எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 9

முனைவர் செ.இராஜேஸ்வரி

சிறுவர்களுக்கு எம் ஜி ஆர் புகட்டிய உழைப்பின் பெருமை

திருடாதே படத்தில் எம் ஜி ஆர் குழந்தைகளுக்கு பூந்தி வசன்கும்போது ஒரு குழந்தை மட்டும் அதுவே கையை விட்டு பூநதியை அள்ளும் அதை பார்த்ததும் உடைமையர் அனுமதி இல்லாமல் எடுப்பதை கண்டித்து

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே பாப்பா திருடாதே

எனப் பாடுவார். இது பாப்பாவுக்கு மட்டுமல் பெரியவருக்கும் சேர்த்து சொல்லப்பட்ட கருத்து ஆகும்.

வறுமை அல்லது தேவைக்காக திருடுவதும் குற்றம் குற்றமே. திருக்குறள் பெற்றவள் பசியைப் போக்க கூட திருடக் கூடாது என்கிறது யாரும் பார்க்கவில்லை என்று நாலாபுறமும் சுற்றி பார்த்துவிட்டு செய்யும் குற்றத்தையும் மேலே இருந்து இறைவன் பார்க்கின்றான் அவன் நம் கணக்கில் எழுதிக்கொள்வான் என்ற அச்சம் எவருக்கும் ஏற்பட வேண்டும்.

திருடாதே படம் தாயின் பசியை போக்க திருடுவதாக எம் ஜி ஆர் திருட்டுக்கு நியாயம் கற்பித்தாலும் அதை அநாதை பள்ளி நடத்தும் பெரியவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார். திருட்டு பணத்தில் தர்மம் செய்யாதே, இந்தப் பணத்தை இந்த ஆனாதை ஆசிரமம் ஏற்றுக்கொள்ளாது என்பார். வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் பசியும் பட்டினியும் வாட்டிய காலம் அது. பட்டினிச் சாவு மிகுந்த காலத்திலும் திருட்டை யாரும் ஆதரித்ததில்லை. பாட்டிலும் வசனத்திலும் காட்சியிலும் இதை வலியுறுத்தினார். கெட்ட பழக்கம் சிறு வயதில் தொடங்குவதால் சிறுவர்களுக்கு அறிவுரை கூறினார்.செய்தர்

தெரிந்தும் தெரியாமல் செய்திருந்தால் - அது
திரும்பவும் வராமல் பார்த்துக்கோ


என்பது தவறு செய்பவன் மனிதன் அதை மன்னித்து ஏற்றுக்கொள்பவன் தெய்வம் என் பெரியவர்கள் சொல்வதால் தவறி நடந்தால் நீயே உன்னை திருத்திக் கொள் என்கிறார்.

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பை செய்தவன் வருந்தியாகணும்


என்று மற்றொரு பாடலில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்நாடே இருக்குது தம்பி என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். ஆக வாழ்க்கையில் முறைகேடுகளை நியாயப்படுத்தாமல் திருந்திவிடுவதே நல்லது என்பது எம் ஜி ஆரின் வாழ்வியல் கருத்தாகும்.

பிச்சைக்காரன் தொழில்முனைவோர் ஆன கதை


ரயில் நிலையத்தில் இரு கால்களையும் இழந்த ஒரு பிச்சைக்காரன் சினிமா பாட்டு பாடி பிச்சை எடுத்து கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு எம் ஜி ஆர் வரப் போவதாகத் தெரிந்ததும் அவன் அங்கிருந்த போலிசாரிடம் ‘’அய்யா எனக்கு ம் எம் ஜி ஆரை பார்க்கணும் அவரை நல்லா பார்க்குற மாதிரி ஒரு இடத்தில் என்ன இருக்க செய்யுங்கள்’’ என்று வேண்டி கேட்டுக்கொண்டான். அவரும் சம்மதித்து ஒரு இடத்தில் இருக்கும்படி கூறினார். எம் ஜி ஆர் அந்த பக்கமாக நடந்து வந்ததும் இந்த பிச்சைக்காரன் ‘எம் ஜி ஆர் வாழ்க’ என்று உர்சாகமாக் முழங்கினான்.எம் ஜி ஆர் குனிந்து பார்த்தார். இவனது நிலை கண்டு நின்றார். அங்கிருந்த போலீஸ்காரர் ‘’சார் பிச்சைக்காரன்; ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுப்பான்’ என்றார். உடனே எம் ஜி ஆர் அவனிடம் ஐந்து பத்து ருபாய் நோட்டுகளை கொடுத்து பிச்சை எடுக்காதே உழைச்சு பிழைக்கணும் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். இவனுக்கு சுரீர் என்று உறைத்தது. உடனே புது துணி எடுத்து உடுத்தி கொண்டு சில வார நாளிதழ்களை வாங்கி விற்க ஆரமபித்தான். இப்போது இவன் தொழில் முனைவோர் ஆகிவிட்ட படியால் அருகில் இருந்த தேவாலயத்தில் இவனுக்கு தங்க இடம் கிடைத்தது. அதன் பிறகு கைக்குட்டை, பேனா வாங்கி டி நகர் ரங்கநாதன் தெருவில் விற்றார்.

