முடத்தாமக்கண்ணியாரின் உவமைத் திறம்
பேராசிரியர் இரா.மோகன்
‘மூத்தோர்கள்
பாடியருள் பாட்டும் தொகையும்’ என்பது ‘தமிழ் விடு தூது’ ஆசிரியரின்
மணிமொழி. இதனுள் ‘மூத்தோர்கள்’ எனப்படுவோர் சங்கச் சான்றோர்கள் ஆவர்;
‘பாட்டு’ என்பது நீண்ட அகவற்பாவால் அமைந்த பத்துப்பாட்டு நூல்களையும்,
‘தொகை’ என்பது நற்றிணை, நல்ல குறுந்தொகை முதலான எட்டுத் தொகை
நூல்களையும் குறிக்கும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படைக்கு
அடுத்து இரண்டாவதாக இடம்பெறுவது பொருநர் ஆற்றுப்படை. இது பரிசில் பெற்ற
பொருநன் ஒருவன், வறுமையால் வாடி நின்ற பிறிதொரு பொருநனைக் கரிகால்
பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது; பாடியவர்
முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண்பாற் புலவர். “இவரது கால் முடமாய்
இருந்தது பற்றி ‘முடம்’ என்னும் சொல் இவரது இயற்பெயர் முன்பு இடம்
பெற்றது. எனவே, இவரது இயற்பெயர் ‘தாமக்கண்ணி’ என்பது. காமக்கண்ணி (காமாட்சி)
என்றாற் போலத் ‘தாமக்கண்ணி’ என்பதும் பெண்பாற் பெயரெனவே கொள்ளலாம்.
முடக்கொற்றனார், முடமோசியார் என்ற இருவரும் கால் முடமான சங்க கால
ஆண்பாற் புலவர். இவர்களைப் போலவே கால் முடமான பெண்பாற்புலவர்
முடத்தாமக்கண்ணியார் என்று கொள்வது பொருத்தமாகும்” (பத்துப்பாட்டு
ஆராய்ச்சி, பக்.632-633) என மொழிவர் பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்.
பொருநர் ஆற்றுப்படை 248 அடிகளை உடையது. இவற்றுள் அகவல் அடிகள் 202;
வஞ்சி அடிகள் 46.
சிறப்பிடம் பெறும் இரு வருணனைப் பகுதிகள்
பொருநர் ஆற்றுப்படையில் சிறப்பிடம் பெறும் வருணனைப் பகுதிகள் இரண்டு.
அவையாவன:
1. பாலை யாழின் வருணனை (அடி.4-20)
2. பாடினியின் கூந்தல் முதல் தாள் வரையிலான வருணனை (அடி.25-47)
இவ்விரு வருணனைப் பகுதிகளிலும் முடத்தாமக்கண்ணியார் கையாண்டுள்ள உவமைகள்,
தொல்காப்பியர் வகுத்துத் தந்துள்ள உவமை இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்து,
முடத்தாமக்கண்ணியாரின் படைப்பாளுமையினைப் பறைசாற்றி நிற்கின்றன.
பதச்சோறாக, பாலை யாழின் வருணனைப் பகுதியில் இடம் பெற்றிருக்கும் சில
உவமைகளின் நயங்களையும் நுட்பங்களையும் ஈண்டுக் காணலாம்.
பொருநனின் மனைவியான பாடினியின் கையில் இருப்பது பாலை யாழ் ஆகும். அது
ஈர நிலத்தில் மானின் குளம்பு பதிந்த தடம் போன்று இரு புறமும் தாழ்ந்து,
நடுவில் உயர்ந்த பத்தல் என்னும் உறுப்பினை உடையது; விளக்குச் சுடரின்
நிறம் வாய்ந்ததும், இளம் சூலை உடைய பெண்ணின் வயிற்றில் படர்ந்த
மென்மையான மயிரொழுங்கு போன்று இரு புறமும் சேர்த்துக் கட்டப் பெற்றதும்
ஆகிய விரித்துப் போர்த்திய தோற் போர்வையினைப் பெற்றது; ஆணிகள்
முடுக்குவதற்கு என அமைந்த நண்டின் கண் போன்ற துளைகள் பொருந்தியது.
இத்தகைய யாழின் கரிய தண்டு, படமெடுத்து நிற்கும் பாம்பின் தலைபோன்று
காட்சி அளித்தது.அத் தண்டில் அமைந்த வார்க்கட்டு அழகிய பெண் தன்
முன்கையில் அணிந்திருந்த வளையல் தொடர்ச்சியை ஒத்து விளங்கியது.
ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக இழுத்துக் கட்டப் பெற்றிருந்த யாழின்
நரம்புகள் குத்தப் பெற்ற தினை அரிசியைப் போன்று இருந்தன. மொத்தப்
பார்வையில், யாழ் ஒப்பனை செய்யப் பெற்ற மணமகளைப் போன்று அழகிய
தோற்றத்தைக் கொண்டிருந்தது. பாலை யாழினைப் பற்றிய முடத்தாமக்கண்ணியாரின்
நெஞ்சை அள்ளும் அழகிய சொல்லோவியம் வருமாறு:
“குளப்புவழி அன்ன சுவடுபடு பத்தல்;
விளக்குஅழல் உருவின் விசிஉறு பச்சை;
எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளைவாழ் அலவன் கண்கண் டன்ன,
துளைவாய் தூர்ந்த துரப்புஅமை ஆணி;
எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறுவாய்;
பாம்புஅணந் தன்ன ஓங்குஇரு மருப்பின்,
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்;
கண்கூடு இருக்கைத் திண்பிணித் திவவின்,
ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல்உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்வீசித் தொடையல்;
மணம்கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்குமெய் நின்ற அமைவரு காட்சி” (4-20)
நோக்கு நெறி நின்று இவ் வருணனைப் பகுதியை அலசி ஆராய்ந்து பார்த்தால்
தெரிய வரும் சில நயங்களும் நுட்பங்களும் வருமாறு.
1. யாழின் அடியில் குடம் போன்று, இரு புறமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்து
இருக்கும் பத்தலுக்கு ஈர நிலத்தில் மானின் குளம்பு பதிந்த தடத்தினை
முடத்தாமக்கண்ணியார் உவமை காட்டி இருப்பது பொருத்தம்.
2. பத்தலின் மீது இழுத்துக் கட்டப்பட்ட தோலுக்கு மகளிர் அன்றாடம்
பயன்படுத்தும் விளக்குச் சுடரின் நிறம் உவமையாகக் கையாளப் பெற்றிருப்பது
நோக்கத்தக்கது. இதே போல, யாழின் நரம்புகளுக்குத் குத்தப் பெற்ற தினை
அரிசியை உவமையாக எடுத்தாண்டிருப்பதும் கருதத்தக்கது.
3. போர்வை, வார்க்கட்டு ஆகிய யாழின் உறுப்புக்களுக்கும், யாழின் ஒட்டு
மொத்த அழகுக்கும் முறையே அறிய முடியாத இளஞ்சூலினைக் கொண்ட பெண்ணினுடைய
வயிற்றின் நடுவே உள்ள மென்மையான மயிர் ஒழுங்கு, ஒரு பெண் தன் முன்கையில்
அணிந்திருக்கும், வளையல் தொடர்ச்சி, ஒப்பனை செய்யப் பெற்ற மணமகளின்
தோற்றம் ஆகியன உவமைகளாகக் காட்டப் பெற்றுள்ளமை, அவற்றைக்
கையாண்டிருப்பவர் உறுதியாக அனுபவம் மிக்க ஒரு பெண்பாற்புலவராகவே
இருப்பார் என்பதற்குக் கட்டியம் கூறுவதாகும். ஒரு பெண்
கருவுற்றிருக்கிறாளா, இல்லையா எனத் தெரியாத நிலையை – அதாவது, வயிறு
எடுத்தும் எடுக்காது இருக்கிற நிலையை – ‘எய்யா இளஞ்சூல்’ என்னும் அழகுத்
தொடரால் முடத்தாமக்கண்ணியார் சுட்டி இருப்பது அருமையிலும் அருமை.
4. யாழின் தோல் சரியாமல் இருப்பதாற்காகப் பத்தலின் மேற்புறத்தில்
இரண்டிரண்டாக முடுக்கப் பெற்றிருக்கும் திருகு ஆணிகளுக்கு வளையில்
இருக்கக் கூடிய நண்டின் கண்களும், உள் நாக்கு இல்லாத வாய்க்கு எட்டாம்
நாள் திங்களின் வடிவும், கரிய தண்டுக்குப் படமெடுத்து நிற்கும் பாம்பின்
தலையும் பொருத்தமான உவமைகளாக ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’
என்னும் தொல்காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்திருப்பது கண்கூடு.
5. ‘அன்ன’, ‘போல’, ‘கடுக்கும்’, ‘புரையும்’, ‘ஒப்ப’, ‘ஏய்ப்ப’, ‘ஆங்கு’
என்றாற் போல் பல்வேறு உவம உருபுகளைக் கையாண்டிருக்கும்
முடத்தாமக்-கண்ணியாரின் புலமைத் திறமும் போற்றத்தக்கது.
நிறைவாக, சிலம்பொலி செல்லப்பனாரின் சொற்களில் கூறுவது என்றால், “யாழின்
உறுப்பு ஒவ்வொன்றுக்கும் அருமையான உவமை சொல்லி வருணிக்கின்ற காட்சியைப்
பொருநராற்றுப் படையிலே காணலாம். உவமைக்குச் சங்க இலக்கியத்தில் ஒரு
நல்ல பகுதியை எடுக்க வேண்டும் என்றால் பொருநராற்றுப் படையின் இப்
பகுதியைச் சொல்லலாம்” (சங்க இலக்கியத் தேன்: பகுதி 1, ப.64).
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|