொரு வெளிப்பினையும் தெரிந்து கொள்வோம். பினிசீயரின் மொழியில் இலக்கணச் செறிவு அதிகமாக இருந்ததாகக் கூறுகின்றனர், ஆய்வாளர்கள். உரோமரின் இலத்தீனின் உண்மையான சொந்தக்காரர், இந்தப் பினிசீயர்கள்தான் எனக் கூறும் இக்கால மொழியியலாளர்கள் பலருண்டு. மெசப்பத்தேமியாவில் இருந்து பினிசீயர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டு போகையில், பல இடங்களிற்கும் ஓடியோடி, ஈற்றில் கிரேக்கத்திற்கும் இத்தாலிக்கும் இடையில், உரோமரின் சிறிய இடத்தில் அடங்குகின்றார்கள். அவ்வேளையில் அவர்களின் மொழிவளம் செழிப்புற்று, இலத்தீன் உருப்பெறுகிறது. இந்த மொழியின் சிறப்பினைக் கண்டுகொண்ட உரோமர்கள் இலத்தீனை (பினிசீயரையும்) மெதுமெதுவாகத் தமது மொழியாக்கிக் கொண்டு விட்டார்கள். பழம் கிரேக்கம் கூட, பினிசீயரின் மொழிச் செல்வாக்குக் கொண்டுதான் செழிமையாக வந்தது, இருந்தது.

இந்த இடத்தில் முக்கியமான கருத்தொன்றினையும் கூறவேண்டும். அசீரியர்கள் இருந்த இடங்களில் எடுக்கப்பட்ட அக்களிமண் தகடுகளில், 2000க்கும் அதிகமான சுமேரிய எழுத்துக்கள் கொண்ட களிமண் தகடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. கவனமான அவதானிப்புகளின்படி பார்க்கையில் அவ்வெழுத்துகள் எல்லாம் உண்மையில் 30 எளிமைப்படுத்தப்பட்ட எழுத்துகளின் தொகுப்பாக இருந்ததை அறிய முடிந்தது.
. (Robert Chadwick என்பவர் எழுதிய FIRST CIVILIZATIONS என்ற நூலில் 32ம் பக்கத்தில் இது பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதுபோலப் பல ஆய்வாளர்களது குறிப்புகளும் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன. இன்னமும் கூகிளிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.) மேலும், அந்த முப்பது எழுத்துகளிலும் பன்னிரண்டு வகையான எழுத்துகள் வேறுபடுத்தப் பட்டிருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களால் இந்த 30 எழுத்துகளின் தன்மையையும் அறிய முடியவில்லை, அவற்றை வாசிக்கவும் முடியவில்லை. மேலும் அவற்றின் விபரங்களையும் கூட ஆய்வாளர்களால் அறிய முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இதனை வாசிக்கையில் உங்களுக்கு எங்களின் உயிர் எழுத்துகள் 12ம் மெய்யெழுத்துகள் 18ம் சேர்ந்த 30 அடிப்படை(முதல்) எழுத்துகளின் தொகுப்பு ஞாபகத்திற்கு வரலாம். தொல்காப்பியம் கூறும் தமிழின் எழுத்து வடிவங்களின் வகைகளும் அவற்றின் பிறப்புப் பற்றியும் சுமேரியரின் எழுத்துக்களை ஆய்ந்த மேலைநாட்டு அறிஞர்களுக்குத் தெரியாதிருந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், தமிழ் எழுத்துகளுக்கான ஆதாரங்களில்லை என்று அவர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை. தமிழ் உட்பட, இந்திய எழுத்துக்கள் என்றதும், அவையெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்தே தோன்றின என்ற கருத்தினை வட இந்தியர்கள் விதைத்ததினால்தான் தமிழெழுத்துக்கள் பற்றிய கவனம் ஆய்வாளர்களிடம் வரவில்லை என நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள், அந்த 30 எழுத்துக்களையும் தமிழின் உயிரெழுத்துகளுடனும் மெய் எழுத்துகளுடனும் ஒப்பிட்டு உற்று நோக்கினால்,.....சில மாற்றங்கள் ஏற்படும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. மேலும், ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் இன்னொரு விதமாக, ஆழமாக அமைந்திருக்கும் எனவும் நான் நம்புகின்றேன்.

இந்தவிடத்தில் எழுத்துக்கள் பற்றிய எனது சிந்தனையின் போக்கினையும் கூற விழைகிறேன். சுமேரியர்களின் களிமண் தகடுகளில் இருந்த 30 எழுத்துகளும் தமிழின் உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்துகளும்தான். இது சுமேரியர்கள் குமரிக்கண்டத்தில் நின்றும் ஏகியவர்கள்தான் என்ற சிந்தனையை விரிவுபடுத்தும் வண்ணமாக அமைகின்றது. எப்படியெனக் கூறவும் முடிகின்றது. குமரிக்கண்டத்தில் தமிழர்கள் முதற் சங்க காலத்திற் சங்கம் அமைத்து, எழுத்துகளை உண்டாக்கி தம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கையில் முதலாம் கடல்கோள் வருகிறது. பெரும் அழிவுகளுக்குள் அல்லற்பட்ட குமரிக்கண்டத்தவர், அவற்றில் நின்றும் மீண்டு, இரண்டாம் சங்க காலத்துள் வருகின்றனர். இவ்விரண்டாம் சங்க காலத்தில், குமரியினர் வளர்ந்து வருகையில், காலத்திற்குக் காலம் குமரிக்கண்டத்தில் நின்றும் மக்கள் கடலின் அழிவுகள் இல்லாத பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்கின்றார்கள்.

அவர்கள் முதலிற் சென்றவிடம் சிந்து சமவெளிப் பகுதி. பின்னர் சென்றவிடம் யூபிரற்றீஸ் ரைகிறீஸ் நதிப் பகுதிகள். அதன் பின்னர், எகிப்தின் நீலநதி என்கிற நைல்நதிப் பகுதி. இவ்விதம் புலம்பெயர்கையில் இருந்த கால வித்தியாசங்களினால், குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகளின் ஒட்டல்கள், இம்மூன்று பகுதிகளிலும் சிறிய சிறிய அறிவியல் வேறுபாடுகளைக் காட்டுகின்றன. அதிலொன்றுதான், சுமேரியர்களினதும் எகிப்தியரினதும் எழுத்துக்களில் உள்ள அமைப்பு வேறுபாடுகள். இன்னொரு விடயத்தினையும் நாங்கள் அவதானிக்கலாம். சுமேரியர்கள் எகிப்தியருடன் பிணக்கின்றியே வாழ்ந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இருபகுதியினருக்கும் தெரிந்திருக்கின்றது, தாமிருவரும் ஒரே அடிக்கொடியினர் என்பது. ஆனால் பாபிலோனியர்கள், அசீரியர்கள் போன்றவர்கள் அப்படியல்லர். அவர்களைப் பொறுத்தவரையில் சுமேரியர் போன்றே எகிப்தியர்களும் அந்நியர்கள். அதனால், எகிப்தியருடன் போர் செய்து அவர்களை வென்று எகிப்தியரின் வளங்களைக் கூடக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இதனை அப்பகுதியின் வரலாறு கூறுகின்றது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, எங்களின் நோக்குக்குள் வருவோம்.

அடுத்த தடவை சந்திக்கையில் மனிதப் பரிணாமம் பற்றிய, 'அந்நாள் அந்நியர்' ஆய்வாளர்களது கருத்தினைக் கூறுகிறேன்.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்