இவர் இரவில் தங்கும் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வரும் ஒருவர் இவருக்கு சக்கரா நாற்காலி வாங்கி கொடுத்தார். பின்பு டி நகரில் ஒரு சிறிய கடையில் ஒரு பகுதியில் ஒரு மேசை மட்டும் போட்டுக் கொண்டு சில பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தார் மெல்ல மெல்ல முன்னேறினார் இப்போது யாரும் நம்ப இயலாத நிலைக்கு உயர்ந்துவிட்டார் கோடீசுவரனாக இருக்கிறார்; சொகுசு கார் வைத்திருக்கிறார்; அதை கொஞ்சம் மாற்றி அமைத்து தானே ஒட்டுகிறார். எம் ஜி ஆருக்கு விழா எடுப்பதாக போய் எவரொருவர் சொன்னாலும் உடனே ஆயிரங்களை அள்ளி கொடுப்பார். பிச்சை எடுப்பது கேவலம் உழைத்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கிய வழிகாட்டி அல்லவா எம் ஜி ஆர்.

இதை போல பல சம்பவங்களை எம் ஜி ஆர் வாழ்க்கையில் இருந்து எடுத்துக் கூறலாம்.

உழைப்பின் உயர்வு
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உழைப்பவரே உயர்வு பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா


என்று நாடோடி மன்னன் படத்தில் குதிரையில் பயணிக்கும் போது பாடும் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. உழைப்பின் உயர்வை உணர்த்தும் கருத்து செறிவுள்ள பாடல் வரிகள்.
 
உழைப்பால் உயர்ந்த எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் உழைப்பவரே உயர்ந்தவர் என்று தான் எழுதி கையெழுத்து போடுவார். காரணம் அவர் உழைப்பின் சுவை அறிந்தவர். உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறது. மலைக்கள்ளன் மர்மயோகி போன்ற வெற்றி படங்கள் வந்த பிறகு அவருக்கு தன படங்களில் சில மாற்றங்களை செய்ய சொல்லும் பொது இயக்குனர்கள் சம்மதிக்க தயங்கினர் தயாரிப்பாளரிடம் பஞ்சாயத்து நடந்தது எம் ஜி ஆரின் வசிய சக்தியால் தயாரிப்பாளர் சம்மதித்து விடுவார். ஆனாலும் எம் ஜி ஆருக்கு அது பெரிய பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. அதனால் தன விருப்பத்துக்கு தன மூளையின் ஆற்றலை செலவழித்து சொந்த படம் எடுக்கிறார். பெரும் பொருட்செலவில் மூன்று படம் எடுக்கும் செலவில் ஒரே படம் எடுத்தார். தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய திரை அரங்கமான மதுரை, தங்கம் தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. மதுரை ரசிகர்கள் மதுரை முத்து தலைமையில் அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி நகர் வலம் அழைத்து வந்து தங்கவாள் பரிசளித்தனர் அதை பின்னர் அவர் கர்நாடகாவில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுத்துவிட்டார். அந்த வாள் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனின் அருகில் சார்த்தப்பட்டிருக்கும்.

