சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 38

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)


அரசன் போரை முடிப்பானா? அவளைச் சென்று காண்பேனா?

ண்டைத்தமிழகத்தில் பொதுவாக இளவேனிற் காலத்திலும், வேனிற் காலத்திலுமே அதாவது கோடை காலங்களிலேயே போர் நடைபெறும். மன்னர்கள் அந்தக்காலங்களையே போரிடுவதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். மன்னர்களும் படைவீரரும் அந்தக்காலங்களில் பாசறைகளிலே தங்கியிரப்பார்கள். பாசறைகளுக்குப் பலத்த காவல் போடப்பட்டிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் எந்நேரமும் பாசறைகளைச் சுற்றிவரக் காவலில் ஈடுபட்டிருப்பார்கள். பல ஊர்களைச் சேர்ந்த படைவீரர்கள் பாசறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பல்வேறு அணிகளாக இருப்பார்கள். யானைப் படையினர், குதிரைப்படையினர், காலாட்படையினர், ஒற்றர் படையினர் மட்டுமன்றி மருத்துவர்கள், தாதிமார்கள், சமையர்காரர்கள் மற்றும் சேவகர்கள்; என்போரெல்லாம் பாசறையிலே தத்தமக்குரிய பகுதிகளிலே தங்கியிருந்து குறித்த கடமைகளில் ஈடுபட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குப் போர் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். ஏதிர்பார்த்த காலத்திற்குள் போர் முடிவக்கு வராவிட்டால் பாசறைக் காலமும் நீடிக்கும். அப்போது மழைக்காலம் வந்துவிட்டால் வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் அவர்கள் வீடுதிரும்பிச் சென்று மழைக்காலம் முடிய மீண்டும் பாசறைக்கு வந்து சேர்வதும் பண்டைத்தமிழகத்தின் போர்நிர்வாகமாக இருந்திருக்கின்றது.

அவ்வாறு பாசறையில் தங்கியிருக்கும் ஆண்கள் அவர்களின் துணைவியர்களை நினைத்துக் கொண்டிருப்பார்கள். எப்போது போர் முடியும் வீட்டுக்குச் சென்று காதலியோடு உறவாடலாம் என்று ஏங்கிக்கொண்டிரப்பார்கள். அதேவேளை தங்கள் துணைவர்கள் திரும்பிவரும்வரை தத்தம் வீட்டிலே பெண்கள் கவலையோடு காத்திருப்பார்கள்.

அவன் ஒரு படைவீரன். தனது நாட்டு மன்னனின் போர்ப்படையிலே இணைந்துள்ள அவன் இப்போது பாசறையிலே தங்கியிருக்கிறான். அந்தப்பாசறை அவனது சொந்த ஊரிலேயிருந்து வெகுதூரத்திலே உள்ளது. அவனது மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்கள் சிலவற்றை ஐங்குறுநூறில், முல்லைத் திணையிலே, பாசறைப்பத்து என்னும் அதிகாரத்திலேயிருந்து நாம் காட்சிப்படுத்தலாம்.

குறித்தகாலத்திற்கு மேலும் பாசறையில் அவன் தங்க நேரிட்டதால், அவனது காதலி மிகவும் கவலை கொள்கின்றாள். தனிமையிலே வாடுகின்றாள். காதலனிடம் தனது துன்பத்தை எடுத்துச் சொல்லிவருமாறு ஒரு தூதுவனை அனுப்புகிறாள். பாசறைக்கு வந்த தூதுவன் மூலம் தன் காதலியின் கடுந்துயரை அறிந்த அந்த காதலன், அவளைப் பிரிந்து தான் படுந்துயரை அவளுக்குத் தெரியப்படுத்துமாறு தூதுவனிடம் சொல்லி அனுப்புகிறான்.

ஐயவாயின செய்யோள் கிளவி
கார்நாள் உருமொடு கையறப்பிரிந்தென
நோய்நன்கு செய்தன எமக்கே
யாமுறு துயரம்அவள் அறியினோ நன்றே!


(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:441. பாடியவர்: பேயனார் என்ற பெரும் புலவர்)

இதன் நேரடிக்கருத்து:

இந்தக் கார்காலத்திலே இடியோடு கூடிய மழைபெய்கின்ற இந்த வேளையிலே செயலிழந்து தனிமையிலே வாடியிருக்கும் வண்ணம் அவளை விட்டுவிட்டு நான் பிரிந்து வந்தேன். அந்தப் பிரிவுத் துன்பம் அதிகமாகியதால் அதனை எனக்கு சொல்லி உணரவைப்பதற்காக நற்பண்புகள் கொண்ட என் தலைவி உன்னிடம் கூறியனுப்பிய சொற்கள் மிகவும் அழகானவைதான். ஆனால், அவளைப்பிரிந்து இங்கே தனியனாகத் தங்கியிருக்கும் எனக்கு அச்சொற்கள் எனது நோயை மேலும் அதிகமாக்கின. அந்தச் சொற்களைக் கேட்டு நான்படுகின்ற மிகையான வேதனையை அவளும் அறிந்தால் நல்லது. அதை நீ போய் அவளுக்குச் சொல்.

தூதுவனிடம் அவ்வாறு சொல்லியனுப்பிய தலைவன் தனது நிலையை நினைத்துத் தனக்குள் பின்வருமாறு சொல்லிக்கொள்கிறான்.

பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
வைந்துதி மழுங்கிய தடங்கோட் டியானை
வென்வேல் வேந்தன் பகைதணிந்து
இன்னும் தன்னாட்டு முன்னதல் பெறினே.

(ஐங்குறுநுர்று. முல்லைத்திணை. பாடல் இல:444. பாடியவர்: பேயனார்)

இதன் நேரடிக்கருத்து:

யானைப்படை எதிரியின் பலமான அரணாக விளங்கிய நீண்ட மதிற்சுவர்களைத் தாக்கியதால் யானைகளின் கொம்புகளின் முனைகள் மழுங்கிவிட்டன. அந்த முனைகளிலே பொருத்தப்பட்டிருந்த இரும்புப் பூண்கள் பிளந்து உடைந்துவிட்டன. அத்தகைய பெரிய கொம்பகளையுடைய யானைப் படையினையும், வெற்றியையே தருகின்ற வேல்களைத் தாங்கும் வேற்படை வீரர்களையும் கொண்டவன் நமது மன்னன். அவனது பகைமுடிக்கும் வேகம் தணிந்து, இனியென்றாலும் தனது நாட்டுக்குத் திரும்புவதை அவன் எண்ணிப்பார்ப்பானென்றால், நானும் எனது வீட்டுக்குத் திரும்பிச் சென்று, பெண்களுக்கு எழிலாக விளங்குகின்ற பெரிய தோள்களையுடைய இளமைபொருந்திய எனது தலைவியைக் காண்பேனே!



                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)
 

 

 



பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா   

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்