உழைப்புக்கேற்ற ஊதியம்

நாடோடி மன்னன் படத்தில் அவர் மன்னனானதும் அனைவருக்கும் திறமைக்கேற்ற தொழில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் என்று ஒரு வசனம் இடம் பெற்றது. பலர் இன்று தனியார் நிறுவனங்களில் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு குறைந்த ஊதியம் தருகின்றனர். ஆனால் எம் ஜி ஆர் அப்படி அல்ல அவர் படத்தில் நடித்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் அதுவும் அவர் சொந்த படம் என்றால் பணத்தை தண்ணீராக செலவழிப்பார். கடன் பட்டாவது அனைவருக்கும் சகல வசதிகளும் செய்து கொடுப்பார். காரணம், எம் ஜி ஆர் உழைப்பின் பலனை ருசி பார்த்தவர் அது தரும் தனி ஆனந்தத்தை அனுபவித்தவர் எனவே அனைவரையும் கடுமையாக உழைத்து பாருங்கள் அதன் சுகத்துக்கு அடிமையாகுங்கள் அடுத்தவரின் உழைப்பை சுரண்டாதீர், பிறர் உழைப்பில் வாழாதீர் என்று உபதேசம் செய்யும் தகுதி பெற்றிருந்தார். ஏழையின் உழைப்பை சுரண்டக்கூடாது அவனுக்கு நல்ல கூலி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த எம் ஜி ஆர் தன படங்களில் நடித்தவருக்கு நல்ல சாப்பபடும் சம்பளமும் பெற்று தந்தார் அதனால் அவர் படங்களில் நடிக்க அனைவரும் ஆர்வமாய் இருந்தனர்.

ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்பதை நன்றாக புரிந்து கொண்ட எம் ஜி ஆர் அதை தன பாடலிலும் வலியுறுத்தினார். முகராசி படத்தில் கேளம்மா சின்ன பொண்ணு கேளு எனத் தொடங்கும் பாடலில்

ஏழை மனம் பாடுபட்டால்
என்னெனவோ நடக்கும்

என்றார். உழைப்பின் வியர்வை உலரும் முன்னே கூலி கொடுக்க வேண்டும் என்று கிறிஸ்தவ மறை நூல் கூறும் அது எம் ஜி ஆர் வாழ்வில் உண்மையாகி விட்டது அவர் படங்களில் படம் வெளிவருவதற்கு முன்பே அனைத்து பணியாளருக்கும் சம்பளம் கொடுத்து முடிக்கவேண்டும் என்பது ஒரு கடுமையான நடைமுறை.. படம் வெளியான பின்பு வரும் இலாபம் விநியோகஸ்தருக்கு போய்விடும் அதில காலணா கூட பணியாளர்களுக்கு கிடைக்காது. அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் முன்னர் பேசப்பட்ட சம்பளம் மட்டுமே என்பதால் அதை பாக்கி வைக்காமல் முழுமையாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் கண்டிப்பாக இருந்தார்.

செலவும் ஜப்தியும்

எம் ஜி ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்த போது வெளிநாட்டு படப்பிடிப்பில் ஓட்டல்களில் தங்கியிருந்த நடிக நடிகையர் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டதில் மட்டும் எண்பதினாயிரம் பில் வந்திருந்தது. இதனால் அவருக்கு தயாரிப்பு செலவு அதிகமாகி அவர் ராமாவரம் வீட்டை அடமானம் வைக்க நேர்ந்தது ஒரு நாள் அது ஜப்திக்கும் வந்துவிட்டது பின்பு தடையாணை வாங்கி வீட்டை மீட்டார். அது தனி கதை.

உழைப்பின் பலன் உவகை


எம் ஜி ஆர் வெளிநாட்டுக்கு தான் அழைத்து சென்ற இருபத்தைந்து பேருக்கும் இரண்டு செட் கோட் ஸூட், பட்டு சேலை மற்றும் சென்ட், பாட்டில், கேமரா என வேண்டிய பரிசு பொருட்களை ஏராளமாக வாங்கி கொடுத்தார். அவரவர் செலவுக்கும் கையில் ஒரு தொகையும் கொடுத்திருந்தார். அவர் நாடோடி மன்னன் எடுத்த போது தயாரிப்புச் செலவை கேட்டு அவர் அண்ணன் சக்கரபாணிக்கு வந்த எரிச்சல் உலகம் சுற்றும் வாலிபன் எடுத்த போது ஆர் எம் வீரப்பனுக்கு வந்தது எம் ஜி ஆர் தன விருப்பப்படி அதை வாங்கி இதை வாங்கி கொடு என்று சொல்லிவிடுவார் வீரப்பனுக்கு இருக்கும் பணத்தை வைத்து சமாளித்து எம்ஜி ஆர் சொன்னபடி வாங்கி கொடுத்து அவர்களை தமிழ்நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எம் ஜி ஆர். தன் படத்தில் வேலை பார்ப்பவருக்கு தாராளமாகச் செலவு செய்ய அஞ்சமாட்டார்; தயங்க மாட்டார்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிறுவர்களிடம அவர் உழைப்பின் மகிமையை அவருக்கு மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக

சிரித்து வாழ வேண்டும் பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே

எனப் பாடுவார் இது எதோ ஒரு பாடல் ஆசிரியர் எழுதி கொடுத்து அதை டி எம் சௌந்திரராஜன் பாடி எம் ஜி ஆர் வாயசைத்து கையசைத்தபாடல் அல்ல. அப்படி எம் ஜி ஆர் படப்பாட்டுகளையும் காட்சிகளையும் கருதக் கூடாது. எம் ஜி ஆரின் சொந்த கருத்துகளையே அவர் பாடி நடிக்கிறார். அவருக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை அவர் பாடமாட்டார் நடிக்க மாட்டார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

ஏதிலி பெண்களுக்கு உதவி

ஒரு பொது கூட்டத்தில் எம் ஜி ஆர் பேசிக்கொண்டிருந்த பொது கால் நடக்க முடியாத இரு பெண்கள் அவர நின்றிருந்த மேடையை நோக்கி வந்ததை பார்த்த எம் ஜி ஆர் அவர்களுக்கு வழி விடும்படி கூறினார் அருகில் வந்ததும் என்ன வேண்டும் என்று கேட்டார். அவர்கள் நாங்கள் அநாதைகள்; சகோதரிகள்; அம்மா அப்பா யாரும் இல்லை தையல் மிஷன் இருந்தால் பிழைத்து கொள்வோம் என்றானர். உடனே எம் ஜி ஆர் தன மெய்க்காப்பாளர்களை அனுப்பி கையால் தைக்கும் தையல் மிஷின் வாங்கி வர சொன்னார் அப்போது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. ‘எள் என்றால் எண்ணெயாக’ நிற்கும் அவர்கள் கடைகளைத் திறக்க செய்து இரண்டு கைத்தையல் மிஷின்கள் வாங்கி வந்து கொடுத்தனர். எம் ஜி ஆர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு இரண்டாயிரம் கொடுத்து ‘உழைத்து பிழைக்க முன் வந்ததில் மகிழ்ச்சி’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

உழைப்புக்கு மதிப்பு


ஏழைத் தொழிலாளர்களை கிள்ளுகீரையாக கருதும் ஆணவம் பிடித்த பணக்காரப் பெண் ஒருத்தியின் செருக்கை உடைத்து அவளுக்கு உழைப்பின் மதிப்பை உணர்த்தும் பாடலில் சிறுவர்களையும் சேர்த்து கொள்வார். அப்பாடல் கேலி பாடலாக தோன்றினாலும் கருத்துள்ள பாடல் ஆகும். குமரிக்கோட்டம் படத்தில் சிறுவர்கள் மத்தியில் ஜெயலலிதாவிடம்

பட்டோடு பருத்தி பிண்ணி எடுத்து உங்கள்
பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்
கட்டாந்தரையிலே கல்லை உடைத்து உங்கள்
கண்ணாடி மாளிகையை யார் படைத்தார்.


என்றும் அடுத்த சரணத்தில் ‘

பத்தும் பறந்தோடும் பசிப்பிணிக்கு உங்கள்
பவளமும் வைரமும் பயன் படுமா
பாலோடு பச்சரிசி படியளக்கும் இந்தப்
பண்பான மக்களிடம் அலட்சியமா?


என்றும் கேட்பார். இந்த பாடல் வரிகளில் சிறுவர்கள் இடம் பெற்றிருப்பர். உழைப்பின் மகத்துவத்தை சிறு வயதில் உணர வேண்டும், என்பதற்காக இந்த காட்சியில் சிறுவர்களும் இடம்பெற்றனர். மேலும் சிறுவன் வண்டியின் குறுக்கே வந்து விழுந்ததற்கு அவனை அடிக்க கை ஓங்கும் ஆணவம் அந்த பணக்காரப் பெண்ணுக்கு இருந்ததை கண்டிக்கும் விதமாகவும் இந்த பாட்டு அமைந்திருக்கும்.

நல்ல நேரம் படத்தில் எம் ஜி ஆர் யானைகளை வைத்து வித்தை காட்டி அவரும் சில உயிருக்கு ஆபத்தான செயல்களை செய்து வருமானம் ஈட்டுவார். அப்போது பாடும் பாட்டும் உழைப்பின் பெருமையை உணர்த்துவதாகும்.
 
ஓடிஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் விதைக்கணும்

என தொடங்கும் பாடலில் ஒரு ஜான் வயிற்றுக்காக மனிதன் படும் பாடுகளை விவரிக்கும் வரிகள் அற்புதமானவை

வயித்துக்காக் மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு


என்று கழை கூத்தாடியின் நிலையை பாடியிருப்பார். மேலும் நாம்

பாடுற பாட்டும் ஆடுற ஆட்டமும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்

என்பார். இந்த வரிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகக் கடமை இருக்கிறது என்பதை அழகாக உணர்த்துகிறது. ‘’ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது’’ என்று அவர் உணர்ந்திருந்தார். அதை பல் இடங்களில் வெளிப்படுத்தவும் செய்தார். அந்த உணர்வு அவரது மனத்தில் ஆழமாக இருந்ததனால் அதை படங்களில் செயல்படுத்தினார் பின்னர் அவர் தனி கட்சி ஆரம்பித்த போது இந்தக் காட்சிகளும் பாடல்களும் அவருக்கு மக்களின் நம்பிக்கையை பெற்று தந்தது.
 
உழைப்பவருக்கு உதவி செய்தல்

எம் ஜி ஆர் ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்த பிறகு அந்த படம் ஒடி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களுக்கு உதவி செய்யவில்லை. 1961 இல் அவர் மழையில் நனைந்த ரிக்க்ஷாக்காரர் ஒருவர் தன ரிக்க்ஷா நனைய கூடாது என்று மூடி வைத்ததை பார்க்கிறார். தாயுள்ளத்துடன் அவர்களுக்கு மழைக் கோட் வாங்கி தர முடிவெடுக்கிறார். தன சத்யா ஸ்டுடியோவில் இரவு பகலாக தையல்காரர்களை வைத்து தைத்து ஐயாயிரம் பேருக்கு அறிஞர் அண்ணாவின் பொற்கரத்தால் மழைக் கோட் வழங்குகிறார். பத்து வருடங்கள் கழித்து தான் ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உழைப்பவருக்கு உதவுவதில் எப்போதும் முன்னணியில் நிற்பவர் எம் ஜி ஆர். இதனால் தான் உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்ற படப் பெயர்கள் அவருக்கு பொருந்தியதை போல வேறு யாருக்கும் பொருந்தியதில்லை.

தக்க காலத்தில் செய்த உதவி இவ்வுலகத்தில் மிகப் பெரியதல்லவா அது போல உரிய காலத்தில் எம் ஜி ஆர் உழைப்பாளிகளுக்கு செய்த உதவி அவருக்குத் தக்க காலத்தில் வாழ்த்துக்களைப் பெற்று அவரை நோயிலிருந்து குணம் பெற்று மீண்டும் வாழ வைத்தது. மீனவனாக, கை வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பூட்டு விற்பவனாக, பெயிண்டராக, கிணற்றில் தூர் வாருபவனாக, சாலை பணியாளராக, மாட்டுக்காரனாக, விவசாயியாக, பரிசல் ஓட்டியாக பல தொழிலாளர்களின் வேடங்களில் நடித்த எம் ஜி ஆர் அந்தந்த தொழிலாளிகளின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.

சோம்பலும் தூக்கமும் முன்னேற்றத்துக்கு எதிரி


சிறுவருக்கு சோம்பேறித்தனம் கூடாது. அவர்கள் எப்போதும் சிறகடித்து பறக்கும் வண்டை போல ரீங்காரமிட்டுக் கொண்டு சுறு சுறுப்பாக இருக்க வேண்டும்.
 
சோம்பேறியாக இருந்துவிட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுறுசுறுப்பில்லாம தூங்கிக்கிட்டிருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்


என பாடும் பாட்டு தம்பிக்கு சோம்பலை வெறுக்கவும் சுறுசுறுப்பை உண்டாக்கவும் பாடப்பட்ட பாட்டாகும்.

நாடோடி மன்னன் படத்தில் சோம்பேறிகளின் நிலையை எடுத்துரைக்கும் ஒரு சரணம் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியது.

போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் –
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் – கொண்ட
கடமையில் தூங்கியவன் தன்னை இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா

என்ற பாடல் வரிகள் சோம்பேறித்தனத்தை விட்டு சுறு சுறுப்பாக தான் செய்யும் தொழிலில் ஈடுபட்டால் முன்னேற்றம் உறுதி என்பதை விளக்குகின்றன. ஏழைக்கும் பணக்காரனுக்கும் கடவுள் பொதுவாக அளித்திருக்கும் இருபத்தி நான்கு மணி நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் வாழ்வு சிறக்கும் இதில் பல மணிநேரங்களை தூங்கி கழித்தால் சோம்பலும் துக்கமும் தான் மிஞ்சும். உதயத்தை பார்க்காதவன் உயர்வை பார்க்க மாட்டான் அல்லவா?

சொந்த வாழ்வில் சுறுசுறுப்பு


எம் ஜி ஆர் தன வாழ்வில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். மதியம் சாப்பிட்டவுடன் தூங்குவது, காலையில் ஏழு மணி வரை தூங்குவது போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதவர். அதிகாலை நாலரை மணிக்கு அவரோடு அவர் வீட்டில் வளரும் குழந்தைகளும் எழுந்துவிட வேண்டும் .அப்போதே உடற்பயிற்சி தொடங்கிவிட வேண்டும் அவருக்கு தேநீர் , காபி குடிக்கும் பழக்கம் கிடையாது. வீட்டில் பல பசு மாடுகள் இருந்தன காலையிலும் இரவிலும் நல்ல பசும் பாலை காய்ச்சி குடிக்கும் வழக்கம் இருந்தது. ஏழு மணிக்கு எம் ஜி ஆர் தன்னைப் பார்க்க வந்திருக்கும் கட்சிக்காரர்கள் அரசியல்வாதிகள் நண்பர்கள் போன்றோரை சந்திக்க ஹாலுக்கு வந்துவிடுவார். சுதா, ஜானு , கீதா எனப் பிள்ளைகளும் பள்ளிகக்கூடம் கிளம்பி விடுவர்.

மாடியில் இருக்கும் தன அறைக்கு எம் ஜி ஆர் படிக்கட்டுகளில் ஏறி தான் செல்வது வழக்கம் அவர் அமேரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு தான் அவர் வீட்டில் லிப்ட் வைக்கப்பட்டது. ஆனால் விழாக்களில் படியேறி வந்து பீடத்தின் மீதுள்ள சிலைகளுக்கு மாலை போடும்போது எம் ஜி ஆர் மடமடவென்று படிக்கட்டுகளில் ஏறுவார். அனாயசமாக பெரிய மாலைகளை தூக்கி அணிவிப்பார்.. சுறுசுறுப்பின் திலகமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழி காட்டினார்.

முதல்வரான பின்பு தொழிலாளர் நலத்திட்டங்கள்.


எம் ஜி ஆர் சினிமாவில் ஆடி பாடி சொன்ன கருத்துகள் யாவும் அவர் முதல்வரான பிறகு நடைமுறைக்கு கொண்டு வர முயன்றார். அவர் அதிகாரத்துக்கு உட்பட்ட அளவில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார். பனை ஏறிகளுக்கும் நெசவாளிகளுக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் விபத்து நிவாரண திட்டனம் கொண்டு வந்தார். அவர்கள் திடீரென தொழில் கூடத்தில் விபத்தில் சிக்கினால் அவர் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்தார். படகோட்டிகளுக்கு குடிசை வீட்டை மாற்றி அடுக்கு மாடி வீடுகளில் குடியிருக்கச் செய்தார் அவர்களுக்கு என சிறப்பு வீட்டு வசதி திட்டம் நடைமுறைக்கு வந்தது.

வீட்டுக்கு ஒரு இலவச மின் ஒளிவிளக்கு வசதி அளித்தார். இதனால் கிராமங்கள் ஒளி பெற்றன. தலித் குழந்தைகள் தங்கள் வீட்டில் இருந்த படியே படிக்கும் வசதி பெற்றனர். விவசாய நிலங்களில் மூன்று இலட்சம் மின் பம்பு செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். சுமார் மூன்றரை கொடிக்கான விவசாய கடனை தள்ளுபடி செய்தார்.

நிறைவு:

 
உழைப்பாளிகளுக்கு உயர்வளிக்க விரும்பிய எம் ஜி ஆர் அதனை பாட்டாகவும் காட்சியாகவும் தன படங்களில் சிறுவர்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் மனதில் பசு மரத்தாணி போல பதியச் செய்தார். பின்பு முதல்வரானதும் உழைப்பாளிகளுக்கு பல நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றினார்.



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்